அலசல்
Published:Updated:

லோக்கல் போஸ்ட்

பள்ளி வளாகத்தில் பாறைக்குன்றுகள்... பரிதவிக்கும் மாணவர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
பள்ளி வளாகத்தில் பாறைக்குன்றுகள்... பரிதவிக்கும் மாணவர்கள்!

‘‘வாழை மரத்தின் இலைகள் மின்கம்பியில் உரசிக்கொண்டிருக்கின்றன. எனவே, வாழை இலைகளை வெட்டி அகற்றிக்கொள்கிறோம்’’ எனத் தகவல் கூறியிருக்கின்றனர்.

பேருந்து நிலையமா... போதைக் கூடாரமா?
பேருந்து நிலையமா... போதைக் கூடாரமா?

பேருந்து நிலையமா... போதைக் கூடாரமா?

வேலூர் பழைய பேருந்து நிலைய வளாகத்தை ஒட்டியே டாஸ்மாக் கடை அமைந்திருப்பதால், குடிமகன்கள் பலரும் பேருந்து நிறுத்தத்திலேயே அமர்ந்து குடித்து, மட்டையாகிவிடுகிறார்கள். அண்மையில், பேருந்து நிலையத்தில் படுத்துக்கிடந்த ஆதரவற்ற முதியவர் ஒருவரை மதுபோதையில் வந்த பெண் ஒருவர் சரமாரியாக காலால் எட்டி உதைத்து வம்பிழுத்தார். அடுத்த சில தினங்களில், குழந்தைகளுடன் பஸ்ஸுக்காகக் காத்திருந்த கணவன், மனைவி இருவருமே போதையில் தள்ளாடினர். போதையில் வரும் இன்னும் சில சில்வண்டு ரோமியோக்களோ, பஸ்ஸுக்காகக் காத்திருக்கும் இளம்பெண்கள் முன்பு பைக் சாகசம் செய்கிறார்கள். தொடரும் இந்த தொல்லைகளால், ‘அங்கிருந்து டாஸ்மாக் கடையை உடனே அப்புறப்படுத்த வேண்டும். அங்கு போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட வேண்டும்’ எனக் கோரிக்கை விடுக்கிறார்கள் பயணிகள்.

பள்ளி வளாகத்தில் பாறைக்குன்றுகள்... பரிதவிக்கும் மாணவர்கள்!
பள்ளி வளாகத்தில் பாறைக்குன்றுகள்... பரிதவிக்கும் மாணவர்கள்!

பள்ளி வளாகத்தில் பாறைக்குன்றுகள்... பரிதவிக்கும் மாணவர்கள்!

கிருஷ்ணகிரி மாவட்டம் D.T தின்னூரில், அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டுவருகிறது. 43 மாணவிகள் உட்பட, 118 பேர் இந்தப் பள்ளியில் படிக்கின்றனர். பள்ளிக்குப் புதிய கட்டடம் கட்டப்பட்டபோது, பள்ளி வளாகத்தில் இருந்த பாறைக்குன்றுகளை உடைக்காமல்விட்டதால், பள்ளிக்கு மைதானமும், சுற்றுச்சுவரும் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. “மைதானம் இல்லாததால், மாணவர்களுக்கு விளையாட்டு என்பதே ஒரு கனவுபோல ஆகிவிட்டது. இதனால், பள்ளிக்கல்வித்துறை நடத்தும் எந்த விளையாட்டுப் போட்டியிலும் இவர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. பள்ளி வளாகத்திலிருக்கும் குன்றுகளை அகற்றி, சுற்றுச்சுவர், மைதானம் அமைத்துத் தர வேண்டும்” என மாணவர்கள் - பெற்றோர், சமூக ஆர்வலர்கள் பல ஆண்டுகளாகக் கோரிக்கைவைத்தும் மாவட்ட நிர்வாகமும், பள்ளிக்கல்வித்துறையும் செவிமடுக்காமலேயே இருக்கின்றன. நடவடிக்கை எடுக்குமா அரசு?

‘‘வாத்தியார்மாருங்க லட்சணம் எனக்குத் தெரியும்...’’ கோபத்தில் ‘கொட்டிய’ அமைச்சர்
‘‘வாத்தியார்மாருங்க லட்சணம் எனக்குத் தெரியும்...’’ கோபத்தில் ‘கொட்டிய’ அமைச்சர்

‘‘வாத்தியார்மாருங்க லட்சணம் எனக்குத் தெரியும்...’’ கோபத்தில் ‘கொட்டிய’ அமைச்சர்

கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரத்தில் அமைந்திருக்கும் கல்குளம் அரசு தொடக்கப் பள்ளியில், 84.25 லட்சம் ரூபாய் மதிப்பிலான வகுப்பறைகள் கட்டும் பணிகளைத் தொடங்கிவைக்க, தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சென்றார். ஏற்கெனவே இருந்த பழைய பள்ளிக் கட்டடத்தை மறைத்தபடி, புதிய கட்டடம் கட்டும் வகையில் திட்டம் தீட்டப்பட்டிருந்தது. உடனே டென்ஷனான அமைச்சர், ‘‘இப்படிப் பழைய கட்டடத்தை மறைத்து கட்டடம் கட்டினால் மாணவர்கள் எப்படிச் சென்றுவருவார்கள்... உங்கள் சொந்த ஸ்கூலாக இருந்தால் இப்படித் திட்டம் போடுவீர்களா?” என வட்டார வளர்ச்சி அதிகாரிகளை நோக்கிக் கொந்தளித்திருக்கிறார். அப்போது குறுக்கிட்ட பள்ளித் தலைமை ஆசிரியை, “பழைய கிளாஸ் ரூம் இங்குதான் இருந்தது” என்று சொல்ல... கோபத்தின் உச்சிக்கே சென்ற அமைச்சர், “அம்மா, உங்ககிட்ட நான் கேக்கலை. வாத்தியார்மாருங்க லட்சணம் எனக்குத் தெரியும்” என்று வார்த்தைகளால் கொட்டியவர், திட்டத்தைத் தொடங்கிவைக்காமலேயே விருட்டென திரும்பிச் சென்றுவிட்டாராம்.

கற்கண்டாக நொறுங்கிய அமைச்சரின் கார் கண்ணாடி!
கற்கண்டாக நொறுங்கிய அமைச்சரின் கார் கண்ணாடி!

குலைவாழை மரங்களை வெட்டிச் சாய்த்த மின்வாரியம்!

நீலகிரி மாவட்டம், ஸ்ரீமதுரையைச் சேர்ந்த விவசாயி சந்திரமோகன், தனது தோட்டத்தில் வாழை பயிரிட்டிருக்கிறார். அவர் வெளியூருக்குச் சென்றிருந்தபோது, அவரைத் தொடர்புகொண்டு பேசிய மின்வாரிய அதிகாரிகள் ‘‘வாழை மரத்தின் இலைகள் மின்கம்பியில் உரசிக்கொண்டிருக்கின்றன. எனவே, வாழை இலைகளை வெட்டி அகற்றிக்கொள்கிறோம்’’ எனத் தகவல் கூறியிருக்கின்றனர். ஆனால், மின்கம்பியில் உரசிய வாழை இலைகளை வெட்டாமல் விட்டுவிட்டு, குலை தள்ளிய வாழை மரங்களை அடியோடு வெட்டிச் சாய்த்துவிட்டுச் சென்றுவிட்டார்களாம் மின்வாரிய ஊழியர்கள். இதையடுத்து, ‘தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளைச் சீர்ப்படுத்தி உயர்த்தாமல், 30-க்கும் அதிகமான குலைவாழை மரங்களை அடியோடு வெட்டிய மின்வாரியத்தினர் ₹30,000 இழப்பீடு வழங்க வேண்டும்’ என போலீஸில் புகாரளித்திருக்கிறார் சந்திரமோகன்!

கற்கண்டாக நொறுங்கிய அமைச்சரின் கார் கண்ணாடி!
கற்கண்டாக நொறுங்கிய அமைச்சரின் கார் கண்ணாடி!

கற்கண்டாக நொறுங்கிய அமைச்சரின் கார் கண்ணாடி!

விருதுநகர் மாவட்டம், சூலக்கரையில் பொதுமக்களின் பல ஆண்டுகாலப் போராட்டத்தின் பயனாக, கூட்டுறவுத்துறையின் சார்பில் பகுதி நேர ரேஷன்கடை அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் திறப்புவிழா நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்‌ கலந்துகொண்டார். அமைச்சரே நேரில் வந்து ரேஷன்கடையைத் திறந்துவைத்த குஷியில், அமைச்சரின் காருக்கு அருகே சரம் சரமாகப் பட்டாசுகளை வெடித்துத் தள்ளினர் கட்சித் தொண்டர்கள். வெடிச் சத்தம் ஓய்ந்து, சூழ்ந்திருந்த புகைமண்டலமும் விலகியபோது, அமைச்சரின் முகத்திலிருந்த அத்தனை சந்தோஷமும் கலைந்து, கனலாகத் தகித்தது. காரணம், ஆர்வமிகுதியால் வெடித்த பட்டாசு, அமைச்சரின் கார் கண்ணாடியைக் கற்கண்டாக நொறுக்கிவிட்டது. கோபம் கொப்பளிக்கச் சுற்றியிருந்தவர்களை முறைத்த அமைச்சர், மாற்று வண்டியில் ஏறிப் பறந்திருக்கிறார்.