அரசியல்
அலசல்
Published:Updated:

ஆளுநர் Vs உதயநிதி - தள்ளிப்போகும் அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழா

ஆர்.என்.ரவி - உதயநிதி
பிரீமியம் ஸ்டோரி
News
ஆர்.என்.ரவி - உதயநிதி

அழகு மனோஜ்

பொறியியல் படிப்பை முடித்த மாணவர்களுக்கு ஆறு மாதங்களுக்குள் கட்டாயம் சான்றிதழை வழங்க வேண்டும் என்பது பல்கலைக்கழக மானியக்குழுவின் (யு.ஜி.சி) விதிமுறைகளில் ஒன்று. ஆனால், பொறியியல் படிப்பின் தமிழ்நாட்டின் முகமாக இருக்கும் அண்ணா பல்கலைக்கழகம், தன்னிடம் பயின்ற நான்கு லட்சத்துக்கும் மேலான மாணவர்களுக்கு ஓராண்டுக்கும் மேல் சான்றிதழ் வழங்காமல், அலைக்கழித்துக்கொண்டிருக்கிறது!

பொன்முடி
பொன்முடி
உதயநிதி
உதயநிதி

இது குறித்து அண்ணா பல்கலை மூத்த பேராசிரியர்கள் சிலரிடம் கேட்டபோது, “பட்டமளிப்பு விழாவுக்கான தாமதமும், அதற்காகச் சொல்லப்படும் காரணமும் அண்ணா பல்கலை வரலாற்றிலேயே இல்லாதது. எங்கள் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ-வான உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டதுதான் முதல் பிரச்னை. எல்லா பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவிலும் ஆளுநர் பேசுவதும், பேசாததும் அவரின் அதிகாரத்துக்கு உட்பட்டது. ஆனால், அண்ணா பல்கலையில் ஆளுநர் பேசுவதாக இருந்தால், உதயநிதியையும் பேசவைக்க அமைச்சர் பொன்முடி தரப்பில் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. ஆனால், ஆளுநர் அலுவலகமோ, ‘ஆளுநர், அமைச்சர், துணைவேந்தர் தவிர வேறு யாரும் பேசக் கூடாது. சிண்டிகேட் உறுப்பினர்களை மேடையிலேயே ஏற்றக் கூடாது’ என்று கறாராகக் கூறுகிறார்கள். துணை வேந்தருக்கோ உதயநிதியை மேடை ஏற்றி அழகுபார்க்க ஆசை. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பல்கலையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ஒரு சினிமா ரசிகனைப்போல கீழிறங்கி, உதயநிதியைத் துணைவேந்தர் வேல்ராஜ் புகழ்ந்து தள்ளியிருந்தார். தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களில் நடக்கும் எல்லா பட்டமளிப்பு விழாக்களுக்கும் சென்றுகொண்டிருக்கும் ஆளுநர், இந்தத் துணைவேந்தர் மீது நம்பிக்கை இல்லாததாலேயே தேதி தராமல் இருக்கிறார். இத்தனைக்கும் ஆளுநர் மாளிகைக்கு எதிரேதான் அண்ணா பல்கலைக்கழகம் இருக்கிறது” என்றனர் வேதனையோடு.

ஆர்.என்.ரவி
ஆர்.என்.ரவி
வேல்ராஜ்
வேல்ராஜ்

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியோ, “பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவுக்கு ஆளுநர் விரைவில் தேதி தருவார் என்று நம்புகிறேன்” என்று ஆறு மாதமாங்களாகச் சொல்கிறார்.

பட்டமளிப்பு விழா தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜிடம் கேட்டபோது, “சிண்டிகேட் உறுப்பினரான உதயநிதிக்கும் பட்டமளிப்பு விழா தள்ளிப்போவதற்கும் எந்தத் தொடர்புமில்லை. ஆளுநர் செயலாளரும், உயர்கல்வித் துறைச் செயலாளரும் பேசித்தான் பட்டமளிப்பு விழாவுக்கு நேரத்தைக் குறிக்க வேண்டும். விரைவில் பட்டமளிப்பு விழா நடத்தப்படும் என்று நானும் எதிர்பார்க்கிறேன். சிண்டிகேட் உறுப்பினர்களை மேடை ஏற்றுவது தவறில்லை. விழாவில், தான் பேசுவதா வேண்டாமா என்பதை ஆளுநர்தான் முடிவு செய்வார்” என்று முடித்துக்கொண்டார்.

யப்பா, அரசியல்வாதிகளே... உங்கள் ஈகோவுக்காக மாணவர்களின் எதிர்காலத்தைக் காவு வாங்கிவிடாதீர்கள்!