
சிறு நகரங்கள், ஊராட்சிப் பகுதிகளிலெல்லாம் இந்த மனமகிழ் மன்றங்கள் நடத்த அனுமதி தந்துவிட்டார்கள். உறுப்பினர்களுக்கு மட்டுமன்றி யார் போய்க் கேட்டாலும் மது விற்பனை செய்கிறார்கள்.
ஒரு காலத்தில் குடியென்பது அவமானகரமான செயலாக இருந்தது. ஒளிந்து ஒளிந்து குடிப்பார்கள். சுடுகாட்டுப் பக்கமோ, காட்டுப்பக்கமோ குடித்துவிட்டு வாயைத் துடைத்துக்கொண்டு சத்தமில்லாமல் வருவார்கள். இன்றைக்கு கல்யாணம், காதுகுத்து தொடங்கி கோயில் திருவிழா வரைக்கும் கொண்டாட்டமே குடிதான். கிராமம், நகரம் வேறுபாடெல்லாம் இல்லை. சின்னப் பையன்கள்கூட குடித்துவிட்டுச் சலம்புகிறார்கள். குடிப்பது வீரத்தின் அடையாளமாகிவிட்டது.
100-ல் 13 பேர் தமிழர்கள்
கண் முன்னால் ஒரு தலைமுறை குடித்து வீணாகிறது. அமைதியின் அடையாளமாக இருந்த கிராமங்களிலெல்லாம் மதுக்கடைகளைத் திறந்து நரகமாக்கி விட்டார்கள். பல குற்றச் செயல்களுக்குப் பின்னணியாக மதுதான் இருக்கிறது.
Crisil நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள். தமிழகத்தில் சில தொண்டு நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வின்படி உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். இவர்களில் 75% பேர் ஆண்கள்; 25% பேர் பெண்கள். 5,426 மதுக்கடைகள் தமிழகத்தில் இயங்குகின்றன. நாளொன்றுக்கு சராசரியாக 125 கோடி ரூபாய்க்குத் தமிழகத்தில் மது விற்கிறது. 2020-21-ல் 33,811 கோடி, 2021-22-ல் 36,013 கோடி, 2022-23-ல் 45,000 கோடி என ஆண்டுக்காண்டு மது வருவாய் அதிகரித்துக்கொண்டே போகிறது. 6,715 சூப்பர்வைசர்கள், 15,000 விற்பனையாளர்கள், 3,090 துணை விற்பனையாளர்கள், நூற்றுக்கணக்கான அதிகாரிகள் மது விற்பனையில் ஈடுபடுகிறார்கள்.

அதிகரிக்கும் போதைத் தற்கொலைகள்
மேலை நாடுகளில் மது அருந்துவோர் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருவதாக ஆய்வுகள் சொல்கின்றன. இந்தியாவில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இன்னும் அபாயமாக, 16-25 வயதுள்ள இளைஞர்கள் மது அருந்துவது கணிசமாக உயர்ந்துவருகிறது.
குடியால் போதை அடிமைத்தனம் ஏற்படும், கல்லீரல் பாதிக்கப்படும் என்றுதான் எல்லோரும் நினைக்கிறார்கள். அதையெல்லாம் தாண்டி குடும்பம், சமூகமென மொத்த அடுக்கையும் மது பெரும் பாதிப்புக்கு உள்ளாக்குவது கண்ணுக்குத் தெரிவதில்லை.
