Published:Updated:

விழுப்புரம்: செயல்படாத திடக்கழிவு மேலாண்மைத் திட்டம்... அலட்சியம் காட்டும் அதிகாரிகள்!

செயல்படாத திட்டங்கள், கூடுதல் ஆட்சியர் சித்ரா விஜயன்.
News
செயல்படாத திட்டங்கள், கூடுதல் ஆட்சியர் சித்ரா விஜயன்.

விழுப்புரம் மாவட்டத்தில், 687 ஊராட்சிகளில் மண்புழு உரக்கூடங்கள், குப்பை தரம் பிரிக்கும் மையங்களை அமைப்பதற்கு ஊராட்சிக்கு தலா ரூ.2 லட்சம் வீதம், சுமார் 13 கோடியே 74 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது. ஆனால்...

Published:Updated:

விழுப்புரம்: செயல்படாத திடக்கழிவு மேலாண்மைத் திட்டம்... அலட்சியம் காட்டும் அதிகாரிகள்!

விழுப்புரம் மாவட்டத்தில், 687 ஊராட்சிகளில் மண்புழு உரக்கூடங்கள், குப்பை தரம் பிரிக்கும் மையங்களை அமைப்பதற்கு ஊராட்சிக்கு தலா ரூ.2 லட்சம் வீதம், சுமார் 13 கோடியே 74 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது. ஆனால்...

செயல்படாத திட்டங்கள், கூடுதல் ஆட்சியர் சித்ரா விஜயன்.
News
செயல்படாத திட்டங்கள், கூடுதல் ஆட்சியர் சித்ரா விஜயன்.

"கிராமப்புற மேம்பாடு, நகரத்துக்கு இணையான கிராம வளர்ச்சி" போன்ற வசனங்கள் ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் தொடச்சியாகப் பேசிவருபவை. மக்களின் வரிப்பணத்தைக்கொண்டு, பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் அவ்வப்போது கிராமப்புறங்களுக்கான சில திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கின்றன. அவ்வாறு அறிவிக்கப்படும் திட்டங்கள் முறையாகச் செயல்படுத்தப்படுகின்றனவா, அந்தத் திட்டங்களின் நோக்கங்கள் நிறைவேறியிருக்கின்றனவா, அதனால் ஏற்பட்ட மாற்றங்கள் என்னென்ன என்பதெல்லாம் முறையாகக் கண்காணிக்கப்படுகிறதா என்றால் பெரும்பாலும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

செயல்படாத மண்புழு உரக்கூடம்
செயல்படாத மண்புழு உரக்கூடம்

இப்படியாகக் கிராமப்புற மேம்பாட்டுக்கெனச் செயல்படுத்தப்பட்ட பல திட்டங்களின் நோக்கமே நிறைவேறாமல், மக்களின் வரிப்பணம் வீணாகப் போயிருக்கிறது என்பதை ஒவ்வொரு கிராமத்திலும் சிதைந்து கிடக்கும் அரசின் திட்டங்களே சாட்சியாக அமைகின்றன. அந்த வரிசையில், தமிழ்நாட்டிலுள்ள கிராமங்களின் தூய்மையை மேம்படுத்தும் பொருட்டு `திடக்கழிவு மேலாண்மைத் திட்டம்’ செயல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின்கீழ் வீடு வீடாகச் சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பைகளைச் சேகரிக்கும் தூய்மைப் பணியாளர்கள், அதைக் குப்பையைத் தரம் பிரிக்கும் மையங்களுக்குக் கொண்டுசெல்ல வேண்டும். பின்னர், மக்கும் குப்பை, மக்காத குப்பைகளுக்காகத் தோண்டப்பட்டிருக்கும் குழிகளில் தரம் பிரித்துக் கொட்ட வேண்டும். ஒவ்வொரு ஊராட்சியிலும் இந்தத் திட்டத்தின்கீழ், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் `குப்பை தரம் பிரிக்கும் மையம்’ தகர ஷீட்டுகளைக்கொண்டு அமைக்கப்பட்டிருக்கும்.

