
கேன்களில் அடைத்து விற்கப்படும் குடிநீர், சாண்ட் ஃபில்டர், ஆக்டிவேட்டடு கார்பன் ஃபில்டர், மைக்ரான் ஃபில்டர், ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ், யூ.வி ட்ரீட்மென்ட் என ஐந்துவிதமான சுத்திகரிப்பு முறைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
“தண்ணீர் தீர்ந்துபோயிடுச்சு. ரெண்டு கேன் எடுத்துட்டு வாங்க!” நாம் அன்றாடத்தில் அடிக்கடி கேட்க முடிகிற வாக்கியம் இது. கோடை கொளுத்த ஆரம்பித்திருக்கும் இனியான நாள்களில், இந்த வார்த்தையை இன்னும் அதிகமாகக் கேட்கலாம். சென்னை போன்ற பெருநகரங்கள் தொடங்கி, குக்கிராமங்கள் வரை பெரும்பாலும் மக்கள் கேன் தண்ணீரைச் சார்ந்திருக்கும் சூழ்நிலை உருவாகிவிட்டது. நாளொன்றுக்கு ஐந்து கோடி லிட்டர் கேன் தண்ணீர் தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படுகிறது. தலைநகர் சென்னையில் மட்டுமே இரண்டு கோடி லிட்டருக்கும் மேல் விற்பனையாகிறது. ஆனால், நம் கண்களில்பட்ட நூற்றுக்குத் தொண்ணுறு தண்ணீர் கேன்கள் மோசமானவையாக, முறையாக எந்தத் தகவலும் அச்சிடப்படாத, ஆபத்தான நிலையில் காணப்படவே, பெரும் பகுதி நோய்கள் தண்ணீரால் வருவதால் கேன் வாட்டர் குறித்த விசாரணையில் இறங்கினோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நாள்தோறும் பருகும் இந்தக் குடிநீர் பாதுகாப்பானதா... முறையாகச் சுத்திகரிக்கப்பட்டு பேக் செய்யப்படுகிறதா... கேன் தயாராகும் ஆலைகளின் நிலை எப்படி இருக்கிறது... நேரடியாகக் களத்தில் இறங்கியபோது, நாம் கண்ட காட்சிகளும், நமக்குக் கிடைத்த தகவல்களும் நம்மை மிரளவைத்தன!
தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறையில் பதிவாகியிருக்கும் தரவுகளின்படி, மாநிலம் முழுவதும் 1,506 கேன் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் இயங்கிவருகின்றன. இவற்றில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்குகின்றன. தண்ணீரிலுள்ள கனிமங்கள், தாதுக்களின் அடர்த்தியைக் கணக்கிட TDS (Total Disolved Solids) எனும் அளவுகோல் பயன்படுகிறது. குடிநீருக்கான இந்திய தர நிர்ணய வழிகாட்டுதலின்படி, 500 TDS அளவு வரை உள்ள தண்ணீரைக் குடிநீராகப் பருகலாம். ஆனால், 100 TDS-க்கும் குறைவான குடிநீரில் பல மினரல்கள் இருக்காது. எனவே, அது ஆரோக்கியமற்றது. சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனம் வழங்கும் குடிநீரில், TDS அளவு 350-ஆக இருக்கிறது. ஆனால், பெரும்பாலான கேன் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களின் குடிநீரில் TDS அளவு 100-க்கும் கீழ் இருப்பதாக அதிர்ச்சியைக் கிளப்புகிறார்கள் அதிகாரிகள்.
“தண்ணீர் சுத்திகரிப்பு தொடர்பாக, அரசு வகுத்திருக்கும் எந்த விதிமுறையையும் பின்பற்றாமல், கேன் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் மக்களின் தாகத்தைப் பயன்படுத்திக் கொள்ளையடிப்பதோடு, அவர்களை ஆபத்துக்குள்ளும் தள்ளுகின்றன” என்கிறார்கள் அந்த அதிகாரிகள்.

முறையற்ற சுத்திகரிப்பு... காலாவதியான உரிமம்... மெத்தன அதிகாரிகள்!
