சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

12 மணி நேர வேலை... நம்மை என்னவாக மாற்றும்?

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டாலின்

12 மணி நேர வேலை என்பது வெறும் 12 மணி நேரத்தை மட்டுமே உள்ளடக்கியது அல்ல! திண்டிவனத்திலிருந்தும் அரக்கோணத்திலிருந்தும் ரயில் பிடித்து தினமும் சென்னை வந்து உழைப்பவர்கள் பல ஆயிரம் பேர்.

``உழைத்து அலுப்பதும், உருக்குலைவதும், ஓயாமல் உழைப்பதும், வாழ்வின் சுவையையே காணாதிருப்பதும் இன்று பாட்டாளியின் கதியாக இருக்கிறது. இதனால் தொழிலாளி துயரின் உருவமாகிறான்; அடிமைப்படுகிறான். வாழ்வு பெரியதோர் சுமை என்று எண்ணுகிறான். இந்த நிலையை மாற்றவே எட்டு மணி நேர வேலைத் திட்டத்தை வலியுறுத்தினர். நாளொன்றுக்கு 8 மணி நேரம் உழைப்பது, 8 மணி நேரம் குடும்பத்தினருடன் குதூகலமாக வாழ்வது, மற்ற 8 மணி நேரம் ஓய்வாக இருப்பது என்ற திட்டத்தை மே தினம் எடுத்துக் கூறுகிறது.''

1946, மே முதல் தேதி திருச்சி பொன்மலை திராவிட வாலிபர் கழகத்தின் மே தின விழாவில் அறிஞர் அண்ணா ஆற்றிய உரை இது. அண்ணாவின் அடிச்சுவட்டில் நடைபோடும் இன்றைய தமிழ்நாடு அரசு 12 மணி நேர வேலைத் திட்டத்தை அங்கீகரித்து சட்டம் இயற்றியிருக்கிறது. (எதிர்ப்புகளைத் தொடர்ந்து இதன் செயலாக்கத்தை நிறுத்திவைப்பதாக இப்போது தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது!) இந்தியாவிலேயே முதல்முதலாக மே தினம் கொண்டாடிய தமிழகத்தில், அதன் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் நேரத்தில் தொழிலாளர்களுக்கு அரசு தரும் `பரிசு’ இது.

இந்த 12 மணி நேர வேலை என்பதை, ‘தொழிலாளர்கள் தொடர்ந்து மூன்று நாள்கள் விடுப்பு எடுப்பதற்கான வாய்ப்பு’ என்று முகமூடி போட்டு முன்னிறுத்துகிறார்கள். உண்மையில் தொழிலாளர்கள் வாரத்தில் மூன்று நாள்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்ற அக்கறையில் கொண்டுவரப்பட்ட மசோதாவா இது? இல்லை, இது தொழில் நிறுவனங்களின் தேவை. ‘வேலை நேரத்தில் இப்படிப்பட்ட நெகிழ்வுத் தன்மையை தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன’ என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளிப்படையாகவே ஒப்புக்கொள்கிறார். சில மாதங்களுக்கு முன்பு தொழில் நிறுவனங்கள் முதல்வரைச் சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

1948-ம் ஆண்டின் தொழிற்சாலைகள் சட்டத்தில் இதன்மூலம் தமிழ்நாடு அரசு கொண்டுவந்திருக்கும் விதிவிலக்குகள் ஏராளம். வாரத்தில் 48 மணி நேரம் மட்டுமே ஒருவர் பணிபுரிய வேண்டும் என்பதிலிருந்து விலக்கு, ஞாயிற்றுக்கிழமை வேலை செய்யக்கூடாது என்பதிலிருந்து விலக்கு, ஒருநாளில் 9 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்யக்கூடாது என்பதிலிருந்து விலக்கு, குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது ஓய்வெடுக்காமல் தொடர்ச்சியாக 5 மணி நேரத்துக்கு மேல் வேலை பார்க்கக்கூடாது என்பதிலிருந்து விலக்கு, ஒரு நாளில் 9 மணி நேரத்துக்கு அதிகமாகவோ அல்லது ஒரு வாரத்தில் 48 மணி நேரத்துக்குக் கூடுதலாகவோ வேலை பார்த்தால் சாதாரண ஊதியத்தைப் போல இரண்டு மடங்கு அளவுக்கு ஓவர்டைம் ஊதியம் தர வேண்டும் என்பதிலிருந்தும் விலக்கு.

