அலசல்
Published:Updated:

தடையின்றி இயங்கும் உரிமம் இல்லா பார்கள்... ஆண்டுக்கு ரூ.200 கோடி அரசுக்கு இழப்பு...

டாஸ்மாக்
பிரீமியம் ஸ்டோரி
News
டாஸ்மாக்

டாஸ்மாக் அதிர்ச்சி... பதில் தர மறுக்கும் அமைச்சர்!

‘‘டாஸ்மாக் வருமானம் முழுமையாக அரசுக்கு வருகிறதா, வரவில்லையா என என்னால் சொல்ல முடியவில்லை” என்று சட்டசபையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருக்கும் நிலையில், ‘‘தமிழ்நாடு முழுக்க இயங்கிவரும் சட்டவிரோத பார்களால் ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது’’ என்று சொல்லி அதிரவைக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்!

இது குறித்து கோவையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் லோகநாதன் நம்மிடம் பேசுகையில், “கோவை வடக்கு, தெற்கு, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், ஊட்டி (நீலகிரி) ஆகிய ஆறு மாவட்டங்களில் பார் உரிமம் எடுத்தவர்கள் யார் யார், அவை செயல்பாட்டில் இருக்கின்றனவா, எத்தனை பார்கள் மூடப்பட்டிருக்கின்றன என்ற தகவல்களையெல்லாம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டிருந்தேன். கிடைத்த தகவல்களெல்லாம் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

பொதுவாக, டாஸ்மாக் பார் உரிமம் தொடர்பான ஒப்பந்தத்தை எடுக்கும் உரிமையாளர்கள், அரசுக்கு மாதம்தோறும் உரிமத்தொகை செலுத்தி வர வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் தொகை செலுத்தாவிட்டால் சம்பந்தப்பட்ட ஒப்பந்தத்தை 30 நாள்களுக்குள் ரத்துசெய்துவிட்டு, கலால்துறை மறு டெண்டர் விட வேண்டும். ஆனால், இந்த நடைமுறை சரிவரக் கடைப்பிடிக்கப்படுவதில்லை. எனவே, அரசுக்கு வரவேண்டிய வருமானத்தைத் தடுத்து, குறிப்பிட்ட சிலர் கோடிக்கணக்கில் சம்பாதித்துக்கொண்டிருக்கின்றனர்.

உதாரணமாக, அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளராக அறியப்படும் ஈஸ்வரமூர்த்தி என்பவர் கோவை வடக்கு மாவட்டத்தில் டெண்டர் எடுத்திருந்த மூன்று பார்களில், 1596, 1613 என்ற எண்கொண்ட இரண்டு பார்களும் அரசுக்குச் செலுத்தவேண்டிய மாதாந்தரத் தொகையைச் செலுத்தவில்லை. எனவே, அந்த பார்கள் கடந்த ஆண்டே மூடப்பட்டுவிட்டன எனத் தேதிவாரியாகக் குறிப்பிட்டு பதிலளித்திருக்கிறது டாஸ்மாக் நிர்வாகம். ஆனால், இப்போதுவரை அந்த பார்கள் மூடப்படவில்லை; தொடர்ந்து சட்டவிரோதமாக இயங்கிவருகின்றன.

இதில் 1596 என்ற எண்கொண்ட பார் மாதம்தோறும் அரசுக்குச் செலுத்தவேண்டிய உரிமத்தொகை ரூ.3,44,120. அந்த பார் 28.2.2022 தேதியுடன் மூடப்பட்டுவிட்டதாகக் கூறி, தொடர்ந்து நடத்துவதால் அந்த ஒரு பாரிலிருந்து மட்டும் இதுவரை அரசுக்கு வரவேண்டிய ரூ.44 லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக் கிறது. இப்படி மேற்கண்ட ஆறு மாவட்டங்களில் வெவ்வேறு காலகட்டங்களில் மூடப்பட்டதாகச் சொல்லப் படும் பார்களும் இப்போதுவரை இயங்கிக்கொண்டிருக் கின்றன. கோவை வடக்கு மாவட்டத்தில் செயல்பட்டுவரும் சட்டவிரோத பார்களில், ஒரு பாருக்குச் சராசரியாக ரூ.2 லட்சம் எனக் கணக்கிட்டால்கூட கடந்த எட்டு மாதங்களில் மட்டும் இந்தச் சட்டவிரோத பார்களால் ரூ.11 கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும். அதிகாரிகள் பாரில் நேரடியாக ஆய்வுசெய்து, விதிமுறைப்படி இயங்குகிறதா எனப் பார்த்திருந்தாலே இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுத்திருக்க முடியும்.

