கட்டுரைகள்
Published:Updated:

இனிமேல்தான் தேவை இன்னும் கவனம்!

இனிமேல்தான் தேவை இன்னும் கவனம்!
பிரீமியம் ஸ்டோரி
News
இனிமேல்தான் தேவை இன்னும் கவனம்!

வயதானவர்கள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற வாழ்வியல் நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள்மீது அதிக கவனம் வையுங்கள்.

ஒரு வழியாக ஊரடங்கு முடிவுக்கு வந்திருக்கிறது. மாவட்டங்கள் கடந்தும் பேருந்துகள் இயங்கத் தொடங்கிவிட்டன. மக்கள் படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டார்கள். ஆனால் தளர்வு, ஊரடங்குக்குத்தானே தவிர கொரோனாவுக்கு இல்லை. தொற்றுப்பரவலில் இந்தியா உலகத்திலேயே இரண்டாவது நிலைக்குச் சென்றுவிட்டது. தமிழகத்தில் சராசரியாக நாளொன்றுக்கு 5,000 தொற்றாளர்கள் கண்டறியப்படுகிறார்கள். 100 பேர் உயிரிழக்கிறார்கள். அடுத்தடுத்த மாதங்களில் இன்னும் நிலை மோசமாகலாம் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.இதுதான் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம். நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்? வழிகாட்டுகிறார் சமூகநல மருத்துவ நிபுணர் சு.ஹரிஹரன்.

முதலில் பொதுவான சில ஆலோசனைகள்.

 தேவையில்லாமல் வெளியே செல்வதைத் தவிருங்கள். குறிப்பாக குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்வதை இன்னும் கொஞ்ச காலத்துக்குத் தவிர்க்கலாம்,

மாஸ்க் அணிவது மிகமிக அவசியம். தொற்றுப்பரவலில் மற்றவர்களிடமிருந்து உங்களைக் காப்பதோடு உங்களிடமிருந்து மற்றவர்களையும் அது காப்பாற்றும்.

சமூக இடைவெளியை அவசியம் கடைப்பிடிக்கவேண்டும்.

கூட்டம் அதிகமிருக்கும் இடங்களைத் தவிருங்கள். மார்க்கெட் செல்வதைக்கூட கொஞ்சகாலத்துக்குத் தவிர்க்கலாம். வீட்டருகே உள்ள கடைகள், வீட்டுக்கே வரும் வியாபாரிகளிடம் தேவையான பொருள்களை வாங்கலாம்.

வயதானவர்கள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற வாழ்வியல் நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள்மீது அதிக கவனம் வையுங்கள்.

 வீட்டு வாசலில் ஒரு வாளியில் மஞ்சள், வேப்பிலை கலந்த தண்ணீரை வைத்துக் கொள்ளுங்கள். வெளியில் சென்று வந்தவுடன் கைகால்களைக் கழுவிவிட்டு வீட்டுக்குள் செல்லுங்கள்.

 வெளியில் கொண்டு செல்லும் பை, வாலெட், ஹெல்மெட் போன்ற பொருள்களை வைப்பதற் கென்று பொதுவான ஓரிடத்தை ஒதுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அந்தப் பொருள்களை யாரையும் தொட அனுமதிக்காதீர்கள். மாதத்தில் ஒருநாள் சானிட்டைசர் போட்டு அவற்றைச் சுத்தம் செய்யலாம்.

வெளியிலிருந்து வந்ததும் பொருள்களை அதன் இடத்தில் வைத்துவிட்டு நேராகக் குளியலறைக்குச் சென்று உடுத்தியிருக்கும் ஆடைகளை நீங்களே துவைத்து, குளித்துவிட்டுப் பிறகு வெளியில் வந்து இயல்புபோல இருக்கலாம்.

இனிமேல்தான் தேவை இன்னும் கவனம்!

அலுவலகம் செல்கிறீர்களா... இந்த 4 விஷயம் முக்கியம்!

 பயோ மெட்ரிக் வருகைப்பதிவைத் தவிர்ப்பது நல்லது. தவிர்க்க வியலாத பட்சத்தில் பதிவு செய்வதற்கு முன்னும் பின்னும் கைகளை சானிட்டைசர் கொண்டு சுத்தம் செய்யவேண்டும். லிப்ட்களைத் தவிர்த்துப் படிகளைப் பயன்படுத்துங்கள்.

 இருக்கைக்கு அருகிலேயே சிறிய சானிட்டைசர் பாட்டிலை வைத்துக் கொள்ளுங்கள்.

கொஞ்சநாளைக்கு வெளிச் சாப்பாட்டைத் தவிர்ப்பது நல்லது. காபி, தண்ணீரைக்கூட வீட்டிலிருந்து கொண்டு வந்துவிடுங்கள். அலுவலகத்தில் சாப்பிடும் போது இடைவெளி விட்டு அமர்ந்து சாப்பிடுங்கள்.

