
டாஸ்மாக் கடையின் விற்பனைக்கு ஏற்ப, குறிப்பிட்ட சதவிகிதம் பார் உரிமைத்தொகை கட்டணமாக நிர்ணயிக்கப்படும். ஆண்டுக்கு ஒரு முறை உரிமைத்தொகையும், மாதா மாதம் ஒரு கட்டணமும் அரசுக்குச் செலுத்தித்தான் பார்களை நடத்த முடியும்.
தமிழகம் முழுக்க சட்டவிரோதமாக இயங்கிய டாஸ்மாக் மதுபானக் கடை பார்கள் அடுத்தடுத்து மூடப்பட்டுவருகின்றன. திருவள்ளூர் மாவட்டத்தில் 75 பார்கள், கன்னியாகுமரி மாவட்டத்தில் 90 பார்கள், சிவகங்கையில் 15 பார்கள், திண்டுக்கல்லில் 14 பார்கள் எனத் தொடர்ச்சியாகச் சட்டவிரோத பார்களுக்கு மூடுவிழா நடத்தி அதிரடித்திருக்கிறது மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை. தலைநகர் சென்னையிலும், சட்டவிரோதமாக இயங்கிய பார்கள் சில மூடப்பட்டிருக்கின்றன. அதிரடிகள் தொடரும் நிலையில், ‘இதுவரை அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திய இந்தச் சட்டவிரோத பார்கள் இப்போதாவது மூடப்பட்டனவே’ என வரவேற்கத் தோன்றினாலும்... ‘இத்தனை நாள்களாக இந்த பார்களில் கிடைத்த வருமானம் யாருக்குப் போனது?’ என்கிற முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியும் சேர்ந்தே எழுகிறது.
சட்டவிரோத பார்களை நடத்தி பண வெள்ளத்தில் நீந்திய முதலைகளெல்லாம், பார்களுக்கு சீல் வைத்தவுடன் மாயமாகிவிட்டனர். அவர்கள்மீது வழக்கும் பதியப்படவில்லை, நடவடிக்கையும் இல்லை. “இந்தச் சட்டவிரோத பார்கள் அனைத்துமே டாஸ்மாக் கடைகளை ஒட்டித்தான் இதுவரை இயங்கிவந்திருக்கின்றன. அந்த பார்களில் 24 மணி நேரமும் ‘சரக்கு’ ஓடுவது ஊருக்கே தெரியும்போது, டாஸ்மாக் மேலாளர்களுக்குத் தெரியாதா... இதையெல்லாம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டியவர் துறை அமைச்சரான செந்தில் பாலாஜிதான். ஆனால், வழக்கம்போல அவர் இந்த விவகாரத்துக்கும் வாய் திறக்கவே இல்லை” என்று குற்றம்சாட்டுகின்றன எதிர்க்கட்சிகள். அரசுக்குக் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பை ஏற்படுத்திவந்த இந்தச் சட்டவிரோத பார் விவகாரம் தொடர்பாக விசாரணையில் இறங்கினோம். கொட்டிய தகவல்களெல்லாம் `கிறுகிறு’ ரகம்!

“விஷச்சாராய மரணம்... சயனைடு விவகாரம்... 10 ரூபாய் பாலாஜி”
மரக்காணம், செங்கல்பட்டில் விஷச்சாராயம் அருந்தி 23 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழகத்தை மட்டுமல்ல, ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கும் தி.மு.க-வையும் ஓர் உலுக்கு உலுக்கிவிட்டது. விஷச்சாராய மரணங்களைத் தொடர்ந்து, செய்தியாளர்களை அமைச்சர் செந்தில் பாலாஜி சந்தித்தபோது, “டாஸ்மாக் கடைகளில் எம்.ஆர்.பி விலைக்குக் கூடுதலாகப் பத்து ரூபாய் வாங்குகிறார்களே?” என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. திடீரென ஆவேசமானவர், “யார் சொன்னது... எந்தக் கடை என்று சொல்லுங்கள், எந்த விற்பனையாளர் அதுபோலப் பணம் வசூலிக்கிறார் எனச் சொல்லுங்கள்...” எனச் சீறினார். அமைச்சர் சவால்விட்டதுதான் தாமதம், டாஸ்மாக் கடைகளில் பத்து ரூபாய் விலை கூடுதலாகப் பெறப்படுவதைப் பொதுமக்களே வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவுசெய்ய ஆரம்பித்தனர். ‘பத்து ரூபா_பாலாஜி’ என்கிற ‘ஹேஷ்டேக்கில்’ இந்த வீடியோக்கள் வலைதளங்களைக் கலங்கடித்தன.
