தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, உலகம் இந்தியாவை வளரும் நாடாகப் பார்க்காமல் வளர்ந்த நாடாகப் பார்ப்பதாகக் கூறியிருக்கிறார்.
கடந்த 26-ம் தேதி குடியரசு தினத்தன்று சென்னையில் நடைபெற்ற அணிவகுப்பில் பங்கேற்ற என்.சி.சி., என்.எஸ்.எஸ் மாணவர்களுடனான கலந்துரையாடல் சந்திப்பு கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது.

அதில் மாணவர்களுடன் கலந்துரையாடிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ``2047-ல் இந்தியா வல்லரசாக மாறும். இந்தச் சவாலை எதிர்நோக்கித்தான் இந்தியா பயணம் செய்யவிருக்கிறது. இதில் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதை நீங்கள்தான் தேர்வுசெய்ய வேண்டும்.
உலக நாடுகள் இன்று, பிற நாடுகளிலுள்ள பிரச்னைகளை எப்படிச் சரிசெய்வது என்பது குறித்து இந்தியாவின் பார்வையை எதிர்பார்த்துவருகின்றன. இப்படி உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவை எதிர்பார்த்திருக்கையில், நாம் அதை ஈடுசெய்ய வேண்டும்.

அதோடு உலகம், இந்தியாவை வளரும் நாடாகப் பார்க்காமல் வளர்ந்த நாடாகப் பார்க்கிறது. உலக நாடுகளில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இந்தியாவின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது. ஒட்டுமொத்த உலகிலும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டிருக்கும் சூழலில், இந்தியா வளர்ச்சிப் பாதையில் செல்கிறது" என்றார்.