
அவர்களின் முன்னோர்கள் சம்பாதித்ததைவிட கடந்த இரண்டு வருடங்களில் உதயநிதியும் சபரீசனும் அதிகம் சம்பாதித்துவிட்டார்கள். இதுவரை 30,000 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பாதித்திருக்கிறார்கள்
“ஆட்சி அதிகாரத்தின் உச்சகட்ட மிதப்பில் இருக்கிறது தி.மு.க அரசு. ‘12 மணி நேர வேலை மசோதா’வைக் கடும் எதிர்ப்புகளுக்கிடையே சட்டமன்றத்தில் நிறைவேற்றி, தொழிலாளர்களின் உரிமையில் ஆசிட்டை ஊற்றியிருக்கிறது. இது போதாதென்று, நீர்நிலைகளை ஆக்கிரமிக்க வழிவகை செய்யும் ‘நில ஒருங்கிணைப்புச் சட்ட மசோதா’வையும் போகிற போக்கில் நிறைவேற்றியிருக்கிறது. இதுதான் விடியல் ஆட்சியா?” எனக் கொந்தளிக்கிறார்கள் சமூகச் செயற்பாட்டாளர்களும், இயற்கை ஆர்வலர்களும். “1969-ல் மே தினத்தை அரசு விடுமுறை தினமாக அறிவித்தார் அன்றைய முதல்வர் கருணாநிதி. அவரின் மகன் ஸ்டாலின் மே தினத்துக்கான அடிப்படையையே காலிசெய்துவிட்டார்” என்று கம்யூனிஸ்ட்டுகள் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

‘500 டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும்’ எனச் சமீபத்தில் அறிவித்தார் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. ஆனால், அகற்றப்படும் கடைகளின் வருமானத்தைச் சமன்படுத்த போன மாதமே முடிவெடுத்து ‘திருமண மண்டபங்கள், மைதானங்களில் மது வகைகளை விநியோகிக்கலாம்’ என அரசாணை கொண்டுவந்து, அதை சைலன்ட்டாக அரசிதழிலும் வெளியிட்டிருக்கிறார்கள். இதன் மூலம் அடுத்தகட்ட ‘குடி’ வளர்ச்சிக்கு அடித்தளம் போட்டிருக்கிறது திமுக அரசு. இந்தச் சர்ச்சைகளுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல, ‘கடந்த இரண்டு வருடங்களில், முதல்வரின் குடும்பம் 30,000 கோடி ரூபாய் சம்பாதித்திருக்கிறது’ என நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஒரு ஆடியோ வெளியாகி, அரசியலில் அனலைக் கூட்டியிருக்கிறது. “முதல்வரையோ, அரசையோ விமர்சித்து ஒரு மீம் போட்டாலே கைதுசெய்கிற காவல்துறை, ‘30,000 கோடி ரூபாய் சம்பாதித்திருக்கிறது முதல்வர் குடும்பம்’ என்கிற குற்றச்சாட்டை கிளப்பியவர்கள்மீது ஏன் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது?” என்று கேட்கின்றன எதிர்க்கட்சிகள். ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளை தி.மு.க அரசு நிறைவு செய்கிற சூழலில் மக்கள் விரோத நடவடிக்கைகள், சர்ச்சைகள், கண்டனங்கள் என அரசைச் சுற்றி எட்டுத் திக்கிலும் எதிர்ப்புக் குரல்கள் ஒலிக்கின்றன.
“ஸ்டாலின் எனப் பெயர் வைத்துக்கொண்டு இப்படிச் செய்யலாமா?”
