Published:Updated:

``கலவரத்தால் பாதிக்கப்பட்டோம்; அரசு உதவிட வேண்டும்” - ஸ்டாலினை சந்தித்த மணிப்பூர்வாழ் தமிழர்கள்

முதல்வரை சந்தித்த மோரே தமிழ்சங்கத்தினர் ( டிவிட்டர் )

மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் நிதியுதவிகளை தமிழ்நாடு அரசு செய்திட வேண்டும் எனவும், மணிப்பூர் மாநில அரசுடன் தொடர்பு கொண்டு தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Published:Updated:

``கலவரத்தால் பாதிக்கப்பட்டோம்; அரசு உதவிட வேண்டும்” - ஸ்டாலினை சந்தித்த மணிப்பூர்வாழ் தமிழர்கள்

மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் நிதியுதவிகளை தமிழ்நாடு அரசு செய்திட வேண்டும் எனவும், மணிப்பூர் மாநில அரசுடன் தொடர்பு கொண்டு தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

முதல்வரை சந்தித்த மோரே தமிழ்சங்கத்தினர் ( டிவிட்டர் )

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையே நிகழ்ந்த மோதலால் அம்மாநிலத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதும், பல்லாயிரம் வீடுகள் சூறையாடப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. போராட்டமாக தொடங்கிய மோதல், கலவரமாக உருவெடுத்ததால் தலைநகர் இம்பாலில் தொடங்கிய வன்முறைச் சம்பவங்கள் மாநிலம் முழுக்க காட்டுத்தீயாய் பரவியது.

மணிப்பூர் கலவரம்
மணிப்பூர் கலவரம்

பழங்குடியினப் பட்டியலில் தங்களைச் சேர்க்க வேண்டுமென்று மைதேயி சமூகத்திற்குத் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். அவர்களின் இந்த கோரிக்கை வழக்காக பதியப்பட்டு, அதனை விசாரித்த மணிப்பூர் உயர் நீதிமன்றம், மாநில அரசு கோரிக்கையைப் பரிசீலித்து மத்திய அரசுக்கு அனுப்பும்படி உத்தரவிட்டது. இறுதி முடிவை மத்திய அரசே எடுக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியின மக்கள் சுராசந்த்பூர் என்ற பகுதியில் பேரணிகளை நடத்தினர். பேரணியில் வன்முறை வெடிக்கவே, அவை மாநிலம் முழுமைக்கும் பரவி மாநிலமே காட்டுத் தீயாய் காட்சியளித்தது. கடை, வீடு, கோவில், வாகனங்கள் என அனைத்தும் தீ-யிக்கு இரையாயின.

இந்த கலவரத்தால் மணிப்பூர் மாநிலம், மோரே எனும் பகுதியில் வாழ்ந்துவரும் தமிழர்களும் இன்னல்களை சந்தித்திருக்கின்றனர். அவர்களில் சிலர் வசித்துவரும் வீடுகள் வன்முறையில் தீவைக்கப்பட்டிருக்கின்றன. மாநிலம் முழுக்க கலவரம் நடந்ததால், தொழிலும் முடங்கியது. இதனால் வாழ்வாதாரமே கேள்விக்குறியானது. ஏறத்தாழ 3000 தமிழர்கள் அங்கு வசித்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மணிப்பூர் கலவரம்
மணிப்பூர் கலவரம்
ட்விட்டர்

இதனைத் தொடர்ந்து மோரே தமிழ் சங்கத் தலைவர் ஸ்ரீ.வி சேகர் உள்ளிட்ட சிலர் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து கலவரத்துக்கு பிறகான மணிப்பூர்வாழ் தமிழர்களின் நிலையை எடுத்துரைத்ததோடு, மணிப்பூர்வாழ் தமிழர்களுக்கு தமிழக அரசு உதவ முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அதோடு தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்திருக்கிறார்கள் மோரே தமிழ்சங்க நிர்வாகிகள்.