நம்மிடம் பேசிய குடிநீர் வழங்கல்துறை அதிகாரிகள் சிலர், “கேன்களில் அடைத்து விற்கப்படும் குடிநீர், சாண்ட் ஃபில்டர், ஆக்டிவேட்டடு கார்பன் ஃபில்டர், மைக்ரான் ஃபில்டர், ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ், யூ.வி ட்ரீட்மென்ட் என ஐந்துவிதமான சுத்திகரிப்பு முறைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஒரு குடிநீர் கேனை, சுழற்சி முறையில் 20 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அந்த கேன்களில் 80 சதவிகிதம் எந்தக் கீறலும் இருக்கக் கூடாது. கேன் மூடியில், தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு பேக் செய்யப்பட்ட தேதி, காலாவதி தேதி, பேட்ச் எண் என முக்கிய விவரங்கள் லேசர் பிரின்ட் செய்யப்பட்டிருக்க வேண்டும். அதேபோல, அந்த கேன் தண்ணீரைத் தயாரித்த நிறுவனத்தின் பெயர், முகவரி, ஐ.எஸ்.ஐ முத்திரை, BIS-ஆல் வழங்கப்பட்ட உரிம எண், FSSAI லைசென்ஸ் எண் என அனைத்து விவரங்களும் லேபிளாக ஒட்டப்பட்டிருக்க வேண்டும். முக்கியமாக, குடிநீரில் அரசு அனுமதித்த அளவில் மினரல்கள் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும்.ஆனால், மேற்சொன்ன எந்த விதியையும் பெரும்பாலான கேன் குடிநீர்த் தயாரிப்பு நிறுவனங்கள் கடைப்பிடிப்பதில்லை. மொத்தமுள்ள ஐந்து சுத்திகரிப்பு முறைகளில் பெரும்பாலும் இரண்டு முறைகள் மட்டுமே செய்யப்படுகின்றன. அந்த ஃபில்டர்களைக்கூட முறையாகப் பராமரிப்பதில்லை. இதனால், தண்ணீரிலிருக்கும் நச்சுப்பொருள்களும், கிருமிகளும் அப்படியே தங்கிவிடுகின்றன. இரக்கமே இல்லாமல், ஒரே கேனை நூற்றுக்கும் மேற்பட்ட முறை பயன்படுத்துகிறார்கள். முறையற்ற சுத்திகரிப்பு, சரியான ஃபில்டர் முறைகளைக் கடைப்பிடிக்காததன் காரணமாக, இந்த நிறுவனங்கள் தயாரிக்கும் கேன் தண்ணீரில் TDS அளவு 100-க்கும் கீழ்தான் இருக்கிறது. அதைப் பற்றியெல்லாம் இந்தக் குடிநீர் நிறுவனங்கள் கவலைப்படுவதில்லை. கேனை மேலோட்டமாகக் கழுவிவிட்டு, தண்ணீரை அடைத்து விற்கிறார்கள். மேலும் குடிநீரில் போதுமான மினரல்கள் இருப்பதில்லை. இதனால், சிறுநீரகப் பிரச்னையில் தொடங்கி, பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. மக்களிடம் இது குறித்து கொஞ்சம்கூட விழிப்புணர்வு இல்லை.


அதிகமான கேன் குடிநீர் ஆலைகள் இருக்கும் சென்னை மாதவரம் பகுதியைச் சுற்றி இயங்கும், பெரும்பாலான நிறுவனங்களின் FSSAI உரிமம் காலாவதியாகிவிட்டது. இந்த நிறுவனங்களின்மீது ஆய்வு நடத்தி சீல் வைப்பது, நிறுவனங்களை நடத்துபவர்கள்மீது நடவடிக்கை எடுப்பது என எதையும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செய்வதில்லை. ரொம்பவே மெத்தனமாக இருக்கிறார்கள். புகார் எழுந்தால், பெயரளவுக்கு ஆய்வு நடத்திவிட்டு வெறும் 5,000 ரூபாய் அபராதம் விதிப்பதோடு அதிகாரிகள் அமைதியாகிவிடுகின்றனர். நாளொன்றுக்கு, இரண்டு கோடி லிட்டர் கேன் தண்ணீர் புழங்கும் சென்னையில், இந்தக் குடிநீர் வர்த்தகம் மாதத்துக்குச் சுமார் 100 கோடி ரூபாய் வரை நடக்கிறது. இவ்வளவு பெரிய பணம் புரளும் தொழிலில், நடைபெறும் முறைகேடுகளை அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை. அவர்களின் மெத்தனத்தால், முறையாகச் சுத்திகரிப்பு செய்யப்படாத ஆபத்தான குடிநீரைத்தான் பெரும்பாலான பொதுமக்கள் பருகுகிறார்கள். இந்த கேன் குடிநீரைக் குடிப்பதற்கு பதிலாக, மெட்ரோ வாட்டர் குடிநீரைக் கொதிக்கவைத்துக் குடிக்கலாம்” என்றனர்.