‘அதிக எண்ணிக்கையிலான சட்டங்கள் குழப்பத்தை விளைவிக்கின்றன’ என்ற பன்னாட்டு முதலீட்டாளர்களின் கோரிக்கையை ஏற்று, தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டிவருகிறது. அந்த வகையில், 12 மணி நேர வேலை நடைமுறையை அந்தந்த மாநில அரசுகள் அறிவிக்கும் வகையில் தொழிற்சாலைகள் சட்டம் 1948-ல் கடந்த 2020-ம் ஆண்டு திருத்தங்களைச் செய்தது மத்திய பா.ஜ.க அரசு. மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், கோவா, ம.பி, உத்தரகாண்ட், அஸ்ஸாம், பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தங்கள் சட்டமன்றத்தில் இதே போன்ற மசோதாக்களைத் தாக்கல் செய்தன.
“இது ஜனநாயகமற்ற நாடுகளின் வரலாற்றில்கூட இல்லாத அரிதான சட்டத் திருத்தம் என்று ஆர்.எஸ்.எஸ் ஆதரவு தொழிற்சங்கமான பாரதிய மஸ்தூர் சங்கமே கடுமையாக இதை எதிர்த்தது. இதனால், உத்தரப்பிரதேச அரசு இந்த மசோதாவை அமல்படுத்த முடியாமல் பின்வாங்கியது. ஆனால், தி.மு.க அரசோ, யோகி ஆதித்யநாத்கூட நிறைவேற்றத் தயங்கிய மசோதாவை, அதுவும் மக்கள் மன்றத்திலோ, தொழிற்சங்கங்களிடமோ கலந்தாலோசிக்காமல், நேரடியாகச் சட்டமன்றத்தில் எங்களது எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றியிருப்பதைத்தான் ஏற்க முடிய வில்லை” என்று ஆதங்கப்படுகின்றன கூட்டணிக் கட்சிகள்.

தொழிலாளர்கள் சட்டத்தில் மத்திய பா.ஜ.க அரசு திருத்தம் கொண்டுவந்தபோது, எதிர்க்கட்சி வரிசையில் இருந்தது தி.மு.க. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், “ஏழைத் தொழிலாளர்களை எப்படி வேண்டுமானாலும் சுரண்டலாம், ஏமாற்றலாம், அவர்கள் உரிமைகளை யார் வேண்டுமானாலும் விருப்பம்போல் பறித்துக்கொள்ளலாம் என்ற ஆபத்தான உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது இந்தச் சட்டத் திருத்தம். தனது ‘கார்ப்பரேட் மனப்பான்மையை’க் கழற்றிவைத்துவிட்டு, தொழிலாளர்களின் நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டும் பா.ஜ.க” என அறச்சீற்றம் காட்டினார். இன்று அவரே, தான் பேசியதையெல்லாம் மறந்துவிட்டு, தமிழ்நாட்டில் 12 மணி நேர வேலை மசோதாவை, வி.சி.க., கம்யூனிஸ்ட், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்பை மீறி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியிருக்கிறார். “ஸ்டாலின் எனப் பெயர் வைத்துக்கொண்டு இப்படிச் செய்யலாமா?” என்பதுதான் தமிழகத்தின் ஒட்டுமொத்தக் கேள்வியாக இருக்கிறது.
“விரும்புபவர்கள் கொத்தடிமைகளாக இருக்கலாமா?”
இது பற்றி நம்மிடம் பேசிய சி.பி.எம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கனகராஜ், “எட்டு மணி நேரப் பணி என்பது 150 ஆண்டுக்கால வலி நிறைந்த போராட்டத்தின் வெற்றி. மத்திய அரசு கொண்டுவந்த சட்டத் திருத்தம், எதிர்க்கட்சிகள் யாருமில்லாத நேரத்தில் பா.ஜ.க தன் மிருகபலத்தால் நிறைவேற்றிய ஒன்று. இன்று அதே காரியத்தைத் தமிழ்நாடு அரசும் கையிலெடுத்திருக்கிறது. கேட்டால், ‘வாரத்துக்கு 48 மணி நேர வேலை நேரம் என்பதில் மாற்றமில்லை’ என்கிறார்கள். 500 கிலோவை ஐம்பது ஐம்பது கிலோவாகப் பிரித்துத் தூக்குவதும், நூறு நூறு கிலோவாகப் பிரித்துத் தூக்குவதும் ஒன்றா... ‘விருப்பப்பட்ட தொழிலாளர்களுக்கே 12 மணி நேர வேலை’ என்று சொல்வது அதைவிட அபத்தமான வாதம். அப்படியானால், ஒருவர் விரும்பினால் கொத்தடிமையாக இருக்கலாமா... ஒருவர் விரும்பினால் தீண்டாமையை ஏற்றுக்கொள்ளலாமா?” எனக் கொதித்தார்.

