அலசல்
Published:Updated:

கவர்னரின் கள்ள மௌனம்... காவு வாங்கப்படும் உயிர்கள்!

 ஆன்லைன் சூதாட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆன்லைன் சூதாட்டம்

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் திறனை மேம்படுத்துவதாகச் சொல்வது தவறானது. ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்த முடியாது என்பதால், முழுவதுமாகத் தடைசெய்ய வேண்டும்

தமிழ்நாட்டில், ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கிறார்கள். நாளுக்கு நாள் இந்த பலி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்த தமிழக அரசு, ‘ஆன்லைன் சூதாட்டத் தடைச்சட்ட மசோதா’-வை ஒருமனதாக சட்டமன்றத்தில் நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்காக அக்டோபர் 28-ம் தேதி அனுப்பியது. அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காததோடு, குடியரசுத் தலைவருக்கும் அனுப்பாமல், அது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமல், மௌனமாகவே இருந்துவருகிறார் ஆளுநர் ரவி. சமீபத்தில் ஆளுநரின் இந்தச் செயல்படாத தன்மையை விமர்சித்து சமூக ஊடகங்களில் ‘#GetOutRavi’ ஹேஷ்டேக் இந்திய அளவில் வைரலானது. ‘ஆன்லைன் சூதாட்டத்தால் இனி நிகழும் ஒவ்வொரு மரணத்துக்கும் ஆளுநர்தான் பொறுப்பேற்க வேண்டும்’ என ஆளுங்கட்சி மட்டுமல்ல, எதிர்க்கட்சித் தரப்பினர்கூட ஆதங்கப்பட்டனர். கடந்த 15 நாள்களில் மட்டும் ஆறு பேர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். “யார் இந்த உயிர்ப்பலிகளுக்குப் பொறுப்பேற்பது... ஆளுநர் இன்னும் எத்தனை பேர் தற்கொலை செய்துகொண்டால் வாய் திறப்பார்... இவ்வளவு மரணங்களுக்கு மத்தியில் ஆன்லைன் சூதாட்ட நிறுவனத்தினரை ஆளுநர் சந்தித்திருப்பது அவரது நடவடிக்கைகள் மீது சந்தேகத்தை எழுப்புகின்றன” எனக் கொதிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

கவர்னரின் கள்ள மௌனம்... காவு வாங்கப்படும் உயிர்கள்!

‘தனக்குச் சம்பந்தமில்லாத விஷயங்களிலெல்லாம் வலிந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை உதிர்த்துவரும் ஆளுநர், உயிர்ப்பலி வாங்கிக்கொண்டிருக்கும் ஒரு விளையாட்டுத் தடைக்கான சட்ட மசோதாவைத் தன் கையில் வைத்துக்கொண்டு ஏன் இவ்வளவு கள்ள மெளனம் சாதிக்கிறார்?’ என்ற எல்லோரின் கேள்வியோடு நாமும் களத்தில் இறங்கினோம்...

ஏமாற்றிப் பிடுங்கிய ஆன்லைன் ரம்மி... தூக்கில் தொங்கிய இளைஞர்கள்!

விருதுநகர் மாவட்டம், மம்சாபுரத்தைச் சேர்ந்த வினோத்குமார், டிசம்பர் 15-ம் தேதி தன் கல்லூரி ஹாஸ்டல் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். போலீஸ் விசாரணையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் வினோத்குமார் பெருமளவு பணத்தை இழந்தது தெரியவந்தது. ஒருகட்டத்தில், ‘லோன் ஆப்’ மூலமாகவும் கடன் பெற்று ஆடியிருக்கிறார் வினோத். வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால், அவர் தற்கொலை செய்திருக்கிறார். இதேபோல கோவை, உப்பிலிபாளையத்தைச் சேர்ந்த இன்ஜினீயரான சங்கர், ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி, தான் சேமித்துவைத்திருந்த மொத்தப் பணத்தையும் இழந்திருக்கிறார். பிறகு கடன் வாங்கி ஆடியவர், அதைத் திருப்பிக் கொடுக்க இயலாமல், கடந்த டிசம்பர் 12-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரைப்போலவே, தன் நண்பர்களிடம் கடன் வாங்கி, ஆன்லைன் ரம்மி விளையாடிய பொள்ளாச்சி இளைஞர் சல்மானும் கடந்த டிசம்பர் 8-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவர்கள் அனைவருமே 30 வயதுக்குக் கீழுள்ளவர்கள்தான். இந்தச் சம்பவங்கள் அனைத்தும் கடந்த ஒரு வாரத்தில் நடந்தவை. போலீஸ் பார்வைக்கு வராத தற்கொலை முயற்சிகள், வன்முறைகள், இழப்புகள், பிரிந்த குடும்பங்களின் எண்ணிக்கை ஏராளம்.

