“முதல்வர் பதவிக்கான தகுதி அவருக்கில்லை...” - சர்ச்சை வளையத்தில் இயற்கை மருத்துவக் கல்லூரி!

அரசுப் பணத்தை முறைகேடாக நான் சம்பளமாகப் பெறவில்லை. ஒரு கல்லூரி முதல்வருக்கு என்ன சம்பளம் அரசு விதித்திருக்கிறதோ அதைத்தான் வாங்கிக் கொண்டிருக்கிறேன்.
பரபரப்பான சென்னை அண்ணாநகர் சிக்னலில், ஓர் ஓரமாக அமைந்திருக்கிறது அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி. இங்கே ஒரு கல்லூரி இருக்கிறதா என்று எண்ணும் அளவுக்கு வெளியே சலனமில்லாமல் இயங்கும் அந்தக் கல்லூரியில், முதல்வர் பதவியைக் குறிவைத்து வெடித்திருக்கின்றன பல சர்ச்சைகள். இது தொடர்பாக நமது ஜூ.வி அலுவலகத்துக்குக் கத்தையான ஆவணங்களுடன் வந்தது ஒரு புகார்க் கடிதம்.
“அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் மணவாளன் கோடிக்கணக்கில் முறைகேடு செய்திருக்கிறார். இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை நடத்திய தணிக்கையில், அவர்மீதான குற்றச்சாட்டு நிரூபணம் ஆகியிருக்கிறது. கடந்த அக்டோபர் 11, 12 ஆகிய தேதிகளில் ஆடிட்டர் ஜெனரல் அதிகாரிகள் நடத்திய தணிக்கையிலும் குற்றச்சாட்டு உறுதியாகியிருக்கிறது. ஆனால், மேல் நடவடிக்கைதான் ஏதுமில்லை” என்று குமுறியிருந்தது அந்தக் கடிதம். இது குறித்து விசாரணையில் இறங்கினோம்.

நம்மிடையே பேசிய இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் சீனியர் அதிகாரிகள் சிலர், “அக்டோபர் 1997-ல், மருத்துவ அதிகாரியாக, தொகுப்பூதியத்தில் பணியில் சேர்ந்தவர் மணவாளன். டிப்ளோமா மட்டும்தான் படித்திருக்கிறார். யு.ஜி.சி விதிப்படி ஒரு கல்லூரியின் முதல்வர், பேராசிரியர், விரிவுரையாளர், ரீடர் பதவிகளுக்குத் தேர்வாகக் கூடியவர்கள், முதுநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். ஆனால், விதிகளுக்குப் புறம்பாக, 12 பேருக்கு ‘உதவி மருத்துவ அதிகாரிகள்’ அந்தஸ்தை இயற்கை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் வழங்கியிருக்கிறது. பேராசிரியர் பதவிக்கு நிகரானதுதான் ‘உதவி மருத்துவ அதிகாரிகள்’ பதவி. இப்படி முறைகேடாகப் பதவி பெற்றவர்களில் மணவாளனும் அடக்கம். டிசம்பர் 2008-ல், கல்லூரியின் முதல்வர் பொறுப்புக்குத் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட மணவாளன், இன்றுவரை அந்தப் பதவியில் தொடர்கிறார். ‘வெறும் டிப்ளோமா படித்தவர், முதல்வர் பதவியில் இடைக்காலமாகக்கூட தொடர அனுமதிக்கப்பட்டது ஏன்?’ என்பதுதான் முதல் கேள்வி.