நம்மிடம் பேசிய சி.ஐ.டி.யூ மாநிலச் செயலாளர் திருவேட்டை, “இந்தச் சட்டத் திருத்தம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கே ஆதரவானது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, எட்டு மணி நேர வேலையை ஆறு மணி நேரமாகக் குறைக்க வேண்டும் என்று சொன்னவர். முன்பு எட்டு மணி நேரத்துக்கு மேல் பணி செய்தால் ‘ஓவர் டைம்’ எனக் கணக்கிட்டுக் கூடுதல் ஊதியம் கிடைக்கும். இனி இயல்பாகவே 12 மணி நேரம் வேலை செய்யச் சொல்வார்கள். இப்படியான உழைப்புச் சுரண்டல்களைச் சட்டபூர்வமாக்குவதை தி.மு.க அரசிடமிருந்து நாங்கள் எதிர்பார்க்கவில்லை” என்றார்.
“முற்றிலுமாகத் திரும்பப் பெற வேண்டும்!”
“பணி நேரத்துக்குப் பிறகு குடும்பத்துடன் நேரம் செலவிடும் ‘வொர்க் லைஃப் பேலன்ஸில்’ சிக்கல் ஏற்படும்போது, தனிப்பட்ட மனநலனையும், குழந்தைகளின் எதிர்காலத்தையும் அது பாதிக்கும்” என்கிறார்கள் மனநல மருத்துவர்கள். குறிப்பாக, “பெண்கள் பொருளாதாரச் சுதந்திரம் அடைந்துவரும் சூழலில் இவ்வாறான நீண்ட பணிச்சூழலைச் சட்டபூர்வ மாக்குவது பெரும் பின்னடைவையே தரும்” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். இதையெல்லாம் தி.மு.க அரசு எண்ணிப் பார்க்கவில்லை.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்த மசோதா, முதலாளித்துவ ஆதிக்கத்துக்கு மேலும் வலு சேர்ப்பதோடு, உழைப்புச் சுரண்டலுக்கும் வழிவகுக்கும். இதனால் தமிழ்நாடு அரசின் மீதான நம்பகத்தன்மைக்கு பாதிப்பு உண்டாகும். இந்தியாவிலேயே இல்லாத அளவுக்கு மக்கள் பாராட்டும்விதத்தில் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி, மக்களின் பேராதரவைப் பெற்றிருக்கும் தி.மு.க அரசு, பா.ஜ.க அரசே நடைமுறைப் படுத்தத் தயங்கிவரும் இந்தச் சட்டத்தை நிறைவேற்றியிருப்பது புரியாத புதிராக இருக்கிறது. இது தி.மு.க-வின் தொழிலாளர் நலன்சார்ந்த கொள்கைகளுக்கே எதிரானது. தொழிலாளர்களின் உரிமையைப் பறிக்கிற இந்த மக்கள் விரோதச் சட்டத்தை முற்றிலுமாகத் திரும்பப் பெற வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தோழமைக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கத்தினரின் அழுத்தத்திற்குப் பிறகு, அந்தச் சட்ட மசோதாவை நிறுத்தி வைத்திருக்கிறது அரசு.
“ஆளுங்கட்சியினருக்காக இயற்கைச் சுரண்டல் சட்டமா?”
