அலசல்
Published:Updated:

“ஆட்சியரை பார்க்க ஆயிரம் ரூபாய்” - வசூலில் கொழிக்கும் புரோக்கர்ஸ்... சாட்டை எடுப்பாரா கலெக்டர்?

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
பிரீமியம் ஸ்டோரி
News
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

ஆரம்பத்தில் நம்மை வட்டமிட்டு வரவேற்ற புரோக்கர்கள், கால் மேல் கால் போட்டுக்கொண்டு பேப்பர் படித்துக்கொண்டிருந்தார்கள்

“திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை புரோக்கர்கள் கூட்டம் மொய்க்கிறது. கலெக்டரை நேரில் பார்க்கவைப்பதாகச் சொல்லிக்கூட சிலர் வசூல்வேட்டை நடத்துகிறார்கள்” என்று மக்களிடமிருந்து நமக்கு அழைப்பு வந்ததால், உடனே கிளம்பிச் சென்றோம்.

அலுவலக வாசலிலேயே நம்மை மொய்த்தது ஒரு கூட்டம். ‘என்ன வேணும் சார்... சர்டிஃபிகேட் எதுவும் வாங்கணுமா... ஆர்டினரின்னா 500 ரூபாய்... ஒரு வாரத்துல வந்துரும். எக்ஸ்பிரஸ்னா 1,000 ரூபாய்... மூணே நாளில் கைக்கு வந்துரும்... கலெக்டரை நேரில் பார்த்து மனு கொடுக்கணுமா... ஆயிரம்தான் சார்’ என்று நம்மை அதிரவைத்தனர். அவர்களைச் சமாளித்து அனுப்பிவிட்டு, கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைந்தோம்.

ஆல்பி ஜான் வர்கீஸ்
ஆல்பி ஜான் வர்கீஸ்

‘ஒரு என்.ஓ.சி சர்டிஃபிகேட் வாங்க ஒரு வாரம் அலைஞ்சோம். ஒண்ணும் நடக்கலை. 500 ரூபா நீட்டுனாதான் வேலையே நடக்குது. இந்த எழவுதான் வேணும்னு அன்னைக்கே சொல்லியிருந்தா கொடுத்துருப்போமே’ என்று கத்தியபடி, இரண்டு பேர் நம்மைக் கடந்து வெளியே சென்றார்கள். அவர்களைத் தாண்டி அலுவலகத்துக்குள் நுழைந்தால், வராண்டாக்களில் நாய்கள் ஹாயாகப் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தன. வரவேற்பு அறையில் ஒரு தாய்க் குரங்கு, தன் குட்டியைச் சுமந்துகொண்டு அமர்ந்திருந்தது. அதன் சீற்றத்துக்குப் பயந்து மக்கள் ஓரமாக ஒதுங்கிச் சென்றுகொண்டிருந்தனர்.

குரங்கை மெல்லக் கடந்து ஆட்சியர் அறை இருக்கும் முதல் தளத்துக்குப் படியேறினோம். ஒரு பெண்ணின் அழுகுரல் நம்மை மீண்டும் அதிரவைத்தது. என்ன நடக்கிறது என்று அருகில் சென்று பார்த்தோம். மாற்றுத்திறனாளி மகனுடன் நின்றிருந்த ஒரு பெண், கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸிடம் ‘தனது பணத்தைச் சிலர் ஏமாற்றிவிட்டதாகவும், இது குறித்து போலீஸாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை’ என்றும் கண்ணீருடன் முறையிட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் மனுவைப் பெற்றுக்கொண்ட கலெக்டர், விசாரித்து நடவடிக்கை எடுக்கச் சொல்வதாகக் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