2021-ம் ஆண்டு மட்டும் தமிழகத்தில் 55,682 விபத்துகள் பதிவாகியுள்ளன. இதில் 10 சதவிகித்துக்கும் மேற்பட்ட விபத்துகள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்களால் ஏற்பட்டவை. குடிகாரர்கள் உயிரிழப்பது, காயம்படுவது தாண்டி சாலையில் செல்லும் அப்பாவிகளும் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்தியாவில் 2020-ல் 9,169 பேரும் 2021-ம் ஆண்டில் 10,500 பேரும் போதைப்பொருள் மற்றும் மதுப் பழக்கம் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டதாகக் தெரிவிக்கிறது, தேசிய குற்ற ஆவணக் காப்பகம். இந்தப் பட்டியலில் மூன்றாமிடத்தில் இருக்கிறது, தமிழகம். 2021-ல் தமிழகத்தில் போதைப்பழக்கத்தால் 1,319 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள். குடி, போதைக்கு அடிமையானவர்கள் மிகுந்த மனச்சோர்வோடு இருப்பார்கள். குடித்தால் மேலும் மனச்சோர்வு அதிகமாகும். அதனால் மற்றவர்களைவிட அதிகமாக இவர்கள் தற்கொலை முடிவை எடுப்பார்கள் என்று மனநல மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

குடும்ப வன்முறை அதிகரிக்கவும் மதுவே பிரதான காரணமாக இருக்கிறது. பல குடும்பங்கள் நிலைகுலைந்து கிடக்கின்றன. பெரும்பாலான குடும்ப வன்முறை வழக்குகள், ‘கணவர் குடித்துவிட்டு அடிப்பதாக'வே பதிவாகின்றன. விவாகரத்து வழக்குகள் அதிகரிக்கவும் குடி முக்கிய காரணமாக இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.
இன்னொரு பக்கம், மது மற்றும் போதையால் சமூகக் குற்றங்களும் அதிகரித்துவருகின்றன. 2019-ல் AIIMS செய்த ஆய்வின்படி 18-24 வயதுக்குட்பட்ட சிறைக்குச் செல்லும் 74% பேர் மது அல்லது ஏதோவொரு போதைப்பொருள் பயன்படுத்துபவர்களாக இருக்கிறார்கள்.
லாபவெறி டாஸ்மாக்!
உலக சுகாதார நிறுவனம், ‘மது விற்பனையை அரசு தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் அதனால் ஏற்படும் தீங்குகளைப் பெருமளவு குறைக்கலாம்' என்கிறது. ‘மது விற்பனை தனியார் கையில் இருந்தால் அவர்கள் முழுக்க முழுக்க லாபத்தை மட்டுமே கவனத்தில் கொள்வார்கள். அரசு மது விற்பனை செய்யும்பட்சத்தில் குறைந்தபட்சப் பாதுகாப்பாவது இருக்கும். பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைக்கு அருகில் மது விற்க மாட்டார்கள். வணிகத்தைவிட மக்கள் நலனே அரசுக்குப் பிரதானமாக இருக்கும். விற்பனை அதிகரிக்கும் காலங்களில் மக்கள் நலன் கருதி கடைகளை மூடி வைப்பார்கள். மாதச் சம்பள நாள்களில் மதுக்கடைகளை மூடி, குடும்பங்களைக் காப்பாற்றுவார்கள். தரமான, பெரிதும் கேடில்லாத மது வகைகளை விற்பார்கள்...' இப்படி அரசு மது விற்பனை செய்வதில் இருக்கும் சாதகங்களைப் பட்டியலிடுகிறது உலக சுகாதார நிறுவனம்.

தமிழகத்தில் அரசுதான் மது விற்பனை செய்கிறது. ஆனால், டாஸ்மாக் நிறுவனம் தனியாரைக் காட்டிலும் அதிக லாபவெறியோடு இயங்குகிறது என்பதுதான் பிரச்னை. குடியிருப்புகளுக்குள்ளும் கிராமப்புறங்களிலும் கடை திறப்பது, மக்கள் எதிர்த்தால் போலீஸை வைத்து அடித்து விரட்டுவது என டாஸ்மாக் சர்வ வல்லமையோடு இயங்குகிறது.
வாக்குறுதி என்னானது?
இன்னொரு பக்கம் சிறுவர்கள் கெட்டுச் சீரழிகிறார்கள். பள்ளிகளுக்கு மாணவர்கள் மது அருந்திவிட்டு வருகிறார்கள். 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்று விதி இருக்கிறது. நாங்கள் சிறுவர்களுக்கு மது விற்பதில்லை என்கிறார்கள் டாஸ்மாக் ஊழியர்கள். வெளிவருகிற வீடியோக்களும் பொதுவெளியில் பார்க்கிற காட்சிகளும் இதற்கு மாறாகவே உள்ளன.