கேனில் சோப்பு... வாயில் பாக்கு... காற்றில் பறக்கும் சுகாதாரம்!
சென்னையைச் சுற்றியிருக்கும் இருபதுக்கும் மேற்பட்ட கேன் குடிநீர்த் தயாரிப்பு நிறுவனங்களுக்கு நேரடி ‘விசிட்’ செய்தோம். போரூர் - குன்றத்தூர் பிரதான சாலையில் இயங்கும் ஒரு நிறுவனத்துக்கு வாடிக்கையாளர் போலச் சென்றோம். உள்ளே நுழைந்ததும் நமக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தண்ணீர் நிரப்ப வரும் கேன்களை, சுகாதாரமற்ற முறையில் பாத்திரம் கழுவும் பிரஷ்ஷால் சிலர் தேய்த்துக் கொண்டிருந்தனர். காஞ்சிபுரத்திலிருந்து டேங்கர் லாரியில் கொண்டுவரப்பட்ட தண்ணீரை, வெறுமனே RO மட்டும் செய்துவிட்டு, கேன்களில் நிரப்பிக்கொண்டிருந்தார்கள். அதாவது, ஐந்து வகையான ஃபில்டர்களுக்கு பதிலாக, பெயருக்கு ஒரு ஃபில்டர் மட்டும் செய்துவிட்டு நிரப்பிக்கொண்டிருந்தார்கள். அங்கு பணிபுரியும் ஊழியர்களும் வாயில் பாக்கு மென்றுகொண்டும், சுகாதாரமற்ற பல செயல்களைச் செய்துகொண்டும், அதே கையில் தண்ணீரை நிரப்பிக்கொண்டும் இருந்தனர். அங்கு சுகாதாரம் என்ற வார்த்தையைக்கூட யாரும் அறிந்திருப்பார்களா என்று தெரியவில்லை. நாம் இது குறித்துக் கேள்வி எழுப்பியவுடன், ‘சார், ஓனர் சாப் திட்டுவாரு சார். கிளம்பிடுங்க சார்...’ என நம்மைக் கைகூப்பி வெளியேற்றினர்.

கிண்டியிலுள்ள ஒரு நிறுவனத்துக்குச் சென்றோம். முந்தைய ஆலையில் பார்த்த அதே சுகாதாரமற்ற ஆபத்தான நிலைதான் இங்கும். காலி கேன்களை, பாத்திரம் கழுவும் சோப்பு போட்டு அலசிக்கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ந்தோம். லேசாக அலசிவிட்டு மீண்டும் அந்த கேனில் தண்ணீரை நிரப்பினார்கள். அவர்கள் போட்ட சோப்பு போயிருக்குமா என்பதே சந்தேகம்தான். இதில் வேடிக்கை என்னவென்றால், ‘பணியாளர்கள் கவனத்துக்கு’ என்றொரு பதாகையை எழுதிவைத்திருந்தனர். அதில், பணியின்போது பான் மசாலா பயன்படுத்தக் கூடாது, கை கால்களில் நகம் வைத்துக்கொள்ளக் கூடாது எனப் பல விஷயங்கள் எழுதப்பட்டிருந்தன. ஆனால் அங்கே பணியிலிருந்தவர்கள், அந்தப் பதாகைக்குக் கீழேயே பான் மசாலாவை மென்று துப்பிவைத்திருந்ததுதான் பேரதிர்ச்சி. பெயருக்குக்கூட சுத்தமோ, சுகாதாரமோ அங்கு இல்லை. நாம் பார்த்த இருபது ஆலைகளில், 18-ன் நிலை இதுதான்.
