
விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு நிலவள வங்கிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து விரைவில் முழுமையாகச் செயல்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தியை மேம்படுத்தத் தொடங்கப்பட்ட நிலவள மேம்பாட்டு கூட்டுறவு வங்கி, கடந்த 17 ஆண்டுகளாக முடங்கிக் கிடப்பதாகப் புகார் தெரிவிக்கிறார்கள் விவசாயிகள்.

இது குறித்து சட்டப் போராட்டம் நடத்திவரும் கொடைக்கானல் விவசாயி கோகுலகிருஷ்ணனிடம் பேசினோம். “தமிழகத்தில் விவசாய உற்பத்தியை மேம்படுத்தவும், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் நலன் சார்ந்தும் கடந்த 1929-ம் ஆண்டு, சென்னையில் நிலவள மேம்பாட்டு வங்கி தொடங்கப்பட்டது. இந்த வங்கி, நிலத்தின் சந்தை மதிப்பின் அடிப்படையில் விவசாயிகளுக்குக் கடன் வழங்கிவந்தது. கடன் தொகையை 5 முதல் 20 ஆண்டுகளில் திரும்பச் செலுத்தலாம் என்ற சலுகையும் இருந்தது.

இதற்கிடையே விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள், கடன் சுமை, இடுபொருள்கள் விலை உயர்வு, மானியங்கள் நிறுத்திவைப்பு, இயற்கைப் பேரிடர் உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் பல பாதிப்புகளைச் சந்தித்தனர். இதனால், கடந்த 2006-ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி நிலவள மேம்பாட்டு வங்கியில் நிலுவையிலிருந்த 986.12 கோடி ரூபாய் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தார். ஆனால், அதை அரசு ஈடுசெய்யத் தவறியதால், நிலவள மேம்பாட்டு வங்கிகளுக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டு, திவால் நிலைக்குப் போய்விட்டது.
தற்போது கூட்டுறவு பதிவாளர் கட்டுப்பாட்டின்கீழ் 180 நிலவள மேம்பாட்டு வங்கிகள் இருக்கின்றன. அவற்றில் வெறும் நகைக் கடன்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன. கடந்த 17 ஆண்டுகளுக்கு மேலாக நில அடமானக் கடன் சேவை நிறுத்தப் பட்டிருப்பதால் விவசாயிகள் பெரும் பாதிப்பைச் சந்திக்கிறார்கள். அவர்களின் பணத் தேவையைப் பயன்படுத்திக்கொண்டு, கந்துவட்டிக்காரர்களும், ரியல் எஸ்டேட் அதிபர்களும் கடன் கொடுப்பதுபோல நிலத்தையே எழுதி வாங்கத் தொடங்கிவிட்டார்கள்.

கடன் தொல்லையால் பல விவசாயிகள் தற்கொலை முடிவுக்கும் தள்ளப்பட்டார்கள். எவ்வித ஆக்கபூர்வமான செயல்பாடும் இல்லாத நிலவள வங்கியில் தற்போது அதிகாரிகளும் ஊழியர்களும் ஓய்வுபெற்று அந்தக் காலிப் பணியிடங்களும் நிரப்பப்படவில்லை. இது தொடர்பாக நீதிமன்றத்தை நாடியிருக்கிறேன். வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யும் தி.மு.க அரசு, நிலவள மேம்பாட்டு வங்கிகளை மறுசீரமைத்தால் மட்டுமே விவசாயத்தையும் விவசாயிகளையும் பாதுகாக்க முடியும்’’ என்றார் விரிவாக.
இது குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பனிடம் பேசினோம். “விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு நிலவள வங்கிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து விரைவில் முழுமையாகச் செயல்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அதேபோல கூட்டுறவுத்துறையிலுள்ள காலிப்பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும்’’ என்றார்.
17 ஆண்டுகளாக முடங்கிக்கிடக்கும் நிலவள வங்கிகள், விரைவில் மீண்டெழுந்தால் விவசாயிகள் மகிழ்ச்சியடைவார்கள்!