அரசுக்கு எதிரான கருத்துகளை மட்டுப்படுத்தத் திட்டம் - 9 மத்திய அமைச்சர்களின் ரகசிய ரிப்போர்ட்!

``உலகம் முழுவதுமிருக்கும் வலதுசாரிக் கட்சிகளோடு நமது அரசும், பா.ஜ.க-வும் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்'' என மத்திய இணையமைச்சர் அனுராக் தாகூர் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசுக்கு எதிராக டிஜிட்டல் தளங்களில் வெளிவரும் விமர்சனங்களை மட்டுப்படுத்துவதற்காக மத்திய அமைச்சர்கள் குழுவிடமிருந்து யோசனைகள் பெறப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதற்கான பரிந்துரையை தயார் செய்ய ஒன்பது மத்திய அமைச்சர்கள் கொண்ட குழு, கடந்த 2020-ம் ஆண்டு மத்தியில், அதாவது கொரோனா உச்சத்திலிருந்த ஜூன், ஜூலை மாதங்களில் ஆரு முறை சந்தித்திருப்பதாகவும், அரசுக்கு எதிராக டிஜிட்டல் தளங்களில் வெளியாகும் விஷயங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக யோசனைகளை வழங்கியிருப்பதாகவும் `தி கேரவன்` செய்தி வெளியிட்டுள்ளது.

யோசனைகளை வழங்கிய அமைச்சர்கள் குழுவில், மத்திய அமைச்சர்கள் முக்தர் அப்பாஸ் நக்வி, ரவிசங்கர் பிரசாத், ஸ்மிருதி இரானி, பிரகாஷ் ஜவடேகர், ஜெய்சங்கர் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இவர்களோடு மத்திய இணை அமைச்சர்களான கிரண் ரிஜிஜு, ஹர்தீப் சிங் பூரி, பாபுல் சுப்ரியோ, அனுராக் தாகூர் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றிருக்கின்றன.
அந்த ரிப்போர்ட்டில் மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, ``ஆதாரமற்ற மற்றும் போலியான தகவல்களோடு அரசுக்கு எதிராக எழுதுபவர்களைக் கையாள, அரசு வழிமுறைகளை வகுக்க வேண்டும்'' என்று தெரிவித்திருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
அதேபோல மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ``இந்தியா மற்றும் உலக அளவில் நமது அரசின் சிந்தனைக்கு ஆதரவாகச் செயல்படக்கூடிய ஊடகவியலாளர்கள், பிரபலங்களின் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். நம் அரசின் சாதனைகளை எழுதக்கூடிய, அரசின் பார்வையை முன்வைக்கக்கூடிய சிறந்த கல்வியாளர்கள், துணை வேந்தர்கள், முன்னாள் வெளியுறவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரை அடையாளம் காண வேண்டும்'' என்று கூறியிருப்பதாகவும் அந்த ரிப்போர்ட்டில் சொல்லப்பட்டிருக்கிறது.

மத்திய இணையமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ``அரசுக்கு ஆதரவாக உள்ள ஊடகவியலாளர்கள், அவர்கள் தற்போது பணியில் இல்லாமல் இருந்தாலும், அவர்களைப் பயன்படுத்த வேண்டும்'' என்று தெரிவித்திருக்கிறார். மத்திய இணையமைச்சர் அனுராக் தாகூர், ``உலகம் முழுவதுமிருக்கும் வலதுசாரிக் கட்சிகளோடு நமது அரசும், பா.ஜ.க-வும் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்'' என்று கூறியிருப்பதாக அந்த ரிப்போர்ட் சொல்கிறது.
மேலும் அந்த ரிப்போர்ட்டில், ``ஊடகவியல் கற்றுத் தரும் கல்வி நிறுவனங்களோடு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். காரணம், அங்கு பயிலும் மாணவர்கள்தான் நாளை பத்திரிகையாளர்களாக வரவிருக்கின்றனர். இந்தியாவில் செயல்படும் டிஜிட்டல், ஓடிடி ஊடகத் தளங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் கட்டுப்படுத்துவதைத் தவிர்க்க, அந்நிய நேரடி முதலீட்டு அளவை நிர்ணயிக்க வேண்டும்'' என்றும் அமைச்சர்கள் யோசனை தெரிவித்திருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த ரிப்போர்ட் குறித்து மத்திய அமைச்சர்கள் தரப்பிலிருந்து எந்தவொரு விளக்கமும் தெரிக்கவிக்கப்படவில்லை. ஆங்கில ஊடகம் ஒன்று, மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வியிடம் இது குறித்துக் கேள்வியெழுப்பியபோது, ``அந்த ரிப்போர்ட் பற்றி எனக்கு எதுவும் தெரியாது'' என்று கூறியிருக்கிறார்.
அரசுக்கு எதிராக எழுதுபவர்களைக் கண்காணிக்கவும், அவர்களின் கருத்துகளை மட்டுப்படுத்தவும், அரசுக்கு ஆதரவாக எழுதுபவர்களை அடையாளம் காணவும் மத்திய அமைச்சர்கள் யோசனைகள் வழங்கியிருப்பதாக இந்த ரிப்போர்ட்டில் சொல்லப்பட்டிருப்பது, ஊடகவியலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.