சென்னையிலுள்ள பல்வேறு பகுதிகளிலும், சப்ளைக்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த குடிநீர் கேன்களை ஆய்வுசெய்தோம். அந்த கேன்களின் மூடிகளில், தயாரிப்பு, பேக்கிங் தேதி, காலாவதி தேதி உள்ளிட்ட எந்த விவரமும் பிரின்ட் செய்யப்படவில்லை. பல்வேறு பகுதிகளிலுள்ள 10 கேன் வாட்டர் நிறுவனங்களின் FSSAI லைசென்ஸ் எண்ணை அரசின் இணையதளத்தில் ‘செக்’ செய்தோம். அவற்றில் ஒரு நிறுவனத்தின் லைசென்ஸ் மட்டுமே ஆக்டிவாக இருந்தது. மீதமிருந்த ஒன்பது நிறுவனங்களின் லைசென்ஸ் காலாவதியாகியிருந்தது. இதைக்கூட கவனிக்காமல் அரசு அதிகாரிகள் அப்படி என்னதான் செய்துகொண்டிருக்கிறார்கள்... இவர்களே இவ்வளவு அலட்சியமாக இருந்தால், கேன் வாட்டர் நிறுவன முதலாளிகள் எப்படி அரசு விதிமுறைகளைக் கடைப்பிடிப்பார்கள்?

“கேன்சர் வருவதற்கான வாய்ப்புகள்கூட உண்டு!”
இந்த அவலநிலை குறித்தும், இதனால் உண்டாகும் ஆபத்துகள் குறித்தும், அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் பொது மருத்துவத்துறைத் தலைமைப் பேராசிரியர், மருத்துவர் எஸ்.சந்திரசேகரிடம் பேசினோம். “பிளாஸ்டிக் கேன் குடிநீர் சுத்தமானது, பாதுகாப்பானது என்ற நம்பிக்கை பெரும்பாலான மக்களிடம் இருக்கிறது. ஆனால், அது முழு உண்மை அல்ல. நாம் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் தண்ணீரைப் பயன்படுத்துகிறோமா என்பதே முதல் கேள்வி. நாம் பயன்படுத்தும் வாட்டர் கேன் நிறுவனத்தின் தகவல்களை என்றாவது சரிபார்த்திருப்போமா... இல்லவே இல்லை. மக்களிடையே இந்த கேன் குடிநீரின் தரம் குறித்த விழிப்புணர்வு உடனடியாக ஏற்பட வேண்டும். கேன் குடிநீரைப் பொறுத்தவரை, அந்த ‘கேனின்’ பிளாஸ்டிக் மூலம் அதிக பாதிப்பு ஏற்படலாம். தண்ணீர் கேன்களை வெயிலில் வைக்கும்போது, தண்ணீரில் மாற்றங்கள் ஏற்பட்டு Bisphenol-A என்ற வேதிப்பொருள் உண்டாகும். இது மனிதர்களின் உடலில் ஹார்மோன் சார்ந்த பிரச்னைகளை ஏற்படுத்தும். இதனால், சிறுவயதில் அதிக உடல் பருமன், சர்க்கரைநோய், அதிகபட்சமாக ஒருசிலருக்கு கேன்சர் வருவதற்கான வாய்ப்புகள்கூட உண்டு. அதேபோல, சிலருக்கு விந்தணு, கருமுட்டை குறைந்து மலட்டுத்தன்மை ஏற்படலாம். அதேபோல, கேன் குடிநீரில் சரியான அளவு மினரல் இல்லையென்றால், Osteoporosis என்னும் எலும்புச் சிதைவு பிரச்னை ஏற்படக்கூடும். மேலும், சிறுநீரகப் பிரச்னை, மூத்திரப்பைச் சுரப்பி பாதிப்பு வரலாம். நாம் பயன்படுத்தும் கேன் சரியாகச் சுத்தம் செய்யப்படவில்லையென்றால், அந்தத் தண்ணீரில் E Coli, Legionella, Atypical, Mycobacteria, Bacillus Cereus, Salmonella போன்ற பல்வேறு கிருமிகள் உண்டாகும். இதனால், வயிறு சம்பந்தமான பிரச்னைகள் தொடங்கி, பல்வேறு தீவிர நோய்கள் வரும் அபாயமும் உண்டு” என்றார்.