தொழிலாளர் நலச் சட்டங்கள் அனைத்தையும் அரசுகள் கலைத்துப் போடு வதற்கு கொரோனாவைப் பயன் படுத்திக் கொண்டன. தொழிலாளர் விதிகளில் மத்திய அரசு 2020 நவம்பரில் கொண்டுவந்த திருத்தம், தினமும் 12 மணி நேரம் வரை ஊழியர்களை வேலை வாங்க அனுமதித்தது. அதற்கு முன்பாகவே குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, மத்தியப்பிரதேசம், பஞ்சாப் மற்றும் இமாசலப்பிரதேசம் என்று ஆறு மாநில அரசுகள், 12 மணி நேர ஷிப்ட்டை நடைமுறைக்குக் கொண்டுவந்துவிட்டன. இதில் குஜராத் மஸ்தூர் சபா போட்ட வழக்கை அடுத்து, குஜராத் அரசு கொண்டுவந்த திருத்தத்தினை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

இந்நிலையில் 12 மணி நேர வேலைத் திட்டம், இரவு ஷிப்டிலும் பெண்கள் வேலை செய்ய அனுமதி, ஓவர்டைம் நேரம் இரண்டு மடங்காக அதிகரிப்பு என்று கர்நாடகா சில மாதங்களுக்கு முன்பு சட்டங்களை மாற்றியது. தமிழ்நாடும் அதே மாற்றங்களைக் கொண்டு வந்திருப்பதுதான் ஆச்சர்யம்.

12 மணி நேர வேலை என்பது வெறும் 12 மணி நேரத்தை மட்டுமே உள்ளடக்கியது அல்ல! திண்டிவனத்திலிருந்தும் அரக்கோணத்திலிருந்தும் ரயில் பிடித்து தினமும் சென்னை வந்து உழைப்பவர்கள் பல ஆயிரம் பேர். 10 மணி ஷிப்ட்டுக்கு வர அவர்கள் அதிகாலை ரயில் பிடிக்க வேண்டும். அந்த ரயில் நிலையங்களிலிருந்து அவர்களின் வீடுகள் வெகு தொலைவில் இருக்கும். அவர்கள் எழுந்து, குளித்துத் தயாராகி, உணவு எடுத்துக்கொண்டு ஏதோ ஒரு வாகனத்தில் ரயில் நிலையம் வந்து, ரயில் பிடித்துச் சென்னை வந்து, இங்கும் ஏதோ ஒரு வாகனம் பிடித்துப் பணியிடம் சென்று வேலையை ஆரம்பிக்கிறார்கள். திரும்பவும் இதே சுழற்சியில் மாலை வீடு திரும்ப வேண்டும். பெண்கள் என்றால், அவர்களுக்கு இந்தப் பட்டியலில் வீட்டு வேலைகளும் சமையலும் சேர்ந்து கொள்ளும்.

‘சில நிறுவனங்கள் மட்டுமே இதைப் பின்பற்றும்' என்கிறது அரசு. ஆனால், இது தொற்றுநோய் போல! ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனத்துக்கு வேகமாகப் பரவும். ‘தொழிலாளர் விரும்பினால் 12 மணி நேரம் வேலை பார்க்கலாம். இல்லையெனில் மறுக்கலாம்' என்கிறது அரசு. ‘விருப்பமில்லை’ என்று மறுக்கும் உரிமை ஒரு தொழிலாளிக்கு இருக்கிறதா? அப்படி மறுக்கும் தொழிலாளியை வேலையில் தொடர்வதற்கு விட்டுவைக்குமா ஒரு நிறுவனம்?

