
பழைய ரூபாய் நோட்டுகள் போல இல்லாமல் வேறு சைஸில் அச்சிடப்பட்ட இதன் அளவுக்கு ஏற்றபடி நாடு முழுக்க ஏ.டி.எம் இயந்திரங்களை மாற்ற வேண்டி இருந்தது.
ஒரு குழந்தை ஏழு வயதை எட்டுவதற்குள் மரித்துப்போவது சோகம். 2000 ரூபாய் நோட்டுக்கும் அந்த கதி ஏற்பட்டிருக்கிறது. நம் காலத்தில் அறிமுகமான ரூபாய் நோட்டு ஒன்று, நம் கண்ணெதிரில் புழக்கத்திலிருந்து அகற்றப்படுவது வரலாற்று விநோதம். ஆனால், குறைப்பிரசவத்தில் அவசரமாகப் பிறந்த அந்தக் குழந்தைக்கு இப்படி ஒரு முடிவு நேரும் என்பது கிட்டத்தட்ட எல்லோருக்குமே தெரிந்திருந்தது.
2016 நவம்பர் 8-ம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தபோது, மக்கள் தங்களிடம் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள வங்கிகள் முன்பு வரிசையில் நின்றார்கள். புழக்கத்தில் இருந்த 86% மதிப்புள்ள நோட்டுகளை செல்லாததாக திடீரென ஓர் இரவில் அறிவித்துவிட்டதால், மக்கள் கையில் புழங்குவதற்கு அவசரமாக உயர்மதிப்புள்ள கரன்சி நோட்டு தேவைப்பட்டது. அதனால் 2000 ரூபாய் நோட்டு அச்சிடப்பட்டது. பிரதமருக்கேகூட அதில் விருப்பமில்லை என்று சொன்னார்கள். 500 மற்றும் 1000 என உயர் மதிப்புள்ள நோட்டுகளைக் கறுப்புப்பணமாகப் பலரும் பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்று அவற்றைச் செல்லாததாக ஆக்கிவிட்டு, அதைவிட உயர்மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டை அச்சிட்டால் என்ன விமர்சனம் எழும் என்ற தயக்கம் அவருக்கு இருந்தது. ஆனால், வேறு வழியில்லை. நிலைமை கொந்தளிப்பாக இருந்தது.

புது டிசைன் செய்து நோட்டுகளை அச்சடித்தபிறகு புதிதுபுதிதாகக் குழப்பங்கள் வந்தபடி இருந்தன. பழைய ரூபாய் நோட்டுகள் போல இல்லாமல் வேறு சைஸில் அச்சிடப்பட்ட இதன் அளவுக்கு ஏற்றபடி நாடு முழுக்க ஏ.டி.எம் இயந்திரங்களை மாற்ற வேண்டி இருந்தது. ரகசிய ‘சிப்' இருப்பதாக தேசபக்தர்கள் பெருமிதப்பட்ட இந்த நோட்டு, அடிப்படையான பாதுகாப்பு அம்சங்கள்கூட இல்லாமல் இருந்ததால், கள்ளநோட்டு அடிப்பது சுலபமானது. அறிமுகமான சில நாள்களிலேயே கலர் ஜெராக்ஸிலேயே கள்ளநோட்டு எடுக்க முடிந்த பெருமையை இது பெற்றது. ‘பழைய 500 மற்றும் 1000 நோட்டுகளை தேசவிரோதிகள் சுலபமாக கள்ளத்தனமாக அச்சிட்டு வெளியிட்டார்கள். அதனால்தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கை' என்ற வாதமும் அத்துடன் அடிபட்டுப் போனது.
கரன்சி நோட்டை அச்சிடுவதே, அதை மக்கள் எளிதில் பரிவர்த்தனை செய்துகொள்வதற்குத்தான். அந்த விஷயத்தில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றாக 2000 ரூபாய் எப்போதும் இல்லை. சில்லறை மாற்றுவதே கடினமாக இருந்ததால், எளிய மக்களும் சாதாரண வியாபாரிகளும் இதை வெறுத்தனர். 100 ரூபாய், 200 ரூபாய் என விற்கும் எளிய வர்த்தகங்களில் இதை நிராகரித்தனர்.
இப்போது புழக்கத்தில் இருக்கும் பெரும்பாலான 2000 ரூபாய் நோட்டுகள், பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட முதல் ஐந்து மாதங்களில் அச்சிடப்பட்டவைதான். ரூ. 7,40,000 கோடி ரூபாய் மதிப்புக்கு 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன. இவற்றில் 89% நோட்டுகள் 2017 மார்ச் மாதத்துக்கு முன்பாக அச்சிடப்பட்டவையே! 2019 மார்ச் மாதத்துக்குப் பிறகு புதிதாக 2000 ரூபாய் நோட்டு அச்சிடுவதை ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்டது. அப்போதே, ‘இந்த நோட்டுக்கு அற்ப ஆயுள்தான்' என்று எல்லோரும் புரிந்துகொண்டார்கள்.