ஒரு பக்கம் தொழிலாளர்களைச் சுரண்டும் சட்டத் திருத்தம் என்றால், மற்றொரு பக்கம் இயற்கையைச் சுரண்டுவதற்கு வழிகோலும் ‘தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்ட மசோதா’-வைச் சத்தமில்லாமல் நிறைவேற்றியிருக்கிறது தி.மு.க அரசு.
கடந்த ஏப்ரல் 21-ம் தேதி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்தான் இந்த மசோதாவைக் கொண்டுவந்தார். அதில், ‘நீர்நிலைகள், நீரோடைகள், வாய்க்கால்கள் அமைந்துள்ள 100 ஏக்கருக்குக் குறையாத நிலங்களைச் சிறப்புத் திட்டம் எனும் பெயரில் வணிகம், உள்கட்டமைப்பு, தொழில்துறை ஆகிய திட்டங்களுக்காக ஒருங்கிணைத்துக் கொடுக்கலாம். இதற்காக தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் (சிறப்புத் திட்டங்கள்) சட்டம் [Tamil Nadu Land Consolidation (for Special Projects) Act, 2023] என்னும் புதிய சட்ட மசோதா உருவாக்கப்பட்டிருக்கிறது’ என மசோதாவை அறிமுகம் செய்தார். அறிமுகம் செய்யப்பட்ட அதே நாளில் எவ்வித விவாதமுமின்றி குரல் வாக்கெடுப்பின் மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

நம்மிடம் பேசிய வருவாய்த்துறை அதிகாரிகள் சிலர், “இந்த மசோதாவின்படி, 100 ஏக்கருக்குக் குறையாமல் நீர்நிலையோ, ஓடையோ, வாய்க்காலோ இருக்கும் இடத்தில், உள்கட்டமைப்பு, வணிகம், தொழிற்துறை, வேளாண் சார்ந்த திட்டத்தை ஒருவர் செயல்படுத்த விரும்பினால், சிறப்புத் திட்ட அனுமதி கோரி அரசிடம் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பத்தைப் பரிசீலித்து, முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கருதினால், அந்தத் திட்டத்தைச் சிறப்புத் திட்டமாக அறிவித்து ஒரு நிபுணர்குழுவை அரசு அமைக்கும். நான்கு அரசு அதிகாரிகள், ஒரு சுற்றுச்சூழல் நிபுணர் உள்ளிட்ட ஐந்து உறுப்பினர்கள் கொண்ட அந்தக் குழு, பொதுமக்கள் கருத்துக் கூட்டம் ஒன்றை நடத்தி, தங்களது கருத்துகளையும் சேர்த்து அறிக்கை சமர்ப்பிக்கும். அந்த அறிக்கையை அரசு மீண்டும் பரிசீலித்து ஒப்புதல் அல்லது நிபந்தனைகளுடன் ஒப்புதல் வழங்கி அரசிதழில் வெளியிடும். அப்படி ஒப்புதல் வழங்கப்பட்டால், அந்த நிலத்திலுள்ள நீர்நிலைகளையும் தன் இஷ்டப்படி திட்ட உரிமையாளர் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகு எழும் பிரச்னைகளை அரசே சரிசெய்து கொடுக்கும். இந்த மசோதாவில் விண்ணப்பத்தை நிராகரிக்க வழிவகையே இல்லை. மேலும், ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலத்தில் திட்டம் தொடங்கப்பட்டு, ஏதும் அசம்பாவிதம் ஏற்பட்டாலோ ஒப்புதல் அளித்ததில் முறைகேடு நடந்தது உறுதிசெய்யப்பட்டாலோ ஒப்புதல் அளித்த குழுமீது சட்டரீதியிலான நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாது. இது முழுக்க முழுக்க இயற்கை வளங்களைப் பற்றித் துளியும் கவலைப்படாத கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு நம் நீர்நிலைகளை எழுதிக்கொடுப்பதற்கு ஒப்பானது” என்றனர் வருத்தத்துடன்.