கடந்த அக்டோபர் மாதம் தணிக்கைத்துறை நடத்திய ஆய்வில், 2008 முதல் 2022 வரை, முதல்வர் பதவிக்கான சம்பளத்தையே மணவாளன் பெற்றிருந்தது தெரியவந்திருக்கிறது. விதிப்படி, அவர் தன்னுடைய ‘உதவி மருத்துவ அதிகாரி’ சம்பளத்தைத்தான் பெற்றிருக்க வேண்டும். தற்காலிக முதல்வராக பணியிலிருப்பதால், முதல்வருக்கான சம்பளத்தில் 20 சதவிகிதம் பெறலாம். ஆனால், மணவாளன் முழுச் சம்பளத்தையும் பெற்று, அரசுக்கு நிதியிழப்பை ஏற்படுத்தியிருக்கிறார். இப்படி 14 வருடங்களில் மொத்தமாக 1.03 கோடி ரூபாய் கூடுதல் சம்பளம் பெற்றிருக்கிறார் மணவாளன். பிஹெச்.டி., எம்.டி படித்த பலபேர் முதல்வர் பதவிக்கான தகுதியிருந்தும் மணவாளனின் ஆதிக்கத்தால் ஒடுங்கிப்போயிருக்கிறார்கள். அரசுக்குப் பலமுறை புகார்கள் அனுப்பியும், ஒருவரும் கண்டுகொள்வதில்லை” என்றவர்கள், தணிக்கைத்துறை சார்பில் அக்டோபர் 19-ம் தேதியிட்டு, மருத்துவத்துறை முதன்மைச் செயலாளர் செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்-ஸுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை நம்மிடம் அளித்தார்கள். ‘சட்டத்துக்குப் புறம்பாக மணவாளன் கூடுதல் சம்பளம் பெற்றிருக்கிறார். அவர் முதல்வர் பதவிக்குத் தகுதியானவர் அல்ல’ என தெளிவாகக் குறிப்பிட்டிருந்தது தணிக்கைத்துறை அறிக்கை.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் மணவாளனிடம் பேசினோம். “இந்த அவதூறான குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. 2000-ம் ஆண்டு இந்தக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. அந்த நேரத்தில், ‘தமிழ்நாடு போர்டு ஆஃப் இந்தியன் மெடிசின்’-ல் தகுதியான மருத்துவர்கள் என்று யாரெல்லாம் பதிவுசெய்திருந்தார்களோ, அவர்களை நேர்காணல் செய்து, உதவி மருத்துவ அலுவலராகப் பணியமர்த்தினார்கள். அப்படிப் பதிவுசெய்ததில் முதல் நபர் நான்தான். எனவே, அன்றிருந்த அரசு விதிப்படி தேர்வானேன். ஒரு நபர், தானாகக் கல்லூரியின் முதல்வராகிவிட முடியாது. அதற்கென்றும் விதிமுறைகள் இருக்கின்றன. அந்தத் தகுதிகளின்படியே பணியில் இருக்கிறேன்.
அரசுப் பணத்தை முறைகேடாக நான் சம்பளமாகப் பெறவில்லை. ஒரு கல்லூரி முதல்வருக்கு என்ன சம்பளம் அரசு விதித்திருக்கிறதோ அதைத்தான் வாங்கிக் கொண்டிருக்கிறேன். 2014-ல்தான் இந்தக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பு கொண்டு வரப்பட்டது. அதில் படித்துவிட்டு வெளியே வந்தவர்கள், ‘நீங்கள் தகுதியில்லாமல் இந்த சீட்டில் உட்கார்ந்திருக்கிறீர்கள்...’ என்று என்மீது புகார் சொல்கிறார்கள். அவர்களுக்கு நாங்கள்தானே கற்றுக் கொடுத்தோம்... எனக்குத் தகுதியில்லையென்றால், இவர்களுக்கு மட்டும் என்ன தகுதி இருக்கிறது... அவர்களின் சான்றிதழ்கள் தகுதி இல்லாதவைதானே?” என்கிற கேள்வியோடு முடித்துக் கொண்டார்.
இது குறித்து மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் பேசினோம். “என் கவனத்துக்கு எந்தப் புகாரும் வரவில்லை. ஆதாரத்தோடு கொடுத்தார்கள் என்றால் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்போம்” என்றார்.
யார் சிறப்பாகக் கல்வி போதிப்பது என்று போட்டி போடவேண்டிய ஆசிரியர்கள், நாற்காலிக்குச் சண்டை போட்டால் அந்தக் கல்லூரி மாணவர்களின் நிலை?!