கவர்னரின் கள்ள மௌனம்... காவு வாங்கப்படும் உயிர்கள்!

காலாவதியான அவசரச் சட்டம்!

ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவின் தலைமையிலான வல்லுநர்குழு, ஆன்லைன் ரம்மி தொடர்பாக விரிவாக ஆய்வு நடத்தி, கடந்த ஜூன் 27-ம் தேதி ஆய்வு அறிக்கையைத் தமிழக முதல்வரிடம் சமர்ப்பித்தது. 71 பக்கங்கள்கொண்ட அந்த அறிக்கையில், “ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் திறனை மேம்படுத்துவதாகச் சொல்வது தவறானது. ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்த முடியாது என்பதால், முழுவதுமாகத் தடைசெய்ய வேண்டும்” எனப் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

கடந்த செப்டம்பர் 26-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அந்த ஆய்வறிக்கை விவாதிக்கப்பட்டு, ‘ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளைத் தடைசெய்யும் அவசரச் சட்ட’த்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அந்த அவசரச் சட்டத்துக்கு அக்டோபர் 1-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவியும் ஒப்புதல் அளித்தார். தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் அமலானது. இதைத் தொடர்ந்து, அவசரச் சட்டத்தை நிரந்தரச் சட்டமாக்கும் மசோதா, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. ஆளுநரின் ஒப்புதலுக்காகவும் அனுப்பப்பட்டது. சட்ட மசோதா குறித்து ஆளுநர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம், அரசு சார்பில் உடனுக்குடன் விளக்கமும் கொடுக்கப்பட்டது. ஆனால், ஒப்புதல் அளிக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்திவருகிறார் ஆளுநர். அரசியலமைப்பு விதிப்படி, சட்டமன்றம் கூடிய நாளிலிருந்து ஆறு வாரங்களுக்குள் அவசரச் சட்டத்தை நிரந்தரச் சட்டமாக்க வேண்டும். இல்லையென்றால், அவசரச் சட்டம் காலாவதியாகிவிடும். தமிழ்நாடு அரசு அனுப்பிய ‘ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறை மசோதா’-வுக்குக் கடைசிவரை கவர்னர் ஒப்புதல் அளிக்காததால், நவம்பர் 27-ம் தேதியோடு அவசரச் சட்டம் காலாவதியாகிவிட்டது.

“ஆளுநர் செயல் அறமற்றது!”

இந்தச் சட்ட மசோதா தொடர்பாக ஆளுநரைச் சந்தித்து விளக்கமளிக்க, பலமுறை முயன்றார் சட்டத்துறை அமைச்சர். பா.ஜ.க மாநிலத் தலைவருக்கு உடனடியாக நேரம் ஒதுக்கிச் சந்திக்கும் ஆளுநர், சட்டத்துறை அமைச்சருக்கு மிகத் தாமதமாகத்தான் நேரம் ஒதுக்கினார். ஆளுநரிடம், “அவசரச் சட்டத்திலிருந்த அதே ஷரத்துகள்தான் இந்தச் சட்ட மசோதாவில் இருக்கின்றன. இதைத் தாமதப்படுத்தாதீர்கள்” எனக் கோரியிருக்கிறார் அமைச்சர். ஆனால், அதை கவர்னர் ஏற்றதாகத் தெரியவில்லை. இந்தச் சூழலில், ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களைச் சேர்ந்த ஒன்பது பிரதிநிதிகள் ஆளுநரைச் சந்தித்திருக்கின்றனர். இந்தச் சந்திப்பு குறித்து ஆளுநர் மாளிகையிலிருந்து அதிகாரபூர்வச் செய்திக்குறிப்பு எதுவும் வெளிவரவில்லை. “அந்த நிறுவனங்கள் தரப்பு விளக்கத்தைக் கேட்கவே இந்தச் சந்திப்பு நடந்தது” என்கிற தகவல் மட்டும் ராஜ் பவனிலிருந்து ‘லீக்’ ஆனது. “சென்னை உயர் நீதிமன்றம் சில காரணங்களைக் கூறி இந்தச் சட்டத்தை ஏற்கெனவே ரத்துசெய்திருக்கிறது. அந்தக் காரணங்களுக்கான விளக்கத்தை அளியுங்கள்” என்று அரசுக்குச் சொல்லிவருகிறார் ஆளுநர் ரவி. அரசுத் தரப்பில் அதற்கும் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது. ஆயினும், ஆளுநர் ஒப்புதல் வழங்க மறுக்கிறார்.