ஒரு கரன்சியின் தன்மையைப் பொறுத்து அதன் ஆயுளை ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கும். அதன்பிறகும் அது கைமாறிக்கொண்டே இருந்தால், நோட்டு கிழிந்துவிடும். இதற்கு ஐந்து ஆண்டுகளே ஆயுள் என நிர்ணயம் செய்திருந்தார்கள். 500, 200 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் அதிகமாக அச்சிடப்பட்டுப் புழக்கத்துக்கு வந்ததும், 2000 ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி. 2023 மார்ச் கணக்கீட்டின்படி, புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.3.62 லட்சம் கோடி. அதாவது, அச்சிட்டதில் சரிபாதி மட்டுமே! ஏ.டி.எம் இயந்திரங்களிலும் நீண்டகாலமாக இவை வருவதில்லை. பல வங்கிகளும் தங்கள் ஏ.டி.எம் இயந்திரங்களை 500, 200 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை மட்டுமே தரும்விதமாக மாற்றும் பணியை கடந்த பிப்ரவரி மாதமே தொடங்கிவிட்டன.
இந்த எல்லாவற்றுக்கும் பிறகு இப்போதைய நடவடிக்கை, 2000 ரூபாய் நோட்டைத் திரும்பப் பெறுவது மட்டுமே! பணமதிப்பிழப்பு போல இப்போதும் பெரும் பதற்றமும் நீண்ட வரிசையும் நிகழுமா என்றால், `இல்லை' என்பதே நிபுணர்களின் பதில். அதற்குக் காரணங்களையும் அடுக்குகிறார்கள்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாததாக அறிவித்தபோது, அப்போது புழக்கத்தில் இருந்த நோட்டுகளில் 86% அவைதான். அதனால் பதற்றம் ஏற்பட்டது. இப்போது புழக்கத்தில் இருப்பதில் 2000 ரூபாய் நோட்டுகள் வெறும் 10.8% மட்டுமே! 500 ரூபாய் நோட்டுகளே அதிகம். செல்லாது என்றும் அறிவிக்கவில்லை. நீண்ட கால அவகாசமும் கொடுக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் மாற்றவும் எளிமையான நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. பணமதிப்பிழப்பு காலம் போல கடும் நிபந்தனைகள் எதுவும் இல்லை. அதுமட்டுமல்லாமல், டிஜிட்டல் பரிவர்த்தனைகளும் இப்போது அதிகரித்துவிட்டன.
‘கறுப்புப்பணத்தை ஒழிக்கும் முயற்சி' என்று சிலர் இதை வர்ணிக்கின்றனர். ஆனால், பிரதமரோ, ரிசர்வ் வங்கியோ அப்படிச் சொல்லவில்லை. அதற்கான வாய்ப்பும் இல்லை. 2000 ரூபாய் நோட்டு அறிமுகமான புதிதில், கட்டுக்கட்டாக அந்த நோட்டு பிடிபட்டதாகப் புகைப்படங்கள் வெளியானதுண்டு. ஆனால், சமீபகாலமாக 'கணக்கில் காட்டாத பணம்' என பீரோக்களிலும் பைகளிலும் அடுக்கிவைத்துப் பிடிபடும் எல்லாமே 500 ரூபாய் நோட்டாக மட்டுமே இருப்பதைப் பார்க்க முடியும். நாம் நினைப்பதைவிட பதுக்கல்காரர்கள் புத்திசாலிகள். 2000 ரூபாய் நோட்டு விரைவில் செல்லாமல் ஆக்கப்படும் என்பது அவர்களுக்குத் தெரியும். மேலும், ‘கறுப்புப்பணம் என்பது பெரும்பாலும் கரன்சியாகப் பதுக்கி வைக்கப்படுவதில்லை. தங்கம், நிலம் என முதலீடுகளாக அது மாறிவிடுகிறது' என்று ரிசர்வ் வங்கியே சொல்லியிருக்கிறது.

இப்போதைய நடவடிக்கையின் விளைவுகள் என்னவாக இருக்கும்? கையிருப்பாக பணம் வைத்திருப்பவர்கள் பலரும் வங்கியில் அதைச் செலுத்துவார்கள். விளைவாக, வங்கிகளில் டெபாசிட் அதிகரிக்கும். இதற்குத் தயங்கும் பலர் நகைகள் வாங்குவார்கள். இந்த அறிவிப்புக்குப் பிறகு நகை விற்பனை அதிகரித்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. ரியல் எஸ்டேட் பிசினஸும் சூடுபிடிக்கக்கூடும். இந்திய ரூபாயின் மதிப்பும் சற்றே இறங்கக்கூடும்.
‘2000 ரூபாய் நோட்டைத் திரும்பப் பெறுகிறோமே தவிர, அதைச் செல்லாது என்று சொல்லவில்லை. அதைப் பரிவர்த்தனை செய்யலாம்' என்கிறது ரிசர்வ் வங்கி. ஆனால், இப்போதே 2000 ரூபாய் நோட்டை பலரும் வாங்க மறுக்கிறார்கள். செப்டம்பர் 30-ம் தேதி வரை இதை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம். அக்டோபர் 1-ம் தேதி இந்த நோட்டின் நிலை என்ன? இது யாருக்கும் விடைதெரியாத கேள்வி!