மதுவிலக்குக் காவல் பிரிவு என்று ஒன்று இருக்கிறதே, அதன் பணி என்ன? டாஸ்மாக் வணிகம் கெடாமல் பார்த்துக்கொள்வது மட்டும்தானா? சமூக நலத்துறை, குழந்தைகள் நலக்குழுக்கள் எல்லாம் என்னதான் செய்து கொண்டிருக்கின்றன? 5 கோடி ரூபாயை ஒதுக்கி மாணவர்களைக் கொண்டு ஊர்வலம் நடத்துவது ஒன்றுதான் 50,000 கோடிக்கு மது விற்கும் அரசு செய்யும் மதுவிலக்கு விழிப்புணர்வா?
குடும்ப வன்முறை அதிகரிக்கிறது, குற்றச்செயல்கள் பெருகுகின்றன, சிறுவர்கள் சீரழிகிறார்கள், கிராமப்புறங்களில் அமைதி கெடுகிறது என இவ்வளவு கேடுகள் நடக்கும்போதும் அரசு மது விற்பனையை அதிகரிக்கத்தான் வழிபார்க்கிறதே ஒழிய மதுக்கடைகளைக் குறைக்க, அதிகரித்து வரும் குடிநோயாளிகளைத் திருத்த, படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவர சின்ன நகர்வைக்கூட முன்னெடுக்கவில்லை. ஒவ்வொரு பண்டிகைக்கு மறுநாளும் ‘இவ்வளவு மது விற்பனை' என்று அறிக்கை வெளிவரும்போது ஒரு நல்லரசு, ‘இந்த விற்பனையைக் குறைக்க என்ன செய்யலாம்' என்றல்லவா யோசிக்க வேண்டும்? ஒரு மாநிலம் மூன்றில் ஒரு பங்கு வருவாயை தம் மக்களைக் குடிக்கவைத்துப் பெறுகிறது என்பது எவ்வளவு பெரிய அவமானம்?

பெண்களுக்கு பாதிப்பு அதிகம்
‘‘12 ஆண்டுகளுக்கும் மேலாக மது போதை மறுவாழ்வு சிகிச்சையில் இருக்கிறேன். முன்பு 30 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் அடிமை நிலையில் சிகிச்சைக்கு வருவார்கள். இன்று 13-14 வயதுச் சிறுவர்களையே சிகிச்சைக்கு அழைத்து வருகிறார்கள். ‘பசங்களோட சேர்ந்து குடிச்சுட்டு சண்டை போட்டு போலீஸ்ல மாட்டிக்கிட்டான்', ‘குடிச்சுட்டு ஸ்கூலுக்குப் போய் வாத்தியார்கிட்ட பிரச்னை பண்ணிட்டான்' என்பது மாதிரி புகார்கள் வருகின்றன. உண்மையில் இது பதற்றத்தைத்தான் ஏற்படுத்துகிறது’’ என்கிறார் மருத்துவர் விநாயக் விஜயகுமார்.
‘‘ ‘நான் தினமுமெல்லாம் குடிப்பதில்லை. வாரத்தில் ஒரு நாள்தான் குடிக்கிறேன்' என்று சொல்பவர்கள்தான் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். குடியில் இருந்து விடுபடும் எண்ணமே இவர்களுக்கு வருவதில்லை. படிப்படியாக உடல்நலக் கோளாறுகள், மனநலக் கோளாறுகளுக்கு ஆட்படுகிறார்கள். சிறுவயதில் மதுப்பழக்கம் வந்தால் நிறைய Behaviour Change வந்துவிடும். அவர்கள் வாழ்க்கை முழுமையாகச் சீரழிவது ஒரு புறம், இன்னொரு பக்கம் சமூகத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக அவர்கள் மாறுகிறார்கள். மதுப்பழக்கம் உள்ளவர்கள் மிக எளிதாக கஞ்சாவுக்கு மாறிவிடுவார்கள்.