குப்பைகளைச் சேகரிக்க சுமார் 150 வீடுகளுக்கு ஒரு தூய்மைப் பணியாளர் பணியமா்த்தப்பட்டிருப்பதோடு, சுமார் 300 வீடுகளுக்கு ஒரு மூன்று சக்கர வாகனம் அல்லது எலெக்ட்ரிக் வாகனம் குப்பைகளை எடுத்துச்செல்ல ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், தரம் பிரித்துக் கொட்டப்படும் மக்கும் குப்பைகளைப் பயன்படுத்தி மண்புழு உரம் தயாரிப்பதற்காக ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு ஊராட்சியிலும் `மண்புழு உரக்கூடம்’ அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் மண்புழு உரங்களைத் தயாரித்து, விவசாயிகளுக்கு மலிவான விலையில் வழங்குதலே நோக்கம். ஆனால், விரல்விட்டு எண்ணும்படியான கிராமங்களைத் தாண்டி பெருவாரியான கிராமங்களில் இந்தத் திட்டங்களின் நோக்கம் செயல்படாமலேயே வீணாகப் போயிருக்கிறது எனக் கவலை தெரிவிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

நீர்நிலைகளில் கொட்டி எரிக்கப்படும் குப்பைகள், குப்பைத்தொட்டி.
நீர்நிலைகளில் கொட்டி எரிக்கப்படும் குப்பைகள், குப்பைத்தொட்டி.

விழுப்புரம் மாவட்டத்தைப் பொறுத்தவரை மொத்தமுள்ள 688 ஊராட்சிகளில், 687 இடங்களில் மண்புழு உரக்கூடங்களும், குப்பையைத் தரம் பிரிக்கும் மையங்களும் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த இரு அமைப்புகளை ஏற்படுத்த மட்டும் ஊராட்சிக்கு தலா இரண்டு லட்ச ரூபாய் வீதம் சுமார் 13 கோடியே 74 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது. இது மட்டுமின்றி, 2,789 தூய்மைப் பணியாளர்களும் மாத ஊதியத்தின் அடிப்படையில் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். ஆனால், மாவட்டத்தில் பெருவாரியான இடங்களில் குப்பையைத் தரம் பிரிக்கும் மையமும், மண்புழு உரக்கூடமும் செயல்படால் மதுப்பிரியர்களின் கூடாரமாகவும், காட்சிப்பொருளாகவும் மாறியிருக்கின்றன. மேலும், பல இடங்களில் முழுவதும் சிதைந்தும்போயிருக்கின்றன.

இது குறித்து சமூக ஆர்வலர் பாரதி என்பவரிடம் பேசினோம். "இந்தத் திட்டத்திலுள்ள தூய்மைப் பணியாளர்கள், தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை வீடு வீடாகச் சென்று சேகரிக்க வேண்டும். மக்களும் மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தரம் பிரித்து அவர்களிடம் வழங்க வேண்டும். ஆனால், இது இரண்டுமே நடப்பதில்லை. குப்பைகளைச் சேகரித்துச் செல்லும் தூய்மைப் பணியாளர்களும் அதைத் தரம் பிரிக்காமல் ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளின் ஓரமாகக் கொட்டி எரித்துவிடுகிறார்கள். ஏன் இந்தப் பணியை முறையாகச் செய்யவில்லை என்று மகளிர் குழுக்களைச் சேர்ந்த மோட்டிவேட்டார் கேட்கலாம். ஆனால், அவர்களும் கேள்வி கேட்பதில்லை. மகளிர் குழுக்கள் மூலமாகத்தான் தூய்மைப் பணியாளர்களுக்குச் சம்பளமே போகிறது. மேலும், தூய்மைப் பணியாளர்கள் சில பகுதிகளில் முறையாக வேலை செய்வதும் கிடையாது. ஒரு பகுதிக்கு வாரத்துக்கு ஒரு முறை மட்டும் செல்வது போன்ற செயல்களும் நடக்கின்றன.