இந்த வீடியோக்களில், சில டாஸ்மாக் பணியாளர்களே ‘செந்தில் பாலாஜிதான் பணம் வாங்குறாரு. அதனாலதான் பத்து ரூபாய் கூடுதலா விக்கிறோம்... கட்சிக்காரங்களுக்குக் கொடுக்கணும்ல... பத்து ரூபாய் அதிகமாகத்தான் வித்தாகணும்’ என ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள். இந்த விவகாரத்தின் சூடு தணிவதற்குள், தஞ்சாவூரிலுள்ள ஒரு டாஸ்மாக் பாரில் மது வாங்கி அருந்திய இரண்டு பேர் உயிரிழந்தனர். அவர்கள் அருந்திய மதுவில் சயனைடு கலக்கப்பட்டதாகக் காவல்துறை விளக்கமளித்தது எடுபடவில்லை. “டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பாகவே, பாரில் மது விற்பனை செய்யப்பட்டது எப்படி... டாஸ்மாக் சரக்கில் சயனைடு வந்தது எப்படி?” என அந்த இருவர் மரணத்தில் விடை தெரியாத கேள்விகள்தான் அடுக்கப்படுகின்றன. இதற்கிடையேதான், சட்டவிரோத பார்கள் மீது ‘சீல்’ நடவடிக்கைகள் தடதடத்திருக்கின்றன.
டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலரிடம் ‘என்னதான் நடக்கிறது?’ என்று கேட்டோம். “டாஸ்மாக் நிறுவனத்தின்கீழ் 5,329 சில்லறை விற்பனைக் கடைகள் செயல்படுகின்றன. 2022-ம் ஆண்டு வெளியான புள்ளிவிவரங்களின்படி, தமிழ்நாட்டில் 3,240 பார்கள் அரசின் அனுமதியோடு இயங்கியிருக்கின்றன. இவற்றில், சுமார் 70 சதவிகித பார்களின் லைசென்ஸ் கடந்த ஆண்டே காலாவதியாகிவிட்டது. அரசு மதுபானக் கடைகளில் பார் நடத்துவதற்கு, அந்த இடத்துக்கான உரிமையாளர்களிடம் தடையில்லாச் சான்று, தீயணைப்புத்துறை சான்று, உறுதித்தன்மைச் சான்று என 66 வகையான சான்றிதழ்களைப் பெற வேண்டும். அதை பாருக்கான டெண்டருடன் இணைத்துப் பதிவுசெய்ய வேண்டும். இந்த டெண்டர் நடைமுறையில் முறைகேடு நடந்ததால்தான், சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினோம். பார் டெண்டர்விடுவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. கடந்த ஆண்டு, ஆகஸ்ட் முதல் வழக்கு நிலுவையில் இருப்பதால், தற்போது 800-க்கும் குறைவான பார்கள்தான் அரசு அனுமதியுடன் இயங்குகின்றன. ஆனால், அரசு அனுமதி இல்லாமலேயே 2,600-க்கும் அதிகமான பார்கள் சட்டவிரோதமாக இயங்குகின்றன. இந்த பார்களில் குறிப்பிட்ட நேரத்தைவிட கூடுதல் நேரத்துக்கு மது விற்பனையாகிறது.

ஆண்டுக்குப் பல நூறு கோடி இழப்பு... யாருக்குப் போனது இத்தனை நாள் வருமானம்?
