தமிழ் நாடகக்கலை ஆளுமையான மறைந்த `அவ்வை’ டி.கே.சண்முகத்தின் 111வது பிறந்த நாள், ஏப்ரல் 26ம் தேதி அவரது குடும்பத்தினர் மற்றும் அவரால் வளர்த்தெடுக்கப்பட்ட மாணவர்களின் முயற்சியால் சென்னையில் கொண்டாடப்பட்டது. நாடக மற்றும் சினிமா நடிகர்கள் பலர் திரளாக இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
விழா முடிந்தபோது, அதில் கலந்து கொண்ட பலர் ஆதங்கப்பட்டுப் பேசிய ஒரு விஷயம், அதற்கு முந்தைய நாள், அதாவது ஏப்ரல் 25ம் தேதி, சென்னை ராயப்பேட்டையில் அவரது பெயரில் இருந்த சாலையின் ஒரு பகுதியைப் பிரித்து அதற்கு வி.பி.ராமன் சாலை எனப் பெயரிடப்பட்டது குறித்துதான்.
அவ்வை சண்முகம் சாலை என்பது அண்ணா சாலையில் சர்ச் பார்க் பள்ளியிலிருந்து தொடங்கி மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவ்வையார் சிலை வரையிலானது. 'அவ்வையார்’ வேடமிட்டு நடித்துப் புகழ் பெற்ற டி.கே.சண்முகத்தின் வீடு இந்தப் பகுதியில் அமைந்திருந்ததால் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது, அதாவது சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன் இந்தப் பெயர் சூட்டப்பட்டது.

தற்போது இந்தச் சாலையின் ஒரு பகுதியைப் பிரித்து தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞரும் அண்ணாவின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு பிறகு கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆகியோருடனும் சம நட்பைப் பேணியவருமான மறைந்த வி.பி.ராமன் பெயரைச் சூட்டியுள்ளது தமிழக அரசு. இந்தப் பெயர் மாற்றம் சென்னை மாநகராட்சியின் முடிவு என சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் கூறியிருக்கிறார். டி.கே.சண்முகம் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்ட சிலரிடம் நாம் பேசினோம்.
‘’டி.கே. சண்முகம் கட்சி சார்பற்றவராத்தான் திகழ்ந்தார். எண்ணற்ற மாணவர்களைத் தமிழ் நாடக உலகத்துக்கும் சினிமாவுக்கும் தந்தவர். கமல்ஹாசனே அவரைத் தன்னுடைய குருன்னுதான் சொல்றார். மறைந்த முதலமைச்சர் கலைஞரால் நாடகத் தொல்காப்பியர்னு போற்றப்பட்டார். இத்தனை சிறப்பு வாய்ந்த ஒருத்தர் பெயரில் இருக்கிற சாலையைப் பிரித்துதான் இன்னொருத்தருக்குச் சிறப்பு செய்யணுமாங்கிறதுதான் எங்களது ஆதங்கம். அதுக்காக நாங்க யாரும் வி.பி.ராமனைக் குறைவா சொல்லலை. அவரையும் கௌரவப்படுத்த நினைச்சா அதுக்கு இந்த ஒரு வழிதான் இருக்குதாங்கிறதுதான் இங்க கேள்வி. இந்நேரம் கலைஞர் முதலமைச்சரா இருந்தா நிச்சயம் இப்படிச் செய்திருக்க மாட்டார்.
அதேபோல இன்னொரு விஷயம், பெயரைப் பிரிச்சு சுருக்க முடிவு பண்ணிட்டீங்க சரி, அதை அவருடைய பிறந்த நாளுக்கு முந்தைய நாள்தான் செய்யணுமா? மறுநாள் அவருடைய பிறந்த நாள், முதல் நாள் பெயரை எடுத்து விடுறாங்க. இது தற்செயலா நடந்ததா இல்லை திட்டமிட்டு நடந்ததாங்கிற கேள்விக்குப் போக விரும்பலை. ஆனா இப்படி நடந்தது எங்களையெல்லாம் வருத்தப்பட வச்சிடுச்சு’’ என்கிறார்கள்.

