Published:Updated:

ஆன்லைன் விளையாட்டுக்கான வரைவு விதிமுறைகள்... மத்திய அரசு சொல்வது என்ன?!

ஆன்லைன் விளையாட்டு

ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு புதிய வரைவு விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது.

ஆன்லைன் விளையாட்டுக்கான வரைவு விதிமுறைகள்... மத்திய அரசு சொல்வது என்ன?!

ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு புதிய வரைவு விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது.

Published:Updated:
ஆன்லைன் விளையாட்டு

ஆன்லைன் விளையாட்டு:

சமீபகாலமாக தமிழகம் உட்பட இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து மன உளைச்சலில் தற்கொலை செய்துகொள்ளும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. தமிழகத்தில் மட்டும் 30-க்கும் அதிகமானோர் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. பலரின் தற்கொலைக்குக் காரணமான இந்த ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

ஆன்லைன் சூதாட்டம்
ஆன்லைன் சூதாட்டம்

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்ய வேண்டும் என்று தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பிய மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில், மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குமுறைக் கொள்கைகளைப் பரிசீலனை செய்துவந்த நிலையில், புதிதாக வரைவு விதிமுறைகளை வெளியிட்டிருக்கிறது.

வரைவு விதிமுறை வெளியீடு:

வளர்ச்சியடைந்துவரும் ஆன்லைன் விளையாட்டுத்துறையை பொறுப்புள்ள முறையில் முறைப்படுத்தவேண்டிய தேவை இருக்கிறது. ஆன்லைன் சூதாட்டம், பந்தயம், விளையாட்டு ஆகியவற்றை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும்போது விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். அந்த நிறுவனங்களுக்கு அரசு, பதிவுக்கான முத்திரையை வழங்கும். விளையாட்டுக்கான கட்டண விவரங்கள், விளையாடுபவரின் கே.ஒய்.சி விவரங்களைப் பதிவுசெய்வது கட்டாயம். ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு விளையாடுவோரின் முகவரிகள் சரிபார்ப்பது அவசியம்.

மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்
மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

ஆன்லைன் விளையாட்டுகளின் முடிவுகளைவைத்து பந்தயம் நடத்த அனுமதி அளிக்கப்படாது. அதோடு, அந்த நிறுவங்களுக்கு கண்டிப்பாக இந்திய முகவரி கட்டாயம் தேவை. இந்த நிறுவனங்கள் சுய ஒழுங்காற்று அமைப்புகளை ஏற்படுத்தி அதைப் பதிவுசெய்ய வேண்டும். நிறுவனங்களுக்கு எதிராக எழும் புகார்கள் குறித்து இந்த அமைப்பு மூலம் தீர்வுகாணப்பட வேண்டும். ஆன்லைன் விளையாட்டில் சூதுவைத்து ஆடும் விளையாட்டுகளுக்குத் தகுதியான வயது தொடர்பான சட்டங்களுக்கும் கட்டுப்பட வேண்டும். விதிகளை மீறும் நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறப்பட்டிருக்கிறது.

ஆன்லைன் சூதாட்டங்களைப் பாதுகாக்கும் வகையில் இருக்க கூடாது!

இந்த வரைவு விதிமுறைகள்மீது வரும் ஜனவரி 17-ம் தேதிவரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. மேலும், விளையாட்டாளர்கள் தொடங்கி முதலீட்டாளர்கள் வரை பல்வேறு தரப்பினருடன் விரிவான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும். அனைத்து நடைமுறைகளுக்குப் பிறகு பிப்ரவரி மாத இறுதியில் இந்த விதிமுறைகள் முடிவுசெய்யப்பட்டு நடைமுறைக்கு வர வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

இது குறித்துப் பேசிய தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "ஆன்லைன் ரம்மி முழுமையாகத் தடைசெய்யப்பட வேண்டும். அதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம். தமிழக அரசு கொண்டுவந்திருக்கும் சட்டம் அனைவருக்கும் பொதுவானது. அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியது. அதை அடிப்படையாக வைத்து ஒன்றிய அரசு தனது சட்டத்தைக் கொண்டுவந்தால் வரவேற்கத்தக்கதாக இருக்கும். ஆன்லைன் சூதாட்டங்களை நடத்துகிறவர்களைப் பாதுகாக்கும் சட்டமாகவோ, அவர்களிடமிருந்து வரிவசூல் செய்யும் சட்டமாகவோ இருந்துவிடக் கூடாது. மறைமுகமாக ஆன்லைன் சூதாட்டங்களை நடத்துபவர்களைப் பாதுகாக்கும் வகையில் இருந்தால், அது நிச்சயமாக கண்டிக்கத்தக்கது" என்று பேசியிருந்தார்.

இந்தியாவைப் பொறுத்தவரை, ஆந்திரா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் ஏற்கெனவே ஆன்லைன் சூதாட்டத்துக்கு அந்த மாநிலங்களின் அரசுகள் தடை விதித்திருக்கின்றன. அதேபோல, கோவா போன்ற ஒருசில மாநிலங்களில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு அனுமதி அளித்து சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. தமிழகம் போன்ற மாநிலம் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்ய வேண்டும் என்று சட்டங்களை இயற்றி நடைமுறைக்குக் கொண்டுவரத் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறது.

ஆன்லைன் சூதாட்டம்
ஆன்லைன் சூதாட்டம்

இந்தச் சூழ்நிலையில், மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் இந்தப் புதிய சட்டவரைவு விதிமுறைகள் ஆன்லைன் சூதாட்டங்களைத் தடைசெய்யப்போவதில்லை என்பது உறுதியாகிறது. தற்போது வரைவு விதிமுறைகள் மட்டுமே வெளியாகியிருக்கும் நிலையில், அடுத்த மாதமே இறுதிக்கட்ட விதிமுறைகள் முடிவுசெய்யப்பட்டு நடைமுறைக்கு வந்துவிடும்.