டாஸ்மாக் கடையின் விற்பனைக்கு ஏற்ப, குறிப்பிட்ட சதவிகிதம் பார் உரிமைத்தொகை கட்டணமாக நிர்ணயிக்கப்படும். ஆண்டுக்கு ஒரு முறை உரிமைத்தொகையும், மாதா மாதம் ஒரு கட்டணமும் அரசுக்குச் செலுத்தித்தான் பார்களை நடத்த முடியும். ஆனால், சட்ட விரோதமாக இயங்கும் பார்களுக்கு ஆண்டு உரிமைத்தொகையும், மாதக் கட்டணமும் இல்லை. இதனால், அரசுக்கு வரவேண்டிய வருவாயில், கடந்த ஓராண்டில் மட்டும் பல நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. எந்த வகையான ஆவணங்களும் இல்லாமல்தான் தமிழ்நாட்டில் 75 சதவிகித பார்கள் இயங்குகின்றன. தமிழகத்தில் மது விற்பனை அதிகரித்தாலும், அதனால் அரசுக்கு வரவேண்டிய முழுமையான வருவாய் வராமல் போவதற்கு இதுதான் காரணம்.
இதைத்தான் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், ‘தமிழகத்தில் மது விற்பனையும் வருமானமும் உயர்ந்தாலும், அரசு வருமானத்தில் அது வெளிப்படவில்லை. விற்பனையும் வருமானமும் டாஸ்மாக் கணக்கில்தான் வருகின்றனவா என்ற கேள்வி எழுகிறது’ எனக் குறிப்பிட்டுப் பேசியிருந்தார். அதன் பிறகுகூட ஆட்சி மேலிடம் விழித்துக்கொள்ளவில்லை. இந்தச் சட்டவிரோத பார்களை அடைகாத்து, வருமானத்தைச் சுருட்டியவர்கள்மீது எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை. அரசுப் பேருந்தை சிலர் எடுத்துச் சென்று சம்பாதித்தால் அரசு சும்மாவிடுமா... ஆனால், சட்டவிரோத பார் விவகாரத்தில் அரசு தொடர்ந்து மெளனமாகவே இருக்கிறது. அரசு கஜானாவுக்கு வரவேண்டிய வருமானமெல்லாம் எந்த `கம்பெனி’யின் பாக்கெட்டுக்குச் சென்றது என்பதை அதிரடியாக அரசு விசாரிக்க வேண்டும்” என்றனர் விரிவாக.
சட்டவிரோத பார் விவகாரம் பூதாகரமாக வெடித்ததைத் தொடர்ந்து, முதல்வர் கவனத்துக்கும் விவகாரம் கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது. “நான் வெளிநாட்டுலருந்து திரும்பி வர்றதுக்குள்ள பிரச்னையைச் சரிசெஞ்சு வைங்க...” என அவர் உத்தரவிட்டதன் பேரில்தான், தற்போது சட்டவிரோத பார்கள் மீது நடவடிக்கைகள் பாய்வதாகச் சொல்கிறார்கள் அதிகாரிகள்.
கண்ணை மூடிக்கொண்ட செந்தில் பாலாஜி... கண்டுகொள்ளாத கே.கே.எஸ்.எஸ்.ஆர்?
இதற்கிடையே, மத்திய சென்னை, சென்னை வடக்கு, சென்னை தெற்கு மாவட்டங்களின் மாவட்ட டாஸ்மாக் மேலாளர்கள் மற்றும் முதுநிலை மண்டல மேலாளர்களுக்கு ‘சென்னை மண்டல டாஸ்மாக் அனைத்து சங்கக் கூட்டு நடவடிக்கைக்குழு’வின் சார்பில் புகார்க் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருக்கிறது. அதில், ‘கடந்த ஒரு வாரமாக, `கருர் குரூப்’ எனச் சொல்லிக்கொண்டு, மனோகர், சம்பத், ஷியாம் ஆகியோர் நேரில் வந்தும், தொலைபேசியில் தொடர்புகொண்டும், கடைகளின் விற்பனைக்கு ஏற்றாற்போல, 50,000 ரூபாய், 45,000 ரூபாய் பணம் தரக் கூறி வற்புறுத்துகின்றனர். பணம் தர மறுக்கும் பணியாளர்களை, ‘ரெய்டு விடுவோம். பணிநீக்கம் செய்யப்படுவீர்கள்’ என மிரட்டுகின்றனர். அதிகாரிகளை மிரட்டி வசூல் செய்யும் கரூர் குரூப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என விவரிக்கிறது அந்தப் புகார்க் கடிதம். தன் துறைக்குள் சிலர் ‘கரூர் குரூப்’ எனச் சொல்லிக்கொண்டு அடாவடியாக மிரட்டிப் பணம் வசூலிப்பது அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தெரியுமா அல்லது கண்களை மூடிக்கொண்டிருக்கிறாரா?