செயல்படாத மண்புழு உரக்கூடம், குப்பை தரம் பிரிக்கும் மையம் -  பாரதி
செயல்படாத மண்புழு உரக்கூடம், குப்பை தரம் பிரிக்கும் மையம் - பாரதி

இந்தத் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் மற்றும் மண்புழு உரக்கூடம் மிகவும் சரியான திட்டம். இதை முறையாகச் செயல்படுத்தினால் கிராமப்புறங்களில் தூய்மை விகிதம் அதிகரிப்பதோடு, மக்கும் குப்பைகளிலிருந்து தயாரிக்கப்படும் மண்புழு உரத்தால் விவசாயிகளும் பயனடைவார்கள். ஆனால், அது நடப்பதில்லை. மேலும், மக்காத குப்பைகளை முறையாகக் தரம் பிரித்து மறுசுழற்சி செய்யும் நிறுவனங்களுக்குத் தூய்மைப் பணியாளர்கள் சார்பில் வழங்குவதும் கிடையாது. ஏன்... தரம் பிரிக்கப்படுவதே கிடையாது. தூய்மைப் பணியாளர்கள் அதை முறையாகக் கேட்டு வாங்காததால், மக்களும் அதைப் பொருட்படுத்துவது கிடையாது. குப்பைகளை நீர்நிலைப் பகுதிகளில் கொட்டி தீவைப்பதால், வேதியியல் மாற்றங்கள் நிகழ்ந்து, நச்சுப்பொருள்கள் உருவாகி நீரில் கலக்கின்றன.

இதன் மூலம் மீன்கள் போன்ற நீர்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. மேலும், மண்புழு உரக்கூடம் மற்றும் குப்பையைத் தரம் பிரிக்கும் மையங்கள் பல ஊர்களில் நீர்நிலைப் பகுதிகளில்தான் அமைக்கப்பட்டிருக்கின்றன. இது மட்டுமின்றி, திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்துக்காகக் கொடுக்கப்பட்ட குப்பைத்தொட்டிகளும் பல கிராமங்களில் பயனற்று வீணாகத்தான் கிடக்கின்றன. இன்றைய நாள்களில் நகரத்துக்கும் கிராமத்துக்கும் பெரிய வித்தியாசமே கிடையாது. இப்போது இருப்பதெல்லாம் நவீனமயமாக்கப்பட்ட கிராமம்தான். இன்று தண்ணீர் பாட்டில் இல்லாத கிராமமே கிடையாது. நகரங்களைப்போல நெகிழிப் பயன்பாடு கிராமங்களிலும் அதிகம் இருக்கிறது. என்ன... நகரத்தில் சாலைகளும் வீடுகளும் பெரிதாக இருக்கும். இங்கு சிறிய சாலைகளும், சிறிய வீடுகளும் இருக்கும் அவ்வளவுதான்.

முன்பெல்லாம் கிராமப்புறங்களிலுள்ள பெரும்பாலான வீடுகளில் மாடுகள் இருக்கும். அதனால் குப்பைமேடுகளும் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும். இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை அவர்களுடைய வயல்வெளிகளுக்கு அதை எருவாகப் பயன்படுத்துவார்கள். அன்றைய நாள்களில் திடக்கழிவைக் கையாள்வது இயல்பாகவே அவர்களுடைய வாழ்வியலோடு ஒன்றியிருந்தது. ஆனால், இன்று ஒருசில வீடுகளைத் தவிர்த்து அது முற்றிலுமாக மறைந்துவிட்டது. அரசாங்கம் அதை ஒரு திட்டமாகக் கொண்டுவந்த பிறகும், செயல்படாமலேயே இருக்கிறது என்பதுதான் வருத்தம். இது ஒரு சரியான திட்டம். ஆனால், செயல்படாமல் இருப்பதுதான் அவலமான விஷயம். இதனால் அரசாங்கத்துக்குப் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இவர்கள் நெகிழியைத் தனியாகப் பிரித்தாலே போதும், மக்கும் பொருளை 'மண்' பார்த்துக்கொள்ளும்" என்றார்.

விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாலான ஊராட்சிகளில் இந்த இரு அமைப்புகளும் செயல்படவில்லை எனக் குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, மாவட்டத்தில் குறிப்பிட்ட சில ஊராட்சிகளில் நேரடியாக விசிட் செய்தோம் (புகைப்படங்கள் மேலே), அங்கு மண்புழு உரக்கூடம், குப்பை தரம் பிரிக்கும் மையங்கள் சிதைந்து, செயல்படாமல் இருப்பதைப் பார்க்க முடிந்தது. அதனுடைய சில மாதிரிப் புகைப்படங்களோடு... விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சித்ரா விஜயனை நேரில் சந்தித்து விளக்கம் கேட்டோம். "மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை மக்களும் பிரித்துத் தர வேண்டும். தூய்மைப் பணியாளர்களே எவ்வளவு செய்ய முடியும்... நீங்கள் காண்பிக்கும் சில இடங்களுக்கான புகைப்படங்களைவைத்து எல்லா ஊராட்சிகளிலும் சரியில்லாமல் இருக்கிறது எனச் சொல்ல முடியாது. சில இடங்களுக்கு நானும் சென்று பார்க்கிறேன். எனக்கு இது பற்றிச் சரியாகத் தெரியவில்லை” என்றவரிடம், `இதற்கான அதிகாரி நீங்கள்தானே, தெரியவில்லை என்பதுதான் உங்கள் பதிலா?’ எனக் கேட்டதற்கு, ``நீங்க எது வேணாலும் எழுதிக்கோங்க. ஏதாவது கேள்வி என்றால் எழுத்துபூர்வமாகக் கொடுங்கள். நான் எழுதுபூர்வமாக பதிலளிக்கிறேன்" என்றார்.

சித்ரா விஜயன்
சித்ரா விஜயன்

மேலும், "என்னுடைய உதவியாளரிடம் விவரங்களைக் கூறுங்கள். அலுவலர்கள் மூலமாக பதிலளிக்கச் சொல்கிறேன்" என்றார். ஆனால், அவர்கள் அளித்த பதில்கள் மழுப்பலாகவே அமைந்திருந்தன. குறிப்பாக, மாவட்டம் முழுவதும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த எவ்வளவு நிதி பயன்படுத்தப்பட்டது, மண்புழு உரங்களை விவசாயிகளுக்குக் குறைந்த விலைக்கு கொடுத்ததன் மூலம் எவ்வளவு நிதி அரசுக்குக் கிடைத்திருக்கிறது, விவசாயிகளுக்கு உரம் கொடுக்கப்பட்டு எவ்வளவு சதவிகிதம் மகசூல் உற்பத்தி மேம்பட்டிருக்கிறது போன்ற கேள்விகளுக்கு பதிலே அளிக்கப்படவில்லை.

செயல்படாத மண்புழு உரக்கூடம்
செயல்படாத மண்புழு உரக்கூடம்

கிராமப் பொதுமக்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் தரப்பில் முரண்கள் இருக்கின்றன என்றால், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டியதும், திட்டத்தைச் சரியாகச் செயல்படுத்தவேண்டியதும் அரசின் கடமை. ஆனால், மக்கள் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்பட்ட பல கோடி ரூபாய் திட்டங்கள் செயல்படாமல் கண்ணெதிரே வீணாகப் போகும்போது, பொறுப்புமிக்க அரசு அதிகாரி பதிலளிப்பதும், தகுந்த நடவடிக்கை எடுப்பதும் அவசியம்.