அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

சீனாவுக்கு எதிராக ஒன்றிணையுமா உலக நாடுகள்?

ஜி-7 கூட்டமைப்பு நாடுகளின் கூட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜி-7 கூட்டமைப்பு நாடுகளின் கூட்டம்

வூஹானிலிருந்து பரவிய வைரஸ்... ஆதாரங்களைத் திரட்டும் அமெரிக்கா

- தாக்‌ஷாயிணி

கொரோனா வைரஸ் உலக நாடுகளைக் கபளீகரம் செய்துவரும் நிலையில், ஜி-7 கூட்டமைப்பு நாடுகளின் கூட்டம் ஜூன் 11 முதல் 13-ம் தேதி வரை பிரிட்டனில் கூடியது. கொரோனா வைரஸ் தோற்றம் குறித்து ஆராய்வதற்கும், சீனாவுக்கு எதிராகச் சில நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் ஜி-7 நாடுகளின் தலைவர்கள் முடிவெடுத்திருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல்கள்தான், இந்தக் கூட்டத்தைப் பற்றிய பரபரப்பை எகிறவைத்திருக்கிறது.

ஜூன் 16-ம் தேதி நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38.49 லட்சமாக உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் மட்டும் 3.81 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலியாகியிருக்கிறார்கள். உலக நாடுகளின் பொருளாதாரமே பந்தாடப்பட்டிருக்கிறது. 10.1 சதவிகிதம் பொருளாதார வளர்ச்சியை இந்தியா எதிர்நோக்கியிருந்த நிலையில், சமீபத்தில் உலக வங்கி வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, 2022-ம் ஆண்டுக்கான இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 8.3 சதவிகிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. உலக பொருளாதார, சமூக, அரசியல் சூழல்களையே புரட்டிப்போட்ட கொரோனா வைரஸ், சீனாவின் வூஹான் வைரஸ் ஆராய்ச்சி மையத்திலிருந்து வெளியேறியதாகவும், இதைக் கட்டுப்படுத்த சீன அரசு தவறிவிட்டதாகவும் அமெரிக்காவின் சி.ஐ.ஏ., எஃப்.பி.ஐ போன்ற அமைப்புகள் கண்டறிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

எம்மி விருதுபெற்ற மூத்த பத்திரிகையாளர் ஆதம் ஹவுஸ்லீ தனது ட்விட்டர் பதிவில், “சமீபத்தில், சீனாவின் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் சிலரை, எஃப்.பி.ஐ அமைப்பினர் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்திருக்கிறார்கள். அவர்கள் மூலமாக ஏராளமான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. சீனா தெரிந்தே கொரோனா வைரஸைப் பரப்பியதாக இந்திய உளவுத்துறையும் அமெரிக்காவுக்குத் தகவல் சொல்லியிருக்கிறது. இவையெல்லாம் சீனாவுக்குக் கடும் நெருக்கடியைத் தரப்போகின்றன” என்று பதிவிட்டிருக்கிறார்.

இதற்கிடையே, அமெரிக்க அதிபருக்கு அந்த நாட்டின் உளவு அமைப்புகள் அளித்திருக்கும் அறிக்கை ஒன்று பெரிதாகப் பேசப்படுகிறது. அந்த அறிக்கையின் சாராம்சம் இதுதான்... “2012, ஏப்ரல் மாதம் சீனாவின் யுனான் மாகாணத்திலுள்ள மொஜியாங் காப்பர் சுரங்கத்தில், வெளவால்களின் கழிவுகளை அகற்றும் பணியில் சுரங்கத் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அவர்களில் ஆறு பேருக்கு திடீரென மர்மக் காய்ச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டதில் மூன்று பேர் இறந்துவிட்டனர். இதையடுத்து 2012, ஜூலை மாதம் அவசர அவசரமாக மொஜியாங் சுற்றுப்புறப் பகுதிகளில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை சீன அரசு மேற்கொண்டது. 2013, ஏப்ரலில் யுனானில் தாய்லாந்து சுற்றுலாவாசி ஒருவர் மர்மக் காய்ச்சலால் இறந்துபோனார். சுரங்கத் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட அதே உடல் பாதிப்பு அந்த சுற்றுலாவாசிக்கும் ஏற்பட்டது. சீனாவைத் தாக்கும் நோய்ப் பரவல், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை ஒவ்வொரு வருடமும் ஆவணமாக வெளியிடும் சீன அரசு, இந்த இரு சம்பவங்களைப் பற்றி எங்கும் குறிப்பிடவில்லை. மொஜியாங் காப்பர் சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸுக்கு `RaTG13’ என்று பெயரிட்ட சீன அரசு, அந்த வைரஸ் பற்றிய ரகசிய ஆய்வுகளை மேற்கொள்ள ஆரம்பித்தது.

