“இஷ்டம்னா கடையை நடத்து... இல்லைன்னா கிளம்பு!” - மக்கள் பணத்தை வீணடிக்கும் திருச்சி மாநகராட்சி

கடைகளை வாடகைக்கு எடுத்திருப்பவர்கள், வாடகையைக் கொடுக்க முடியாமல் நஷ்டமடைந்து, கடன் தொல்லையால் மன உளைச்சலோடு வாழ்கிறார்கள்.
28 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டிருக்கும், திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் அதிக வாடகை காரணமாக பெரும்பான்மையான கடைகள் மூடியே கிடப்பதாகப் புகார் கிளம்பியிருக்கிறது.

தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆர்.டி.ஐ) இது குறித்த தகவல்களைப் பெற்றிருக்கும் சாலை பயனீட்டாளர் நலக்குழு ஒருங்கிணைப்பாளர் அய்யாரப்பன் நம்மிடம், “ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ், 2019-ம் ஆண்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் புதிதாகக் கட்டப்பட்டது. இதில், மொத்தம் 55 கடைகள் வாடகைக்கு விடுவதற்காகக் கட்டப்பட்டிருக்கின்றன. ஆனால், ஏலத்தின் அடிப்படையில் கடைகளுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் வாடகை நிர்ணயிக்கப்பட்டதால், 35 கடைகளை எடுத்து நடத்த யாரும் முன்வராமல் பூட்டியே கிடக்கின்றன. இதனால் மாநகராட்சிக்கு மாதம்தோறும் லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அதேபோல, பேருந்து நிலையத்தில் கட்டப்பட்ட தாய்மார்கள் பாலூட்டும் அறை, பயணிகள் காத்திருக்கும் அறை என எதுவுமே திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கின்றன. இலவச பார்க்கிங் வசதி இல்லாததால், முதல் தளத்தில் 4,600 சதுர அடியில் கட்டப்பட்ட ஃபுட் கோர்ட்டும் நான்கு வருடங்களாகப் பூட்டியே கிடக்கிறது. இப்படிப் பூட்டியே வைப்பதற்கு மக்களின் வரிப்பணத்தை எதற்காக வீணடிக்க வேண்டும்?” என்றார் கொதிப்புடன். சத்திரம் பேருந்து நிலைய வியாபாரிகள் நலச் சங்கத் தலைவர் எஸ்.எம்.சேட்டு, “கட்டடங்கள் தரமில்லாமல் இருக்கின்றன; கழிவுநீர் செல்வதற்கான வசதியோ, குடிநீர் வசதியோ கிடையாது. ‘இஷ்டம்னா கடையை நடத்து. இல்லைன்னா கிளம்பு!’ என்கிற கறாரான மன நிலையில்தான் மாநகராட்சி அதிகாரிகள் இருக்கின்றனர்” என்றார் குமுறலாக.

சத்திரம் பேருந்து நிலைய வியாபாரிகள் நலச் சங்க செயலாளர் எஸ்.ராயல் சேட்டு, “கடைகளை வாடகைக்கு எடுத்திருப்பவர்கள், வாடகையைக் கொடுக்க முடியாமல் நஷ்டமடைந்து, கடன் தொல்லையால் மன உளைச்சலோடு வாழ்கிறார்கள். இந்தப் பிரச்னையால் கடந்த ஆண்டில் மட்டும் கல்யாணி, ரவி, செல்வராஜ், மோகன் ஆகிய நான்கு பேர் உயிரிழந்திருக்கின்றனர்” என்றார்.

இது குறித்து திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதனிடம் விளக்கம் கேட்டபோது, “சத்திரம் பகுதியில ஒரு சதுர அடியின் மார்க்கெட் வேல்யூ என்னன்னு கேளுங்க. ‘மார்கெட் வேல்யூ அதிகமா இருக்க, நீங்க எப்படிக் குறைந்த வாடகைக்குக் கடைகளைக் கொடுத்தீங்க’ன்னு கேட்டா நான் என்ன பதில் சொல்றது... முறைப்படி ஏலம்விட்டு 20 பேர் கடைகளை எடுத்து நடத்திக்கிட்டு இருக்காங்களே... கடைகளைப் பூட்டிவெக்கக் கூடாதுங்கறதுக்காக, வாடகையைக் குறைக்க முடியாது. தாய்மார்கள் பாலூட்டும் அறையும், பயணிகள் காத்திருக்கும் அறையும் பூட்டியிருக்கறது பத்தி எனக்குத் தெரியாது. அதிகாரிகளை என்னவென்று பார்க்கச் சொல்றேன்” என்றார்.
கடைகளை, கடைசிவரை பூட்டி வைத்திருந்தால் மட்டும், மாநகராட்சியின் கஜானா நிரம்பிவிடுமா?!