நம்மிடம் பேசிய சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் சிலர், “இந்த மசோதாவைப் போன்ற ஓர் இயற்கைச் சுரண்டல் சட்டம் இருக்கப்போவதில்லை. ஆளுங்கட்சியைச் சேர்ந்த பலரும் கல்வி நிலையங்கள், தொழிற்சாலைகளை நடத்திவருகிறார்கள். அவை பெரும்பாலும் நீர்நிலைகளை ஆக்கிரமித்தே கட்டப்பட்டிருக்கின்றன. இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், நீர்நிலைகளை ஒட்டி அமைக்கப்படும் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் அந்த நீர்நிலைகளை எந்தப் பிரச்னையுமின்றி ஆக்கிரமித்துக்கொள்ள வழிவகுக்கும். ஏற்கெனவே ஆக்கிரமித்து வைத்திருப்பவை இந்த மசோதாவைப் பயன்படுத்திக்கொள்ளும். மக்கள் இந்த ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகப் போராடும் பட்சத்தில், ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாகவே சட்டத்திலிருக்கும் கூறுகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன” எனக் கொந்தளித்தார்கள்.

“திருமண மண்டபங்களில் மது அனுமதி?”
இந்தச் சர்ச்சை வரிசையில், ‘திருமண மண்டபங்களில் மது விருந்துக்குச் சிறப்பு அனுமதி’ என்கிற சட்டத் திருத்தம் மக்களிடையே பெரும் எதிர்ப்பைக் கிளப்பியிருக்கிறது. அந்தச் சட்டத் திருத்தத்தில், “சர்வதேச, தேசிய உச்சி மாநாடுகள், கருத்தரங்குகள், பார்ட்டிகள், கொண்டாட்டங்கள் மற்றும் விழாக்கள் போன்றவற்றில் விருந்தினர்கள், பார்வையாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு பி.எல் 2 எனும் சட்டத்தின்படி சிறப்பு அனுமதி பெற்று மதுபானங்கள் பரிமாற அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும், வணிக வளாகங்கள், கருத்தரங்கக் கூடங்கள், திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களிலும் இந்த மது விருந்து அளிக்க அனுமதிக்கப்படுகிறது. இந்த அனுமதியை மாவட்ட ஆட்சியரும், மதுவிலக்கு துணை ஆணையர்களும் வழங்குவார்கள்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அரசாணைக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. “சமூகத்தைச் சீர்குலைக்கும் திராவக மாடல் அரசு” எனக் கடுமையாகவே விமர்சித்தார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
எதிர்ப்புகள் வலுவானதைத் தொடர்ந்து, கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “மற்ற மாநிலங்களில் இருப்பதுபோல ஐபிஎல் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டுகள் நடைபெறும் மைதானம், சர்வதேச அளவிலான கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் மட்டுமே மது வகைகளைப் பரிமாற அனுமதிக்கப்பட்டிருக்கிறது. சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் நடத்துவதற்கு வசதியாகவே இந்த அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. திருமணம் மற்றும் இதர உள்ளூர் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் மதுபானம் பயன்படுத்த அரசு எப்போதும் அனுமதிக்காது. எந்த இடங்களிலும் அது போன்ற அனுமதி வழங்கப்படாது” என விளக்கமளித்ததோடு, அவர் குறிப்பிட்ட திருத்தங்களையும் செய்து மீண்டும் அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது.
நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர்கள் சிலர், “சேப்பாக்கம் போன்ற ஒரு மைதானத்தில், பெண்கள், குழந்தைகள் பல்லாயிரக்கணக்கானோர் பார்வையாளராகக் கலந்துகொள்ளும் ஒரு ஐபிஎல் மேட்ச் போட்டியின்போது, ஆயிரக்கணக்கானோர் மது அருந்திவிட்டு போதையில் இருந்தால் பிரச்னைகள் வராமல் இருக்குமா... ஐம்பது, நூறு பேர் அமர்ந்து குடிக்கும் ஒரு சின்ன பாரிலேயே ஆயிரத்தெட்டு பிரச்னைகள். இதெல்லாம் எங்கு போய் முடியுமோ... இப்படியான முக்கிய இடங்களில் குடித்துவிட்டு மது போதையில் ரகளையில் ஈடுபட்டாலோ, சட்டம்-ஒழுங்கைச் சீரழித்தாலோ அதற்கு அமைச்சர் பொறுப்பேற்பாரா... இதுதான் ஸ்டாலின் உத்தரவாதமளித்த விடியல் ஆட்சியா?” எனக் கொதிக்கிறார்கள்.