‘‘8 மணி நேர வேலையென்பது நூற்றாண்டு காலப் போராட்டத்தின் மூலம் தொழிலாளர் வர்க்கம் பெற்ற உரிமை. இன்று உலகம் முழுவதும் முதலாளித்துவ நெருக்கடி அதிகரித்திருக்கிறது. அரசியல் மட்டத்திலும் அவர்களின் கை ஓங்கியிருக்கிறது. அவர்கள் நலனைப் பாதுகாக்கவே அரசுகள் பெரிதும் முனைப்புக் காட்டுகின்றன. தமிழக அரசும் அந்த நெருக்குதலுக்குப் பணிந்துவிட்டது. ஐ.டி, எலெக்ட்ரானிக் நிறுவனங்கள் வைத்த கோரிக்கைகளின்படியே இந்த 12 மணி நேர வேலை மசோதா கொண்டு வரப்படுவதாக சட்டசபையில் அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இந்த மசோதாவின் நோக்கமே 8 மணி நேர வேலை என்ற சட்டபூர்வ உரிமையை காலிசெய்வதுதான். உண்மையில் ஒரு மனிதர் 12 மணி நேரம் ஒரே வேலையைப் பார்க்கவே முடியாது.

12 மணி நேர வேலை... நம்மை என்னவாக மாற்றும்?

இங்கே எல்லா ஐ.டி நிறுவனங்களும் நகரங்களுக்கு வெளியேதான் இருக்கின்றன. ஊழியர்கள் தினமும் போகவர குறைந்தது மூன்றிலிருந்து நான்கு மணி நேரத்தைச் செலவிடுகிறார்கள். அலுவலகத்திலும் 12 மணி நேரம் வேலை செய்தால் அவர்கள் வாழ்க்கையில் வேறு என்ன இருக்கும்? குடும்பம், குழந்தைகள் எனத் தனிப்பட்ட வாழ்க்கை எதுவுமே இல்லாமல் போய்விடும்.

ஐ.டி துறையைப் பொறுத்தவரை 12 மணி நேர வேலை, 14 மணி நேர வேலையெல்லாம் சர்வசாதாரணம். 12 மணி நேர வேலை என்பதை சட்டபூர்வமாக்கிவிட்டால் ஐ.டி நிறுவனங்கள் அதற்கு மேலும் வேலை வாங்கும். ஐ.டி நிறுவனங்களில் சங்கங்கள்கூட வலுவாக இல்லை. ஏற்கெனவே அடிமைகளாக இருப்ப வர்களை இந்த மசோதா கொத்தடிமைகளாக மாற்றப்போகிறது.

தொழிற்சங்கங்கள், தொழிலாளர் நலத்துறை அட்வைசரி போர்டு இரண்டையும் கலந்து ஆலோசித்தபிறகுதான் தமிழக அரசு இந்த சட்டத்தைக் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் தன்னிச்சையாக இதைக் கொண்டு வந்திருக்கிறது. மத்திய அரசு ஏற்கெனவே நடைமுறையில் இருந்த 44 தொழிலாளர் சட்டங்களை 4 சட்டங்களாக மாற்றிவிட்டது. அதைக் கண்டித்து இந்தியா முழுவதும் தொழிற்சங்கங்கள் போராடிவருகின்றன. வேலை நேரத்தைத் தொழில்துறையினரே தீர்மானிக்க வகை செய்வது அதில் ஒரு சட்டம். அந்தச் சட்டத்தை மத்திய அரசே நடைமுறைக்குக் கொண்டுவரத் தயங்கும் நிலையில், தமிழக அரசு கொண்டு வந்திருக்கிறது'' என்கிறார் ஃபோரம் ஃபார் ஐ.டி எம்ப்ளாயிஸ் அமைப்பின் தலைவர் பரிமளா.

‘‘சாப்ட்வேர், எலெக்ட்ரானிக் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்றுதான் இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறோம் என்கிறார்கள் அமைச்சர்கள். ஆனால், தற்போது கொண்டு வரப்பட்டுள்ள தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் ஐ.டி நிறுவனங்கள் பதிவு செய்யப்படுவதில்லை. Tamilnadu Shops and Establishments Act-ன் கீழ்தான் பதிவு செய்யப்படும். தமிழகத்தைப் பொறுத்தவரை ஐ.டி நிறுவனங்களுக்கான வரையறை தெளிவாகவே இல்லை.