கணேஷ் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிர்வாக இயக்குநர் கணேஷ் சுப்பிரமணியனிடம் இது குறித்துப் பேசினோம். “இந்திய அரசியலமைப்புச் சட்டம் விதி 200-ன்படி, ஒரு சட்ட மசோதாவில் தனக்குள்ள சந்தேகங்களை ஆளுநர் கேட்கலாம். அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் ‘இயற்கை நீதி’ப்படி, ஆன்லைன் கேம் நிறுவனங்களையும் அழைத்து விளக்கங்கள் கேட்கிறார். இதிலும் தவறு சொல்ல முடியாது. ‘டெக்னிக்கலாக’ ஆளுநர் சரியாக நடந்துகொண்டிருக்கிறார். ஆனால், அறம் சார்ந்த நிலைப்பாட்டை அவர் எடுக்கவில்லை. ‘ஆன்லைன் ரம்மி மக்களுக்கு எதிரானது. அதனால் தொடர்ந்து உயிர்ப்பலி நிகழ்கிறது. அதைத் தடுக்க, சட்டமியற்ற வேண்டும்’ என்பதுதான் ஆளுநரின் நிலைப்பாடாக இருந்திருக்க வேண்டும். அதற்கு மாறாக, அந்தத் தடைச் சட்டம் வருவதற்கு என்னவெல்லாம் தடைக்கல் போட முடியுமோ, அதைத்தான் ‘டெக்னிக்கல்’-ஆக இப்போது செய்துவருகிறார் ஆளுநர். இதற்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மீது பழிபோடுவது ஏற்கக்கூடியது அல்ல.

கணேஷ் சுப்பிரமணியம்
கணேஷ் சுப்பிரமணியம்

சந்தேகங்கள் இருந்தால், சட்டவிதி 167-ன்படி முதலமைச்சரையே நேரடியாக அழைத்து, ஆளுநர் விவரம் கேட்கலாம். சட்டவிதி 200-ன்படி, மசோதாவை மேம்படுத்தும் கருத்துகளைக் குறிப்பிட்டு ‘நோட்’ அனுப்பலாம். ஆன்லைன் கேம் நிறுவனங்களிடம், தான் கலந்தாலோசித்த கருத்துகளை, இதுவரை அரசுக்கு ஆளுநர் தெரியப்படுத்தவில்லை. ஒருவேளை, உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்தை ‘ஆன்லைன் ரம்மி தடை மசோதா’ கேள்வி எழுப்புகிறது என ஆளுநர் கருதினால், அந்த மசோதாவை ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அனுப்ப வழிவகை இருக்கிறது. ஆளுநர் ரவி இதில் எதையும் செய்யவில்லை. அப்படிச் செய்திருந்தால், அரசியலைமைப்புச் சட்டவிதி 143-ன்படி, ‘ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம்’ செல்லுமா, செல்லாதா என்பதை உச்ச நீதிமன்றம் வழியாக விளக்கம் கேட்டிருப்பார் ஜனாதிபதி. நமக்கு ஒரு தெளிவு பிறந்திருக்கும். அதற்கான வாய்ப்பையும் ஆளுநர் ரவி தடுத்திருக்கிறார். ஆக மொத்தம், அரசுக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டைத்தான் ஆளுநர் எடுத்திருக்கிறாரே தவிர, அறம் சார்ந்து அவர் செயல்படவில்லை” என்றார் சூடாக.

