தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய, முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் 1992-ம் ஆண்டு தமிழக அரசால் உருவாக்கப்பட்டது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.25,000, இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் ரூ.50,000 வழங்கக்கப்படும். இந்தத் தொகை மொத்தமாக, அவர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். பெண்களுக்கு 18 வயதை எட்டிய பிறகு முதிர்வுத் தொகையுடன் சேர்த்து இறுதித் தொகை வழங்கப்படும். இது சமூக நலன்துறை சார்பாகக் கண்காணிக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில், இந்தத் திட்டத்தில் தொடர ஆதார் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.

சமூக நலத்துறை சார்பாக வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ``மத்திய அரசு கொண்டுவந்த சட்டபிரிவு 7-ன் அடிப்படையில் மாநிலத்திலுள்ள முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும், அரசின் செயல்முறையை ஒற்றை ஆவணத்தைக்கொண்டு எளிமைப்படுத்தவும் ஆதாரை இணைப்பது அவசியம். எனவே, இதில் ஆதார் இணைக்காதவர்கள் உடனே இணைக்க வேண்டும் என அறிவிப்பில் கூறப்பட்டிருக்கிறது. இதற்கான வழிகாட்டுதல்களை மாவட்ட ஆட்சியர்களுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைச் செயலாளர் அறிவுறுத்தியிருக்கிறார்.

மத்திய அரசு கொண்டுவந்த ஆதாரைத் தொடர்ந்து தி.மு.க எதிர்த்துவந்தது. ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மின் இணைப்பு, நலத்திட்டங்கள் பெற என அனைத்துக்கும் ஆதார் கட்டாயம் என அறிவித்தது. அதற்கு மத்திய அரசு நிதிப் பங்கிட்டு இணைந்து செயல்படுவதால், அவர்கள் நிர்பந்தத்தின் பெயரில் அறிவித்ததாகக் கூறியது. தற்போது முற்றிலும் மாநில அரசு நிதி ஒதுக்கும் ஒரு திட்டத்துக்கு ஆதார் கட்டாயம் என அறிவித்திருப்பது மீண்டும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.