“வசமாகச் சிக்கிக்கொண்டார் பி.டி.ஆர்!”
இந்த மசோதாக்கள் குறித்த சர்ச்சைகள், எதிர்ப்புகள், விமர்சனங்கள் தி.மு.க அரசைப் பதம் பார்த்துவரும் சூழலில், நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வைரலாகிவரும் ஆடியோ ஒன்றால் நிலைகுலைந்து போயிருக்கிறது தி.மு.க அரசு.
அந்த ஆடியோவில், “அவர்களின் முன்னோர்கள் சம்பாதித்ததைவிட கடந்த இரண்டு வருடங்களில் உதயநிதியும் சபரீசனும் அதிகம் சம்பாதித்துவிட்டார்கள். இதுவரை 30,000 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பாதித்திருக்கிறார்கள். இதை எப்படிக் காப்பாற்றிக்கொள்வது என்கிற பதற்றமும் பயமும் அவர்களிடத்தில் ஏற்பட்டிருக்கிறது” என பழனிவேல் தியாகராஜன் பேசுவதாக(?) முடிகிறது அந்த ஆடியோ. “அந்த ஆடியோ போலியானது; உண்மை அல்ல...” என மறுத்திருக்கிறார் அவர். இந்த ஆடியோ விவகாரம், தி.மு.க மேலிடத்தில் பெரிய விவாதப் பொருளாகியிருப்பதாகச் சொல்கிறார்கள் தி.மு.க-வின் சீனியர்கள்.

நம்மிடம் பேசிய மூத்த அமைச்சர் ஒருவர், “அரசு நிர்வாகத்தின்மீது தொடர்ச்சியான விமர்சனங்களைப் பொதுவெளியில் பேசி, தொடர் சர்ச்சையில் சிக்கியவர்தான் பி.டி.ஆர். டாஸ்மாக் மது விற்பனை, கூட்டுறவுத்துறை தொடர்பாக அவர் பேசிய கருத்துகள் அமைச்சரவைக்குள் அனலைக் கிளப்பின. அப்போதே அழைத்து கடுமையாகக் கண்டித்திருக்க வேண்டும். இந்த ஆடியோ சர்ச்சை வெடித்தவுடன், அமைச்சரவையிலிருந்து பி.டி.ஆரை நீக்கிவிடலாம் என ஆலோசிக்கப்பட்டது. துரைமுருகனும் இதற்கு ஆமோதித்தார். ஆனால், முதல்வரின் மாப்பிள்ளை சபரீசன் தடுத்துவிட்டார். ‘நான் லண்டனிலிருந்து வந்த பிறகு இது குறித்துப் பேசிக்கொள்ளலாம். அதுவரை அவசரப்பட வேண்டாம்’ என முதல்வரிடம் சபரீசன் கேட்டுக்கொண்டதால், பி.டி.ஆரின் பதவி இப்போதைக்குத் தப்பியிருக்கிறது. தான் சார்ந்திருக்கும் கட்சிக்கும் ஆட்சிக்கும் விசுவாசமாக இருப்பதை, தன்னுடைய அறிவும் மேதாவித்தனமும் தடுப்பதாக பி.டி.ஆர் கருதினால், பதவியை ராஜினாமா செய்துவிட்டுச் செல்வதே நல்லது. ஆடியோவில் இருப்பது தன்னுடைய குரல் இல்லையென்றால், அதற்கு விளக்கமளிக்க மூன்று நாள்களா... வசமாகச் சிக்கிக்கொண்டார் பி.டி.ஆர். அதனால்தான், புகாரளிக்கக்கூட அவர் விரும்பவில்லை. முதல்வர் இந்நேரம் பி.டி.ஆரின் பதவியைப் பறித்திருக்க வேண்டும்” என்றார் விரிவாக.