புள்ளிவிவரங்கள்படி, கடந்த பத்தாண்டுகளில் பெண்கள் மது அருந்துவது அதிகமாகியிருக்கிறது. குறிப்பாக இளவயதுப் பெண்கள். பிரச்னை என்னவென்றால், ஆண்களை விட பெண்களை மது அதிகம் பாதிக்கும். இது மருத்துவ ஆய்வுகளில் தெளிவாக நிரூபணமாகியிருக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு கல்லீரல் சீக்கிரமே பாதிக்கப்படும். அடிமையாகும் வாய்ப்பும் ஆண்களைவிட பெண்களுக்கு அதிகம். முன்பெல்லாம் 3-4 மாதங்களுக்கு ஓரிரு பெண்கள் சிகிச்சைக்கு வருவார்கள். இப்போது எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.

கொரோனா பாதிப்பு வந்தபிறகு குடிப்பழக்கம் இன்னும் அதிகரித்திருக்கிறது. பணியிழப்பு, பொருளாதாரப் பிரச்னை, உடல் சார்ந்த பதற்றம் காரணமாக மது அருந்தும் பழக்கத்தில் பலர் வீழ்ந்திருக்கிறார்கள். குடியால் கல்லீரல் பாதிப்பு, மஞ்சள் காமாலை மட்டுமே வரும் என்று நினைக்கிறார்கள். உண்மையில் தலைமுதல் கால் வரை பல பிரச்னைகள் வரும். தொடர்ந்து குடிப்பவர்களுக்கு ‘டிமென்ஷியா' என்ற மறதி நோய் சீக்கிரமே வரலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு உயிருக்கே ஆபத்து வரலாம். Alcoholic neuropathy என்ற நரம்புப் பிரச்னை வரும். இதயநோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம். ஒட்டுமொத்தமாக சமூகத்தை பாதிக்கும் பெரிய பிரச்னை இது. பல பிரச்னைகளை தனித்தனியாகப் பார்க்கும்போது எல்லாவற்றுக்கும் மது காரணமாக இருப்பதைக் கவனிக்க மறந்துவிடுகிறோம்...’’ என்கிறார் விநாயக் விஜயகுமார்.
அதிகரிக்கும் மனமகிழ் மன்றங்கள்
டாஸ்மாக்கை அரசு நடத்தி லாபம் பார்க்கிறதென்றால், மறுவாழ்வு மையங்களைத் தனியார் நடத்திப் பெரும்பணம் பார்க்கிறார்கள். எந்த வரையறைக்குள்ளும் வராத, முறைப்படி பதிவு செய்யப்படாத மறுவாழ்வு மையங்கள் தமிழகத்தில் ஏராளம் உள்ளன. அவற்றை முறைப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுப்பதில்லை.
தமிழகத்தில் டாஸ்மாக் மட்டுமே மது விற்பனையில் ஈடுபடுகிறது என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் செயல்படும் கிளப்கள் டாஸ்மாக்குக்கு இணையாக மது விற்பனை செய்வதாகச் சொல்கிறார்கள். FL-2 என்ற லைசென்ஸ் பெற்று நடத்தப்படும் இந்த மனமகிழ் மன்றங்கள் முன்பெல்லாம் பெரு நகரங்களில் மட்டும் இயங்கும். இதுமாதிரியான கிளப்கள் நடத்த பல விதிமுறைகள் கண்காணிப்புகளெல்லாம் உண்டு. நேரடியாக மொத்த விற்பனை நிறுவனங்களிடம் இருந்து இந்த மனமகிழ் மன்றங்கள் ‘ஃபுல்' மட்டுமே வாங்கி தங்கள் உறுப்பினர்களுக்குத் தரலாம். சமீபத்தில் இந்த விதியைத் தளர்த்தி, ‘குவார்ட்டர், பீர், ஆஃப் எல்லாம் கொள்முதல் செய்யலாம்' என்று அனுமதித்துவிட்டார்கள். அதனால், மனமகிழ் மன்றங்கள் அனைத்தும் மதுக்கடைகளைப் போல இயங்க ஆரம்பித்துவிட்டன. சுமார் 1,000 மனமகிழ் மன்றங்களுக்குத் தமிழகத்தில் அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.