டாஸ்மாக்
டாஸ்மாக்

இது தவிர டெண்டர் எடுப்பவர்கள், அரசுக்குச் செலுத்தவேண்டிய தொகையில் 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி-யாகச் செலுத்த வேண்டும். அதையும் யாரும் செலுத்துவதில்லை. இதனால் மத்திய அரசுக்கும் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. தமிழ்நாடு முழுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் இப்படி 30-40 சதவிகித பார்கள் மூடப்பட்டிருப்பதாகக் கணக்கு காட்டப்பட்டாலும், அவை தொடர்ந்து சட்டவிரோதமாக இயங்கிவருகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.200 கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. துறை மேலிட உத்தரவு என்பதால், அதிகாரிகள் மறு டெண்டர் விடாமல் இருக்கின்றனர். இவ்வளவு பெரிய வருவாய் இழப்புக்கு யார் பொறுப்பேற்பது?” என்றார் கொதிப்புடன்.

இதையடுத்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கூறியிருக்கும்படி 1596, 1613 எண்கொண்ட பார்களின் உண்மைநிலையை அறிந்துகொள்ள நாமும் கள ஆய்வு செய்தோம். முதலில் என்.எஸ்.ஆர். சாலையிலுள்ள 1613 பாருக்குச் சென்றோம். மாலை நேரம் என்பதால் பாரில் கூட்டம் நிறைந்து வழிய, எந்தவித ஒளிவு மறைவும் இல்லாமல் பார் இயங்கிக்கொண்டிருந்தது. அதை வீடியோ பதிவு செய்துவிட்டு, ரத்தினபுரி பகுதியிலுள்ள 1596-ம் எண்கொண்ட பாருக்குச் சென்றோம். அங்கும் எந்தத் தடையும் இல்லாமல் பார் இயங்கிக்கொண்டுதான் இருந்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி, ஜூலை 2022 முதல் அந்த பார் மூடப்பட்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அந்த பார் எந்தத் தங்கு தடையுமின்றி, தாராளமாக இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

டாஸ்மாக்
டாஸ்மாக்

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய ‘கோவை டாஸ்மாக் சங்க’ மாவட்டத் தலைவர் எஸ்.மூர்த்தி, “டாஸ்மாக் நிர்வாகம் முழுக்க முழுக்க ‘கரூர் கம்பெனி’ பிடியில் சிக்கியிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் 5,341 கடைகள் இருக்கின்றன. கோவை மாவட்டத்திலுள்ள பார்கள் அனைத்தும் ஈஸ்வரமூர்த்தி என்பவரின் கன்ட்ரோலில்தான் இயங்குகின்றன. ஒரு நாளைக்கு எத்தனை பாட்டில்கள் விற்கின்றனவோ அவற்றில் பாட்டிலுக்கு தலா ரூ.2 தி.மு.க கட்சி நிதியாகத் தர வேண்டும் எனக் கேட்கின்றனர். சி.ஐ.டி.யூ தவிர அ.தி.மு.க உள்ளிட்ட அனைத்துத் தொழிற் சங்கங்களும் அதிகாரிகளும் ஈஸ்வரமூர்த்தி சொல்படியே நடக்கிறார்கள். கோவை தெற்கு மாவட்டத்தில் 145 பார்கள் இருக்கின்றன. இவற்றில் 70 பார்கள்தான் உரிமம் பெற்று இயங்குவதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதில் கிடைத்தது. அப்படியென்றால் மீதியுள்ள பார்களில் கிடைக்கும் வருமானம் யாருக்குச் செல்கிறது... கோவை மாவட்டத்தில் இயங்கிவரும் சட்ட விரோத பார்களால் மட்டும் ஆண்டுக்குச் சுமார் 50 கோடி ரூபாய் அளவில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது’’ என்றார்.

