அரசியல்
அலசல்
Published:Updated:

ஓட்டை வண்டி... கத்துக்குட்டி ஓட்டுநர்! - பைக் டாக்ஸிகளை முறைப்படுத்துமா அரசு?

பைக் டாக்ஸி
பிரீமியம் ஸ்டோரி
News
பைக் டாக்ஸி

பைக் டாக்ஸிகளைத் தடைசெய்யக் கோரி, 2019-ம் ஆண்டு காவல்துறை சார்பாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட ஆப்–ஐ பதிவிறக்கம் செய்வதற்குத் தடைவிதித்தது நீதிமன்றம்.

உரிய சட்ட அனுமதி பெறாமல், விதிமுறைகளை மீறி நடத்தப்படும் பைக் டாக்ஸிகளால் விபத்துகளும் உயிரிழப்புகளும் அதிகரித்துவருகின்றன. சமீபத்தில் சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவரும் விபத்தில் பலியானதால், `பைக் டாக்ஸி சேவையை அரசு முறைப்படுத்துமா?’ என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

சிவசங்கர்
சிவசங்கர்

இது தொடர்பாக நம்மிடம் பேசிய இந்திய தொழிற்சங்க மையத்தின் மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியம், “பைக் டாக்ஸிகள் சிக்கனமான, விரைவான பயணத்துக்கு உதவுகின்றன என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், வாடகை வாகனங்களை இயக்குவதற்கு ‘மஞ்சள் நிற நம்பர் பிளேட்’, அதன் ஓட்டுநர்களுக்குத் தனி லைசென்ஸ் என நிறைய கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஆனால், பைக் டாக்ஸி எதுவும் இந்த விதிமுறையின் கீழ் வருவதில்லை. வாடகை வாகனங்களுக்கு எஃப்.சி எனும் பிட்னெஸ் சான்று தேவை. ஆனால், பைக் டாக்ஸிகளாக இங்கே ஓட்டை பைக்குகளெல்லாம் ஓட்டப்படுகின்றன. கத்துக்குட்டிகளெல்லாம் பைக் டாக்ஸி ஓட்டுகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக இந்த பைக்குகளின் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் இழப்பீடும் பெற முடிவதில்லை. தமிழ்நாட்டில் மட்டும் இதுபோல இழப்பீடு கோரி தொடுக்கப்பட்ட 15 வழக்குகள் நிலுவையிலிருக்கின்றன. எனவே, இந்தப் பிரச்னையில் அரசு தலையிட்டு பைக் டாக்ஸி சேவையை முறைப்படுத்த வேண்டும்” என்றார்.

ஓட்டை வண்டி... கத்துக்குட்டி ஓட்டுநர்! - பைக் டாக்ஸிகளை முறைப்படுத்துமா அரசு?

தமிழ்நாடு சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆறுமுகமோ, “பைக் டாக்ஸிகளைத் தடைசெய்யக் கோரி, 2019-ம் ஆண்டு காவல்துறை சார்பாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட ஆப்–ஐ பதிவிறக்கம் செய்வதற்குத் தடைவிதித்தது நீதிமன்றம். அந்தத் தடையை எதிர்த்து, குறிப்பிட்ட நிறுவனம் மேல்முறையீடு செய்த வழக்கு இன்னும் நிலுவையிலிருக்கிறது. இந்த நிலையில், ‘சட்டவிரோத பைக் டாக்ஸி வாகனங்களை உடனடியாகப் பறிமுதல் செய்ய வேண்டும்’ எனப் போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டார். ஆனால், பைக் டாக்ஸிகளை அடையாளம் கண்டு பறிமுதல் செய்வது சிக்கலாக இருப்பதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். எனவே, மக்களின் உயிருக்குப் பாதுகாப்பு இல்லாத, சட்டவிரோத பைக் டாக்ஸிகளுக்கு அரசு தடைவிதிக்க வேண்டும்” என்றார்.

பாலசுப்பிரமணியம், ஆறுமுகம்
பாலசுப்பிரமணியம், ஆறுமுகம்

இந்தக் கோரிக்கைகள் குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரிடம் கேட்டோம். “இரு சக்கர வாகனங்களைப் பொதுப் போக்குவரத்துக்குப் பயன்படுத்த அனுமதியில்லை... அது சட்டவிரோதம் என்பதில் அரசுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதனடிப்படையிலேயே அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுவருகின்றன. ஆனால், பைக் டாக்ஸி விவகாரத்தில் மத்திய அரசு தன் நிலைப்பாட்டை இன்னும் முழுமையாகத் தெரிவிக்கவில்லை. எனவே, இதைச் சட்டரீதியாக அணுகுவது தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகள் மூலம் ஆய்வுசெய்யப்பட்டுவருகிறது” என்றார்.

மத்திய அரசைக் கைகாட்டாமல், தமிழ்நாடு அரசே கொள்கை முடிவெடுக்குமா?