Published:Updated:

ரோகிணி IAS Vs ரூபா IPS மோதல்: ஏன் தடுக்கவில்லை என முதல்வர் பொம்மையிடம் பிரதமர் அலுவலகம் கேள்வி

ஐ.பி.எஸ் ரூபா - ஐ.ஏ.எஸ் ரோகிணி சிந்தூரி.

இரண்டு பெண் அதிகாரிகளுக்கும் எச்சரிக்கை விடுக்குமாறும், நடந்தவை குறித்து எழுத்துபூர்வமாக விளக்கம் பெறுமாறும், பதிலின் அடிப்படையில் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் கர்நாடக தலைமைச் செயலாளருக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Published:Updated:

ரோகிணி IAS Vs ரூபா IPS மோதல்: ஏன் தடுக்கவில்லை என முதல்வர் பொம்மையிடம் பிரதமர் அலுவலகம் கேள்வி

இரண்டு பெண் அதிகாரிகளுக்கும் எச்சரிக்கை விடுக்குமாறும், நடந்தவை குறித்து எழுத்துபூர்வமாக விளக்கம் பெறுமாறும், பதிலின் அடிப்படையில் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் கர்நாடக தலைமைச் செயலாளருக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஐ.பி.எஸ் ரூபா - ஐ.ஏ.எஸ் ரோகிணி சிந்தூரி.

கர்நாடகாவில் உயர் பொறுப்புகளை வகிக்கும், ஐ.பி.எஸ் அதிகாரியான ரூபா மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ரோகிணி சிந்தூரிக்கு இடையில் பொதுவெளி சண்டை வலுத்து வருகிறது. 

இந்த பிரச்னை, பிரதமர் அலுவலகம் வரை எட்டிய நிலையில், ’முதல்வர் பசவராஜ் பொம்மை இரண்டு பெண் அதிகாரிகளுக்கு இடையேயான இந்த பொதுவெளி சண்டையை ஏன் தடுக்கத் தவறினார்' என்று கேள்வி எழுப்பியுள்ளது பிரதமரின் அலுவலகம். 

சமூக வலைதளம்!
சமூக வலைதளம்!

குற்றச்சாட்டுகளும், சமூக வலைதளப்பதிவும்… என்ன நடக்கிறது?

* ரூபா, சிந்தூரியின் சில படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஜனதாதள எம்.எல்.ஏ சாரா மகேஷ் மற்றும் சிந்தூரி ஒன்றாக உணவகத்தில் இருக்கின்றனர். 2021-ல் இவர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றம் சாட்டிய நிலையில், ஒன்றாக உணவகத்தில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட ரூபா, `ஓர் அதிகாரி, அரசியல்வாதியை ஏன் சந்திக்கிறார்? சமரசம் செய்யப்படுகிறதா?' என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

* ரோகிணியின் மீது 20 குற்றச்சாட்டுகள் கொண்ட ஒரு விரிவான ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டார் ரூபா. அதில் ஊழல், தனிப்பட்ட புகைப்படங்களை 3 ஆண் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு பகிர்ந்து கொண்டது போன்ற குற்றச்சாட்டுகளை அடுக்கினார். 

* ஊழல் குறித்த பேச்சுகள் இருந்தபோதும், ரோகிணியின் மீது ஏன்  விசாரணை நடத்தவில்லை எனக் கேள்வி எழுப்பினார். 

* அப்போதைய மைசூரு சிட்டி கார்ப்பரேஷன் கமிஷனர் ஷில்பா நாக் உட்பட சக அரசு ஊழியர்களுடன் ரோகிணியின் கடந்தகால கசப்பான மோதல்களையும் குறிப்பிட்டார். 

கோவிட்-19
கோவிட்-19

* `கோவிட் தொற்று சமயத்தில், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் சாமராஜநகர் அரசு மருத்துவமனையில் 24 பேர் இறந்த பரபரப்பான சூழலுக்கு நடுவில், ரோகிணி தனதுஅரசுக் குடியிருப்பில் நீச்சல் குளம் கட்டியது ஏன்?’ என்றும் கேள்வி எழுப்பினார்.