ஐ.டி நிறுவனங்களைக் கண்காணிக்க தமிழக அரசிடம் சிஸ்டமே இல்லை. சட்டத்தில் இருக்கும் எந்தச் சலுகையும் அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்குக் கிடைப்பதேயில்லை. நாங்கள் அரசுக்குப் புகார் அளித்தாலும் விசாரிக்கிறோம் என்று கூறி இழுத்தடித்துச் சோர்வடையச் செய்துவிடுவார்கள்.

நாங்கள் 48 மணி வேலை நேரத்தை 30 மணி நேரமாகக் குறையுங்கள் என்று கோரிக்கை விடுத்துக்கொண்டிருக்கிறோம். நான்காவது தொழில்புரட்சிக்காலம் இது. தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஆண்டுக்கு மூன்று முதல் நான்கு சான்றிதழ்களை நாங்கள் நிறுவனங்களுக்குக் காட்ட வேண்டியிருக்கிறது. படிக்காவிட்டால் இந்தத்துறையில் தாக்குப்பிடிக்கவே முடியாது. இன்று தனிப்பட்ட வாழ்க்கையை, குடும்பத்தை இழந்துதான் ஐ.டி ஊழியர்கள் தங்களை அப்டேட் செய்துகொள்கிறார்கள். அதன் விளைவாக நிறைய குழந்தையின்மைப் பிரச்னைகள், விவாகரத்துகளை எதிர்கொள்கிறார்கள். இதைத் தமிழக அரசு புரிந்துகொள்ள வேண்டும்...'' என்கிறார் மென்பொருள் துறை தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் அழகுநம்பி வெல்கின்.

‘‘பழைய தொழிற்சாலைச் சட்டம் வாரத்துக்கு 48 மணி நேர வேலையை உறுதிப்படுத்துகிறது. மூன்று மாதங்களுக்கு 75 மணி நேரம் ஓவர்டைம் செய்யவும் அனுமதிக்கிறது. ஓவர் டைமுக்கு உரிய சம்பளம் தரவேண்டும். பத்து நாள்களுக்குள் ஒருநாள் விடுமுறை கட்டாயம் தரப்பட வேண்டும். ஒருவேளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வழங்கமுடியாவிட்டால் தொழிலாளருக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தி அடுத்தடுத்த நாள்களில் வழங்க வேண்டும். இப்படிப் பல பாதுகாப்பு அம்சங்களைக்கொண்டிருக்கிறது.

தற்போது கொண்டு வந்திருக்கும் சட்டத்தை வெறும் 12 மணி நேர வேலைச் சட்டம் என்று சுருக்கிப் பார்க்கிறார்கள். உண்மையில் தொழிலாளர் சட்டம் இதுவரை அளித்த எல்லாச் சலுகைகளையும் இந்தப் புதிய சட்டம் நீக்கியிருக்கிறது.

12 மணி நேர வேலை... நம்மை என்னவாக மாற்றும்?

முன்பு தொழிலாளர்கள் எத்தனை மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்பதை அரசு தீர்மானித்தது. இனி தொழிற்சாலைகளே தீர்மானித்துக்கொள்ளலாம். தொழிலாளர்கள் இனி எந்தக்குரலையும் எழுப்ப முடியாது. தொழிற்சங்கங்களும் செயல்பட முடியாது. இதில் இன்னொரு அபாயமும் இருக்கிறது. வேலை நேரத்தை நிறுவனமே தீர்மானித்துக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்குவதன்மூலம், கூடுதலாக சம்பளம் வாங்குபவர்களை இனி நீங்கள் 5 மணி நேரம் வேலை செய்தால் போதும் என்று அனுப்பிவிட்டு, குறைந்த சம்பளம் வாங்குபவர்களை அதிக நேரம் வைத்து வேலை வாங்கும் நிலைகூட ஏற்படலாம். இப்படியொரு நிலை ஏற்பட்டால் தொழிலாளர்கள் எங்கும் இதுகுறித்துப் புகார் செய்ய முடியாது. சட்டம் நிறுவனங்களுக்கு சாதகமாகவே இருக்கும்.

