அரசியல்
அலசல்
Published:Updated:

ஜெயிலுக்கு போயும் திருந்தாத போக்சோ தலைமை ஆசிரியர், ஜாமினில் வந்தும் தொல்லை, கிளர்ந்தெழுந்த கிராமம்!

ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
பிரீமியம் ஸ்டோரி
News
ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் சொன்னதும், ‘வாத்தியார் தப்பு பண்ணுனா ஹெட்மாஸ்டர்கிட்ட சொல்லலாம். ஹெட்மாஸ்டரே தப்பு செஞ்சா என்ன பண்ணுறது?’ என மனதுக்குள் குமைந்திருக்கின்றனர்.

போக்சோ வழக்கில் சிறைக்குச் சென்ற தலைமை ஆசிரியர், ஜாமீனில் வெளிவந்து பணியில் சேர்ந்த பள்ளியிலும் மாணவிகளிடம் கைநீட்ட, கிளர்ந்தெழுந்துவிட்டது கிராமம். ஒட்டுமொத்த கிராமமும் ஒன்று திரண்டு ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரப்பாகியிருக்கிறது ராமநாதபுரம்.

திருநெல்வேலி ஹவுஸிங் போர்டு காலனி அன்பு நகரைச் சேர்ந்தவர் ஜூலியஸ் ரவிச்சந்திரன். இவர் 2018-ம் ஆண்டு நெல்லை பாரதியார் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியபோது மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவர். ஜாமீனில் வெளியே வந்த இவர், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நெல்லையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்குத் தூக்கியடிக்கப்பட்டார்.

ஜூலியஸ் ரவிச்சந்திரன்
ஜூலியஸ் ரவிச்சந்திரன்

இப்படி ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே சிறுவயல் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு தலைமை ஆசிரியராக வந்த இடத்தில், மீண்டும் அவர் தனது சேட்டையைக் காட்ட, பிரச்னையாகியிருக்கிறது. இது குறித்து நம்மிடம் பேசிய கிராம மக்கள், “ஜெயிலுக்குப் போயும் திருந்தவில்லை அவர். இங்கு பணியில் சேர்ந்த சில நாள்களிலேயே தனது சபலபுத்தியை மாணவிகளிடம் காட்டத் தொடங்கிவிட்டார். மாணவிகளைத் தன் அறைக்கு தனியே வரவழைத்து பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டிருக்கிறார். இதற்கு ஆங்கில ஆசிரியர் ஜெயபாலும் உடந்தையாக இருந்திருக்கிறார்.

பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் சொன்னதும், ‘வாத்தியார் தப்பு பண்ணுனா ஹெட்மாஸ்டர்கிட்ட சொல்லலாம். ஹெட்மாஸ்டரே தப்பு செஞ்சா என்ன பண்ணுறது?’ என மனதுக்குள் குமைந்திருக்கின்றனர். அதன் பிறகு ஒருவழியாக முதன்மைக் கல்வி அலுவலரை அணுகி புகார் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணைக்காக வந்திருக்கிறார்கள். இதை எப்படியோ முன்கூட்டியே தெரிந்துகொண்ட ஆசிரியர் ஜெயபால், ‘விசாரணைக்கு வரும் அதிகாரிகளிடம் பாலியல் சீண்டல் குறித்து யாராவது உண்மையைச் சொன்னால் ஃபெயிலாக்கி விடுவோம்’ என்று மாணவிகளை மிரட்டியிருக்கிறார். இதையடுத்துதான் ஒட்டுமொத்த கிராம மக்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையே முற்றுகையிட்டு, புகார் செய்தோம்” என்றனர்.

ஜெயிலுக்கு போயும் திருந்தாத போக்சோ தலைமை ஆசிரியர்,  ஜாமினில் வந்தும் தொல்லை, கிளர்ந்தெழுந்த கிராமம்!