“அதிகாரிகள் மட்டுமே கண்காணிப்பது சிரமம்!”
களத்தில் நாம் பார்த்த, நமக்குக் கிடைத்த தகவல்களைவைத்து, சென்னை மண்டல உணவு பாதுகாப்பு அதிகாரி சதிஷ்குமாரிடம் விளக்கம் கேட்டோம். “சென்னையைப் பொறுத்தவரை 32 கேன் வாட்டர் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த நிறுவனங்களில் ஆண்டுக்கு ஒரு முறை ஆய்வு செய்யப்படும். புகார் வந்தால், உடனடியாகச் சோதனையிடுவோம். லைசென்ஸ் பெற்ற நிறுவனத்தின் பெயரில், சில எழுத்து மாற்றங்களைச் செய்து சட்டவிரோதமாகச் சிலர் தண்ணீர் விற்பனை செய்வதுண்டு. அவற்றை அதிகாரிகள் மட்டுமே கண்காணிப்பது சிரமமானது. எனவே, பொதுமக்களும் சீல் செய்யப்படாத, காலாவதி தேதி குறிப்பிடாத கேன் குடிநீரை விற்பவர்கள் குறித்து எங்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். நாங்கள் நடவடிக்கை எடுக்க அது ஏதுவாக இருக்கும்.
மேலும், அரசின் உணவு பாதுகாப்பு அமைப்பின் வலைதளமான ‘ஃபோஸ்கஸ்’ (Foscos) என்னும் பக்கத்தில், சந்தேகத்துக்குரிய நிறுவனத்தின் பெயரையோ, FSSAI எண்ணையோ பதிவுசெய்து தேடினால் அது தொடர்பான தகவல்கள் கிடைக்கும். அப்படி அந்த நிறுவனம் குறித்து எந்தத் தகவலும் கிடைக்காத பட்சத்தில், அந்த போலி நிறுவனம் குறித்து, பொதுமக்கள் எங்களிடம் புகாரைப் பதிவுசெய்யலாம். சட்டவிரோதமாகச் செயல்படுவது கண்டறியப்பட்டால், ‘எமர்ஜென்சி புராஹிபிஷன்’ ஆர்டர் வழங்கி, சம்பந்தப்பட்ட நிறுவனம் சீல் வைக்கப்படும். மேலும், சட்டப் பிரிவு 63-ன் அடிப்படையில் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம். அதில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆறு மாதச் சிறைத் தண்டனையும், ஐந்து லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்” என்றார்.
மக்களுக்குச் சுத்தமான, சுகாதாரமான குடிநீரை அரசு வழங்காத நிலையில்தான், மக்கள் தனியார் கேன் வாட்டரை நோக்கித் தள்ளப்படுகிறார்கள். அங்கேயும் அவர்களுக்குச் சுகாதாரமான குடிநீர் கிடைப்பதை அரசு உறுதிசெய்வதில்லை என்பது அநியாயம். போலி நிறுவனங்களைக் கண்டறிவது பொதுமக்களின் பொறுப்பு என்று தட்டிக் கழிக்காமல், அதிகாரிகள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். இது ஒரு தற்காலிகப் பிரச்னை அல்ல. வியாபாரிகள், மக்களின் உடலோடு ஆடும் சூதாட்டம். எதிர்கால உலகையே ஆட்டுவிக்கவிருக்கும் பெரும் பிரச்னை.