ஜி.எஸ்.டி வருவாய் முதல்... டெல்லி லாபி வரை!

இந்த ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தைப் பொறுத்தவரை, சில சூதாட்ட நிறுவனங்களின் லாபி பெரிய அளவில் இருப்பதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்த சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள். நம்மிடம் பேசிய கூடுதல் தலைமைச் செயலாளர்கள் சிலர், “ஆன்லைன் ரம்மிக்கு, தமிழகத்தில் தடை விழுந்துவிடக் கூடாது என்பதில், பல சூதாட்ட நிறுவனங்கள் தீவிரமாக இருக்கின்றன. இந்த நிறுவனங்களின் பெரு வருவாய் தமிழகத்திலிருந்துதான் அவர்களுக்குக் கிடைக்கிறது. அதற்குத் தடை விழாமலிருக்க, எத்தனை கோடியையும் செலவு செய்யத் தயாராக இருக்கிறார்கள். இந்த நிறுவனங்களின் வருவாயில், மத்திய, மாநில அரசுகளுக்கு வருமான வரி, ஜி.எஸ்.டி எனப் பல கோடி ரூபாய் வரிவருவாய் செல்கிறது. மத்திய அரசில் உச்சத்திலிருக்கும் இரண்டு மத்திய அமைச்சர்கள், இந்த நிறுவனங்களுக்காகத் தீவிரமாக டெல்லியில் லாபி செய்கின்றனர். அவர்களின் லாபிக்கு ஏற்றாற்போல, தமிழ்நாடு ஆளுநர் மாளிகையும் தடைச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துகிறது. உதயநிதி பதவியேற்பு விழாவின்போதுகூட, ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்குமாறு ஆளுநரிடம் நேரடியாகவே பேசினார் முதல்வர். ஆனால், ஆளுநரிடமிருந்து தெளிவாக எந்த பதிலும் இல்லை” என்றனர்.

ஆன்லைன் கம்பெனிகள் கொடுத்த அழுத்தம்... கோடிகள் புரளும் குற்ற உலகம்!

“ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்ட ஆலோசனைக்காக என் தலைமையில் அமைந்த குழு அறிக்கையைத் தயார் செய்துகொண்டிருந்த இரு வார காலத்தில், சில ஆன்லைன் கம்பெனிகள் எங்கள் குழுவின்மீது கொண்டுவந்த அழுத்தத்தை வெளியே தெரிவிக்க முடியாது” என்று குறிப்பிட்டிருக்கும் ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு, “தங்க முட்டை இடும் வாத்தை யார்தான் வெட்டி உணவு சமைப்பார்கள்?” என்று சூசகமாகக் கேள்வியையும் சந்தேகத்தையும் எழுப்பியிருக்கிறார்.

‘ஆன்லைன் விளையாட்டுகளில், இந்திய அளவில் பெரிதும் ஆடப்படுவது ஆன்லைன் ரம்மிதான். இந்த விளையாட்டு நிறுவனங்களின் ஆண்டு வருவாய் தற்போது, சுமார் 13,600 கோடி ரூபாய். அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தத் தொகை 29,000 கோடி ரூபாயாக உயரும் என்கிறார்கள்’ புள்ளிவிவரம் அறிந்தவர்கள். நூறு... ஆயிரம்... என வலைவிரித்து, லட்சங்களில் இழுத்துவிட்டு நொடிகளில் பணம் பிடுங்கும் ‘கோடிகள் புரளும் குற்ற உலகாக இருக்கின்றன’ ஆன்லைன் சூதாட்டச் செயலிகள். ‘பொதுமக்களிடமிருந்து பணம், உயிர், நிம்மதியைப் பறிக்கும் ஒரு விளையாட்டுச் செயலிக்குத் தடைபோடுவதில் ஏன் குறுக்கே நிற்கிறார் ஆளுநர்?’ என்பதுதான் கேள்வி.

