அரசியல்
அலசல்
Published:Updated:

கிரண் ரிஜிஜு பதவி பறிப்பு! - சட்ட அமைச்சர் மாற்றத்துக்கு காரணம் என்ன?

கிரண் ரிஜிஜு
பிரீமியம் ஸ்டோரி
News
கிரண் ரிஜிஜு

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளாக யாரை நியமிக்கலாம் என்ற பெயர்ப் பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்பும். அதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கும்.

உச்ச நீதிமன்றத்துக்கு எதிராகக் கடும் விமர்சனங்களை முன்வைத்துவந்த மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவின் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. மத்தியில் பவர்ஃபுல்லான சட்டத்துறை அமைச்சராக வலம்வந்த கிரண் ரிஜிஜு, ‘புவி அறிவியலுக்கென்று தனியாக அமைச்சகம் இருக்கிறதா?’ என்று ஆச்சர்யத்துடன் கேட்கும் அளவுக்கு டம்மியான அமைச்சகத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

யார் இந்த கிரண் ரிஜிஜு?

அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவரான கிரண் ரிஜிஜு, மத்திய உள்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்தார். மோடி, அமித் ஷா ஆகியோரின் ‘குட்புக்’கில் இருந்ததால், திடீரென 2021-ம் ஆண்டு மத்திய சட்டத்துறை அமைச்சர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது.

நீதிபதிகள் நியமனத்துக்கான அதிகாரம்கொண்ட கொலீஜியம் முறையை மத்திய அரசு எதிர்ப்பதால், உச்ச நீதிமன்றத்துக்கும், மத்திய அரசுக்குமிடையே பிணக்கு இருந்துவந்தது. ஆனால், கிரண் ரிஜிஜு சட்ட அமைச்சராகப் பதவியேற்றது முதல் அது பெரும் மோதலாக மாறியது. நீதித்துறையையும், தனிப்பட்ட முறையில் உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகளையும் அவர் கடுமையாக விமர்சித்துவந்தார். ‘உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் சிலர், இந்தியாவுக்கு எதிரான கும்பலுடன் சேர்ந்துகொண்டு செயல்படுகிறார்கள்’ என்று அவர் குற்றம்சாட்டினார். பிடிக்காதவர்கள்மீதெல்லம் ‘ஆன்டி இண்டியன்’ முத்திரை குத்தும் பா.ஜ.க-வினர், கடைசியில் நீதிபதிகளையும் ‘ஆன்டி இண்டியனாக்கி’விட்டார்களே என்று விமர்சனம் எழுந்தது.

கிரண் ரிஜிஜு
கிரண் ரிஜிஜு

உச்ச நீதிமன்றத்துடன் மோதல்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளாக யாரை நியமிக்கலாம் என்ற பெயர்ப் பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்பும். அதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கும். இதுதான் வழக்கமான நடைமுறை. கடந்த சில ஆண்டுகளாக, கொலீஜியம் அனுப்பும் பட்டியலுக்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் வழங்குவதில்லை. இதனால், நீதிபதிகள் நியமனத்தில் தாமதம் ஏற்பட்டது. இது தொடர்பாக மத்திய அரசுமீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. அந்த நேரத்தில் `லட்சுமண ரேகையை உச்ச நீதிமன்றம் தாண்டக் கூடாது’ என்று கிரண் ரிஜிஜு காட்டமாக எதிர்வினை ஆற்றினார். இந்த விவகாரம், உச்ச நீதிமன்றத்துக்கும் மத்திய அரசுக்குமிடையிலான தொடர் மோதலுக்குக் காரணமாக அமைந்தது.

நீதிபதிகள் நியமனத்தில் ஏற்படும் தாமதம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, கொலீஜியத்தின் பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்குவதில் மத்திய அரசு காலதாமதம் செய்வது குறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்திய நீதிபதிகள் எஸ்.கே.கவுல், ஏ.எஸ்.ஒகா அமர்வு, “இது மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்னை. இதில், சங்கடமான நிலைப்பாட்டை எடுப்பதற்கு எங்களை நிர்பந்திக்காதீர்கள்” என்று மத்திய அரசை எச்சரித்தனர்.

காரணம் என்ன?

