திருநெல்வேலிலருந்து வந்து பிரச்னை பண்றீங்களா? - உடைந்த மண்டை.. கிழிந்த சட்டை... ரணகளமான பவன்

தான் எவ்வளவோ சொல்லியும் கூட்டம் கலையாததால் ஆத்திரமடைந்த கே.எஸ்.அழகிரி, போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவரின் முதுகில் ஓங்கி அடித்தா
மண்டை உடைப்பு, சட்டைக் கிழிப்பு, உருட்டுக்கட்டை அடிதடி என தன் இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கிறது சத்தியமூர்த்தி பவன். காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவர் ஜெயக்குமாருக்கு எதிராக நடந்த போராட்டத்தில், சத்தியமூர்த்தி பவனே ரத்தபூமியாக மாறியிருக்கிறது. ஜெயக்குமாருக்கு எதிராகப் போராட்டத்தைத் தூண்டியதாக நாங்குநேரி எம்.எல்.ஏ ரூபி மனோகரனைக் கட்சியிலிருந்து நீக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. பெரிய ட்விஸ்ட்டாக, “இந்த அடிதடிப் பிரச்னைக்கு அடிப்படைக் காரணமே கே.எஸ்.அழகிரியின் ஆடுபுலி ஆட்டம்தான்” என்கிறார்கள் கதர்ச் சட்டைகள். என்னதான் நடக்கிறது பவனில்?

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், மாவட்டத் தலைவர்கள், மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நவம்பர் 15-ம் தேதி நடைபெற்றது. மூத்த நிர்வாகிகள் வருவதற்கு முன்னதாகவே, மாலை 4 மணியளவில் ரூபி மனோகரனின் ஆதரவாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் பவனில் குழுமிவிட்டனர். சிறிது நேரத்திலேயே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி காரில் உள்ளே நுழைந்தார். அவரை முற்றுகையிட்ட ரூபி மனோகரனின் ஆதரவாளர்கள், ‘‘திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுகிறார். நிர்வாகிகள் நியமனத்தில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்திருக்கின்றன. அவரால் நியமிக்கப்பட்ட நாங்குநேரி வட்டாரத் தலைவர் முத்துகிருஷ்ணன், களக்காடு வட்டாரத் தலைவர் பிராங்ளின் பாலாசிங் ஆகியோர் கட்சிக்கு விரோதமாகச் செயல்படுகிறார்கள். இவர்கள் அனைவரையும் உடனடியாக மாற்ற வேண்டும்” என்று கோஷமிட்டனர்.

தான் எவ்வளவோ சொல்லியும் கூட்டம் கலையாததால் ஆத்திரமடைந்த கே.எஸ்.அழகிரி, போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவரின் முதுகில் ஓங்கி அடித்தார். இதில், டென்ஷனான ரூபி மனோகரனின் ஆதரவாளர்கள், கே.எஸ்.அழகிரிக்கு எதிராகவும் கோஷம் எழுப்பத் தொடங்கினார்கள்.
பின்னர், அவர்களிடமிருந்து விலகி, தனது ஆதரவாளர்கள் துணையுடன் சத்தியமூர்த்தி பவனுக்குள் சென்றார் கே.எஸ்.அழகிரி. ஆனாலும், வாசலில் குழுமியிருந்த கூட்டம் கலையவில்லை. இதனால் பவனில் போலீஸ் பட்டாளம் குவிக்கப்பட்டது.
இரவு 8 மணிக்கு, ஆலோசனைக் கூட்டத்தை முடித்துக்கொண்டு வெளியே வந்தார் அழகிரி. அவரை முற்றுகையிட்டு ரூபி மனோகரனின் ஆதரவாளர்கள் மீண்டும் கோஷம் எழுப்பினார்கள். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, சத்தியமூர்த்தி பவனின் கிரில் கதவுகள் இழுத்து மூடப்பட்டன. திடீரென அங்கு வந்த மாநில எஸ்.சி - எஸ்.டி பிரிவுத் தலைவர் ரஞ்சன் குமார், கே.எஸ்.அழகிரியை மீட்டு, பாதுகாப்பாக வெளியே அனுப்பிவைத்தார். அதற்குப் பிறகு நடந்த அடிதடியால் சத்தியமூர்த்தி பவனே ரணகளமானது.

ரூபி மனோகரனின் ஆதரவாளர்களை, ‘திருநெல்வேலிலருந்து வந்து சென்னையில பிரச்னை பண்றீங்களா?’ என உருட்டுக் கட்டையால் விரட்டி விரட்டித் தாக்கினார்கள் ரஞ்சன் குமாரின் ஆதரவாளர்கள். பதிலுக்கு ரூபியின் ஆட்களும் தாக்க ஏரியாவே அல்லோல கல்லோலப்பட்டது. இதில், களக்காடு நகராட்சி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜோஷ்வா, கட்சிக்காரர்கள் டேனியல், ராபர்ட் உள்ளிட்டோர் படுகாயமடைந்தனர். அதன் பிறகே போலீஸ் உள்ளே புகுந்து இரு தரப்பினரையும் பிரித்துவிட்டது. சம்பவம் தொடர்பாக யாரும் புகாரளிக்காததால், போலீஸாரால் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. ஆனால், கட்சிரீதியாக ரூபி மனோகரன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி ஜெயக்குமார் தரப்பு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.

