அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

எஸ்.சி., எஸ்.டி ஆணையத்துக்கு எதிராக நிற்கும் அரசு! - முதல்வருக்குத் தெரியுமா சங்கதி?

எஸ்.சி., எஸ்.டி ஆணையத்துக்கு எதிராக நிற்கும் அரசு!
பிரீமியம் ஸ்டோரி
News
எஸ்.சி., எஸ்.டி ஆணையத்துக்கு எதிராக நிற்கும் அரசு!

போலீஸார் எந்தக் கோணத்தில் விசாரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தவோ, அவர்கள்மீது எஃப்.ஐ.ஆர் போடச் சொல்லி உத்தரவிடவோ ஆணையத்துக்கு அதிகாரமில்லை.

பட்டியல், பழங்குடி மக்களுக்கு எதிரான புகார்களை முறையாக விசாரிக்காத மூன்று எஸ்.பி-க்கள் மீது, நடவடிக்கை மேற்கொள்ள மாநில எஸ்.சி., எஸ்.டி ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவுக்கு எதிராக அரசு வழக்கறிஞர் ஒருவரே வழக்கு தொடர்ந்திருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

பொருளாதாரச் சுரண்டல், சாதிரீதியான தாக்குதல்களிலிருந்து பட்டியல், பழங்குடியின மக்களைப் பாதுகாக்க, ‘தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நல ஆணையத்தை’ அமைத்தார் முதல்வர் ஸ்டாலின். அதன்படி, ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி சிவகுமார், துணைத் தலைவராக புனித பாண்டியன் மற்றும் ஆறு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த ஆணையத்துக்கு, 2022-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் வரை நிதி ஒதுக்கீடோ, பணியாளர் நியமனமோ நடைபெறவில்லை. இது தொடர்பாக, `ஆளும் இல்லை... நிதியும் இல்லை... அல்லாடும் எஸ்.சி., எஸ்.டி ஆணையம்!’ என்ற தலைப்பில் 14-09-2022 தேதியிட்ட ஜூ.வி இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதன் பிறகே, தனி அலுவலகம், நிதி ஒதுக்கீடு, பணியாளர் நியமனம் ஆகியவை செய்யப்பட்டன.

எஸ்.சி., எஸ்.டி ஆணையத்துக்கு எதிராக நிற்கும் அரசு! - முதல்வருக்குத் தெரியுமா சங்கதி?

இந்த நிலையில்தான், பட்டியலின மக்கள் அளித்த புகார்களை போலீஸ் உயரதிகாரிகள் முறையாக விசாரணை நடத்தாமல் இருந்ததற்கு ஆணையம் தனது கண்டனத்தைப் பதிவுசெய்தது. மேலும், உயரதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்காத காரணத்தால், அவர்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிகாரிகள், ஆணையத்துக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளனர். அதில் அரசு வழக்கறிஞரே ஆஜராகியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த பட்டியலினப் பெண் ஒருவர், தன்னையும் தனது குடும்பத்தையும் அதே பகுதியைச் சேர்ந்தவர் கொத்தடிமையாக வைத்திருப்பதாக டி.வாடிப்பட்டி காவல் நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் புகாரளித்தார். அந்தப் புகாரின்மீது போலீஸார் வழக்கு பதிந்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால், மார்ச் 23 அன்று அது குறித்து அந்தப் பெண் எஸ்.சி., எஸ்.டி ஆணையத்திடம் முறையிட்டார். இந்தப் புகார் தொடர்பாக, டி.எஸ்.பி முறையான விசாரணை நடத்தவில்லை என்று கருதிய ஆணையம் அவர்மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியதோடு, விசாரணை அதிகாரியாக வேறு டி.எஸ்.பி-யை நியமிக்க வேண்டும் என மாவட்ட எஸ்.பி சிவபிரசாத்துக்கு உத்தரவிட்டது.

எஸ்.சி., எஸ்.டி ஆணையத்துக்கு எதிராக நிற்கும் அரசு! - முதல்வருக்குத் தெரியுமா சங்கதி?