23.11.2022 தேதியிட்ட ஜூனியர் விகடனில், ‘அடாவடி வசூல்; அள்ளிக்குவிக்கும் கரூர் கம்பெனி’ என்கிற தலைப்பில், அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டிருந்தோம். கட்டுரையின் முடிவில், ‘டாஸ்மாக் பார், கடைகள் என எல்லாவற்றையும் சேர்த்து தோராயமாக 30,000 பேர் பணிபுரிகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் ‘கரூர் கம்பெனி’ என்றால் யார்... அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதெல்லாம் தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றன. கள்ளச்சந்தை வியாபாரம், மது பாட்டிலுக்கு வசூல், டி.டி-யில் கமிஷன் என ‘கரூர் கம்பெனி’ அடிக்கும் கொள்ளை அமைச்சருக்குத் தெரியாதா? குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் ‘கரூர் கம்பெனி’யால் இவ்வளவு வெளிப்படையாகவும், சுதந்திரமாகவும் செயல்பட முடிகிறது என்பது தலைசுற்றவைக்கும் கேள்வியாக இருக்கிறது’ என்று குறிப்பிட்டிருந்தோம். அந்தக் கேள்விக்கான விடை இதுவரை கிடைக்கவில்லை.
நம்மிடம் பேசிய டாஸ்மாக் ஊழியர்கள் சிலர், “அனுமதி இல்லாமல் செயல்படும் பார்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் வருவாய்த்துறையின் பங்கும் இருக்கிறது. அந்தத் துறையைச் சேர்ந்த மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள், தாசில்தார்கள்தான் ‘டாஸ்மாக்’ பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி ஆகிய ஐந்து மண்டல அலுவலகங்களிலும், முதுநிலை மண்டல மேலாளர்கள், 38 மாவட்ட மேலாளர்கள், சிறப்புப் பறக்கும் படைகள் உள்ளிட்டவற்றில் வருவாய்த்துறை அதிகாரிகளே நிறைந்திருக்கிறார்கள். பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் பெறுவது, இந்த வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் சேர்த்துத்தான். இந்தத் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தவறிழைத்த அதிகாரிகளைக் கண்டறிந்து ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது விவாதத்துக்குரிய கேள்வி.
‘கம்பெனி’ வசூல் மூடப்படுமா... மெளனத்தைக் கலைப்பாரா பாலாஜி?
அ.தி.மு.க ஆட்சியிலும் இப்படி வசூல்கள் இருந்தன. ஆனால், பார்களின் விற்பனைக்கு ஏற்ப உரிமையாளர்கள் ஒரு விலையைப் பேசி, ஆட்சியாளர்களுக்குக் கொடுத்தார்கள். ஆனால், தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் குறிப்பிட்ட சிலர், இவ்வளவு கொடுக்க வேண்டும் என்று ரேட் ஃபிக்ஸ் செய்து உரிமையாளர்களை நிர்பந்தம் செய்து வசூலிக்கிறார்கள். கிடைத்ததை வாங்கிக் கொள்ளாமல், அடாவடியாக வசூல் செய்ததுதான் இப்போது சிக்கலாகிவிட்டது. லைசென்ஸ் வாங்கிய பார் உரிமையாளர்கள், அரசுக்கு மாதா மாதம் டி.டி-யில்தான் பணம் செலுத்துவார்கள். அவர்கள் மாதம் எவ்வளவு கட்டுகிறார்களோ அந்தத் தொகையில் நகர்ப்புறங்களில் 33 சதவிகிதமும், கிராமப்புறங்களில் 25 சதவிகிதமும் சட்டவிரோதமாக கமிஷன் வசூல் செய்கிறது அந்த ‘கம்பெனி.’ அரசு அனுமதி பெறாமல் இயங்கும் பார்கள், அந்த ‘கம்பெனி’க்கு மாதம்தோறும் கப்பம் கட்டிவிட்டு கனஜோராகக் கடையை நடத்துகின்றன. அந்த ‘கம்பெனி’-யின் வசூலுக்குத் தடை விதிக்கப்பட்டால் மட்டுமே, டாஸ்மாக் துறை மீண்டு எழ முடியும்” என்றனர்.