குன்மிங் மருத்துவப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் லீ சூ என்பவர், ‘சார்ஸ் நோய் போன்றதொரு வைரஸ் தொற்றால்தான், மொஜியாங் சுரங்கத் தொழிலாளர்கள் இறந்து போனார்கள்’ என்று 2013 இறுதியில் ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்தார். RaTG13 வைரஸ் ஆய்வுகளை சீனா வேகப்படுத்தியதால், வெளவால் முதல் பன்றிகள் வரை பல்வேறு விலங்குகளிடமிருந்து சுமார் ஒரு லட்சம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆராய்ச்சிகள் நடைபெற்றன. இதில், 181 மாதிரிகளில் ‘சார்ஸ்’ வைரஸின் திரிபு இருப்பது கண்டறியப்பட்டு, அவை வூஹான் வைரஸ் ஆராய்ச்சி மையத்தில் மேல் ஆராய்ச்சி செய்யப்பட்டது. இந்த மையம்தான் பின்னாளில் உலக நாடுகளுக்கே வேட்டுவைக்குமென அப்போது யாரும் நினைத்துப் பார்க்கவில்லை.

வூஹான் ஆராய்ச்சி மையத்தில், RaTG13 வைரஸ் மரபணுக்களைக்கொண்டு பயோ ஆயுதங்கள் உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை சீன மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்துவந்தனர். 2013 முதல் 2019 வரை ஆறு வருடங்களாக நடைபெற்ற இந்த ஆராய்ச்சியில் 2019, ஆகஸ்ட் மாதம் சிக்கல் எழுந்தது. வூஹான் மையத்தில் பணிபுரிந்த நான்கு பேர் திடீர்க் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் இறந்துபோனார்கள். தொடர்ந்து செப்டம்பர், நவம்பர் மாதங்களில் வூஹானில் திடீர்க் காய்ச்சலால் மருத்துவமனையில் சேரும் நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்திருக்கிறது. இந்த வைரஸுக்கு SARS COV-2 என்று பெயரிட்டனர். அந்தச் சமயத்தில், கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறியப் பயன்படும் 40,500 பி.சி.ஆர் கிட்டுகளுக்கு, வூஹான் நகர நிர்வாகம் ஆர்டர் கொடுத்திருக்கிறது. டிசம்பர் முதல் வாரத்தில் சமூக விலகலைக் கடைப்பிடிக்கும்படியும், மாஸ்க் அணியும்படியும் சீன அரசு வூஹான் மக்களை அறிவுறுத்தியிருக்கிறது. மேலும், அவசர அவசரமாக புது உயிரி பாதுகாப்பு, தடுப்பூசிக் கொள்கைச் சட்டங்களையும் சீனா நிறைவேற்றியது.

உலக சுகாதார அமைப்பு 2005-ம் ஆண்டு கொண்டுவந்த ‘சர்வதேச சுகாதார ஒழுங்குமுறை’ விதிகளில் சீனா கையெழுத்திட்டிருக்கிறது. ஒழுங்குமுறை விதி 6-ன் படி, ஒரு நாட்டில் அடையாளம் தெரியாத மர்ம நோய் பரவினாலோ, வைரஸின் தாக்கம் கண்டறியப்பட்டாலோ, 48 மணி நேரத்துக்குள் அது குறித்து விசாரணை செய்து, அடுத்த 24 மணி நேரத்துக்குள் உலக சுகாதார அமைப்புக்கு அந்த நாடு அறிக்கை அளிக்க வேண்டும். ஆனால், ஆகஸ்ட் 2019-ல் கண்டறியப்பட்டு, செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் உச்சம் தொட்ட ஒரு வைரஸ் பாதிப்பை, டிசம்பர் 31-ம் தேதிதான் உலக சுகாதார அமைப்புக்கு சீனா தெரியப்படுத்தியது. இது சட்டப்படிக் குற்றம். இடைப்பட்ட காலத்தில், எவ்வளவோ பேர் வூஹானிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கிறார்கள். அவர்களை எந்த நாடும் பரிசோதிக்காததால், அந்தந்த நாடுகளில் நோய் பரவியிருக்கலாம். உலக சுகாதார அமைப்புக்குத் தகவல் தெரிவித்த பிறகுகூட, வூஹானிலிருந்து சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு சீனா தடை செய்யவில்லை. தெரிந்தே மற்ற நாடுகளுக்கும் வைரஸ் பரவட்டும் என்று சீன அரசு முடிவெடுத்ததைத் தான் இந்த நடவடிக்கைகள் காட்டுகின்றன” என்று பகீர் தகவல்களுடன் நீள்கிறது அந்த அறிக்கை!

