சமீபத்தில் 12 மணி நேர வேலை மசோதாவைக் கொண்டு வந்த தமிழக அரசு, பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பால் அதைத் திரும்ப பெற்றுக்கொண்டது.
இந்த நிலையில், `அரசாணையை மீறி அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் பிசியோதெரபிஸ்ட்களுக்கான வேலை நேரத்தை அதிகாரிகள் திடீரென அதிகரித்துள்ளனர்' என்று பிசியோதெரபிஸ்ட்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
இது குறித்து நம்மிடம் பேசிய, இந்திய இயன்முறை மருத்துவர் சங்கத்தின் தமிழகத் தலைவர் வெ.கிருஷ்ணகுமார், ``தமிழக அரசு மருத்துவமனைகளில் பிசியோதெரபிஸ்ட்கள் சுமார் 600 பேர் காலமுறை ஊதியத்திலும் தொகுப்பூதியத்திலும் பணியாற்றி வருகின்றனர்.

பல ஆண்டுகளாக அவர்களின் வேலை நேரம் காலை 7.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை இருந்து வந்தது. சமீபத்தில் மருத்துவப் பணிகள் இயக்கக உயர் அதிகாரிகள் சிலர், மாவட்டம் ஒன்றில் ஆய்வுக்குச் சென்றபோது அங்கிருந்த பிசியோதெரபிஸ்ட் களிடம் பணி நேரம் குறித்து விசாரித்தபோது, 2013 அரசாணை அடிப்படையில் தங்களின் பணி நேரத்தை பின்பற்றுவதாகவும், இரண்டுக்கும் மேற்பட்ட பிசியோதெரபிஸ்ட்கள் உள்ள இடங்களில் அரசாணைப்படி மாலை நேரப் பணியை சுழற்சி முறையில் பின்பற்றுவதாகவும் கூறியுள்ளனர்.
அரசாணை அடிப்படையில் கொடுத்த விளக்கத்தையும் ஏற்றுக் கொள்ளாமல் அவர்களை எச்சரித்ததோடு, எதிர்த்துப் பேசுவதாக நினைத்து பழி வாங்கும் வகையில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பிசியோதெரபிஸ்ட்களின் வேலை நேரத்தை முதலில் அதிகரித்ததோடு, அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் அனைத்து பிசியோதெரபிஸ்ட்களுக்கும் உச்சபட்சமாக வேலைநேரத்தை அதிகரித்து புதிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்கள்.
இதனால் காலை 7.30 மணி முதல் மாலை 5 மணி வரை என மொத்தம் 9.30 மணி நேரம், வாரத்துக்கு 6 நாள்களும் வேலை செய்ய வேண்டும் என, வேறு எந்த அரசுப் பணியாளர்களுக்கும் இல்லாத நீட்டிக்கப்பட்ட பணி நேரம் பிசியோதெரபிஸ்ட்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது மனவேதனையை ஏற்படுத்துகிறது.

இது இப்படியே சென்றால் விரைவில் மற்ற அரசு ஊழியர்களுக்கும் 10 மணி நேரப் பணி அதிகாரிகளால் நிர்ப்பந்திக்கப்படும். அரசு ஆணையில் பிசியோதெரபிஸ்ட்கள் வேலை நேரம் காலை 7.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை என்றுதான் இதுவரை இருந்து வருகிறது.
மக்களுக்கு பிசியோதெரபி சேவையை வழங்க, இந்த நேர அதிகரிப்பு பயன்பட்டால் எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால், இது வெறும் பழிவாங்கும் நடவடிக்கையாக மட்டும் எடுக்கப்பட்டுள்ளது.
தினசரி அரசு மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்ட் ஒருவர் 30 முதல் 50 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறார். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது பெருமளவு உடல் உழைப்பை பிசியோதெரபிஸ்ட் தர வேண்டி இருக்கும். 80 சதவிகித அரசு மருத்துவமனைகளில் ஒரே ஒரு பிசியோதெரபிஸ்ட் மட்டுமே இருப்பார். உடல் உழைப்பை அதிகம் தருகிறார்கள் என்பதை மனதில் கொண்டுதான் அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர், சிறப்புப்படி வழங்க உத்தரவிட்டு அதன்படி வழங்கப்பட்டு வருகிறது.

இதை எதையும் கருத்தில் கொள்ளாமல் தனிப்பட்ட கோபத்தை மனதில் வைத்து பழிவாங்கும் நடவடிக்கையாக உச்சபட்ச வேலை நேரம் நிர்ணயித்துள்ளது கண்டிக்கத்தக்கது.
நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பிசியோதெரபிஸ்ட் பணியிடங்களை அதிகரியுங்கள் என நீண்ட நாள்களாக கோரிக்கை வைப்பதோடு பல கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளோம். ஆனால் இப்போது தன்னிச்சையாக வேலை நேரத்தை அதிகரித்து இருப்பதை மாநில மருத்துவ பணிகள் இயக்ககம் திரும்ப பெற வேண்டும். தமிழக முதல்வர், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் நேரிடையாக தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும்" என்றார்.