தஞ்சாவூர் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் QR கோடு அட்டை ஒட்டும் பணி தொடங்கியுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் வீட்டிலிருந்தபடியே குறைகளையும் தேவைகளையும் பதிவு செய்யலாம். அடுத்த ஒரு மணி நேரத்தில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சாவூர் மேயர் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள வீடுகளில் QR கோடு அட்டை ஒட்டி அதன் மூலம் அனைத்துச் செயல்பாடுகளையும் செய்கின்ற வகையிலான டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தை அறிவித்து அதற்கான பணிகளைத் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி தஞ்சாவூர் மாநகராட்சியில் உள்ள உமா நகரில் மேயர் சண்.இராமநாதன், QR கோடு அட்டை ஒட்டும் பணியைத் தொடங்கி வைத்தார்.
இந்தப் பணிகள் ஒரு மாதத்துக்குள் முடிவடையும். அதன் பின்னர் பொதுமக்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்தையும் பதிவு செய்யலாம் என அவர் தெரிவித்திருப்பது பொது மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுகுறித்து சண்.இராமநாதனிடம் பேசினோம். ”தஞ்சாவூர் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. இதில் சுமார் 70,000 வீடுகள் உள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் QR கோடு அட்டை ஒட்டும் பணி தொடங்கியுள்ளது.
முதல்கட்டமாக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள உமா நகர், நடராஜபுரம் உள்ளிட்ட பகுதியில் ஒட்டும் பணி நடைபெற்றுவருகிறது. QR கோடு ஒட்டும்போதே, அந்த வீட்டில் உள்ள நபர்களின் எண்ணிக்கை, ஆதார் எண், ரேஷன் கார்டு எண், மின் இணைப்பு உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அதில் பதிவு செய்யப்படும். பொதுவாக, பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்த பிறகு அதைப் படித்துப் பார்த்து நடவடிக்கை எடுக்கப்படும். இதற்குச் சில நாள்கள் ஆகும்.
QR கோடு ஒட்டுவதன் மூலம் பொதுமக்கள் வீட்டிலிருந்து கொண்டே தங்கள் குறைகளைச் சொல்லலாம், புகார்களைத் தெரிவிக்கலாம், சேவைகளையும் பெறலாம். தங்கள் செல்போனில் QR கோடினை ஸ்கேன் செய்த பிறகு டைப் செய்தோ அல்லது குரல்பதிவு மூலமாகவோ, ’குப்பை எடுக்காமல் இருப்பது, குடிநீர் வராமல் இருப்பது’ என அனைத்து குறைகளையும் பதிவு செய்யலாம். அடுத்த நொடியே மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் இருப்பவர்கள் அது குறித்து நடவடிக்கை எடுக்கத் தொடங்கிவிடுவர்.

இதன்மூலம் எந்தப் பிரச்னையாக இருந்தாலும் ஒரு மணி நேரத்தில் சரி செய்யப்படும். வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, கடை வாடகைக்கான உரிமம் புதுப்பித்தல் உள்ளிட்ட அனைத்தையும் இந்த QR கோடு மூலம் செய்துகொள்ளலாம். ஸ்டிக்கர் ஒட்டும் பணி விரைவாக நடந்து வருகிறது. இந்த வகையான டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் பொதுமக்கள் அலையத் தேவையில்லை, அவர்களுடைய நேரம் வீணாகாது, அன்றாடப் பணிகள் பாதிப்படையாமல் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்கிற வகையில் பயனடைவார்கள்!" என்றார்.