அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

குரல் கொடுத்த ஜூ.வி... கரம் நீட்டிய அரசு... “மீண்டு வாழ்வோம்...” - நெகிழும் தாய்!

சரண்சங்கீத்
பிரீமியம் ஸ்டோரி
News
சரண்சங்கீத்

இப்படியெல்லாம் நடக்கும்னு கனவுலகூட நெனைச்சுப் பார்க்கலை. என் புள்ளைய எப்படி குணப்படுத்தப் போறேன்னு தவிச்சுக்கிட்டிருந்தேன்.

கடந்த 30-11-2022 ஜூ.வி இதழில், ‘வலிக்குது அம்மா..! விநோத நோயால் துடிக்கும் மகன்... பரிதவிக்கும் தாய்... உதவி கேட்கும் குடும்பம்!’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதில், வேலூர் அருகேயுள்ள அரியூரைச் சேர்ந்த வளர்மதி, உடல் மற்றும் மனநிலைக் குறைபாட்டால் அவதிப்படும் தனது 19 வயது மகன் சரண்சங்கீத்தோடு வறுமையில் போராடிக்கொண்டிருக்கும் துயரம் பற்றி எழுதியிருந்தோம்.

இதழ் வெளியான 26-11-2022 அன்றே, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவின் பேரில், சிறுவனுக்கு மருத்துவக் காப்பீடு அட்டை வழங்கப்பட்டது. மேலும் வளர்மதியிடம் அலைபேசியில் பேசிய அமைச்சர், ‘‘நீங்கள் படும் துயரத்தை ஜூ.வி-யில் படித்துத் தெரிந்துகொண்டேன். கவலைப்பட வேண்டாம். உங்கள் மகனுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளையும் வழங்க உத்தரவிட்டிருக்கிறேன்’’ என்று நம்பிக்கை கொடுத்திருக்கிறார்.

குரல் கொடுத்த ஜூ.வி... கரம் நீட்டிய அரசு... “மீண்டு வாழ்வோம்...” - நெகிழும் தாய்!

28-ம் தேதி காலை, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுவனுக்குச் சிறப்பு சிகிச்சையளித்தனர் மருத்துவர்கள். இதைத் தொடர்ந்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் அலுவலகத்திலிருந்து நம்மைத் தொடர்புகொண்டு பேசியவர்கள், ‘‘சரண்சங்கீத்துக்கு மூன்று கட்டங்களாக சிகிச்சையளிக்க ஏற்பாடுகள் செய்திருக்கிறோம். அவருக்குக் கண் பார்வை திரும்புவது கடினம் என்று மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனாலும், அவர் கண்ணில் ரத்தம், சீழ் வடிவதை முதலில் குணப்படுத்தச் சொல்லியிருக்கிறோம். வலிப்பு நோய்க்கும் மருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டு சிகிச்சையும் முடிந்த பின்னரும், தொடர்ந்து மனநல சிகிச்சை அளிக்கப்படும்’’ என்றனர்.

மருத்துவமனைக்கு நேரில் வந்து பார்வையிட்ட அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ ஏ.பி.நந்தகுமார், ‘‘ ‘வீடு இல்லை’ என்று வளர்மதி கூறியிருக்கிறார். என் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்பட்டுவருகிறது. மாவட்ட ஆட்சித்தலைவரிடம் பேசி, அதில் ஒரு வீடு ஒதுக்கித் தருகிறேன். அதுமட்டுமின்றி, மாதம்தோறும் அந்தக் குடும்பத்துக்கு மளிகைப்பொருள்கள் கொடுக்கப்படும். மருத்துவமனைக்கு வந்து செல்வதற்கான போக்குவரத்து உதவியும் செய்துதரப்படும்’’ என்றார் நிம்மதியளிக்கும் விதமாக.

‘‘இப்படியெல்லாம் நடக்கும்னு கனவுலகூட நெனைச்சுப் பார்க்கலை. என் புள்ளைய எப்படி குணப்படுத்தப் போறேன்னு தவிச்சுக்கிட்டிருந்தேன். பேச வார்த்தையே வர மாட்டேங்குது. அமைச்சரும், எம்.எல்.ஏ-வும் எனக்கு நம்பிக்கை கொடுத்தது, மீண்டு வாழ்வோம்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கு. எங்க துயரத்தை வெளிப்படுத்திய ஜூனியர் விகடனுக்கு நன்றி’’ என்று கண்ணீரோடு நெகிழ்ந்தார் வளர்மதி!

அரசு உதவிகளைத் தாண்டி, தாங்களும் முடிந்த உதவிகளைச் செய்வதாக வாசகர்கள் நம் அலுவலகத்தைத் தொடர்புகொள்கிறார்கள்... அனைவருக்கும் நெகிழ்ச்சியுடன் நன்றி சொல்கிறது ஜூ.வி!