மேலும், சேலம்-ஆத்தூர் வடகுமரை கிராமத்திலிருக்கும் காளஹஸ்தீஸ்வரர் கோயிலுக்குள் பட்டியலின மக்கள் நுழையத் தடை ஏற்படுத்தியது கடந்த 2021-ம் ஆண்டு பிரச்னையானது. இந்த விவகாரத்தில் வருவாய் கோட்டாட்சியரின் உதவியாளர் தன்னைச் சாதி ரீதியாக இழிவுபடுத்தியதாகப் பட்டியலினத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் எஸ்.சி., எஸ்.டி ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இது குறித்து விளக்கமளிக்க மாவட்ட எஸ்.பி அபிநவ்-க்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் விளக்கமளிக்காததால் நேரில் ஆஜராக ஆணையம் உத்தரவிட்டது.

இதேபோல, திருநெல்வேலி சிவந்திப்பட்டியைச் சேர்ந்த பட்டியலினத்தவர் ஒருவர், தனது நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்றவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இந்தப் புகாரை விசாரிக்காததால் எஸ்.சி., எஸ்.டி ஆணையத்திடம் கடந்த ஜூன் மாதம் முறையிட்டார். இது தொடர்பாக விளக்கமளிக்க மாவட்ட எஸ்.பி சரவணனுக்கு அறிக்கை அனுப்பியது ஆணையம். ஆனால், எஸ்.பி தனக்குக் கீழ் பணிபுரியும் டி.எஸ்.பி-யை ஆணையத்தின் முன்பு ஆஜராகச் செய்திருக்கிறார். இது சட்டப்படி தவறு என்பதால் எஸ்.பி சரவணனைக் கைதுசெய்து ஆஜர்படுத்த கடந்த டிசம்பர் மாதம் தென் மண்டல ஐ.ஜி-க்கு உத்தரவிட்டது ஆணையம். இந்த மூன்று சம்பவங்களிலும் ஆணையத்தின் விளக்க அறிக்கை, அழைப்பாணை ஆகியவற்றை மூன்று எஸ்.பி-க்களும் பொருட்படுத்தாமல், சட்டத்தை மீறியிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், ஆணையம் தங்கள்மீது நடவடிக்கை எடுக்க அதற்கு அதிகாரம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிகாரிகள் மூவரும் வழக்கு தொடுத்திருக்கிறார்கள். இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் ராஜ்திலக் ஆஜராகியிருக்கிறார். “அரசு அமைத்த ஆணைய உத்தரவுக்கு எதிராக, அரசு வழக்கறிஞர் ஒருவரே ஆஜராகி இருப்பது சர்ச்சையாகியிருக்கிறது.

எஸ்.சி., எஸ்.டி ஆணையத்துக்கு எதிராக நிற்கும் அரசு! - முதல்வருக்குத் தெரியுமா சங்கதி?

இது குறித்து ஆணையத்தின் தலைவரும், உயர் நீதிமன்ற நீதிபதியுமான சிவகுமாரிடம் பேசினோம். “எஸ்.சி., எஸ்.டி வகுப்பினர் வன்கொடுமைப் புகார் அளித்தால், வழக்கு பதிவு செய்துதான் விசாரணையைத் தொடங்க வேண்டும். அந்தப் புகாரை டி.ஜி.பி ரேங்க்கிலுள்ள அதிகாரிகள்தான் விசாரிக்க வேண்டும் என்பது சட்ட விதி. இதில் சரியான நடவடிக்கை இல்லை என்றோ அல்லது நேரடியாகவோ ஆணையத்திடம் வரும் புகார்கள் தொடர்பாக, சட்டப் பிரிவு 9-ன் கீழ் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்போம். ஆனால், குறிப்பிட்ட எஸ்.பி-க்கள் மூவரும் ஆணையத்தின் அழைப்பாணையை மதிக்கவில்லை. எனவே, ஆணையத்தின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டோம்” என்றார்.

இது குறித்து அரசு வழக்கறிஞர் ராஜ்திலக்கிடம் கேட்டபோது, “சம்பந்தப்பட்ட போலீஸார்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்த ஆணையத்துக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால், போலீஸார் எந்தக் கோணத்தில் விசாரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தவோ, அவர்கள்மீது எஃப்.ஐ.ஆர் போடச் சொல்லி உத்தரவிடவோ ஆணையத்துக்கு அதிகாரமில்லை. இது தவறு என்பதால்தான் அதை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், போலீஸார் சார்பாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகச் சட்டத்தில் இடம் இருக்கிறது” என்றார்.

இந்தப் பிரச்னைகளெல்லாம் ஆணையம் அமைத்த முதல்வருக்குத் தெரியுமா?