கேள்விக்கு பதில்…

இதற்கு பதிலளிக்கும் விதமாக பிப்ரவரி 19 ஞாயிற்றுக்கிழமையன்று, ரோகிணி சிந்தூரி ஊடக அறிக்கையை வெளியிட்டு, ``மனநோய் என்பது சிகிச்சை தேவைப்படும் ஒரு தீவிர பிரச்னை. பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் மனநோயால் பாதிக்கப்படும்போது, மிகவும் ஆபத்தானதாகிறது. 

எனக்கு எதிராக ஒரு தவறான, தனிப்பட்ட அவதூறு பிரசாரத்தை நடத்துகிறார் ரூபா. ரூபா பகிர்ந்த படங்கள் சமூக ஊடகத்திலும், வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்களில் இருந்தும் எடுக்கப்பட்ட ஸ்கிரீன்ஷாட்கள். அவை என்னை அவதூறு செய்ய தவறாகப் பயன்படுத்தப்பட்டன. ரூபா மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்பேன்’’ என்று ஆதங்கப்பட்டுள்ளார்.

கடுப்பான அமைச்சர்கள்…

இரண்டு பெண் அதிகாரிகளுக்கும் பொதுவெளியில் சண்டை வலுத்ததை தொடர்ந்து, கர்நாடக உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரன் நிருபர்களிடம், ``அரசின் உயர்மட்ட பெண் அதிகாரிகள் இருவரும், சாதாரண மக்களைப் போல சமூக வலைதளத்தில் சண்டையிடுவது உண்மையில் வெட்கக்கேடானது. இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ எனக் காட்டமாகத் தெரிவித்தார். 

மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் முன்னாள் முதல்வர் குமாரசாமி, ``கர்நாடகாவில் அரசு அதிகாரிகள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதற்கு, இந்த சம்பவம் தான் உதராணம். இங்கு, அரசு இருக்கா... இல்லையா என்பதே சந்தேகமாக உள்ளது’’ எனக் கடுமையாகக் கருத்து தெரிவித்தார்.

மீண்டும் புகார்…

இந்த சம்பவம் பலரின் கவனத்தையும் பெற்றதைத் தொடர்ந்து, ரூபா 20-ம் தேதி இரவு தனது ட்விட்டர் பக்கத்தில், `ரோகிணியின் ஊழல் குறித்த எனது புகார்கள் ஏற்கெனவே பொதுத்தளத்தில் உள்ளன. ஆனால், தயவு செய்து தவறானவற்றைப் பரப்பாதீர்கள். இது குறித்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளேன்’’ எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

பசவராஜ் பொம்மை
பசவராஜ் பொம்மை

பிரதமர் அலுவலகம் காட்டம்… 

இந்த பொதுவெளி சண்டை பிரதமர் அலுவலகத்தை எட்டியுள்ளது. பிரதமர் அலுவலகத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள், இந்த விவகாரத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மையின் செயலற்ற தன்மை குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். 

இரண்டு அதிகாரிகளுக்கு இடையே வளர்ந்து வரும் பகையை அறிந்திருந்தும், இந்தப் பொதுவெளி சண்டையைப் பொம்மை ஏன் தடுக்கத் தவறினார் என்று பிரதம மந்திரி அலுவலக மூத்த அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்தப் பிரச்னையை கவனிக்காமல் விட்டு, அதை முளையிலேயே கிள்ளி ஏறிய தவறியதற்காக அவருக்குக் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பசவராஜ் பொம்மையின் நடவடிக்கை

இரண்டு பெண் அதிகாரிகளுக்கும் பொதுவெளியில் சண்டை நடந்து 24 மணி நேரத்திற்கும் மேலாக இந்த விவகாரத்தில் முதல்வர் மௌனம் காத்தது கேள்விக்குறியாகியுள்ளது. இந்த பிரச்னையை விரைவில் தீர்க்குமாறு அவர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

இதை தொடர்ந்து, இரண்டு அதிகாரிகளுக்கும் எச்சரிக்கை விடுக்குமாறும், அவர்களிடம் எழுத்துபூர்வமாக விளக்கம் பெறுமாறும் கர்நாடக தலைமைச் செயலாளருக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்கள் அளித்த பதிலின் அடிப்படையில், அவர்கள் மீது  ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, தலைமைச் செயலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.