Published:Updated:

தொழில்துறை `ராஜா', நிதித்துறை `தங்கம்', ஆவின் `மனோ' -மாறிய இலாகாக்கள்.. இருக்கும் சவால்கள் என்னென்ன?

தலைமைச் செயலகம்

`டி.ஆர்.பி.ராஜாவுக்குத் துறையைக் கையாளும் திறமை இருக்கிறது’ என நம்பி தலைமை இந்தத் துறைக்கு அவரின் பெயரை `டிக்’ அடித்திருக்கிறது.

Published:Updated:

தொழில்துறை `ராஜா', நிதித்துறை `தங்கம்', ஆவின் `மனோ' -மாறிய இலாகாக்கள்.. இருக்கும் சவால்கள் என்னென்ன?

`டி.ஆர்.பி.ராஜாவுக்குத் துறையைக் கையாளும் திறமை இருக்கிறது’ என நம்பி தலைமை இந்தத் துறைக்கு அவரின் பெயரை `டிக்’ அடித்திருக்கிறது.

தலைமைச் செயலகம்

கடந்த இரு வாரங்களாகவே அமைச்சரவை மாற்றம் குறித்து பல தகவல்கள் வெளிவந்துகொண்டிருந்தன. இந்த நிலையில், அமைச்சரவையிலிருந்து நாசர் விடுவிக்கப்பட்டு புதிதாக  மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு  அமைச்சர் பொறுப்பு வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. ராஜ் பவனில் இன்று பதவியேற்பு விழா நடந்தது. இத்துடன்  சில அமைச்சர்களின் துறையும் மாற்றப்பட்டிருக்கிறது. அமைச்சர் நாசரின் பால்வளத்துறை மனோ தங்கராஜுக்கும், புதிதாகப் பொறுப்பேற்ற டி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழில்துறையும், தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுக்கு நிதித்துறையும் வழங்கப்பட்டிருக்கிறது.

டி.ஆர்.பி.ராஜா
டி.ஆர்.பி.ராஜா

தி.மு.க ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில், மூன்றாவது முறையாக அமைச்சரவையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. தொடர் ஓட்டத்தை ஒத்திருக்கும் இந்த அமைச்சரவையில், புதிதாக பொறுப்பேற்றவர்களில் யாரெல்லாம் தன் ஓட்டத்தை இரண்டாவது சுற்றிலிருந்து தொடங்கவிருக்கின்றனர்... யார் முதல் சுற்றிலிருந்து தொடங்குவது... முன்னவர் ஓடாத ஒட்டத்தையும் சேர்த்து ஓடவிருக்கிறவர் யார்... பார்க்கலாம்...

டி.ஆர்.பி.ராஜா
டி.ஆர்.பி.ராஜா

`தொழில்துறை அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா!’

தி.மு.க தகவல் தொழில்நுட்பப் பிரிவின் செயலாளராக பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் விலகிய பிறகு, அந்தப் பொறுப்பு டி.ஆர்.பி.ராஜாவுக்கு வழங்கப்பட்டது.

தற்போது அவருக்குத்தான் தொழில்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. டெல்டாவிலிருந்து ஒருவர் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற வகையில் இவருக்குப் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.

டி.ஆர்.பி.ராஜாவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் தொழில்துறையின் ’முதல் சுற்று ஓட்டத்தை’ முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு மிகச் சரியாக தன் படை பலத்துடன் ஓடிக் கடந்திருக்கிறார். இருப்பினும் இந்தத் துறை ராஜாவுக்கு சவாலானது எனக் கூறப்படுகிறது. மேலும், எடுத்த எடுப்பிலே பெரிய துறையை வழங்கணுமா... என சீனியர் அமைச்சர்களும் கேள்வி எழுப்புகின்றனர். இருப்பினும், அவரின் தந்தை தொழில்துறை அமைச்சராகயிருந்தவர்தான். மேலும், இவருக்கு அந்தத் துறையைக் கையாளும் திறமை இருக்கிறது என நம்பி தலைமை இந்தத் துறைக்கு அவரின் பெயரை `டிக்’ அடித்திருக்கிறது என்கிறார்கள் அவரின் சகாக்கள்.

தங்கம் தென்னரசு
தங்கம் தென்னரசு

தொழில் குறித்தான முடிவுகளைச் செயல்படுத்த ஆலோசனைக் குழு ஏற்கெனவே உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனால் இவருக்குப் பெரும் அழுத்தம் இருக்காது என்கிறார்கள். ஆனாலும், அனைத்து மாநிலங்களும் தொழில் முதலீட்டை ஈர்க்க ’நான்’, ’நீ’ எனப் பெரும் போட்டி நடத்துகின்றனர். அதேவேளையில், பன்னாட்டு நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க சில சலுகைகள் எதிர்பார்க்கப்படுகிறது. அதன் ஒரு முன்னெடுப்பாக தமிழகத்தில் கொண்டுவரப்பட்ட 12 மணிநேர வேலை மசோதா, கூட்டணிக் கட்சிகளாலும் எதிர்க்கப்பட்டு திரும்பப் பெறப்பட்டது. இதற்கு என்ன மாதிரியான யுக்திகளைக் கையாண்டு கொள்கையையும், முதலீடுகளையும் தக்கவைப்பார் என்பது இவருக்கு முன்னிருக்கும் பெரும் சவால்.

`நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு!’

பெரும் போராட்டத்துக்குப் பிறகு தங்கம் தென்னரசு நிதித்துறையை நிர்வகிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். ஏன் இந்த இழுபறி எனச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. காரணம் தமிழகத்தின் நிதிநிலைமையில் நிலவும் சிக்கல் காரணமாகத் தொடர்ந்து இந்தப் பொறுப்பை ஏற்கத் தயங்கினார் அவர். ஆனால், முதலமைச்சர், உதயநிதி சார்பாக இவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, இறுதியாக நிதியமைச்சராகப் பொறுப்பேற்க ஒப்புக்கொண்டாராம்.

முக்கியமான பொறுப்பு என்பதாலும், பெரும் பொறுப்பு என்பதாலும் இந்தத் தயக்கம் இருந்திருக்கலாம். ஆனால், இந்தத் துறையை நிர்வகித்த பழனிவேல் தியாகராஜனின் நிர்வாக செயல்பாடுகளில் எந்தச் சிக்கலும் இருந்ததில்லை. பொருளாதாரத் துறையில் சிறந்து விளங்கியவர். இவர் சரியாகத் துறையை இயக்கியதால், ரூ.62,000 கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறை ரூ.30,000 கோடியாகக் குறைந்தது. இப்படியாக, சிறப்பாக இரண்டு சுற்றுகளை ஓடி முடித்துதான் நிதித்துறை, தங்கம் தென்னரசு கைகளுக்கு வந்திருக்கிறது.

எனவே, நிர்வாகத்தில் சவால்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால், கட்சிக்கும் ஆட்சிக்கும் தேர்ந்த நிதியமைச்சராக செயல்படுவதில் தலைவலி ஏற்படலாம். தமிழகத்தின் நிதிநிலையைக் கருத்தில்கொண்டுதான் ஒவ்வொரு திட்டத்துக்கும் சரியாகத் திட்டமிட்டு நிதி ஒதுக்கினார் முன்னாள் நிதியமைச்சர் பி.டி.ஆர். இவரின் இந்தச் செயல்பாடுகளே அமைச்சர்களிடையில் அவருக்கு நற்பெயர் கிடைக்க முட்டுக்கட்டையாகிவிட்டது.

பி.டி.ஆர் - தங்கம் தென்னரசு
பி.டி.ஆர் - தங்கம் தென்னரசு

ஆனால், தமிழ்நாட்டின் நிதிநிலைக்கு இவரின் செயல்பாடுதான் சரி எனப் பொருளாதார வல்லுநர்களும் பாராட்டினர். ஆனால், அமைச்சர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மேலும், திட்டத்துக்குச் சரியான தரவுகள் இல்லாமல் நிதி ஒதுக்க முடியாது எனக் கறார் காட்டியதால், திட்டம் கொண்டுவருவதில் தாமதம் ஏற்பட்டது. மகளிர் உரிமைத்தொகை தாமதமானதும் இதனால்தான் என்கிறார்கள். இதனால் நிதித்துறையிடம் பல ஃபைல்கள் தேங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது புதிதாகப் பொறுப்பேற்கும் தங்கம் தென்னரசுக்குப் பெரும் பணிச்சுமையாக இருக்கலாம். இந்த நெருக்கடியை எப்படி சாமாளிப்பார் என்பது அவரின் திட்டமிடலில்தான் இருக்கிறது.

பால்வளத்துறை அமைச்சராக மனோ தங்கராஜ்!

பல உழல்கள், நிர்வாகக் குளறுபடி காரணமாக நாசரிடமிருந்து பால்வளத்துறை மனோ தங்கராஜுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே, பால் கொள்முதல் குறைந்தது, தனியாரிடமிருந்து பழைய பாலைக் கமிஷனுக்கு வாங்குவது, தரமில்லாத பால் கொள்முதல், கூட்டுறவு சங்கம் செயல்பாடுகள் முடக்கம், டேங்கர் லாரி வாங்கியதில் ஊழல் குற்றச்சாட்டு எனத் துறையே தலைகீழாக இயங்கிவருகிறது.

அமைச்சர் மனோ தங்கராஜ்
அமைச்சர் மனோ தங்கராஜ்

`கடந்த ஆட்சியில் நடந்த ஆவின் ஊழல்களைக் கண்டுபிடிப்போம்’ என உறுதி எடுத்து அமைச்சராகப் பொறுப்பேற்று, ஊழல் தீயை அணைப்பதற்கு பதிலாக மேலும் அதை எறியவிட்டனர். இதனால் எல்லா வகையிலும் அரசுக்கு நஷ்டமே ஏற்பட்டது. இந்தத் துறை ரேஸில் இன்னும் ஓர் அடிகூட ஓடத் தொடங்கவில்லை. இவை அனைத்தையும் முறைப்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பு அமைச்சர் மனோ தங்கராஜ் தலையில்தான் விழுந்திருக்கிறது.

என்ன செய்வார்கள்... பொறுத்திருந்து பார்க்கலாம்..!