விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சி, கடந்த சில வருடங்களாக நிலுவை வரி, சொத்து வரி உள்ளிட்ட இனங்களை பாக்கி இல்லாமல் வசூலித்து அரசுக்கு வருவாய் ஈட்டிவருகிறது. நிலுவையில்லாமல் வரிவசூலித்து சாதனை புரிந்தமைக்காக கடந்த ஆண்டு தமிழகத்தின் சிறந்த நகராட்சிகள் பட்டியலில் ஸ்ரீவில்லிப்புத்தூர் இடம்பிடித்தது. இதற்காக தமிழக அரசின் சிறப்புப் பரிசையும் பெற்ற ஸ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சி நிர்வாகம், தொடர்ந்து அந்தப் பெயரை தக்கவைத்துக்கொள்வதில் முனைப்பு காட்டிவருகிறது. இந்த நிலையில், 2022-2023 நிதியாண்டு முழுவருடக் கணக்கு நிறைவையொட்டி, நிலுவை வரிகளை வசூலிக்கும் பணிகள் ஸ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சியில் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.

இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் வரி வசூலிப்பாளர்களாகப் பணியாற்றும் நபர்களுக்குச் சம்பளம் வழங்காமல், வேலை வாங்குவதாக ஊழியர்கள் தரப்பிலிருந்து நமக்குப் புகார் வந்தது. இது குறித்து நம்மிடம் பேசியவர்கள், "மாத ஊதியத்தை நம்பித்தான் பணிக்கு வருகிறோம். அப்படியிருக்கையில், டார்கெட் வசூலை முடித்துக்கொடுக்க வேண்டும் என்பதற்காக வரிவசூலில் ஈடுபடும் எட்டுப் பேருக்கு கடந்த பிப்ரவரி மாதச் சம்பளத்தை இதுவரை வழங்காமல் நகராட்சி நிர்வாகம் நிறுத்திவைத்திருக்கிறது. இங்கு மட்டுமல்ல, மற்ற நகராட்சிகளிலும் இதே நிலைதான் நீடிப்பதாகக் கூறுகிறார்கள். மாத ஊழியர்களின் வீட்டு நிலையை எண்ணிப் பார்த்தாவது எங்களுக்கு வழங்கவேண்டிய ஊதியத்தைக் கொடுப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்றனர்.

ஊழியர்களின் குமுறல்கள் தொடர்பாக நகராட்சி ஆணையாளர் ராஜமாணிக்கத்திடம் பேசினோம். "நிதியாண்டு கணக்கு முடிப்பதற்காக வரிவசூல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பது உண்மைதான். நகராட்சிக்கு வரவேண்டிய நிலுவை வரித்தொகை 95 சதவிகிதம் வசூலிக்கப்பட்டுவிட்டது. அடுத்த இரண்டு நாள்களுக்குள் 100 சதவிகித வரியும் வசூலிக்கப்பட்டுவிடும். பணியாளர்களைக் கஷ்டப்படுத்தும் எண்ணத்தில் சம்பளம் நிறுத்திவைக்கப்படவில்லை. வரிவசூல் பணிகள் நடைபெற்றுவந்ததால், சம்பளம் வழங்குவது சற்றுத் தள்ளிப்போய்விட்டது. வருகிற திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமைக்குள் பணியாளர்களுக்கு சம்பள பாக்கி வழங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்" என்றார்.