கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வடகரையைச் சேர்ந்தவர் கே.எம்.பஷீர். மலையாள நாளிதழில் பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் பஷீர் கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி நள்ளிரவு 1 மணியளவில் வேலைகளை முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரில் அதிக வேகத்தில் வந்த ஒரு சொகுசு கார் இவரது இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் பஷீரின் வாகனம் தூக்கிவீசப்பட்டு அருகிலிருந்த சுவரில் பலமாக மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே பஷீர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பஷீரின் பரிதாப உயிரிழப்பு கேரளாவில் காட்டுத்தீப்போல் பரவ ஆரம்பித்தது. அதற்குக் காரணம் விபத்தை ஏற்படுத்திய ஐ.ஏ.எஸ் அதிகாரி ஸ்ரீராம் வெங்கட்ராமன். தன் சொகுசு காரை குடிபோதையில் ஸ்ரீராம் இயக்கியதே விபத்துக்குக் காரணமாக அமைந்தது. அவர் காரில் இருந்து இறங்கும்போது குடிபோதையில் இருந்ததை மக்களும் பார்த்துள்ளனர். இந்த விபத்தால் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் கொண்ட பஷீரின் குடும்பம் தற்போது நடுத்தெருவுக்கு வந்துள்ளது. ஆனால், பஷீரின் உயிரிழப்பைக் கண்டுகொள்ளாமல், அதிகாரிகள் ஸ்ரீராமை காப்பாற்ற முயன்ற சம்பவமும் நடந்துள்ளதாகக் கூறுகிறது மலையாள ஊடகங்கள்.
ஸ்ரீராம் மது அருந்தியதற்கான ரத்தப் பரிசோதனை செய்வதில் போலீஸார் தாமதம் காட்டியுள்ளனர். விபத்து நடந்த 9 மணி நேரம் கழித்தே அவரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இப்படி பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் சஸ்பெண்டு செய்யப்பட்டு சிறையில் நாள்களைக் கழித்து வருகிறார். இதற்கிடையே இந்த விவகாரத்தில் புதிய திருப்பமாக ஸ்ரீராம் அளித்த விளக்கம் சர்ச்சையாகி வருகிறது. விபத்து நடந்தபோது ஸ்ரீராம் உடன் இருந்த மாடல் அழகியும், அவரின் பெண் நண்பருமான வஃபா பெரோஸ் என்பவரும் உடனிருந்தார். தற்போது இந்த ``வஃபா பெரோஸ்தான் கார் ஓட்டினார். விபத்து தொடர்பாக என்னிடம் தெளிவான விளக்கம் கேளுங்கள். என்னை மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ளுங்கள்'' என அரசிடம் முறையிட்டுள்ளார் ஸ்ரீராம்.