தடையின்றி இயங்கும் உரிமம் இல்லா பார்கள்... ஆண்டுக்கு ரூ.200 கோடி அரசுக்கு இழப்பு...

1596, 1613 பார்களை டெண்டர் எடுத்திருந்த ஈஸ்வரமூர்த்தியிடம் அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் விளக்கம் கேட்டுப் பேசினோம். “இவையெல்லாம் தவறான தகவல்கள். நான் டெண்டர் எடுத்திருந்தது உண்மைதான். ஆனால், டி.டி அதிகமாக இருப்பதால், மேற்கண்ட இரண்டு பார்களையும் என்னால் நடத்த முடியவில்லை. நஷ்டமாவதால்தான் அவற்றை விட்டுவிட்டு என்னால் முடிந்த பார்களை மட்டும் நடத்துகிறேன். மற்றபடி மூடப்பட்டதாகச் சொல்லப்படும் பார்களும் இயங்குகின்றன என்றால், அது குறித்து நீங்கள் அதிகாரிகளிடம்தான் கேட்க வேண்டும். அதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. நான் டிரான்ஸ்போர்ட் உள்ளிட்ட தொழில்களைச் செய்துவருகிறேன். நான் அமைச்சரை (செந்தில் பாலாஜி) பார்த்ததுகூட இல்லை” எனக் கூறி இணைப்பைத் துண்டித்துக்கொண்டார்.

இதையடுத்து, கோவை மண்டல முதுநிலை மேலாளர் (பொறுப்பு) அருண் சத்யாவிடம் விளக்கம் கேட்டோம். “கடந்த இரண்டு வாரங்களாகத்தான் நான் கோவையை கவனித்து வருகிறேன். நான் பணிபுரிந்துவரும் மதுரை மண்டலத்தில் கடந்த ஆண்டே மறு டெண்டர் விட்டுவிட்டோம். கோவை நிலவரம் குறித்து எனக்குச் சரியாகத் தெரியவில்லை. நீங்கள் சொல்லும் பார்களையெல்லாம் ஆய்வுசெய்து அவை சட்டவிரோதமாக இயங்கினால், உரிய நடவடிக்கை எடுக்கிறோம். அதேபோல மாவட்டம் முழுவதும் இயங்கும் சட்டவிரோத பார்கள் குறித்தும் ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

ஈஸ்வரமூர்த்தி - லோகநாதன்
ஈஸ்வரமூர்த்தி - லோகநாதன்

இது குறித்து விளக்கம் கேட்க அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரின் உதவியாளர்கள் விஜயக்குமார், சங்கர் ஆகியோரைத் தொடர்பு கொண்டோம். ‘அமைச்சர் சட்டசபை மானியக் கோரிக்கையில் பிஸியாக இருப்பதாக’ விஜயக்குமார் கூறினார். இதற்கிடையே நம்மைத் தொடர்பு கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, “நான் வேலை வெட்டி இல்லாமல் இல்லை. எதுவாக இருந்தாலும் நேரடியாக வாருங்கள். விளக்கம் தருகிறேன்” என்றார் கோபமாக. உடனே நாம் சென்னையிலுள்ள அமைச்சரின் இல்லத்துக்கு நேரில் சென்றோம். ஆனால், அவர் அங்கும் விளக்கமளிக்கவில்லை.

மீண்டும் அமைச்சரின் உதவியாளர் சங்கரைத் தொடர்புகொண்டு சந்திக்க நேரம் கேட்டோம். அதற்கு சங்கர், “அமைச்சர் உங்களை போனில் கூப்பிடச் சொன்னார்...” என்றார். உடனே நாமும் அமைச்சரின் செல்பேசியைத் தொடர்புகொண்டோம். ஆனால், அமைச்சர் நமது அழைப்பை ஏற்கவில்லை. குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சர் விளக்கமளித்தால், அதைப் பரிசீலித்து பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்!