கோடிக்கணக்கான அப்பாவி மக்கள், ‘சுத்தமானது’ என்று நம்பிப் பணம் கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் நீரின் தரத்தை அரசு உறுதிசெய்ய வேண்டும். எந்த விதிமுறையையும் கடைப்பிடிக்காமல், தண்ணீரை பிளாஸ்டிக் கேன்களில் அடைத்து விற்று, பணத்துக்காக மக்களின் உயிரோடும் உடல்நலத்தோடும் விளையாடும் நிறுவனங்கள் அதிரடியாக மூடப்பட வேண்டும். அலட்சிய அதிகாரிகள் பந்தாடப்பட வேண்டும். கோடை வரப்போகிறது. கடுமையான வெயில் இருக்கும் என்கிறார்கள். பொதுமக்களின் தாகமும் அதிகரிக்கப்போகிறது. இதையே சாக்காகவைத்து, தண்ணீரில் பணம் பார்க்கும் முதலைகள், சாக்கடை போன்ற நீரைக்கூட கேனில் அடைத்து விற்க முயல்வார்கள். மக்களின் நலனில் அக்கறைகொண்டு, சாட்டையைக் கையில் எடுக்குமா அரசு?
“சூழலியல் பிரச்னையும் இருக்கிறது!”
“பெரும்பாலான கேன் வாட்டர் ஆலைகள், RO முறையையே தண்ணீரைச் சுத்திகரிக்கப் பயன்படுத்துகின்றன. 20 லிட்டர் தண்ணீரை RO முறை மூலம் சுத்திகரிக்க, 80 லிட்டர் நீரை RO Reject-ஆக வீணடிக்கிறார்கள். இப்படி, நிலத்தடி நீர் வேகமாக வறண்டுகொண்டிருக்கும் தமிழகத்தில், ஒவ்வொரு நாளும் 25 கோடி லிட்டர் நிலத்தடி நீர் வீணடிக்கப்படுவது முக்கியமான சூழலியல் பிரச்னை. உலக அளவில் நிலத்தடி நீர் பயன்பாட்டில் இந்தியா மட்டும் 25% நிலத்தடி நீரைப் பயன்படுத்துகிறது. குறிப்பாக, இந்திய அளவில், தமிழ்நாடு அதிக நிலத்தடி நீரைப் பயன்படுத்தும் மாநிலமாக இருக்கிறது. தமிழக அரசு நீர் மேலாண்மையிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். RO தண்ணீர் பயன்பாட்டுக்கு விதிமுறைகள் வகுப்பதும், கேன் தண்ணீர் ஆலைகள்மீது நடவடிக்கை எடுத்து இந்தத் தொழிலை நெறிப்படுத்துவதும் மிக அவசியம்!” - பிரபாகரன், பூவுலகின் நண்பர்கள்.

“சட்டவிரோத நிறுவனங்களால்தான் தவறு நிகழ்கிறது!”
“நிறுவனத்துக்கு வரும் கேன்களைச் வெந்நீரில் கழுவி, குளோரினேஷன் செய்த பிறகுதான் மீண்டும் குடிநீர் நிரப்பப்படுகிறது. உரிமம் பெறாமல், சட்டவிரோதமாக இயங்கும் சில நிறுவனங்கள் தவறுகள் செய்யலாம். குறிப்பாக, ‘ஆர்.ஓ தண்ணீர் விநியோகம் செய்கிறோம்’ என்ற பெயரில், மினி டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டுவருகின்றனர். அதற்கு எந்தத் தரச் சான்றிதழும் வழங்கப்படுவதில்லை. அதை அரசு அதிகாரிகள் கண்காணிப்பதுமில்லை. அவர்களே அந்த நீரை 20 லிட்டர் கேன்களில் நிரப்பி மக்களுக்கு விநியோகம் செய்கின்றனர். மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில், ‘கரியமில வாயு கலக்காத பானங்கள்’ (Non-carbonated water based beverages) என்னும் அடிப்படையில் உரிமம் வாங்கிவிட்டு, கேன் குடிநீர் தயாரித்து விநியோகம் செய்வதும் நடக்கிறது. விதிமுறைகளிலுள்ள சில ஓட்டைகளைப் பயன்படுத்தி, பலரும் கேன் குடிநீர்த் தயாரிப்பு தொழிலில் இறங்கிவிடுகிறார்கள். இவர்களைப் பரிசோதிப்பதற்கான வழிமுறைகளை அரசுதான் உருவாக்க வேண்டும். இது தொடர்ந்தால், ஆபத்து மக்களுக்குத்தான்!”
- சரவணன், மாநிலச் செயலாளர், கிரேட்டர் தமிழ்நாடு கேன் குடிநீர் உற்பத்தியாளர் சங்கம்.