சீனாவின் ஷாங்காய் பொது சுகாதார மையத்தின் பேராசிரியரான ஜாங் யாங்சென் என்பவர், கொரோனா வைரஸின் மரபணு பற்றிய தகவல்களைக் கடந்த ஜனவரி 11-ம் தேதி இணையத்தில் பதிவேற்றம் செய்தார். இந்த கொரோனா வைரஸின் மரபணுவும், RaTG13 வைரஸின் மரபணுவும் 96 சதவிகிதம் ஒத்துப்போயிருப்பதைச் சில ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து ‘ஷாக்’ அளித்தனர். இதையடுத்து, வூஹான் ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சி செய்யப்பட்ட RaTG13 வைரஸ்தான் கொரோனா வைரஸாக உருமாறிப் பரவுகிறது என்ற குற்றச்சாட்டு சமூக ஊடகங்களில் பரவியது. சுதாரித்துக்கொண்ட சீன அரசு, ‘இந்த வைரஸ் வெளவாலிலிருந்து பரவியதாகத்தான் எங்கள் விசாரணையில் தெரியவருகிறது. தவிர, அமெரிக்கா குற்றம்சாட்டுவதுபோல, 2019, ஆகஸ்ட் மாதம் வூஹான் மையத்தில் பணிபுரிந்த யாரும் நோய்த் தாக்குதலுக்குப் பலியாகவில்லை’ என்று விளக்கம் அளித்திருக்கிறது.

இந்த விவகாரங்கள் பலவும் ஜி-7 மாநாட்டில் பேசப்பட்டிருக்கின்றன என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள். ஆனாலும், சீனாவைக் கூண்டில் ஏற்றுவதற்கான வலுவான ஆதாரங்கள் இன்னும் திரட்டப்படவில்லை என்று தெரிகிறது. அதனாலேயே ‘சீனாவுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்’ என்று மட்டும் அழைப்பு விடுத்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். ஜி-7 நாடுகள் கூட்டமைப்பு வெளியிட்டிருக்கும் கூட்டறிக்கையில், சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் முஸ்லிம்கள் மீது நிகழும் மனித உரிமை மீறல்களைக் கண்டித்தும், கொரோனாவின் தொடக்கம் குறித்து விரிவான விசாரணை நடத்த சீனாவை ஒத்துழைக்கக் கோரியும் குரல் எழுப்பப்பட்டிருக்கிறது. சீனாவின் ‘பெல்ட் அண்ட் ரோடு’ திட்டத்துக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான ‘பில்டு பேக் பெட்டர் வேர்ல்டு’ என்கிற மிகப்பெரிய கட்டுமானத் திட்டத்துக்கும் ஜி-7 நாடுகள் தயாராகின்றன. இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசிய இந்திய பிரதமர் மோடி, “சர்வாதிகாரத்துக்கு எதிராக இந்தியா எப்போதும் துணை நிற்கும்” என்று சொல்லியிருக்கிறார். இந்த சர்வதேச அரசியல் வெட்டாட்டத்தில், கொரோனா பரவல் பற்றிய உண்மைகள் வெளிவருகின்றனவா என்பதைப் பார்ப்போம்.

சீனாவுக்கு எதிராக ஒன்றிணையுமா உலக நாடுகள்?
சீனாவுக்கு எதிராக ஒன்றிணையுமா உலக நாடுகள்?
சீனாவுக்கு எதிராக ஒன்றிணையுமா உலக நாடுகள்?
சீனாவுக்கு எதிராக ஒன்றிணையுமா உலக நாடுகள்?