கிரண் ரிஜிஜுவுக்கு முன்பு சட்ட அமைச்சராக இருந்த ரவிசங்கர் பிரசாத், ஓர் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர். அவருக்கு நீதித்துறையின் முக்கியத்துவமும், அதன் நெளிவுசுளிவுகளும் நன்கு தெரியும். நீதிபதிகள் நியமனத்தில் கொலீஜியத்துக்கும், மத்திய அரசுக்கும் பிரச்னை ஏற்படும் நேரத்தில், ‘ஒரு தேநீர் அருந்தலாம் வாருங்கள்’ என்று ரவிசங்கர் பிரசாத்தை, தலைமை நீதிபதி அழைப்பாராம். அவ்வளவு பெரிய பிரச்னையை ஒரு தேநீர் சந்திப்பில் சுமுகமாகத் தீர்த்துவிடுவார்களாம். ஆனால், கிரண் ரிஜிஜுவின் அணுகுமுறையே வேறு. நீதிபதிகளைத் தன்னுடைய எதிரிகள்போலவும், நீதித்துறையை விமர்சிப்பது மட்டுமே தனது தலையாய கடமைபோலவும் நினைத்து இவர் செயல்பட்டுவந்தார். எனவே, `முதிர்ச்சியும், பக்குவமும், அனுபவமும் இல்லாத ஒருவரை சட்டத்துறை அமைச்சராக மோடி அரசு வைத்திருக்கிறதே...’ என்ற வருத்தம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளிடம் இருந்தது.

கடந்த சில மாதங்களில் உச்ச நீதிமன்றம் வழங்கிய சில தீர்ப்புகளும், சில உத்தரவுகளும் மத்திய அரசுக்குப் பின்னடைவை ஏற்படுத்துவதாக அமைந்தன. குறிப்பாக, டெல்லி ஆம் ஆத்மி அரசு தொடர்ந்த ஒரு வழக்கில், ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக்கொண்ட மாநில அரசுதான் அதிகாரம் கொண்ட அமைப்பு. மாநில அரசுக்குக் கட்டுப்பட்டவர்கள்தான் மாநில ஆளுநர்கள்’ என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இது, ஆளுநர்களைவைத்து அரசியல் செய்யும் மத்திய அரசுக்கு ஆப்பு வைக்கும் தீர்ப்பு என்று எதிர்க்கட்சிகள் கொண்டாடின. பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை வழக்கில், தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பாகவே குற்றவாளிகளை விடுதலை செய்ததற்கு எதிரான வழக்கில், மத்திய அரசின் அணுகுமுறையை உச்ச நீதிமன்றம் கடுமையாகச் சாடியது.

கிரண் ரிஜிஜு
கிரண் ரிஜிஜு

தோல்வியடைந்த அமைச்சர்!

இந்தச் சூழலில்தான், கிரண் ரிஜிஜுவை மாற்றும் முடிவை மத்திய அரசு எடுத்திருக்கிறது. அவரை மாற்றியதற்கான காரணம் வெளிப்படையாகச் சொல்லப்படாவிட்டாலும், உச்ச நீதிமன்றத்துடனான மோதல் போக்கு முற்றுவதை மத்திய அரசு விரும்பாத காரணத்தால்தான், இந்த நடவடிக்கையை எடுத்ததாக டெல்லி அரசியல் வட்டாரத்தில் கூறுகிறார்கள். கிரண் ரிஜிஜுவை மாற்றிவிட்டு, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சராக இருக்கும் அர்ஜுன் ராம் மெக்வாலை, சட்ட அமைச்சகத்தின் பொறுப்பையும் கூடுதலாக கவனிக்கும் வகையில் மோடி அரசு நியமித்திருக்கிறது.

“தோல்வியடைந்த ஓர் அமைச்சர்” என்று கிரண் ரிஜிஜுவை எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. “நீதித்துறையை ‘டார்கெட்’ செய்வதையும், ராகுல் காந்தியை ‘ட்ரோல்’ செய்வதையும் கிரண் ரிஜிஜு தன் வழக்கமான வேலையாகக் கொண்டிருந்தார். பூகோள அறிவியலில் அவர் என்ன செய்வார்?” என்று ட்வீட் செய்திருக்கிறார் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர்.

எப்படியோ, அர்ஜுன் ராம் மெக்வால் பதவிக் காலத்திலாவது, நீதித் துறையுடனான மோதல் முடிவுக்கு வந்தால் சரி!