இந்த அடிதடி விவகாரம் தொடர்பாக காங்கிரஸின் மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “மாநிலத் தலைவர் பதவிக்கு ஜோதிமணி, செல்லகுமார், கார்த்திக் சிதம்பரம், ரூபி மனோகரன் என ஒரு டஜன் பேர் முட்டி மோதுகிறார்கள். இவர்களில், மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், பொதுச்செயலாளர் வேணுகோபால் இருவரின் மூலமாக ரூபி மனோகரன் தீவிரமாக முயல்கிறார். ஆனால், 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரை பதவியை விட்டுத்தர கே.எஸ்.அழகிரி தயாராக இல்லை. அதனால்தான், தனக்கு எதிராக மாநிலத் தலைவர் பதவிக்குக் காய்நகர்த்துபவர்களுக்கு கட்சிரீதியாகக் குடைச்சல் கொடுக்கிறார் அவர். ஆடுபுலி ஆட்டம் ஆடி ஒவ்வொரு காயாக வீழ்த்தப் பார்க்கிறார். ரூபி மனோகரனுக்கு திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் மூலமாக கே.எஸ்.அழகிரி குடைச்சல் கொடுப்பதுதான் இவ்வளவு பிரச்னைக்கும் காரணம். புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை, சத்தியமூர்த்தி பவனில் இதுபோல ஏராளமான ஆக்ஷன் காட்சிகளைப் பார்க்கவேண்டியிருக்கும்” என்றனர்.

வரும் நவம்பர் 24-ம் தேதி கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்குழு கூடவிருக்கிறது. அன்றைய தினம், ரூபி மனோகரன்மீது நடவடிக்கை எடுக்கத் தீவிரமாகிறது கே.எஸ்.அழகிரி தரப்பு. சம்பவத்தை, “இது சாதாரணமாகக் கட்சியில் நடக்கும் நிகழ்வுதான்” என்று கடந்துபோகச் சொல்கிறார் ஒழுங்கு நடவடிக்கைக்குழுவின் தலைவர் கே.ஆர்.ராமசாமி. அவர்களுக்கு இது சாதாரணமான நிகழ்வுதான்.
சண்டையில் சட்டையைக் கிழித்துக்கொண்டு, காதிபவனில் புதுச் சட்டை வாங்க வரிசையில் நிற்கும் கலாசாரத்துக்கு காங்கிரஸ் மீண்டும் திரும்பியிருப்பதுதான் இவர்களின் சமீபத்திய சாதனை!

“அகில இந்திய தலைமையை பயமுறுத்துகிறார் அழகிரி!”
சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த வன்முறை குறித்து காங்கிரஸ் மாநிலப் பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ-விடம் கேட்டதற்கு, “வட்டாரத் தலைவர்கள் நியமனம் தொடர்பாக தலைமையிடம் முறையிட வந்தவர்கள், எனது தொகுதியைச் சேர்ந்தவர்கள் என்ற வகையில் சென்னையில் என்னையும் வந்து சந்தித்தார்கள். இது தவிர, நடந்த சம்பவத்துக்கும், எனக்கும் எந்தவிதத்திலும் தொடர்பு கிடையாது. ஆனால், நான்தான் அவர்களை அழைத்து வந்ததாகக் குற்றம்சாட்டி, என்னைக் கட்சியைவிட்டு நீக்கும் முயற்சி நடக்கிறது.
மாவட்டத் தலைவர்களுக்கு என்ன நடந்தது என்பதே தெரியாத நிலையில், அவர்களை அவசரமாக வரவழைத்து, என்னை நீக்கக் கோரி கையெழுத்து வாங்கவேண்டிய அவசியம் என்ன... இதன் பின்னணியில் பெரிய அரசியல் இருப்பதாகச் சந்தேகிக்கிறேன். தன்னை மேலும் சில வருடங்களுக்கு மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து மாற்றக் கூடாது என அகில இந்திய தலைமையை நிர்ப்பந்திக்கவே என்மீது நடவடிக்கை என்ற அஸ்திரத்தை மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி பயன்படுத்துகிறார். கட்சித் தலைமையை பயமுறுத்தும் அவரது நடவடிக்கையாக இதைக் கருதுகிறேன்” என்றார்.

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரிடம் பேசியபோது, “தேர்தல் நடத்தும் அலுவலரின் முன்னிலையில் வட்டாரத் தலைவர் தேர்தல் நடந்து, அதில் வெற்றிபெற்றவர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். தேர்தலில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. தேர்தல் நடந்தபோது யாரும் எந்தப் புகாரையும் தெரிவிக்கவில்லை. இப்போது சிலர் திட்டமிட்டு வன்முறையைத் தூண்டிவிட்டிருக்கிறார்கள். இது தொடர்பாக கட்சித் தலைமை விசாரித்துவருவதால், வேறு எதையும் பேச விரும்பவில்லை” என முடித்துக் கொண்டார்.