அ.தி.மு.க தலைமை அலுவலகம் அமைந்திருக்கிற இந்தச் சாலையின் பெயரை மாற்ற முடிவெடுத்தது குறித்து சட்டசபையிலேயே எதிர்க்கட்சியான அ.தி.மு.க எதிர்ப்பு தெரிவித்தது. அ.தி.மு.க-வின் எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம் இதுகுறித்துக் கேள்வி எழுப்பினார். அப்போது ’இது மாநகராட்சியின் முடிவு' என அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப் பார்த்திருக்கிறார் சபாநாயகர் அப்பாவு. அதன்பிறகு அ.தி.மு.க-வினர் பலரும் எழுந்து எதிர்ப்பு தெரிவிக்க, ''சென்னை மாநகராட்சி என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என விசாரிக்கிறோம்'' என்றார் அமைச்சர் துரைமுருகன்.
"வி.பி.ராமன் தி.மு.க.காரர், ‘எம்.ஜி.ஆர் மாளிகை’ன்னு இருக்கிற அ.தி.மு.க லெட்டர் பேடுல இனி ‘வி.பி.ராமன் சாலை’ன்னும் போட வேண்டி வருதில்லையா, அதைப் பண்ணனும்னுதான் திட்டமிட்டு இதைச் செய்திருக்குது அரசு. தி.மு.க செய்யும் அரசியல்ங்க இது’’ எனப் புலம்புகிறார்கள் அ.தி.மு.க-வினர்.
இதில் இன்னொரு வேடிக்கையும் நிகழ்ந்திருக்கிறது. இந்தப் பெயர் மாற்றம் குறித்துத் தகவல் சொல்ல டி.கே.சண்முகம் குடும்பத்தினரை மாநகராட்சி சார்பில் தொடர்பு கொண்டவர்கள், "மேயர் ஆபீஸ்ல இருந்து பேசறோம், அவ்வை சண்முகம் யாருங்க, அவர் என்ன செய்திருக்கார், ஒரு டீடெய்ல் கொடுங்க. மேயர் கேட்கிறார்" எனப் பேசியிருக்கிறார்கள்.
"மாநிலத்தை ஆளுகிற பெரிய கட்சியில் இருந்து மேயர் பொறுப்புக்கு வந்திருப்பவர் குறைந்தபட்சம் நகரின் வரலாற்றைத் தெரிந்து கொள்ள மாட்டாரா? சம்பந்தப்பட்டவங்களையே தொடர்பு கொண்டா அவங்களைப் பத்திக் கேட்பாங்க" எனத் தலையிலடிக்கிறார்கள்.

டி.கே.சண்முகத்தின் மகன் டி.கே.எஸ்.கலைவாணனிடம் நாம் பேசினோம்.
"அப்பா மீது மிகுந்த பற்றுக் கொண்டவர் கலைஞர். இந்தச் சாலையிலேயே அவருக்கு ஒரு சிலை வைத்து சிறப்புச் செய்யணும்னு அவர்கிட்ட நாங்கக் கேட்டிருந்தோம். அவரும் செய்யலாம்னு சொல்லியிருந்தார். அதற்குள் அரசு மாறிடுச்சு. இப்ப மறுபடியும் இப்போதைய முதலமைச்சர்கிட்ட அந்தக் கோரிக்கையை வைக்கலாம்னு நினைச்சிட்டிருந்தோம். அதுக்குள்ள இப்படியொரு முடிவை மாநகராட்சி எடுத்ததாகச் சொல்றாங்க. அதேநேரம் சிலை வைக்கும் எங்கள் முயற்சியையும் நாங்க கைவிடறதா இல்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இது தொடர்பா விரைவிலேயே சந்திக்கலாம்னு இருக்கேன்" என்கிறார்.