
நாடாளுமன்றம் கூடும்போது பெரும் பிரச்னையாக இருப்பது, அவைக்குப் பெரும்பாலான உறுப்பினர்கள் வருவதில்லை என்ற குற்றச்சாட்டுதான்
சாவர்க்கரின் பிறந்த நாளில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்படுவது சர்ச்சையானது போலவே, இதை யார் திறந்து வைப்பது என்பதும் சர்ச்சையானது. உலகின் உயரமான சிலை, உலகின் பெரிய நாடாளுமன்றம் என்று பிரமாண்டங்களைத் தன் அடையாளமாகக் காட்ட முற்படும் பிரதமர் நரேந்திர மோடியின் உருவாக்கம் இது. 2020 டிசம்பரில் அடிக்கல் நாட்டப்பட்டு, வெறும் இரண்டரை ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது இந்த 1,200 கோடி ரூபாய் அதிசயம்.
கடந்த ஏப்ரல் 6-ம் தேதி முடிவடைந்த பட்ஜெட் கூட்டத்தொடர்தான், பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்ற கடைசிக் கூட்டத் தொடர். கம்பீரமாக வட்டவடிவில் இருக்கும் இந்த பிரிட்டிஷ் கட்டடம், 1927 ஜனவரியில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. ஆரம்பத்தில் இம்பீரியல் கவுன்சில் ஹவுஸ் என்று பெயர் தாங்கி, பிரிட்டிஷ் கால இந்திய சபையின் கூட்டங்கள் இங்கு நடைபெற்றன. சுதந்திரத்துக்குப் பிறகு அரசியல் நிர்ணய சபை இங்குதான் கூடி நம் அரசியல் சட்டத்தை வடிவமைத்தது. அதன்பின் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்றதும், அதுவே நாடாளுமன்றமாக மாறியது. நூற்றாண்டு கொண்டாடுவதற்குள் இது நிராகரிக்கப்படும் என்று முந்தைய தலைமுறைத் தலைவர்கள் நினைத்திருக்க மாட்டார்கள்.

இட நெருக்கடிதான் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் தேவைக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்பட்டது. இதைக் கட்டிய காலத்தில் இல்லாத பல புதிய வசதிகளைச் சேர்த்தபோது கட்டடத்தின் அழகு குலைந்தது. ஏர்கண்டிஷன், சி.சி.டி.வி, ஆடியோ வீடியோ சிஸ்டம், தீயணைப்பு வசதிகள் என்று எல்லாம் செய்தபோது கட்டடம் பல இடங்களில் பாதிப்பு கண்டது. பாதுகாப்புப் பிரச்னைகளும் ஏற்பட்டன. நாடாளுமன்றச் செயலக அலுவலகத்திலும் கடும் இட நெருக்கடி. இதனால், அதன் அருகிலேயே முக்கோண வடிவில் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்றம் புதிய இந்தியாவைப் பிரதிபலிப்பது போலவே, பிரதிநிதித்துவ மாற்றங்களையும் ஏற்படுத்தக்கூடும். இப்போதைய நாடாளுமன்றத்தில் மக்களவையில் 543 உறுப்பினர்களுக்கும் மாநிலங்களவையில் 250 உறுப்பினர்களுக்கும் இடம் உள்ளது. இது 1971 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட அளவு. 2026-ம் ஆண்டுவரை இதில் மாற்றங்கள் செய்யப்படாது. ஆனால், எதிர்காலத்தில் மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்றத்தில் எம்.பி-க்கள் எண்ணிக்கை உயரலாம். அந்தத் தேவையையும் கருதிப் புதிய கட்டடம் உருவாகியுள்ளது. இதன் மக்களவையில் 888 எம்.பி-க்களும், மாநிலங்களவையில் 300 எம்.பி-க்கள் வரையும் அமர முடியும். அரிதாக நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் மக்களவையில் 1,272 பேர் வரை அமரும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதற்கான தொகுதி வரையறைகள் செய்யும்போது, மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கணிசமாகக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் கணிசமாகக் குறையும். அது நம் அரசியல் செல்வாக்கையும் குறைக்கும்.

வரும் ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும் மழைக்காலக் கூட்டத் தொடரே புதிய நாடாளுமன்றத்தில் நடைபெறும் முதல் கூட்டத் தொடராக இருக்கும். நாடாளுமன்றம் கூடும்போதெல்லாம் அதன் மைய மண்டபத்தில் இரண்டு அவைகளின் உறுப்பினர்களும் கூடிப்பேசிக் கலந்துரையாடுவார்கள். பல்வேறு கட்சியினர் கூடிப்பேசி முக்கிய முடிவுகளை எடுக்கும் இடமாக இது இருந்தது. எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் திட்டங்களை இங்குதான் பேசுவார்கள். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் இப்படி ஒரு மைய மண்டபமே கிடையாது. சின்னதாக இரண்டு ஹால்கள் மட்டுமே உள்ளன. பல கட்சியினருக்கும் இது ஏமாற்றம் தரக்கூடும்.
நாடாளுமன்றம் கூடும்போது பெரும் பிரச்னையாக இருப்பது, அவைக்குப் பெரும்பாலான உறுப்பினர்கள் வருவதில்லை என்ற குற்றச்சாட்டுதான். சிறியதாக இருந்த பழைய அவைகளிலேயே நேரடி ஒளிபரப்புகளில் பல இருக்கைகள் காலியாக இருப்பது அப்பட்டமாகத் தெரியும். பழைய மக்களவையைவிட மூன்று மடங்கு பெரிதான புதிய மக்களவையில் எல்லா எம்.பி-க்களும் வந்தாலே, பாதி இருக்கைகள் காலியாக இருக்கும். நிறைய பேர் ஆப்சென்ட் ஆனால், உள்ளே இருப்பவர்களுக்கு தனிமையில் இருப்பது போன்ற பிரமை ஏற்படலாம்.

ஜனாதிபதி மாளிகை தொடங்கி இந்தியா கேட் வரையிலான சென்ட்ரல் விஸ்டா கட்டுமானப் பணியில் முக்கியமான அங்கம், இந்தப் புதிய நாடாளுமன்றம். மற்ற எல்லாச் செயலகங்களும் கட்டி முடிக்கப்படும்போது, தலைநகர அதிகார பீடத்தின் வடிவமே மாறியிருக்கும்.