அலசல்
Published:Updated:

சீருடைத் திட்டத்தை சீரழிக்கிறதா சமூக நலத்துறை?

மாணவர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
மாணவர்கள்

- தள்ளாடும் தையல் சங்கங்கள்... கோடிகளில் புரளும் அதிகாரிகள்!

மதுரையில் கடந்த மாதம் நடைபெற்ற மாநில கல்விக் கொள்கை குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், “அரசாங்கம் கொடுத்த யூனிஃபார்ம் டவுசரில் நூல் பிரிஞ்சு பாவாடைபோல்ஆகிடுச்சு. சட்டை, டவுசர் எல்லாமே ரொம்பச் சின்னதா இருக்கு. வேற வழியில்லாம வெளியில யூனிஃபார்ம் வாங்கவேண்டியதாப் போச்சு. அரசுப் பள்ளி மாணவர்கள் சார்பா கேட்குறேன். அடுத்த முறையாவது தரமான சீருடை தரச் சொல்லுங்க” என்று பேசி, பரபரப்பை ஏற்படுத்தினான் நாகமலை புதுக்கோட்டை அரசுப் பள்ளி மாணவன் நா.உதயன்.

4-ம் வகுப்பு மாணவனே பொங்கியெழும் அளவுக்குச் சீருடைத் திட்டத்தில் என்ன பிரச்னை என்று விசாரணையில் இறங்கினோம்...

அரசுப் பள்ளிகளில் பயிலும் 40.65 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் 4 செட் இலவசச் சீருடைகள் வழங்கப்படுகின்றன. இதற்காக ஆண்டுதோறும் 340 கோடி ரூபாயை ஒதுக்குகிறது பள்ளிக்கல்வித்துறை. எனினும், இந்த சீருடைத் தயாரிப்புப் பணிகளை சமூக நலத்துறைதான் கவனிக்கிறது. ஒவ்வொரு மாணவ, மாணவியருக்கும் வழங்கப்படும் 4 செட் சீருடைகளுக்காக மொத்தம் 511 லட்சம் மீட்டர் துணிகள் கோ-ஆப்டெக்ஸ் மற்றும் தமிழ்நாடு டெக்ஸ்டைல்ஸ் கார்ப்பரேஷனிலிருந்து கொள்முதல் செய்யப்படுகின்றன. அங்கிருந்து மாவட்ட துணி வெட்டும் மையங்களுக்கும், பின்னர் மகளிர் மேம்பாட்டுக்காகத் தொடங்கப்பட்ட 98 தையல் கூட்டுறவு சங்கங் களுக்கும் சீருடை தைக்க அனுப்பப்படுகின்றன. இங்கெல்லாம்தான் முறைகேடு நடப்பதாகச் சொல்கிறார்கள் கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள்.

சீருடைத் திட்டத்தை சீரழிக்கிறதா சமூக நலத்துறை?

இது குறித்து நம்மிடம் பேசிய அவர்கள், “துணி வெட்டு மையங்களில் சரியான அளவுகளில் துணிகளை வெட்டாமல் மிச்சப்படுத்தி, அதை வெளிச் சந்தையில் விற்பதில்தான் முறைகேடு ஆரம்பிக்கிறது. இப்படி, 40.65 லட்சம் சீருடைகளில் 30 லட்சம் ரூபாய் வீதம், 4 செட் சீருடைகளில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடக்கிறது. இரண்டாவதாக, வெட்டுக்கூலி என்ற பெயரில், அரசு நிர்ணயம் செய்ததைவிட இரு மடங்கு அதிகமான தொகை கொடுத்ததாக நடக்கும் முறைகேடு. இதற்கு சங்கப் பிரதிநிதிகள் சிலரும் உடந்தை. மேலும், ‘சீருடைகள் எந்தச் சங்கத்தில் தைக்கப்பட்டன’ என்பதை அறிய சீருடைகளில் லேபிள் வைத்து தைக்கும் வழக்கம் இருக்கிறது. மூன்றாவது முறைகேடு இதில்தான் நடக்கிறது. வெறும் 15 பைசா மதிப்புள்ள லேபிளை, கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடமிருந்து 50 பைசாவுக்கு வாங்குகிறார்கள். இதனால், சங்கங்களுக்கு ஆண்டுக்கு 63 லட்சம் ரூபாய் கூடுதலாகச் செலவாகிறது. அதேபோல தரமற்ற நூல், பட்டன், ஜிப், கேன்வாஸ், ஊக்கு போன்ற பொருள்களை மும்மடங்கு அதிக விலைக்கு வாங்குவதன் மூலம், ரூ.33.3 லட்சம் கூடுதல் செலவு ஏற்படுகிறது. இந்த முறைகேட்டில் தொழிற் கூட்டுறவு அலுவலர்களுக்கு (ஐ.சி.ஓ) பிரதான பங்கு இருக்கிறது. சங்கப் பணத்தை சூறையாடிவிட்டு, இவர்கள் நஷ்டக் கணக்கு காட்டுவதாலேயே, எங்கள் உழைப்புக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பலன்கள் கிடைப்பதில்லை” என்றனர் ஆற்றாமையுடன்.

