குஜராத் கலவரம் தொடர்பாக மோடி குறித்து, பிபிசி ஊடகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டு பாகங்கள்கொண்ட ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. `இந்தியாவில் இதை ஒளிபரப்பக் கூடாது’ என மத்திய அரசு இதற்குத் தடையும் விதித்தது. இருப்பினும், பல்வேறு அமைப்புகளும், கட்சிகளும் கல்லூரிகள் உள்ளிட்ட பல இடங்களில் தடையை மீறித் திரையிட்டன. ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் இந்த ஆவணப்படம் பகிரப்பட்டது.

பிறகு மத்திய அரசின் உத்தரவால் சமூக ஊடகங்களிலிருந்து அந்தப் படம் நீக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து டெல்லி, மும்பையிலுள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனையும் நடத்தினர். இந்த நிலையில், `இந்தியாவில் சமூக ஊடகங்களில் என்ன பதிவிட வேண்டுமென்பதில் கடுமையான சட்டங்கள் இருக்கின்றன’ என ட்விட்டர் சி.இ.ஓ எலான் மஸ்க் தெரிவித்திருக்கிறார்.
பிபிசி ஊடகத்துடனான பேட்டியொன்றில், ட்விட்டரில் மோடி ஆவணப்படம் நீக்கப்பட்டது குறித்து கேள்விக்கு பதிலளித்த எலான் மஸ்க், ``அப்போது இந்தியாவில் சில உள்ளடக்க (Content) சூழ்நிலைகளில் சரியாக என்ன நடந்தது என்று தெரியவில்லை. சமூக ஊடகங்களில் எதைப் பதிவிட வேண்டும் என்பதில் இந்தியாவில் கடுமையான சட்டங்கள் இருக்கின்றன.

நாட்டின் சட்டங்களை மீறிச் செல்ல முடியாது. ஒருவேளை நாங்கள் சிறைக்குச் செல்வதா அல்லது சட்டத்துடன் உடன்பட்டுச் செல்வதா என்றால், நாங்கள் சட்டத்துடன் உடன்பட்டுச் செல்வோம்" என்று கூறினார்.

அண்மையில், மத்திய அரசைப் பற்றிய எந்தவொரு தவறான அல்லது போலியான தகவலின் உண்மைத்தன்மையைச் சரிபார்ப்பதற்குப் பத்திரிகை தகவல் பணியகத்துக்கு (PIB) அதிகாரம் வழங்கும்விதமாக, தகவல் தொழில்நுட்பச் சட்ட விதிகளில் திருத்தம் கொண்டுவருவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.