நம்முடன் பேசிய மோரே தமிழ் சங்கத் தலைவர் ஸ்ரீ.வீ.சேகர், “மணிப்பூர் மாநிலம் மோரே பகுதியில் 700 தமிழ் குடும்பங்கள் வசிக்கின்றன. ஏறத்தாழ 3000 தமிழர்கள் இருப்பர். தமிழர்களின் 35 வீடுகள் வன்முறையின்போது தீ-யிக்கு இரையாயின. வீட்டிலிருந்த அனைத்து பொருள்களும் சாம்பலாகின. கலவரத்தினால் தமிழர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. வணிகத் தொழில் செய்துவரும் தமிழர்கள் நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் தனிப்பட்ட முறையில் இலக்கு வைத்துத் தாக்கப்படவில்லை என்றாலும் இரு குழுக்களுக்கிடையேயான மோதலில் தமிழர்கள் சிக்கிக்கொண்டோம். மோரே பகுதியில் தமிழர்கள் அல்லாதோரும் வசிப்பதால் மணிப்பூர் மக்களைத் தாக்கும் நோக்கில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டன. அதில் தமிழர்களும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

மணிப்பூர் கலவரம்
மணிப்பூர் கலவரம்

நல்வாய்ப்பாக எந்த உயிரிழப்பும் நிகழவில்லை. இதுகுறித்து தமிழ்நாடு முதல்வரை நேரடியாக சந்தித்து நடந்தவற்றைத் தெளிவாக விளக்கியுள்ளோம். மேலும் கலவரத்தின் போது உடனடி உதவிகளை மேற்கொண்டமைக்கு தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவித்தோம். மேலும் 60 ஆண்டுகாலமாக மோரே பகுதியில் வாழ்ந்து வருகிறோம். மோரே பகுதியை விட்டு வேறு இடங்களுக்குப் புலம்பெயரும் எண்ணம் எங்களிடம் இல்லை. ஆகவே அப்பகுதியிலேயே நாங்கள் நிம்மதியுடன் வாழ்ந்திட தமிழ்நாடு அரசு உதவியாக இருந்திட வேண்டும். குறிப்பாக கலவரத்தில் வீடுகளையும் பொருட்களையும் இழந்தவர்களுக்கு தகுந்த உதவிகளைச் செய்திட வேண்டும் என முதல்வரிடம் கேட்டுக் கொண்டோம்.

அதனை தொடர்ந்து, `ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மணிப்பூர் மாநிலம் மோரே பகுதிக்கு அனுப்பி வைக்கிறேன். தமிழ்நாடு அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும்’ என உறுதி அளித்தார்” என்றார். மேலும் மணிப்பூர் அரசு சார்பில் முதற்கட்டமாக எரிந்த வீடுகளுக்கு 2 லட்சம் ரூபாய் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள் என்றார் ஸ்ரீ வி சேகர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

முன்னதாக, ``மணிப்பூர் விவகாரத்தில் தமிழர்களின் இன்னலை போக்க துரும்பைக் கூட கிள்ளிப் போடாதது ஏன் என்று தெரியவில்லை. குடும்ப நலனைக் கருத்தில் கொண்டிருப்பவர்கள் எப்படி மணிப்பூர் தமிழர்களின் நலன் குறித்துச் சிந்திக்கப்போகிறார்கள்” என கடுமையாக விமர்சித்திருந்தார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. அதேசமயம் கலவரம் உச்சத்தில் இருந்தபோது தமிழகம் திரும்ப விருப்பம் தெரிவித்த 5 மாணவர்கள் அழைத்துவரப்பட்டதாகவும், தமிழ் சங்க நிர்வாகிகளுடன் இணைந்து தமிழர்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தமிழ்நாடு அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் நிதியுதவிகளை தமிழ்நாடு அரசு செய்திட வேண்டும் எனவும், மணிப்பூர் மாநில அரசுடன் தொடர்பு கொண்டு தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பலதரப்பினரும் எழுப்பி வருகின்றனர். புலம்பெயர் நல வாரியம் அமைத்து உலகத் தமிழர்களின் நலனில் அக்கறை காட்டுகிறோம் என்கிற தமிழ்நாடு அரசு, கலவரத்திற்கு பிறகான வாழ்வாதார முடக்கத்தை சீர்செய்ய மணிப்பூர் தமிழர்களுக்கு கைகொடுக்குமா.. தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வருவாரா தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின்?!