கடந்த 2-ம் தேதி நடந்த அமைச்சரைவைக் கூட்டத்திலேயே ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் குறித்து பெரிதாக விவாதிக்கப்பட்டதாம். அதன் தொடக்கமாக இன்னும் சில நாள்களில் முக்கியமான துறைச் செயலாளர்கள் மாற்றப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஊரக வளர்ச்சித்துறைச் செயலாளராக இருக்கும் அமுதா, உள்துறைச் செயலாளராக மாற்றப்பட அதிகம் வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. தொடர்ந்து, கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும் செயலாளருக்குமிடையே ஒருமித்த கருத்துகள் இல்லாமல் மோதல் போக்கு இருந்தது. இந்த நிலையில் துறைச் செயலாளரை மாற்றியே ஆக வேண்டுமென கோரிக்கை வைத்துவருகிறாராம் அமைச்சர். அவருக்குச் செவிசாய்த்து இந்த மாற்றம் கொண்டவரப்படவிருக்கிறது என்கிறார்கள். அமுதா நிர்வகித்து வந்த ஊரகத்துறைக்கு மாநகராட்சி கமிஷர் ககன்தீப் சிங் விருப்பம் தெரிவித்திருக்கிறார். அவர் ஏற்கெனவே அந்தத் துறைச் செயலாளராக இருந்தவர் என்பதால், அவர் ஆர்வமாகயிருக்கிறாராம்.

இவரைத் தொடர்ந்து முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் நிதித்துறைச் செயலாளராக மாற்றப்படுவதாக தகவல் கசிகிறது. தற்போது நிதித்துறை அமைச்சராக தங்கம் தென்னரசு பதவியேற்றிருக்கிறார். இந்த நிலையில்தான் இந்த மாற்றம் நிழவிருக்கிறது. அவர் இருந்த முதன்மைச் செயலாளர் பதவிக்கு தற்போது நிதித்துறைச் செயலாளராக இருக்கும் முருகானந்தத்துக்கு அதிக வாய்ப்பு என்று கோட்டை வட்டாரங்கள் முணுமுணுக்கின்றனர்.

அதேபோல் ஆவினின் நிர்வாக இயக்குநர் சுப்பையன் பொறுப்பிலிருந்து மாற்றுப்படுவார் என்றும், அந்தப் பதவில் யார் அமர்வது என்பது விரைவில் தெரியவரும் என்கிறார்கள்.
வணிக வரித்துறை ஆணையர் தீரஜ் குமாரைத் தொழில்நுட்பத்துறைக்கு மாற்ற அமைச்சர் சார்பாகப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறதாம்...
இப்படியாக, முக்கியமான ஏழு துறைச் செயலாளர்கள் மாற்றப்பட அதிக வாய்ப்பிருக்கிறது. ஆனால், இது ட்ரைலர்தான் மெயின் பிக்சர் தலைமைச் செயலாளர் இறையன்பு ஓய்வுபெறும்போது இருக்கும் என்கிறார்கள்.

தலைமைச் செயலாளர் பொறுப்புக்கு சிவதாஸ் மீனா பெயர் அடிபடுகிறது. அப்போது, பல துறைச் செயலாளர்கள் மாற்றப்படவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. தொடர்ந்து அமைச்சர்-செயலாளரிடையே இருக்கும் இடைவேளையால் திட்டங்கள் செயல்படாமல் இருப்பதைச் சரிசெய்ய இந்த மாற்றங்கள் விரைவில் வரும் என்று கோட்டை வட்டாரங்கள் தகவலைக் காற்றில் பரப்புகின்றனர்.
இத்துடன் ஐ.பி.எஸ் மாற்றம் குறித்தப் பட்டியலும், மாவட்ட கலெக்டர்கள் மாற்றம் குறித்தப் பட்டியலும் வெளியாகவிருக்கிறது. இதன்படி, இரண்டு ஆண்டுகள் ஒரு மாவட்டத்தில் பணியாற்றிய அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களும் மாற்றப்படுவார்கள் என்ற செய்தியும் உலாவுகிறது.