ஒரு மனிதன் கவனத்தோடும் உற்சாகத்தோடும் 12 மணி நேரம் வேலை செய்ய முடியாது என்பதுதான் இயற்கை. கட்டாயப்படுத்தும்போது விபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு.

இன்று மொத்தமுள்ள தொழிற்சாலைகளில் வெறும் 10% இடங்களில்கூட தொழிற்சங்கம் இல்லை. இருக்கும் இடங்களிலும் சுதந்திரமாக சங்கங்கள் செயல்படவில்லை. தமிழகத்தில் தொழிற்சங்கத்துக்கென சட்டமே இல்லை. பாக்ஸ்கான் நிறுவனத்தில் 20,000 பேர் வேலை செய்கிறார்கள். ஆனால் அங்கு தொழிற்சங்கம் இல்லை. 1986-ல் கோவையில் நடந்த மே தின நூற்றாண்டு விழாவில் கலைஞர், ‘6 மணி நேரம் மட்டுமே வேலை நேரமாக இருக்க வேண்டும்' என்று பேசினார். அவர் மகன், இந்த சட்டத்தின்மூலம் கடந்த நூற்றாண்டுக்கு அழைத்துச் செல்கிறார்.

ஐரோப்பிய நாடுகளில் வேலை நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அதனால் உற்பத்தி அதிகரித்துள்ளது. போதிய ஓய்வு கொடுத்துத் தொழிலாளர்களிடம் வேலை வாங்கும்போது உற்பத்தித்திறன் கூடும் என்பது உலகளாவிய உண்மை. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது இதை எதிர்த்தார். ‘எக்காலத்திலும் இதுமாதிரியான சட்டங்களை நாங்கள் இங்கே அனுமதிக்க மாட்டோம்' என்றார். இன்று அவரே முன்னின்று இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்’’ என்கிறார் பெரும்புதூர் வட்டாரத்தில் இயங்கும் பல்வேறு நிறுவனத் தொழிற்சங்கங்களை வழிநடத்தும் சி.ஐ.டி.யூ நிர்வாகி முத்துக்குமார்.

உலகின் உற்பத்தி கேந்திரமாக சீனா இருந்தது, இப்போதும் இருக்கிறது. கொரோனா நேரத்தில் அங்கிருந்து உலகெங்கும் பொருள்கள் போவது பாதிப்புக்கு ஆளானது. சீனாவுக்கு மாற்றாக பல நிறுவனங்கள் இந்தியாவைக் கருதுகின்றன. சீனாவைவிட அதிகமாக உழைக்கும் வயது மனிதவளம் இந்தியாவில் இருக்கிறது. ஆனால், இங்கிருக்கும் தொழிலாளர் நலச்சட்டங்களே அந்த நிறுவனங்களுக்குத் தடையாக இருக்கின்றன. அவற்றைத் தளர்த்தும் மாநிலங்களில் அந்நிய முதலீடுகள் குவியும் என்ற சூழல். அந்தப் போட்டியில் கர்நாடகம் முதல் அடியை எடுத்து வைத்திருக்க, தமிழ்நாடும் களத்தில் குதித்திருக்கிறது. இன்னும் பல மாநிலங்கள் இந்த வரிசையில் சேரக்கூடும்.

பரிமளா, முத்துக்குமார், அழகுநம்பி வெல்கின்
பரிமளா, முத்துக்குமார், அழகுநம்பி வெல்கின்

கம்யூனிச சீனாவில் வேலைக்கலாசாரம் மோசம். இதை ‘996' என்பார்கள். தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வாரத்தில் 6 நாள்கள் வேலை. ‘இந்த வாய்ப்பு கிடைத்தவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்' என்று சோஷியல் மீடியாவின் டார்லிங்காக இருக்கும் சீனத் தொழிலதிபர் ஜாக் மா சொல்வார். ஆனால், அது வரமல்ல, சாபம். இந்த வேலை நெருக்கடி தாளாமல் அங்கு தற்கொலைகள் அதிகரித்திருக்கின்றன. சீனக் குடும்பங்களில் குழந்தை பிறப்புகள் குறைந்திருப்பதற்கும் இந்த வேலை நேர நெருக்கடிக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாகப் பல ஆய்வுகள் சொல்கின்றன.