 அலுவலகத்தில் இருக்கும்போதும், அமரும்போதும் சமூக இடைவெளி, மாஸ்க் அவசியம்.

இனிமேல்தான் தேவை இன்னும் கவனம்!

வாடகைக் காரில் செல்பவர்களுக்கு

 டிரைவரும் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என்பதை வலியுறுத்துங்கள்.

 காரில் செல்லும்போது ஜன்னல்கள் திறந்திருக்கட்டும். ஏ.சி பயன்படுத்த வேண்டாம். காரில் ஏறும் முன்னும் இறங்கிய பிறகும் சானிட்டைசரில் கைகளைச் சுத்தம் செய்துகொள்ளுங்கள்,

பேருந்துப் பயணமா, கவனம்!

பேருந்தில் எதையும் தொடாமல் இருப்பது பாதுகாப்பு. இருமல், தும்மல் இருப்பவர்கள் பேருந்துப் பயணத்தைத் தவிர்ப்பது எல்லோருக்கும் நல்லது.

இருக்கைக்கு ஒருவர் மட்டுமே அமரவேண்டும். ஜன்னல்களைத் திறந்து வைத்திருக்க வேண்டும்.

 மோட்டல் உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

வாய், மூக்கு இரண்டையும் மாஸ்க் சரியாக மூடியிருக்க வேண்டும்.

மருத்துவமனை செல்பவர்கள் கவனத்துக்கு!

 அவசரத் தேவை என்றால் தவிர, மருத்துவமனை செல்லாமல் தவிர்ப்பது நல்லது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்ப்பதையும் தவிர்க்கவேண்டும்.

சு.ஹரிஹரன்
சு.ஹரிஹரன்

ஷாப்பிங் மால் செல்பவர்களுக்கு!

 முண்டியடித்துக்கொண்டு செல்லாதீர்கள். குறைந்தது 6 அடியேனும் இடைவெளி தேவை. தேவைக்கு மேல் சிறிதுநேரம்கூட உள்ளே இருக்க வேண்டாம்.

கையில் எப்போதும் சிறு சானிட்டைசர் பாட்டில் வைத்திருங்கள். அவ்வப்போது கைகளைச் சுத்தம் செய்துகொள்ளுங்கள்.

ஜிம்முக்குச் செல்பவர்கள் செய்ய வேண்டியவை!

 சிறு சிறு குழுக்களாகப் பிரித்து உடற்பயிற்சி செய்ய அனுமதிக்கலாம்.

 உடற்பயிற்சி இயந்திரங் களுக்கு இடையே 6 அடி இடைவெளி அவசியம்.

 ஒரு குழு உடற்பயிற்சி முடித்துச் சென்றவுடன் அனைத்து இயந்திரங்களையும் கிருமி நாசினியால் சுத்தப்படுத்த வேண்டும்.

 உடற்பயிற்சிக்கு நடுவில் அவ்வப்பொழுது சானிட்டை சரால் கைகளைச் சுத்தப்படுத்த வேண்டும்.

 சளி, இருமல், காய்ச்சல் இருப்பவர்களை, ஜிம்முக்குள் அனுமதிக்கக்கூடாது.

மாஸ்க்கை முறையாகப் பயன்படுத்துங்கள்!

 மாஸ்கின் முன்பகுதியைக் கைகளால் தொடவே கூடாது.

பக்கவாட்டில் இருக்கும் கயிற்றைக் கொண்டே அணியவேண்டும். கழற்ற வேண்டும்.

 மாஸ்க்கால் மூக்கு, வாய்ப் பகுதிகள் முழுவதுமாக மூடியிருக்க வேண்டும்.

 மாஸ்க்கைத் தனித் தனியாகப் பராமரிக்க வேண்டும்.

 தகுந்த கால வரையறைக்குள் மாஸ்க்கை மாற்ற வேண்டும்.

 மாஸ்க்கைத் துணிகளோடு சேர்த்துத் துவைக்கக்கூடாது. தனியாக ஊறவைத்துத் துவைக்க வேண்டும்.

உணவில் கவனம்!

 சத்தான உணவுதான் கொரோனா வராமல் தடுக்க உதவும் மருந்து. பருப்பு, பயறு வகைகளை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். முட்டையும் நல்லது. மாலை சுண்டல் வகைகளைச் சாப்பிடலாம். முளைக்கட்டிய பயிர் நல்லது. மஞ்சள், மிளகு, இஞ்சி, பூண்டு ஆகியவை எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

 கபசுரக் குடிநீர் மற்றும் நிலவேம்புக் குடிநீரை குறிப்பிட்ட இடைவெளியில் அருந்த வேண்டும்.

எதார்த்த நிலையை உணர்ந்து சுயக் கட்டுப் பாட்டோடும் பொறுப்பு ணர்வோடும் இருந்தால் கொரோனா சங்கிலியை அறுக்கலாம். நம்மையும் பாதுகாத்துக்கொள்வதோடு மற்றவர்களுக்கும் அரணாக இருக்கலாம்!