போராட்டத்துக்குப் பெற்றோருடன் வந்திருந்த மாணவி ஒருவரிடம் பேசினோம். “இவர் தலைமை ஆசிரியராக வந்ததிலிருந்து, எழுத்து வேலை இருப்பதாகச் சொல்லி, மாணவிகளைத் தனித்தனியே தன் அறைக்குக் கூப்பிடுவார். அங்கே கையைப் பிடித்து இழுப்பது, மடியில் அமரவைப்பது, கன்னத்தைக் கிள்ளுவது, உதட்டில் முத்தம் கொடுப்பது என்று ரொம்ப அசிங்கமாக நடந்துகொள்வார். அதுமட்டுமில்லாமல் பெண்களைப் பற்றியும், அவர்களின் அங்கங்கள் குறித்தும் ஆபாசமாகவும் கொச்சையாகவும் பேசுவார். அவரது இழுப்புக்கு இணங்காத மாணவிகளை, ‘வீட்ல சொன்னா உன்னை ஃபெயில் ஆக்கிடுவேன். நீ சரியா படிக்காம ஊர் சுத்துறேன்னு உங்க அப்பா, அம்மாகிட்ட கம்ப்ளெயின்ட் பண்ணுவேன். என்னைய சந்தோஷமா வெச்சுக்கிட்டாதான், உன்னை சந்தோஷமா இருக்கவிடுவேன்’ என்று மிரட்டுவார். என் தோழிகள் பலரை, ‘என்கூட ஜாலியா இருந்தா பரீட்சையே எழுதாட்டியும் பாஸாகலாம்’ என்று பிரெயின்வாஷும் செய்திருக்கிறார். ஆனால், பயத்தில் யாரும் வீட்டில் சொல்லவில்லை. நான் பிரச்னையை சி.இ.ஓ வரைக்கும் கொண்டுபோன பிறகே, மற்ற மாணவிகளும் அவரைப் பற்றி வீட்டில் சொல்லியிருக்கிறார்கள். தலைமை ஆசிரியரையும், ஆங்கில ஆசிரியரையும் மாற்றாவிட்டால் நாங்கள் ஸ்கூலுக்கே போக மாட்டோம்” என்றார் கண்கலங்கியபடி.

பாதிக்கப்பட்ட மற்றொரு மாணவியின் தந்தை பேசும்போது, “பிள்ளைங்களை நல்லா படிக்க வெச்சு, நல்ல நிலைக்குக் கொண்டு வருவாங்கன்னுதானே பள்ளிக்கூடத்துக்கு அனுப்புறோம். ஆனா, ஆசிரியர்களே இப்படிப் பிள்ளைங்களைச் சீரழிச்சா எப்படி சார்... இப்பல்லாம், பிள்ளைங்க படிப்பைவிட, பாதுகாப்பா இருந்தாப் போதும்கிற மனநிலைக்கு வந்துட்டோம்” என்றவரின் வார்த்தைகள் நம்மை நிலைகுலையவைத்தது.

கிராம மக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து, கலெக்டர் உத்தரவின்பேரில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், சைல்டு லைன், குழந்தைகள் நல பாதுகாப்புக் குழுமத்தினர் உள்ளிட்டோர் விசாரணையில் இறங்கினர். அப்போதுதான், தலைமை ஆசிரியர் ஜூலியஸ் ரவிச்சந்திரன் ஏற்கெனவே போக்சோ வழக்கில் சிறைக்குச் சென்றவர் என்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அதிகாரிகளின் அறிவுறுத்தலின்பேரில், பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒருவர் நயினார்கோவில் போலீஸில் புகார் செய்தார். அதன்படி, ஜூலியஸ் ரவிச்சந்திரன் மீது போக்சோ வழக்கும், ஜெயபால் மீது குற்றத்தை மறைக்க உடந்தையாக இருந்ததற்கான பிரிவிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதற்குள் சுதாரித்துக்கொண்ட ஆசிரியர்கள் இருவரும் தலைமறைவாகினர்.

மாவட்ட எஸ்.பி தங்கதுரையிடம் பேசினோம். “தலைமறைவாகியிருக்கும் ஆசிரியர்கள் இருவரது செல்போன் எண்களையும் கொண்டு, அவர்கள் பதுங்கியிருக்கும் இடத்தை அறியும் முயற்சியில் போலீஸார் இறங்கினர். அதில், ஜூலியஸ் ரவிச்சந்திரன் நெல்லையில் பதுங்கியிருப்பதைக் கண்டுபிடித்து கைதுசெய்தோம். விரைவில் ஆசிரியர் ஜெயபாலும் கைதுசெய்யப்படுவார்” என்றார்.

இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்துவிடம் கேட்டபோது, “தலைமை ஆசிரியர் ஜூலியஸ் ரவிச்சந்திரன் மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்டது விசாரணையில் உறுதியாகியிருக்கிறது. அவர்மீதும், அவருக்கு உடந்தையாக இருந்த ஆசிரியர் ஜெயபால் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்?!