குடும்பத்துக்காகத் தியாகம் செய்து உழைப்பது ஒருவரை உயர்த்தும் என்பது உண்மைதான். ஆனால், அந்த உழைப்புக்காக வாழ்வையே தியாகம் செய்வதில் என்ன மிஞ்சும்? தினமும் பல மணி நேரம் பயணம் செய்து உழைக்க நேரும் மனிதர்களிடம், ‘எப்போது நீங்கள் கடைசியாக சூரிய உதயத்தையோ, அஸ்தமனத்தையோ நிதானமாகப் பார்த்து ரசித்தீர்கள்' என்று கேட்டுப் பாருங்கள். அவர்களின் விரக்திப் புன்னகைக்குள் ஆயிரம் அர்த்தங்கள் தெரியும்.

****

உலகின் பரிசோதனை முயற்சிகள்!

‘4 DAY WEEK GLOBAL- 4DWG’ எனும் நிறுவனம் பாஸ்டன் கல்லூரி மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வாரத்தில் நான்கு நாள்கள் வேலையை இங்கிலாந்தின் பல தொழில் நிறுவனங்களில் செயல்படுத்தி வருகிறது. அதற்குமுன்பே உலகெங்கிலும் நான்கு நாள் வேலைத் திட்டத்தைப் பல நிறுவனங்கள் மற்றும் நாடுகள் நடைமுறைப்படுத்திப் பார்த்தன.

ஐஸ்லாந்தில் 2015-ம் ஆண்டில் வேலை நேரத்தை வாரத்திற்கு 40 மணிநேரத்திலிருந்து 35-36 மணிநேரமாகக் குறைத்தனர், ஊதியத்தில் எந்தக் குறைவும் இல்லாமல். பல ஆண்டுகளாக இந்த சோதனை நடத்தப்பட்டது . இச்சோதனையின் வெற்றியால் 2021-ம் ஆண்டு குறுகிய வேலை வாரத்தை நிரந்தரக் கொள்கையாக ஐஸ்லாந்து அரசு மாற்றியது. ஸ்வீடனில் 2015-ல் முழு ஊதியத்துடன் நான்கு நாள் வேலை வாரம் அறிமுகமானது. சோதனையில் பணத்தைச் செலவழிக்கும் முறை அதிகரித்ததால் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடையவில்லை.

ஜப்பான் நாட்டில் மைக்ரோசாப்ட் நிறுவனம் சோதனை முயற்சியாக 2019 ஆகஸ்டில் ஊழியர்களுக்கு தொடர்ந்து ஐந்து வெள்ளிக்கிழமைகள் விடுமுறை வழங்கியது. சோதனை வெற்றிகரமாக இருந்தது, உற்பத்தித்திறன் 40% அதிகரித்தது. ஊழியர்கள் 25% குறைவான நாள்கள் விடுமுறை எடுத்தனர். ஸ்பெயின் அரசு, 2021-ல் நான்கு நாள் வேலை வாரத்தை ஊதியத்தில் எந்தக் குறைப்பும் இல்லாமல் அறிமுகப்படுத்த முற்பட்டது. இது இன்னும் செயல்படுத்தப்படாமல் திட்டமிடல் நிலையிலேயே உள்ளது. யூனிலீவர் நிறுவனம் நியூசிலாந்தில் இந்த சோதனையை 12 மாதங்களுக்கு நடத்தியது. அதில் அனைத்து ஊழியர்களுக்கும் வாரத்தில் நான்கு நாள்கள் வேலை செய்ததற்கு அதே ஐந்து நாள்களுக்கான ஊதியத்தை வழங்கியது.