இது குறித்து அந்தப் பெண்ணிடம் நாம் பேசிக்கொண்டிருந்தபோது, எங்களை நோக்கி வேகமாக வந்தார் ஒரு நபர். ‘ஏய்... பேசினபடி நான்தான் கலெக்டரைப் பார்க்க வெச்சுட்டேன்ல... இன்னும் ஏன் இங்க நிக்கிறே... ஏன் எல்லார்கிட்டயும் பேசிக்கிட்டு இருக்கே... முதல்ல இடத்தைக் காலி பண்ணு’ என அவரை அதட்டி வெளியே விரட்டினார். மெயின் ரோடு வரை அந்தப் பெண்ணைப் பின்தொடர்ந்து, அவரிடம் பேச்சுக் கொடுத்தோம். பிரச்னையை விரிவாகச் சொன்னவர், ‘`நியூஸ் எதுவும் போடாதீங்க. கலெக்டர் நல்லது பண்ணுறேன்னு சொல்லியிருக்காரு’’ என்றார். ``உங்களை விரட்டினாரே... அவர் யார்?’’ என்று கேட்டபோது. ‘`அவருதான் கலெக்டர்கிட்ட மனு கொடுக்க ஏற்பாடு செய்யறேன்னு ஆயிரம் ரூபா வாங்கியவர். இன்னும் எத்தனை பேருக்குத்தான் இப்படிக் காசு அழணுமோ தெரியலை’ என்று கண்கலங்கினார். அவரைச் சமாதானம் செய்து, வழியனுப்பிவைத்துவிட்டு, அங்கிருந்த ஆட்டோ ஸ்டாண்டில் இருந்தவர்களிடம் பேச்சுக் கொடுத்தோம்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

‘`எல்லா கலெக்டர் ஆபீஸுக்கும் ஒரு சட்டம்னா, திருவள்ளூர் கலெக்டர் ஆபீஸ் சட்டமே வேற. கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நல்லவராத்தான் தெரியுது. அவரை எளிமையா அணுகவும் முடியுது. ஆனா, புரோக்கர்களும் சில அதிகாரிகளும்தான் வில்லங்க வேலை பார்க்குறாங்க. திங்கள் கிழமையானா போதும், மொத்த புரோக்கர் கூட்டமும் இங்க வந்துடும். மனு கொடுக்க வர்றவங்களை ஈ மொய்க்கிறது மாதிரி மொய்ச்சு பிச்சுடுவாங்க. எத்தனை கலெக்டர் மாறினாலும் இது மட்டும் மாறவே இல்லை. எங்க போயும் பிரச்னை தீரலைங்கிறதுனாலதான் மக்கள் கடைசியா கலெக்டர் ஆபீஸுக்கு வர்றாங்க. அவங்கக்கிட்ட இப்பிடிப் பிடுங்கித் திங்குறாங்க. இதுக்கெல்லாம் இங்க இருக்குற அதிகாரிதான் காரணம். மனசு கேட்காம, மக்கள் தொடர்பு அலுவலக அதிகாரிக்கிட்ட போய்ச் சொன்னோம். ஆனா அவர், ‘ஆட்டோ ஸ்டாண்ட் இருக்கணுமா, வேணாமா... வந்தோமா, ஆட்டோ ஓட்டுனோமான்னு போயிடணும். தேவையில்லாத விஷயத்துல மூக்கை நுழைச்சா, ஒரு பய ஆட்டோவும் இங்க நிக்காது’னு எங்களையே மிரட்டுறார்” என்றனர் ஆத்திரத்துடன்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் விளக்கம் கேட்க மக்கள் தொடர்பு அதிகாரியின் அறைக்குச் சென்றோம். அங்கே ஆரம்பத்தில் நம்மை வட்டமிட்டு வரவேற்ற புரோக்கர்கள், கால் மேல் கால் போட்டுக்கொண்டு பேப்பர் படித்துக்கொண்டிருந்தார்கள். நிலைமையை உணர்ந்து, அந்த இடத்தைவிட்டு நகர்ந்தோம்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாம் ஒரே ஒருநாள் கண்ட காட்சிகளே அதிரவைத்ததால், இதுகுறித்து கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ்-ஸிடம் பேசினோம். ‘இதுகுறித்து எனது தரப்பில் விசாரித்துவிட்டுச் சொல்கிறேன்’ என்று கூறினார். பின்னர் தொடர்பு கொண்டபோது, ‘விரைவில் அழைக்கிறேன்’ ‘மாலைக்குள் சொல்கிறேன்’ என்று குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கொடுப்பதை தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தார். இப்படியே 10 நாட்கள் ஓடிவிட்டன. இந்த கட்டுரையை அச்சில் ஏறும் வரை கலெக்டரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

மனு கொடுக்கவே லஞ்சம் அழவேண்டிய அவல நிலையில்தான் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் செயல்படுகிறது என்பது வேதனையின் உச்சம்; அவலம்! சாட்டையைக் கையிலெடுப்பாரா கலெக்டர்?