நாட்டின் எல்லைப் பகுதிகளில் ஒன்றாகத் திகழும் தனுஷ்கோடி கம்பிபாடு கடற்கரையில், ரூ.7 கோடி செலவில் கலங்கரை விளக்கம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமிபூஜை, வரும் 18-ம் தேதி தொடங்க உள்ளது.

நாட்டின் முக்கியத் தீவுகளில் ஒன்றாக இருந்துவருவது ராமேஸ்வரம். புயலால் உருக்குலைந்த தனுஷ்கோடி, ராமாயணம் தொடர்புடைய ராமநாதசுவாமி கோயில், நூற்றாண்டைக் கடந்த பாம்பன் தூக்குப்பாலம் எனப் பல பெருமைகளைக் கொண்ட ராமேஸ்வரம் தீவுக்கு, கடந்த ஆண்டு வந்த யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. இந்நிலையில், ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி பகுதியை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு பணிகளை மேற்கொண்டுவருகிறது.
இதன் ஒரு பகுதியாக, ராமேஸ்வரம் தீவை நாட்டின் நிலப்பகுதியுடன் இணைக்கும் வகையிலான புதிய ரயில் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது. மற்றொரு புறம், 1964-ம் ஆண்டு ஏற்பட்ட புயலில் உருக்குலைந்துபோன தனுஷ்கோடிக்குப் புதிதாக ரயில்பாலம் அமைக்கும் பணிகளும் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில், தனுஷ்கோடி பகுதியில் வாழ்ந்துவரும் பாரம்பர்ய மீனவர்களின் நலன் கருதி, தனுஷ்கோடியில் புதிதாக கலங்கரை விளக்கம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கென தனுஷ்கோடி கம்பிபாடு பகுதியில் நிலம் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தை கலங்கரை விளக்கங்களின் இயக்குநர் வெங்கட்ராமன், அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார்.

ரூ.7 கோடி செலவில் 50 மீட்டர் உயரம் கொண்ட கலங்கரை விளக்கம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மேல் பகுதியில், 18 கடல் மைல் தூரம் வரை ஒளிவீசும் வகையில் விளக்கு பொருத்தப்பட உள்ளது. இந்த விளக்கு, முழுக்க சூரிய சக்தி மின்சாரத்தைக் கொண்டு இயக்கப்பட உள்ளது. இவற்றுடன், கடல் பகுதியையும் மீனவர்களையும் கண்காணிக்கும் வகையில் ரேடார் அமைய உள்ளது. இந்தக் கலங்கரை விளக்கத்தைக் காண வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக பூங்கா உள்ளிட்டவையும் அமைக்கப்பட உள்ளது.
பாம்பனில், 1846ம் ஆண்டில் ஐரோப்பியர்களால் நேவல் கலங்கரை விளக்கமாக அமைக்கப்பட்டது. தொடக்கத்தில், இந்த கலங்கரை விளக்கத்திற்கு மீன் எண்ணெய்யும், தாவர எண்ணெயும் எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டன. 1923-ம் ஆண்டு, பாம்பன் கலங்கரை விளக்கம் புதுப்பிக்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பின்னர், மின்சாரம் மூலம் இயங்கும் விளக்குகள் கலங்கரை விளக்கத்தில் பொருத்தப்பட்டன. இந்தக் கலங்கரை விளக்கத்தின் வெளிச்சத்தை கரையிலிருந்து 14 நாட்டிக்கல் மைல் தொலைவு வரை பார்க்க முடியும். தற்போது, ரேடியோ அலைகள்மூலம் எச்சரிக்கைத் தகவல்களும் அனுப்பப்படுகின்றன.

இந்தக் கலங்கரை விளக்கம் இன்றளவும் பயன்பாட்டில் இருந்து வருகிறது. மேலும், ஓலைக்குடா பகுதியில் ஒரு கலங்கரை விளக்கம் சில ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறது. இம்மாதம் 18-ம் தேதி, மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் மன்சக் மாண்டவியா, தனுஷ்கோடியில் அமைய உள்ள புதிய கலங்கரை விளக்கப் பணிகளுக்கான பூமி பூஜையுடன் தொடங்கிவைக்க உள்ளார்.