இதற்கிடையே, “மதுபான விற்பனைக்கான நிபந்தனைகளை கேளிக்கை விடுதிகள், ஹோட்டல்கள் பின்பற்றுகின்றனவா?” எனக் கேள்வி எழுப்பியிருக்கும் சென்னை உயர் நீதிமன்றம், அறிக்கையை இரண்டு வார காலத்துக்குள் தாக்கல் செய்யச் சொல்லி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறது.

உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக இயங்கிய டாஸ்மாக் பார்கள் குறித்தும், இதனால் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு குறித்தும், இந்த விவகாரத்தில் அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளவும் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோரைத் தொடர்புகொண்டோம். இருவரும் நமது அழைப்பை, கடைசிவரை ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து, குறுஞ்செய்தி, மெயில் வழியாக நமது கேள்விகளை அனுப்பியிருந்தோம். அதற்கும் எந்த பதிலும் இல்லை. அவர்கள் பதிலளிக்கும்பட்சத்தில் அதைப் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.
துறைரீதியாகவும், நீதிமன்றம் வாயிலாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிக்கல் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதுவரை பேசாமல் இருந்த டாஸ்மாக் பணியாளர்களே வெளிப்படையாக, ‘ஆமாங்க... செந்தில் பாலாஜி பணம் வாங்குறாரு’ எனப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். ‘கம்பெனி’யின் அடாவடிகள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. டாஸ்மாக்கைச் சுற்றும் எல்லாக் கேள்விகளையும்போல, “எங்கே போச்சு சட்டவிரோத பார்களின் இத்தனை நாள் வருமானம்... கோடிக்கணக்கான அந்தப் பணத்தைச் சுருட்டியவர்கள் யார்?” என்கிற மிகப்பெரிய கேள்விக்கும் விடை தெரியாமல் போய்விடக் கூடாது. இதற்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு செந்தில் பாலாஜிக்கு இருக்கிறது. வாய் திறப்பாரா அமைச்சர்?
*****
“அதிகாரிகளுக்கு நன்றாகத் தெரியும்!
“டாஸ்மாக் பாருக்குச் செல்லும் யாரும், ‘அந்த பார் உரிமம் பெற்று நடைபெறுகிறதா, இல்லையா?’ என்பதைப் பற்றி ஆராயப்போவதில்லை. ஆனால், கண்டிப்பாக அந்தந்தப் பகுதிகளிலுள்ள அரசு அதிகாரிகளுக்கு அங்கிருக்கும் பார் உரிமம் பெற்று இயங்குகிறதா, இல்லையா என்பது நன்றாகத் தெரியும். இதை அனுமதித்த அதிகாரிகள்மீது விசாரணை நடத்தி, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மதுவில் கலப்படம் நடைபெற்றது எப்படி என்பது குறித்தும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்!” - கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர், சி.பி.எம்

“ஒரு பாருக்கு 50,000 ரூபாய் பணம் கேட்டு ‘கரூர் கேங்’ மிரட்டுவதாக டாஸ்மாக் சங்கத்தைச் சேர்ந்தவர்களே குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். இதிலிருந்து கிடைக்கும் வருமானம் அனைத்தும் மேல்மட்டத்தில் இருப்பவர்கள் வரை செல்வதால்தான், செந்தில் பாலாஜி கட்சியில் பெரும் செல்வாக்குடன் இருக்கிறார். அதனால்தான், பி.டி.ஆர் மீது நடவடிக்கை எடுத்த முதல்வர், செந்தில் பாலாஜியை எதுவும் செய்யவில்லை. சமீபத்தில் டாஸ்மாக் பெரும் சர்ச்சையில் சிக்கியதால்தான், அனுமதி இல்லாத பார்களை மூடுவதாக வெறும் கண்துடைப்பு நாடகத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அந்த பாரை நடத்தியவர்கள்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது... இதற்குப் பின்னால் இருப்பது யார்... அவர்களிடம் அபராதம் வசூலித்து அரசு கஜானாவில் சேர்க்கப்படுமா... இந்தக் கேள்விகளுக்கெல்லாம் அரசு பதிலளிக்க வேண்டும்!” - சே.பாக்கியராசன், செய்திப் பிரிவுச் செயலாளர், நாம் தமிழர் கட்சி