‘‘சிறு நகரங்கள், ஊராட்சிப் பகுதிகளிலெல்லாம் இந்த மனமகிழ் மன்றங்கள் நடத்த அனுமதி தந்துவிட்டார்கள். உறுப்பினர்களுக்கு மட்டுமன்றி யார் போய்க் கேட்டாலும் மது விற்பனை செய்கிறார்கள். மக்கள் எதிர்ப்பால் மதுக்கடைகள் மூடப்படும் இடங்களிலெல்லாம் இந்த மனமகிழ் மன்றங்களைத் திறந்துகொண்டிருக்கிறார்கள்’’ என்கிறார், டாஸ்மாக் ஊழியர் சங்க நிர்வாகி ஒருவர்.

வளர்ப்பு முக்கியம்
உலகம் முழுமைக்குமான உளவியல் ஆய்வுகள், கதாநாயகர்களைப் பின்பற்றியே சிறுவர்கள் குடிப்பழக்கத்துக்கு ஆளாகிறார்கள் என்று அழுத்தமாகச் சொல்கின்றன. இன்னொரு பக்கம் மீடியாக்களின் பங்கையும் சுட்டிக்காட்டுகிறார்கள் ஆய்வாளர்கள்.
‘‘சினிமா, மீடியாவுக்கு இணையாக சமூக வலை தளங்களின் பங்கும் முக்கியமானது. இன்றைய இளம் தலைமுறைப் பெற்றோர் ‘சுதந்திரம்’ என்ற பெயரில் தருகிற சலுகைகள், ‘எதுவும் தவறில்லை' என்ற எண்ணத்தைப் பிள்ளைகளுக்கு உருவாக்குகின்றன. குழந்தைகளுக்குப் பணத்தின் மதிப்பு தெரியவில்லை. பணம் இருந்தால் அவர்கள் கையில் எதுவும் கிடைத்துவிடுகிறது.
ஏராளமான விதிமுறைகள் இருக்கின்றன. ஆனால் எதுவும் நடைமுறையில் இல்லை. சிறுவர்கள் கையில் எளிதாக மது கிடைக்கிறது. நேரக் கட்டுப்பாடு இருந்தாலும் கடைக்குப் பின்னால் கள்ளத்தனமாக மது விற்கிறார்கள். நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களுக்குத் தெரிந்தே இது நடக்கிறது. இப்போது முன்பைவிட பெண்கள் குடிப்பது அதிகமாகி விட்டது. மதுவுக்குப் பழகப்பழக அளவும் கூடுகிறது. இந்தத் தலைமுறை மதுவை எடுத்துக்கொள்ளும் அளவு பெரும் அபாயக் கட்டத்தில் இருக்கிறது. ஒரு ஆண் குடிக்க ஆரம்பித்தால், மனைவியோ அம்மாவோ சிகிச்சைக்கு வர உதவி செய்கிறார்கள். ஒரு பெண், குடிநோயாளியாக மாறினால் இதுமாதிரி உதவிகள் கிடைப்பதில்லை’’ என்கிறார் போதை மறுவாழ்வு ஆலோசகர் ஷீபா வில்லியம்ஸ்.
படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வருவோம் என்று தேர்தல் அறிக்கையில் சொன்ன தி.மு.க ஆட்சிக்கு வந்து இரண்டாண்டுகள் முடியப்போகிறது. அதற்கான சிறுமுனைப்பைக்கூட எடுக்கவில்லை. சமூகநீதி, திராவிட மாடல் என்றெல்லாம் சொல்கிற முதல்வர், தமிழகத்தை போதைக் குழிக்குள் தள்ளிக் கொண்டிருக்கும் மதுவிலிருந்து அடுத்த தலைமுறையை மீட்க என்ன செய்யப்போகிறார் என்பதுதான் இப்போது இருக்கும் கேள்வி!