
புலிகள் காப்பகத்துக்குள் சாலைகளைச் சிறிதளவு சீரமைத்து, விரிவாக்கம் செய்ய வேண்டுமானால்கூட உச்ச நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும்
பிரதமர் மோடியின் ஐந்து நிமிட நிகழ்ச்சிக்காக ஒட்டுமொத்த முதுமலைக் காட்டையே புரட்டிப் போட்டிருக்கிறது வனத்துறை. பழங்குடிகள் தங்கள் வீட்டுக் கூரையை மாற்றுவதற்குக்கூட ஏகப்பட்ட கெடுபிடிகளை விதிக்கும் வனத்துறை, மோடிக்காக கோடிகளைக் கொட்டி வேலை செய்திருப்பது சர்ச்சையாகியிருக்கிறது!
தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டிருக்கும் புலிகள் காப்பகத்துக்குள் என்னென்ன விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும், எதையெல்லாம் மீறக் கூடாது என ஒரு நீண்ட பட்டியலே இருக்கிறது. இந்த நிலையில், பிரதமரின் வருகையையொட்டி, ஹெலிபேட் அமைத்தது முதல் தரைவழிப் பயணத்துக்காக அடர்வனத்துக்குள் சாலையைச் செப்பனிட்டது வரை பல கட்டுப்பாடுகளைக் கைவிட்டு, விதிகளைக் காற்றில் பறக்கவிட்டிருக்கிறது வனத்துறை எனக் கொதிக்கிறார்கள் முதுமலைப் பழங்குடிகளும், சூழலியல் செயற்பாட்டாளர்களும்.

நம்மிடம் புலம்பிய சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர், “புலிகள் காப்பகத்துக்குள் சாலைகளைச் சிறிதளவு சீரமைத்து, விரிவாக்கம் செய்ய வேண்டுமானால்கூட உச்ச நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும். ஆனால், பிரதமரின் வருகைக்காக கோர் ஏரியா என்றும் பாராமல் மசினகுடி தெப்பக்காடு பகுதியில் எம்-சாண்ட் மற்றும் மண்ணைக்கொண்டு சாலையின் ஓரங்களை அகலப்படுத்தியிருக்கிறார்கள். புலிகள் காப்பகத்துக்கு மேல் ஹெலிகாப்டர் பறக்கத் தடை இருக்கிறது. ஜெயலலிதா ஒருமுறை ஹெலிகாப்டரில் முதுமலைக்கு வர முடிவுசெய்தார். அப்போது கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால், முடிவை மாற்றிக்கொண்டு சாலை மார்க்கமாகவே வந்து சென்றார். ஆனால், மோடியின் வருகைக்காக பஃபர் ஏரியாவான மசினகுடியில் தனியார் பட்டா நிலம் என்ற பெயரில், நூற்றுக்கணக்கான ஆட்களை இரவு பகலாக வேலை செய்யவைத்து, கனரக வாகனங்கள் மூலம் ஹெலிபேட் அமைத்திருக்கிறார்கள்.
பந்திப்பூர், முதுமலை ஆகிய இரண்டு புலிகள் காப்பகங்களுக்கு மேல் பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் பறந்திருக்கிறது. ஹெலிகாப்டர் ஒத்திகையும் நடந்திருக்கிறது. இவை தவிர பிரதமரின் பாதுகாப்புப் பணி என்ற பெயரில் ஆயிரக்கணக்கான போலீஸார் கண்கூசும் ஒளி விளக்குகளுடன் இரவு நேரங்களில் வனத்துக்குள் நடமாடியிருக்கிறார்கள். பிரதமர் மோடியின் வருகை என்ற பெயரில் கோடிக்கணக்கான பணத்தைக் கொட்டி, தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டிருக்கும் புலிகள் காப்பகத்துக்குள் ஏகப்பட்ட விதிமீறல்களைச் செய்திருக்கிறது முதுமலை வன நிர்வாகம். சுமார் 2 ஆயிரம் போலீஸார் மூன்று நாட்களாக முதுமலையில் தங்கி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களும் பிளாஸ்டிக் குப்பைகளை வீசியெறிந்துவிட்டுப் போயிருக்கிறார்கள்” என்றார் ஆதங்கத்துடன்.


நீலகிரி பண்டைய பழங்குடிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரான ஷோபா, “பல்லுயிர்ச் சூழல் நிறைந்த புலிகள் காப்பகத்துக்குள் இவ்வளவு பெரிய படையை இறக்கி, பிரதமர் வரவேண்டிய அவசியம் என்ன... பாகன் தம்பதியை டெல்லிக்கு வரவழைத்துச் சந்தித்திருக்கலாம். `புலிகள் பாதுகாப்பு’ என்ற பெயரில் பழங்குடிகளை அடக்கி, ஒடுக்கும் வனத்துறைக்கு இதெல்லாம் கண்ணுக்குத் தெரியாதா... வனத்துறையின் அனுமதி கிடைக்காமல் இன்னும் பல மலைக்கிராமங்களில் சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்கூட எட்டவில்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் பிரதமரின் முதுமலை வருகை, இங்குள்ள பழங்குடி மக்களுக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை” என்றார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து முதுமலை புலிகள் காப்பகக் கள இயக்குநர் வெங்கடேஷிடம் பேசினோம். “ஆளுநர், மாநில முதல்வர், அமைச்சர்கள் வரும்போது மேற்கொள்ளப்படும் வழக்கமான சீரமைப்புப் பணிகளைத்தான் பிரதமரின் வருகையின்போதும் மேற்கொண்டோம். இதில் விதிமீறல் எதுவும் நடைபெறவில்லை. புலிகள் காப்பக விதிமுறைக்கு உட்பட்டே அனைத்துப் பணிகளையும் செய்தோம்” எனச் சுருக்கமாக முடித்துக்கொண்டார்.
‘வல்லவன் வகுத்ததே வாய்க்கால்’ என்று சும்மாவா சொன்னார்கள்?!