சில மாதங்களுக்கு முன் லண்டனில் எடித் கேவல் (Edith Cavel) என்ற செவிலியருக்காக ஒரு பொதுக் கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதுமட்டுமல்ல, அவருக்கு ஒரு சிலையும் எழுப்பப்பட்டது. யார் இவர்?
எடித் கேவல் பிரிட்டனைச் சேர்ந்த ஒரு நர்ஸ். முதலாம் உலகப் போரின்போது கைது செய்யப்பட்டவர். இவர் மீது தேசத் துரோகக் குற்றம் சுமத்தப்பட்டது. நீதிமன்றம் இவர் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. மரண தண்டனை என்றும் கூறியது. வீரர்களால் 'சட்டப்படி' சுட்டுக்கொல்லப்பட்டார். உலக அளவில் அவரது மரண தண்டனை கடும் கண்டனங்களை எழுப்பியது.
தேசத்துரோக குற்றம் சுமத்தப்பட்ட ஒரு செவிலியருக்கு இத்தனை ஆதரவு ஏன்? காரணம் உண்டு.

முதலாம் உலகப் போரின்போது பெல்ஜியம் நாட்டை ஜெர்மானிய ராணுவம் ஆக்கிரமித்திருந்ததைக் குறிப்பிட்டிருந்தோம். அந்தக் காலகட்டத்தில் தனது முக்கிய பங்களிப்பைச் செய்தவர் எடித் கேவல். இங்கிலாந்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர் எடித் கேவல். சிறுவயதிலிருந்தே பிறருக்கு உதவும் உள்ளம் கொண்டவர். யாராவது சின்ன சின்ன வேலைகளைக் கொடுத்தால் அலுத்துக் கொள்ளாமல் செய்வார். முக்கியமாக அக்கம் பக்கத்திலுள்ள வயதானவர்களுக்கும், நோயாளிகளுக்கும் சமைத்துக் கொடுப்பார்.
செவிலியர் பயிற்சி எடுத்துக் கொண்ட பிறகு பெல்ஜியத்திலுள்ள ஒரு செவிலியர் பள்ளிக்குச் சென்றார். நாளடைவில் அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றார். முதலாம் உலகப்போரில் ஜெர்மனிய ராணுவப் படை பெல்ஜியத்தை ஆக்கிரமித்தபோதும் அவர் மருத்துவமனையை விட்டு வெளியேறவில்லை. அப்போது அவர் ஒரு முடிவு எடுத்தார். தான் அங்கிருந்து தப்பிச் செல்லாமல் அந்த மருத்துவமனைக்கு வந்து சேரும் பிரிட்டிஷ், பெல்ஜிய, பிரெஞ்சு ராணுவ வீரர்களுக்குச் சிகிச்சை அளிக்கவேண்டும் என்பதுதான் அது!
ஒரு நாள் கடுமையான காயங்களுடன் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் நர்ஸ் எடித் கேவலிடம் கெஞ்சிக் கேட்டனர். “தயவு செய்து நாங்கள் இங்கிலாந்து செல்வதற்கு உதவுவீர்களா?’’.

எடித் கேவல் தயங்கவில்லை. அவருக்குத் தெரியும், தான் பிரிட்டிஷ் ராணுவ வீரர்களுக்கு உதவி செய்வதை ஜெர்மானிய ராணுவம் அறிந்தால் சுட்டுக் கொல்லப்படுவோம் என்று. என்றாலும் அந்த இருவருக்கும் முதலில் மருத்துவச் சிகிச்சை செய்தார். பிறகு சில வழிகாட்டிகளின் உதவியுடன் அவர்கள் பெல்ஜியத்திலிருந்து வெளியேறவும் உதவினார்.
பின்னர் இவர்கள் போன்ற பல பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் வெளியேறவும் அவர் உதவினார். இதை அவரது சொந்த நாட்டுப் பற்று என்று மட்டுமே கூற முடியாது. காயம்பட்ட ராணுவ வீரர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்க அவர் மறுத்ததே இல்லை. அது ஜெர்மானிய வீரர்களாக இருந்தாலும் சரி. அவர் தன் உயிரைப் பயணம் வைத்து பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் சிலர் வெளியேற உதவினார்.
பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் அங்கிருந்து வெளியேறப் பணம் கொடுத்தார், ஒரு ரகசியப் பாதையையும் கண்டறிந்து அதைப் பயன்படுத்தவும் உதவினார். இப்படி சுமார் 18 ராணுவ வீரர்களைத் தன் மருத்துவமனையில் மறைத்து வைத்து உரிய நேரத்தில் வெளியேறச் செய்தார். எந்த நொடியிலும் தான் கைது செய்யப்படுவோம் என்பது அவருக்குத் தெரிந்தே இருந்தது.

ஒரு நாள் அவரிடம் வந்து பிரிட்டனுக்கு வெளியேற உதவி கோரினான் ஒருவன். உதவி செய்து விட்டு வந்தபோதுதான் தெரியவந்தது அவன் உளவாளி என்பதும், தனது ரகசியத்தை அறியவே அவன் வந்தான் என்பதும். ஜெர்மானிய ராணுவம் எதிரி நாடுகளைச் சேர்ந்த காயமடைந்த ராணுவ வீரர்களுக்குச் சிகிச்சை அளித்து பின் அவர்களிடமிருந்து பலவித ராணுவ ரகசியங்களைக் கறக்கலாம் என்ற எண்ணத்திலிருந்தது.
ஆனால் அவர்களைத் தப்பிக்க விட்டதன் மூலம் தேசத் துரோக குற்றத்தைச் செய்துவிட்டதாக எடித் கேவல் கைது செய்யப்பட்டார். எடித் தன் தேசத்திற்குத் துரோகம் செய்யவில்லை என்றாலும் ஜெர்மனிய ராணுவத்தின் 'தேசத் துரோகம்' என்ற விவரிப்புக்குள் அவர் வந்துவிட்டார்.
ஆகஸ்ட் 5, 1915 அன்று ஜெர்மானிய ரகசிய காவல்துறை அவரைக் கைது செய்தது. ராணுவ நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை என்று தீர்ப்பளித்தது. அக்டோபர் 12 அன்று எடித் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பொதுவாக எதிரி நாட்டு ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனைதான் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது என்பது. அதாவது கைதி ஒரு சுவரைப் பார்த்தபடி நிற்க வைக்கப்படுவார். அதற்குப் பல அடி தூரம் தள்ளி ஐந்து அல்லது அதற்கு மேலான ராணுவ வீரர்கள் கைதியின் இதயத்தைக் குறி பார்த்து ஒரே நேரத்தில் சுடுவார்கள். இப்படி ஒரு தண்டனை எதிரியின் களத்தில் பணிபுரியும் ஒரு செவிலியருக்கு அளிக்கப்பட்டது அதுவே முதல்முறை.

இறப்பதற்கு முதல்நாள் எடித் இரு வாக்கியங்களைக் கூறினார். "தேசப்பற்று மட்டுமே போதாது. எந்த மனிதரிடமும் நமக்கு வெறுப்புணர்வும் கசப்புணர்வும் இருக்கக்கூடாது".
அவர் இறந்த பிறகு லண்டனில் அவருக்கு ஒரு சிலை எழுப்பப்பட்டது. அப்பொழுது அவரது மேற்படி இறுதி வாசகங்கள் அவரது சிலையின் பீடத்தில் பொரித்து வைக்கப்பட்டன.