கடந்த 2022 பிப்ரவரியில், பெல்ஜியம் ஊழியர்கள் சம்பளத்தை இழக்காமல் வழக்கமான ஐந்து நாள்களுக்குப் பதிலாக நான்கு நாள்களில் வாரத்தின் முழு வேலையையும் செய்யும் உரிமையைப் பெற்றனர். வாரத்தில் நான்கு அல்லது ஐந்து நாள்கள் வேலை செய்வது பற்றி ஊழியர்கள் முடிவு செய்ய அனுமதிக்கும் மசோதா அங்கு நவம்பர் 21 முதல் அமலுக்கு வந்தது.

மிகக் குறுகிய சராசரி வேலை வாரங்களின் தாயகம் ஜெர்மனி என்று கூறலாம். உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) கருத்துப்படி அங்கு வாரத்தின் சராசரி வேலை நேரம் 34.2 மணி நேரம்தான். ஆனாலும், தொழிற்சங்கங்கள் வேலை நேரத்தை மேலும் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன. இது வேலைகளைத் தக்கவைக்கவும், பணிநீக்கங்களைத் தவிர்க்கவும் உதவும் என்று வாதிடுகின்றன.

ஒட்டுமொத்தமாக, நான்கு நாள் வேலை வாரம் என்பது உலகம் முழுவதும் பரவலாகத் தொடங்கியுள்ளது. ஆனால், அங்கெல்லாம் வேலை நேரமும் சேர்த்துக் குறைக்கப்பட்டுள்ளது.

அதிக வேலையால் இதய நோய் வரும்!

‘‘நரகத்தில் இருப்பது போல வேலை செய்யுங்கள். வாரத்தில் 80 முதல் 100 மணி நேரம் வேலை செய்பவர்களை சீக்கிரம் வெற்றி நெருங்கும். மற்றவர்கள் வாரத்தில் 40 மணி நேரம் வேலை பார்த்து ஓராண்டில் அடையும் இடத்தை, நீங்கள் நான்கே மாதங்களில் அடைந்துவிடுவீர்கள்.'' இது இளம் தொழிலதிபர்களுக்கு எலான் மஸ்க் சொல்லும் அறிவுரை. அவர் அப்படித்தான் வேலை செய்கிறார். ஆனால், அவர் வெறுமனே ஆபீஸில் தன் இருக்கையில் உட்கார்ந்து வேலை பார்ப்பதில்லை. பிசினஸ் பயணங்களையும் அவர் வேலை நேரமாகக் கணக்கிடுகிறார் என்றாலும், அப்படி உழைப்பதுகூட நல்லதில்லை.

‘தினமும் 8 மணி நேரம் தொழிலாளர்கள் உழைக்கும் நிறுவனங்களில்தான் உற்பத்தித் திறனும் லாபமும் அதிகரிக்கின்றன' என்பது 19-ம் நூற்றாண்டிலேயே ஆய்வு செய்து கண்டறியப்பட்ட உண்மை. அதிக நேரம் வேலை பார்த்தால் உடல்நலக் கேடுகளும் வரக்கூடும். தினமும் 11 மணி நேரத்துக்கு மேல் நீண்ட நாள்கள் வேலை பார்ப்பவர்களுக்கு இதயநோய்கள் வரும் ஆபத்து 67% அதிகரிப்பதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. தூக்கம் பறிபோவது, மன அழுத்தம், நினைவாற்றல் குறைபாடு, குடிக்கு அடிமையாவது, தாறுமாறான உணவுப்பழக்கத்தால் சர்க்கரை நோய் வருவது என்று அதிகரிக்கும் வேலை நேரத்தால் பிரச்னைகள் நிறைய!

The Organization for Economic Cooperation and Development 2014-ம் ஆண்டில் ஓர் ஆய்வு செய்தது. ஒரே வேலையை கிரீஸ் நாட்டில் வாரத்தில் 42 மணி நேரம் செய்ததைவிட, ஜெர்மனியில் வாரத்தில் வெறும் 28 மணி நேரமே உழைத்து 70% அதிக உற்பத்தித்திறனை ஈட்டியுள்ளனர்.