இதற்கிடையில், ‘இந்த ஆடியோ விவகாரத்தை விசாரணைக்கு உட்படுத்தக் கோரி’ ஆளுநரிடம் மனு அளித்திருக்கிறார்கள் பா.ஜ.க-வினர். அவர்களைத் தொடர்ந்து “ ‘நிதியமைச்சரின் 30,000 கோடி ரூபாய்’ ஆடியோ குறித்து நாங்கள் ஆளுநரிடம் புகாரளிப்போம். மத்திய அரசு இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்” என்று கோரிக்கை வைத்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
தி.மு.க-வா... திமிர்.மு.க-வா?
கேரளாவுக்கு தான் செல்லும்போதெல்லாம், தன்னை ஒரு கம்யூனிஸ்ட்டாக அடையாளப்படுத்தி, பெருமிதம்கொள்வார் தமிழக முதல்வர் ஸ்டாலின். ‘ரஷ்யத் தலைவரின் பெயரில் இருந்த மரியாதையால்தான் எனக்கு ஸ்டாலின் எனப் பெயரிட்டார் கலைஞர்’ என அவர் பேசாத மேடையில்லை. ஆனால், தன் பெயருக்கு ஏற்றாற்போல முதல்வர், இந்த மசோதாக்கள் விஷயத்தில் நடந்துகொண்டாரா என்பதுதான் கேள்வி. தொழிலாளர்களின் உரிமையைக் காவு கொடுக்கும் மசோதா, தமிழ்நாட்டையே குடிகாடாக்கும் ஓர் அரசாணை, இயற்கையைச் சுரண்டி ஏப்பம் விடும் சட்ட மசோதா... இவற்றையெல்லாம் எப்படித் தனது ஆட்சியில் அனுமதித்தார் ஸ்டாலின்... மதுவுக்கு எதிராக, இயற்கை வளச் சுரண்டலுக்கு எதிராக, தொழிலாளர்களுக்கு ஆதரவாகத் தேர்தலின்போது தி.மு.க கொடுத்த வாக்குறுதிகளை நம்பித்தான் மக்கள் வாக்களித்து அரியணையில் ஏற்றியிருக்கிறார்கள். ஆட்சிக்கு வந்ததும் அனைத்து அதிகாரங்களும் கைக்கு வந்துவிட்டதென, மக்கள் நலனைக் கருத்தில் கொள்ளாமல், கூட்டணிக் கட்சிகளின் குரலுக்கும் செவி சாய்க்காமல், சட்டமன்றப் பெரும்பான்மைத் திமிரில் இத்தகைய சட்டத் திருத்தங்களை தி.மு.க கொண்டுவந்திருப்பது உண்மையில் அதிர்ச்சியளிக்கிறது. திமுக-வா... திமிர்.முக-வா? என்று கேட்கும்படி ஆகியிருக்கிறது.
மது விருந்து சிறப்பு அனுமதி சட்டத் திருத்தத்தை, மக்கள் எதிர்ப்புக்குப் பிறகு திருத்தியதுபோல, ‘12 மணி நேர வேலை மசோதாவும்’, ‘நில ஒருங்கிணைப்புச் சட்ட மசோதாவும் முற்றிலும் திரும்பப் பெறப்பட வேண்டும். தி.மு.க மீதான கரும்புள்ளியாக விழுந்திருக்கும் ‘நிதியமைச்சர் ஆடியோ விவகாரத்தில்’ தாமதிக்காமல் உண்மையை விரைந்து தெளிவுபடுத்த வேண்டும்’ என்பதே மக்களின் எதிர்பார்ப்பு!