ஆன்லைன் சூதாட்டத்தால், நாள்தோறும் உயிர்கள் பலியாகிக்கொண்டிருக்கின்றன... குடும்பங்கள் சிதைந்துகொண்டிருக்கின்றன. எதிர்கால இளைஞர்களின் பெரும் உளநோயாக மாறிக்கொண்டிருக்கிறது இந்த விளையாட்டு. ஆனால், மக்கள் மீதும் அக்கறை இன்றி, மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசின் சட்டமசோதா மீதும் மதிப்பின்றி... “மசோதா தன் கைக்கு வந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையிலும், தனக்குள்ள அரசியலமைப்புச் சட்ட உரிமையை வைத்துக்கொண்டு கேம் ஆடுகிறார் ஆளுநர். இதுவும் ஒரு சூதாட்டம்தான். சூதாட்டக்காரர்களுக்கும் ஆளுநருக்கும் ஒரே வித்தியாசம்தான். சூதாடுபவர்கள் பணத்தை வைத்து ஆடுகிறார்கள். ஆனால், ஆளுநர் ஒருபடி மேலே சென்று உயிர்களை வைத்து சூதாடுகிறார்” என்கிறார்கள் மக்கள்.

இன்னும் எத்தனை நாளைக்கு எத்தனை உயிர்களை வைத்து விளையாடுவீர்கள் கவர்னரே?

****

“இது தி.மு.க அரசின் தவறு!”

“ஓர் ஆளுநர் சந்தேகம் கேட்கும் அளவுக்கு சட்டத்தை இயற்றியது தி.மு.க அரசின் தவறு. இதில் ஆளுநரும் அரசும் ஒருவரை மாற்றி ஒருவர் குறை கூறுவதை விட்டுவிட்டு, ஆன்லைன் சூதாட்டத் தடையை விரைந்து கொண்டுவர வேண்டும்.” - இன்பதுரை, அ.தி.மு.க

“தடைசெய்ய வேண்டும் என்பதுதான் ஆளுநரின் விருப்பமும்!”

“ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்ய வேண்டும் என்பதுதான் ஆளுநர் உட்பட எங்கள் அனைவரின் விருப்பமும். இன்றுவரை தி.மு.க-வைச் சேர்ந்த பலரும் தடைசெய்யப்பட்ட லாட்டரி, இரவு நேரங்களில் மது விற்பனையைச் செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த ஆட்சி அமைந்த பிறகு மட்டுமே புதிதாக 300 கிளப்புகளுக்கு உரிமம் வழங்கப்பட்டிருக்கிறது. இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தும் திறன் தி.மு.க அரசுக்குக் கிடையாது. ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில், அரசியல் விளம்பரத்துக்காக ஆளுநர்மீது பழி போடுகிறார்கள் தி.மு.க-வினர்!” - நிர்மல் குமார், பா.ஜ.க

இன்பதுரை, நிர்மல் குமார், இராஜீவ் காந்தி
இன்பதுரை, நிர்மல் குமார், இராஜீவ் காந்தி

“பின்னணியில் ஒன்றிய அரசின் அழுத்தம்!”

“அலுவலகக் குறிப்பில் இல்லாமல், ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களைச் சேர்ந்த நிர்வாகிகளைச் சந்தித்து ஆளுநர் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார். இது அரசியல் சாசனத்துக்கு முற்றிலும் எதிரானது. வடமாநிலங்களைச் சேர்ந்த இந்த ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் அனைத்துமே ஒன்றிய பா.ஜ.க அரசுக்குப் பெருமளவில் நன்கொடை வழங்கும் நிறுவனங்கள். மாநிலத்தில் இத்தனை உயிர்ப்பலி நடந்தும் ஆளுநர் மௌனமாக இருப்பது சந்தேகமாக இருக்கிறது. காலதாமதம் செய்வதன் பின்னணியில் ஒன்றிய அரசின் அழுத்தம் இருக்குமோவென்ற கேள்வி எழுகிறது. இந்த விவகாரத்தில் அடிமை அ.தி.மு.க-வும், கொல்லைப்புரத்தில் நுழைய நினைக்கும் பா.ஜ.க-வும் ராஜ் பவனுக்கு வேலை செய்யும் ஆட்களாக இருக்கிறார்கள். மக்களை பாதிக்கும் இந்த மசோதாவை இனியும் காலம் தாழ்த்தாமல் ஒப்புதல் வழங்கவேண்டியது ஆளுநரின் கடமை!’’ - இராஜீவ் காந்தி, தி.மு.க.