இது குறித்துப் பேசிய மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்கள் சிலர், “மொத்தம் 98 தையல் கூட்டுறவு சங்கங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றின் ஆண்டு டர்ன் ஓவர் சில லட்சங்கள்கூட இராது. ஆனால், சங்கக் கணக்குகளை கணினி மயமாக்குகிறோம் என்ற பெயரில், கோவையைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்திடம் கோத்துவிட்டு விட்டார்கள். அவர்கள் சாஃப்ட்வேர் வடிவமைப்புக் கட்டணமாக ஒவ்வொரு சங்கத்திடமும் தலா ரூ.2,83,200 வீதம், மொத்தம் ரூ.2,77,53,600 வசூலிக்கும் வேலையில் இறங்கினார்கள். இதற்காக அனைத்துச் சங்கங்களுக்கும் சமூக நலத்துறை இயக்குநர் பெயரில் போலிச் சுற்றறிக்கையும் அனுப்பப் பட்டது. உண்மையில், தையல் சங்கங்களுக்கு இது போன்ற சாஃப்ட்வேரே தேவையில்லை. அப்படியே தேவைப்பட்டாலும், அரசு நிறுவனமான தமிழ்நாடு மின் ஆளுமை முகமையை அணுகினால், குறைந்த கட்டணத்தில் 98 சங்கங்களுக்கும் பொதுவான ஒரே சாஃப்ட்வேரை வடிவமைத்துத் தந்திருப்பார்கள். ஆனால், கமிஷன், கரெப்ஷனுக்காகவே இந்தப் பணி டெண்டர்கூட விடாமல், அந்தத் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

இந்த வேலைகளையெல்லாம் செய்ய ஐ.சி.ஓ-க்களை ஒருங்கிணைப்பது ஜெயசிங் கோவில் பிள்ளை என்ற ஐ.சி.ஓ-வும், சத்துமாவு சங்கத்தில் ஐ.சி.ஓ-வாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற ஒருவரும்தான் என்கிறார்கள். யார் ஆட்சிக்கு வந்தாலும், அவர்களைச் சரிக்கட்டுவதில் இவர்கள் வல்லவர்கள். அதனால்தான், கடந்த ஆட்சியில் தொடங்கிய ஊழல் வழிமுறைகள் இப்போதும் மாற்றமின்றி தொடர்கிறது. துறையின் நிர்வாக வசதிக்காக, கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகளில் ஆணையருக்கு பதில் இணை இயக்குநர் கையெழுத்திடும் வகையில் கடந்த 2019-ம் ஆண்டு விதியில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்தத் திருத்தத்தை வைத்துத்தான், பதிவாளருக்குத் தெரியாமல், இணை இயக்குநர் ஒருவரை வைத்து இஷ்டத்துக்கு கோடிக்கணக்கில் கையாடல் செய்கிறார்கள் இந்த ஐ.சி.ஓ-க்கள். அவர்களின் சொத்து மதிப்பைக் கணக்கிட்டாலே, அவர்கள் ஊழலில் எப்படித் திளைத்திருக்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகிவிடும்” என்றனர்.

சீருடைத் திட்டத்தை சீரழிக்கிறதா சமூக நலத்துறை?

குற்றச்சாட்டு குறித்து விளக்கம் கேட்க, சம்பந்தப்பட்ட கூட்டுறவு தொழிற் அலுவலர் ஜெயசிங் கோவில் பிள்ளையைத் தொலைபேசி வாயிலாகவும், குறுஞ்செய்தி மூலமாகவும் தொடர்புகொள்ள முயன்றோம். ஆனால், அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. குறுஞ்செய்திக்கும் பதில் அளிக்கவில்லை.

தையல் கூட்டுறவு சங்கங்களில் நடக்கும் முறைகேடுகளை அடுக்கி, சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கீதா ஜீவனிடம் விளக்கம் கேட்டோம். “இலவச சீருடை விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறைக்கும், தையல் சங்கங்களுக்கும் இடையில் ஒரு சின்ன ரோல்தான் சமூக நலத்துறை செய்கிறது. சங்கங்கள் முழுவதும் தன்னிச்சையாகச் செயல்படும் அதிகாரம் பெற்றவை என்பதால், துறையால் அதில் எந்தத் தலையீடும் செய்ய முடியாது. சங்கங்களில் பிரதிநிதிகளுக்கான பதவிக்காலம் வரும் மார்ச் மாதம் முடிவடையவிருப்பதால், அவசர அவசரமாக ஒவ்வொரு சங்கத்துக்கும் சாஃப்ட்வேர் உருவாக்கத் தேவையில்லை என்று, அந்தப் பணிகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. நீங்கள் சொல்லும் முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார் உறுதியாக.

அடுத்த கல்வியாண்டில் இருந்தாவது, தரமான சீருடை வழங்குவார்களா?