புதுச்சேரியின் மிக முக்கியமான அடையாளங்களில் ஒன்றான மணக்குள விநாயகர் கோயிலுக்கு, கடந்த 1996-ம் ஆண்டு தனது 5 வயதில் வந்து சேர்ந்தது யானை லட்சுமி. அன்றிலிருந்து கோயிலுக்கு வரும் பக்தர்கள் மட்டுமின்றி, பல்வேறு நாடுகளில், மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் காலில் கொலுசு அணிந்திருக்கும் யானை லட்சுமியை தரிசித்து செல்வது வழக்கம். கோயில் யானைகளின் உடல் மற்றும் மனம் சார்ந்த உளைச்சலை போக்கி, அவை ஓய்வெடுக்கவும், மருத்துவ சிகிச்சைகளைப் பெறவும் இந்து சமய அற நிலையத்துறையால் ஆண்டு தோறும் முதுமலையில் 48 நாட்கள் நடத்தப்படும் யானைகள் புத்துணர்வு முகாமில் புதுச்சேரி லட்சுமியும் கலந்துகொள்ளும். கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக முதுமலையில் யானைகள் புத்துணர்வு முகாம் நடக்கவில்லை.

அதனால் யானை லட்சுமி 15 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டுமென்று அறிவுறுத்தியது வனத்துறை. அதனடிப்படையில் யானை லட்சுமி தங்கியிருந்த வேதபுரீஸ்வரர் ஆலயத்திலேயே அதை ஓய்வெடுக்க வைத்தது கோயில் நிர்வாகம். அதனால் கடந்த ஒரு மாதமாக யானை லட்சுமி கோயிலுக்கு வருவதில்லை. பக்தர்கள் வேதபுரீஸ்வரர் கோயிலுக்குச் சென்று பார்ப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. லட்சுமியின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில், களி, தென்னை மட்டை, பனை, அரசமர இலை போன்றவற்றுடன், மருந்துகளும் வழங்கப்பட்டு வந்தன. தமிழகத்திலிருந்து வனத்துறை மருத்துவர்கள் வந்து சோதனை செய்தபிறகு லட்சுமி மீண்டும் கோயிலுக்கு வரும் என்று மணக்குள விநாயகர் கோயில் நிர்வாகம் தெரிவித்திருந்தது.
அதேபோல மருத்துவர்களின் ஆலோசனைப்படி, லட்சுமியை நடைப்பயிற்சிக்கும் அழைத்து செல்லப்பட்டு வந்தது. அதனடிப்படையில் நேற்று முன் தினம் காலை லட்சுமி தங்கியிருந்த வேதபுரீஸ்வரர் கோயிலில் இருந்து நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டது. அப்போது மிஷன் வீதியில் உள்ள கல்வே கல்லூரியை கடந்தபோது திடீரென சுருண்டு விழுந்த லட்சுமி, சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்தது. சமீபகாலமாக பல்வேறு உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்த லட்சுமிக்கு, நீரிழிவு நோய் காரணமாக அடிக்கடி காலில் புண் ஏற்பட்டு வந்தது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி வழங்கிய மருந்துகளால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்நிலையில் நேற்று முன் தினம் திடீரென மயங்கி விழுந்த யானையை வனத்துறை மருத்துவர்கள் பரிசோதித்தனர்.

அதில், மாரடைப்பு காரணமாக லட்சுமி இறந்திருக்கலாம் என்று முதல்கட்ட சோதனைக்குப் பிறகு மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து மணக்குள விநாயகர் கோயிலின் நடை சாத்தப்பட்டு, லட்சுமியின் உடல் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதன் பிறகு ஆயிரக்கணக்கான பக்தர்களும், பொதுமக்களும் பின்தொடர லாரியில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கடலூர் சாலையில் வனத்துறை அலுவலகம் அருகேயுள்ள ஜே.வி.எஸ் நகரில் காளத்தீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதற்கடுத்த சில நிமிடங்களில் மணக்குள விநாயகர் கோயிலுக்குத் தனது சொந்தச் செலவில் குட்டி யானை வாங்கித் தருவதாக தெரிவித்திருந்தார் காமராஜர் தொகுதியின் பா.ஜ.க எம்.எல்.ஏ ஜான்குமார்.
ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பெரும்பான்மையான பக்தர்களும், பொதுமக்களும் ”லட்சுமியே இறுதியாக இருக்கட்டும். இன்னொரு யானை வேண்டாம்” என்று அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களை சந்தித்த பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், “யானை லட்சுமி நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சமாதி கட்டப்பட்டு, அங்கு லட்சுமியின் கற்சிலை ஒன்றும் அமைக்கப்படும். புதிய யானை வாங்குவது குறித்து முதல்வரிடம் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்” என்றவரிடம், பா.ஜ.க எம்.எல்.ஏ ஜான்குமார் குட்டி யானை வாங்கித் தருகிறேன் என்று கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ``யானை வாங்குவது பெரிய விஷயமல்ல. அதற்கு லைசென்ஸ் வாங்குவதுதான் பெரிய விஷயம். காட்டு விலங்குகளை வீட்டில் வளர்க்கக் கூடாது என்று சட்டம் இருக்கிறது.
அதனால் அதற்கு அனுமதி வாங்குவது சாதாரண விஷயமல்ல. லட்சுமியிடமிருந்து எடுக்கப்பட்ட தந்தம் வனத்துறையிடம் இருக்கிறது. கேரளா குருவாயூர் கோயிலில் கேசவன் யானையின் தந்தத்தை அழகுப்படுத்தி வைத்திருப்பது போல, லட்சுமியின் தந்தமும் மணக்குள விநாயகர் கோயிலில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். அதேபோல புதிய யானை குறித்து முதல்வர் ரங்கசாமியிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “புதிய யானை வாங்குவது குறித்து மணக்குள விநாயகர் கோயில் நிர்வாகம்தான் முடிவு செய்ய வேண்டும். அரசுக்கு புதிய யானை வாங்கும் திட்டமில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.