
- தேன்மொழி
மேயர் வார்டில் காலிக் குடங்கள்!
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யும்விதமாக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் நிறுவனத்துக்கு, 2018-ம் ஆண்டு ரூ.3,167 கோடி மதிப்பில் ஒப்பந்தம் விடப்பட்டது. சுமார் ஐந்து ஆண்டுகள் முடிவடைந்திருக்கும் நிலையில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட எந்தப் பகுதியிலும் சரியாகக் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. பல இடங்களில் 11 - 15 நாள்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் கிடைக்கிறது. வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில், 20 நாள்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மேயர் வார்டு உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் காலிக் குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். ‘கோடையின் உக்கிரம் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை. நாளாக நாளாக நிலைமை இன்னும் மோசமாகுமோ...’ என அஞ்சுகிறார்கள் கோவை மக்கள்.

புத்தெழில் பெற்ற புதன்சந்தை!
நாமக்கல் டு சேலம் சாலையில் இருக்கும் புதன்சந்தை, மாட்டுச்சந்தைக்கும், காய்கறிச்சந்தைக்கும் பிரசித்திபெற்ற ஊர். வருடா வருடம் இங்கிருக்கும் 21 கடைகளை வெளிப்படையாக ஏலம் விடாமல், மறைமுகமாக உள் வாடகைக்குவிட்டு சிலர் பயனடைந்துவந்தனர். இந்த நிலையில், சமூக ஆர்வலர்களின் தொடர் போராட்டத்தால் முதன்முறையாக, தற்போது 21 கடைகளும், மாட்டுச்சந்தை நடக்கும் வெளிச்சந்தைப் பகுதியும் ரூ.1 கோடிக்கு மேல் ஏலம் போயிருக்கிறது. இந்த நிலையில், ‘‘சந்தையை வைத்துக்கொண்டு இத்தனை நாளும் சம்பாதித்தவர்களைக் கட்டுப்படுத்திவிட்டோம். இப்போது கிடைத்திருக்கும் பணத்தை வைத்துக்கொண்டு, சந்தைப் பகுதியில் குடிநீர் வசதி, நிழற்குடைகள், வியாபாரிகள் இளைப்பாறக் கட்டடம், கழிப்பிட வசதி, சந்தையைச் சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்’’ எனப் புதிதாக கோரிக்கை வைத்திருக்கின்றனர் சமூக ஆர்வலர்கள். கோரிக்கையை நிறைவேற்றுவார்களா?


திறந்து, மூடிய ரகசியம் இதுதான்..!
புதுக்கோட்டையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, நகராட்சி சார்பில் ரூ.54 லட்சம் செலவில் ‘நவீன மீன் விற்பனை நிலையம்’ கட்டப்பட்டு, திறப்புவிழாவும் நடத்தப்பட்டது. ஆனால், திறந்த அடுத்த சில மாதங்களிலேயே பராமரிப்புப் பணிகளுக்காக மூடுவிழாவும் கண்டது. அதன் பிறகு கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக, பூட்டிக்கிடந்த மீன் விற்பனை நிலையத்துக்குள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக எட்டு கடைகளைக் கட்டி முடித்தது நகராட்சி. விற்பனை நிலையத்துக்குள் புதர்போல் மண்டிக்கிடந்த செடி, கொடிகளையெல்லாம் ரூ.2 லட்சம் ரூபாய் செலவுசெய்து அகற்றி, திறப்புவிழா நடத்த ஆர்வம் காட்டியது. இடையில் என்ன நடந்ததோ, மறுபடியும் திறக்காமல் `அம்போ’வெனக் கிடப்பில் போட்டுவிட்டனர். என்னவென்று விசாரித்தால், ‘புதிதாகக் கட்டப்பட்ட கடைகளை யாருக்கு ஒதுக்கித்தருவது’ என்பதில் லோக்கல் கவுன்சிலர்களிடையே ஒரே முட்டல் மோதலாம். பொறுத்துப் பார்த்து பொறுமையிழந்த மீன் வியாபாரிகள், இப்போது சாலையோரங்களில் கடைவிரித்துவிட்டார்கள்!


அரசு வாகனங்களின் அவலநிலை!
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், பயன்பாட்டில் இல்லாமல் கைவிடப்பட்ட நிலையில் ஏராளமான அரசு வாகனங்கள் ஆங்காங்கே காட்சிப்பொருளாக நிறுத்தப்பட்டிருக்கின்றன. அரசின் சொத்துகள் வெயிலிலும் மழையிலும் உருக்குலைந்துகிடப்பது பார்ப்பவர்களின் மனதை வேதனைக்குள்ளாக்குகிறது. இது பேசுபொருளாக மாறியதால், எலும்புக்கூடாகிப்போன அந்த வாகனங்களின் நிலை மக்களுக்குத் தெரியக் கூடாது என்று அரசின் விழிப்புணர்வு திட்ட விளம்பரப் பலகைகளை வைத்து அவற்றை கவர் செய்துவருகின்றனர் அதிகாரிகள். நமது கேமராவில் சிக்கிய சில புகைப்படங்களில் ஒன்று..!

பழைய பேருந்து நிலையமும், உள்ளே வெளியே ஆட்டமும்!
ராமநாதபுரத்தில் புதிய பேருந்து நிலையம் கொண்டுவந்த பிறகு, பழைய பேருந்து நிலையத்தை நகரப் பேருந்து நிலையமாக மாற்றிச் செயல்படுத்திவந்தனர். ஆனால் கடந்த சில மாதங்களாக, பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்துக்குள் செல்லாமல், நுழைவாயிலுக்கு முன்பாகவே பயணிகளை இறக்கிவிட்டு, ஏற்றிச் செல்வதால், பழைய பேருந்து நிலையம் சமூகவிரோதிகளின் கூடாரமாகவும், தனியார் பேருந்துகள் நிறுத்துமிடமாகவும் மாறிவிட்டது. இது ஒருபுறமிருக்க... பழைய பேருந்து நிலைய நுழைவு வாயிலில், பேருந்துக்காகக் காத்திருக்கும் பயணிகள் கொதிக்கும் வெயிலில் துவண்டுபோகின்றனர். மக்களின் அவஸ்தைகளை நேரில் பார்த்தறிந்தாலும்கூட கண்டும் காணாமல் கடந்து செல்கின்றனர் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள்.