ஆனால், இதை மறுத்துள்ள வஃபா பெரோஸ், ``ஏன் தொடர்ந்து ஸ்ரீராம் பொய் சொல்கிறார் எனத் தெரியவில்லை. விபத்து நடந்தபோது ஆறு, ஏழு பேர் பார்த்தனர். ஸ்ரீராம்தான் வாகனம் ஓட்டியது என அவர்கள் சாட்சி கொடுத்துள்ளனர். இதுபோக தடயவியல் அறிக்கையிலும் அவர் வாகனம் ஓட்டியதற்கான தெளிவுகள் கிடைத்துள்ளன. அப்படி இருக்கையில் ஏன் ஸ்ரீராம் இப்படித் தொடர்ந்து பொய் சொல்கிறார் எனத் தெரியவில்லை. நான் ஒரு சாதாரண பெண். என்னிடம் அதிகாரம் இல்லை. விபத்து நடந்த மூன்றாவது நாளே அங்கு என்ன நடந்தது எனக் கூறிவிட்டேன். இப்போதும் அதேதான் கூறுகிறேன். இனி என்ன நடக்கும் என எனக்குத் தெரியவில்லை. எனக்கு எதிராக எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஸ்ரீராம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி எனக்கு எதிராக எதுவும் செய்யலாம். ஆனால், உண்மையின் பின்னாலே நான் நிற்பேன்" எனக் கூறியுள்ளார்.
ஆம்... பெரோஸ் கூறுவதுபோல் ஸ்ரீராம் இப்படிக் கூறுவது முதல்முறையல்ல. விபத்து நடந்த சிறிது நேரம் கழித்து ஸ்ரீராமை விசாரணைக்காகக் காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போதும் தான் காரை ஓட்டவில்லை எனக் கூறிய அவர், தீவிர விசாரணைக்குப் பிறகே, தன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இப்போது மீண்டும் தான் கார் ஓட்டவில்லை எனக் கூறுகிறார். ஸ்ரீராம் சஸ்பெண்டு செய்யப்பட்டபோது விளக்கம் கேட்டு அவருக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பியிருந்தது கேரள அரசு. ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் போன்ற சிவில் சர்வீஸ் ஊழியர்களுக்கு எதிரான சஸ்பெண்டு உத்தரவை 60 நாள்களுக்குள் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்பது சட்டம். இந்த மாதம் நான்காம் தேதியோடு 60 நாள்கள் முடிந்துள்ள நிலையில் மீண்டும் பணிபெறும் நோக்கோடு அரசுக்கு இப்படி ஸ்ரீராம் விளக்கம் கொடுத்துள்ளார் என்கிறார்கள்.

ஆனால், அரசு இவரது சஸ்பெண்டு உத்தரவை மேலும் 60 நாள்களுக்கு நீட்டித்துள்ளது. இதற்கிடையே, ஸ்ரீராமை காப்பாற்றும் வகையில் வஃபா பெரோஸ்மீது புகார் சுமத்த போலீஸ் முயன்று வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்காகவே, விபத்து நடந்து இவ்வளவு நாள்களாகியும் குற்றப் பத்திரிகை சமர்ப்பிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால், இதை மறுத்துள்ள போலீஸ் அதிகாரிகள் இன்னும் சில தெளிவுகள் கிடைக்க வேண்டி இருப்பதால்தான் குற்றப் பத்திரிகை சமர்ப்பிக்க முடியவில்லை எனக் கூறியுள்ளனர்.
யார் இந்த வஃபா பெரோஸ்?
கேரளத்தைப் பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் வஃபா பெரோஸ் ஒரு என்.ஆர்.ஐ. தன் கணவருடன் துபாயில் வசித்து வந்தவர், சில கருத்து வேறுபாடு காரணமாக அவரைவிட்டுப் பிரிந்து வாழ்ந்துவந்தார். இவர்களுக்கு 16 வயது மகள் உள்ளார். மாடல் என்பதால் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உட்பட பலர் இவரின் நண்பர்களாக இருந்துள்ளனர். அவர்களுடன் நெருக்கமாகப் பழகி வந்துள்ளார் பெரோஸ். அபுதாபியில் இருந்தாலும் கேரளத்தில்தான் தங்கிவந்துள்ளார். இந்த நேரத்தில்தான் ஸ்ரீராம் உடன் ஃபேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டு பழகியுள்ளார் பெரோஸ்.

மாடலாக இருந்ததால் அவரது லைஃப்ஸ்டைல் பிடிக்காமல் அவரின் கணவர் பிரிந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்துக்குப் பிறகு, இஸ்லாமிய அமைப்பு பெரோஸிடம் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பினார் அவரின் கணவர். அதில் குறிப்பிட்ட முக்கிய காரணம், ``தான் ஒரு இஸ்லாமிய பெண் என்பதை மறந்து இஸ்லாமிய மார்க்கத்துக்கு எதிரான லைஃப்ஸ்டைலில் வாழ்ந்து வருகிறார். நான் சொல்லியும் கேட்கவில்லை" எனக் கூறியுள்ளார். இந்த விவகாரம் கேரளாவில் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிவருகிறது.