கட்டுரைகள்
Published:Updated:

பணியில், தொழிலில் முன்னேற்றம் வேண்டுமா?! செய்ய வேண்டியவை செக் லிஸ்ட்!

பணியில், தொழிலில் முன்னேற்றம் வேண்டுமா?!
பிரீமியம் ஸ்டோரி
News
பணியில், தொழிலில் முன்னேற்றம் வேண்டுமா?!

மற்றவர்கள் நம்மை நம்பி ஒரு வேலையை, பொறுப்பை ஒப்படைக்க, நமது நேர மேலாண்மை மிக முக்கியம்.

புத்தாண்டு பிறக்கும்போது, ஆரோக்கியம் முதல் பொருளாதாரம் வரை அனைவருமே தங்களைப் புதிய வருடத்தில் மேம்படுத்திக்கொள்ள, சில பழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று உறுதி ஏற்பார்கள். அந்த வகையில் பணியில், தொழிலில் நம்மைச் சிறப்பாக வெளிப்படுத்த நாம் கடைப்பிடிக்க வேண்டிய சுயமுன்னேற்றப் பழக்கங்கள் பற்றிய ஆலோசனைகளை வழங்குகிறார், திருச்சி, ஷீகா மனநல ஆலோசனை மையத்தின் நிறுவனர் காயத்ரி பாண்டியராஜ்.

நம்மை உணர்வது

‘‘வேலை/தொழிலில் நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்று முதலில் உணர வேண்டும். நம் திறன், விருப்பம் அடிப்படையிலான வேலையில் ஈடுபட்டுள்ளோமா, நம் வயதுக்கு ஏற்ற முன்னேற்றத்தில் இருக்கிறோமா, தேங்கியிருக்கிறோமா, மாற்றங்கள் தேவையா, எனில் அது என்ன, அதை எப்படிச் செயல்படுத்துவது... இந்த சுயபரிசீலனை செய்துகொண்டு தேவையான முடிவுகள், மாற்றங்களுடன் பயணத்தைத் தொடரவும்.

பணியில், தொழிலில் முன்னேற்றம் வேண்டுமா?!
செய்ய வேண்டியவை செக் லிஸ்ட்!

உணர்வுகளைக் கையாள்வது

பணியிடத்தில் நாம் நம் உணர்வுகளைக் கையாள்வதில், வெளிப்படுத்துவதில் சரியாக இருக்கிறோமா, அல்லது, அதனால் பிரச்னை களை ஏற்படுத்துகிறோமா என்று சிந்தித்துப் பார்க்கவும். தேவையில்லாமல் மற்றவர்களிடம் கோபப்படுவது, அவசியமில்லாமல் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடுவது உள்ளிட்ட மாற்ற வேண்டிய பழக்கங்களைக் குறித்துவைத்து மாற்றிக்கொள்ளவும். குழுவாக வேலைசெய்ய வேண்டிய இடத்தில், ‘நான் இப்படித்தான்’ என்று தனித்து நிற்காமல் சூழலை அனுசரித்துச் செல்ல வேண்டியது முக்கியம். ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்வது முதல் அதற்கு வினையாற்றுவது வரையான இந்த உணர்வுசார் நுண்ணறிவு (Emotional Intelligence) மிக முக்கியம்.

தன்னம்பிக்கை

அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கையும் கூடாது; அது குறையவும் கூடாது. ஒரு பணி நமக்கு வழங்கப்படும்போது, நிச்சயமாக இதை நம்மால் குறித்த நேரத்தில் முடித்துவிட முடியும் என்று நம்பி, அதற்கான செயல்களைத் தொடங்க வேண்டும். அப்படி நினைத்தபடியே முடிக்க முடிக்க, தன்னம்பிக்கை தானாக அதிகரிக்கும். அதே நேரம், ‘என்னைவிட யாரும் இந்த வேலையைச் சிறப்பாகச் செய்ய முடியாது’, ‘நான் இல்லையென்றால் இந்த வேலை நடக்காது’ என்ற அதீத தன்னம்பிக்கை வளர்ச்சிக்கான அறிகுறி இல்லை. இந்த உலகில் எல்லோருக்கும் உடனுக்குடன் மாற்று உள்ளது என்பதே உண்மை.

தகவல் பரிமாற்றத் திறன்

வளர்ச்சிக்கு மிக முக்கியமான திறன் இது. ஒரு விஷயத்தை நாம் எவ்வாறு வெளிப்படுத்துகிறோம் என்பதில் பல கூறுகள் உள்ளன. முழு விஷயத்தையும் சுருக்கமாகச் சொல்வது (Conciseness), பேசும்போது வெளிப்படும் நம்பிக்கை (Confidence) மற்றும் உடல்மொழி (Body language), ஓர் உரையாடலைத் திறந்த மனப்பான்மையுடன் எதிர்கொள்வது (Open-mindedness), மற்றவர் சொல்வதை பதில் சொல்வதற்காகக் கேட்காமல் புரிந்துகொள்வதற்காகக் கேட்பது (Listening), மரியாதை (Respect), மெயில், வாட்ஸப் என சரியான தகவல் பரிமாற்ற முறையைப் பயன்படுத்துவது (Using the correct medium) என இவற்றையெல்லாம் மனதில் கொள்ளவும்.

பணியில், தொழிலில் முன்னேற்றம் வேண்டுமா?!
செய்ய வேண்டியவை செக் லிஸ்ட்!

நேர மேலாண்மை

மற்றவர்கள் நம்மை நம்பி ஒரு வேலையை, பொறுப்பை ஒப்படைக்க, நமது நேர மேலாண்மை மிக முக்கியம். இதற்கு முக்கியமான எதிரி, முடிக்க வேண்டிய வேலையை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் பழக்கம் (Procrastination). பதிலாக, எந்த வேலை சிரமமாகத் தோன்றுகிறதோ அதை முதலாவதாக முடித்துவிட்டால் மனதில் பதற்றம், இறுக்கம் தளரும். அடுத்தடுத்த வேலைகள் அதே வேகத்தில் முடியும்.

இலக்கு

சிலர் மிகச் சிறப்பாக வேலை செய்வார்கள். ஆனால், ‘இன்னும் இரண்டு/மூன்று வருடங்களில் என் வருமானம்/பதவி இப்படி உயர்ந்திருக்க வேண்டும்’ என்பதுபோல எந்த இலக்கும் இல்லாமல் உழைப்பைத் செலுத்திக்கொண்டிருப்பார்கள். அது தவறு. ‘இன்னும் ஒரு வருடத்தில் என் யூடியூப் சேனலில் இத்தனை சப்ஸ்கிரைபர்களை உயர்த்துவேன்’, ‘இன்னும் 5 வருடங்களில் எங்கள் அலுவலகத்தின் போர்டில் நான் இடம்பிடிப்பேன்’ என்று இலக்கு நிர்ணயித்து அதை நோக்கி முன்னேறவும்.

இந்த அடிப்படைகளில் உங்களை சரிசெய்து சீர்படுத்திக்கொண்டால், உங்கள் சுயமுன்னேற்றம் ஆரம்பித்துவிட்டது... வாழ்த்துகள்!