ஆசிரியர் பக்கம்
தொடர்கள்
தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

நீங்களும் நம்பர்1 ஆகலாம்... உங்கள் வெற்றிக்கு வழிகாட்டும் ‘ஸ்கில் டெவலப்மென்ட்’!

ஸ்கில் டெவலப்மென்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்கில் டெவலப்மென்ட்

முடிவெடுக்கும் திறன் என்பது, நமது நிறுவனத்தை அல்லது நமது எதிர்காலத்தை, குடும்பத்தை மேம்படுத்த உதவும். இதன்மூலம் நம் வளர்ச்சியிலும் நம்மைச் சுற்றி இருப்பவர்களின் வளர்ச்சியிலும் உதவ முடியும்

ஸ்கில் டெவலப்மென்ட்... அதாவது திறன் வளர்ச்சி... இந்த வார்த்தையை கடந்த சில வருடங்களில் அடிக்கடி பல இடங்களில் கேள்விப்படுகிறோம். அதென்ன திறன் வளர்ச்சி? நம் வாழ்வியலுக்கு, நம் முன்னேற்றத்துக்கு, நம் லட்சியத்தை அடைவதற்கு, நம்மை நல்ல மனிதராக மாற்றிக்கொள்வதற்கு என அனைத்துக்கும் அடிப்படை அது. நம் வாழ்க்கைமுறையில் சின்னச் சின்ன விஷயங்களை நாம் மாற்றிக் கொள்ளும்போது வெற்றி நமக்கு எளிதில் வசப்படும். இப்படி அனைவரையும் வெற்றியை நோக்கி உந்தித்தள்ளும் திறன் வளர்ச்சி குறித்து இந்த இதழில் நம்மிடம் விவரிக்கிறார் திருச்சியைச் சேர்ந்த `ஷிகா' மனநல ஆலோசனை மையத்தின் நிறுவனர் காயத்ரி பாண்டியராஜ்.

நீங்களும் நம்பர்1 ஆகலாம்... உங்கள் வெற்றிக்கு வழிகாட்டும் ‘ஸ்கில் டெவலப்மென்ட்’!
tumsasedgars

திறன் வளர்ச்சிக்கு இவையெல்லாம் அடிப்படை!

சுய விழிப்புணர்வு (Self Awarness)

நமக்கு முதலில் நம்மை பற்றிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். நமக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது, ஏன் கோபப்படுகிறோம், ஏன் சிரிக்கிறோம், எவை நம்மை சந்தோஷப்படுத்துகின்றன, ஏன் சந்தேகம் வருகிறது என பலவற்றையும் ஆராய்ந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இந்த விழிப்புணர்வு உங்களைத் தெளிவுபடுத்தும். இந்த சுய விழிப்புணர்வுக்குள் பல விஷயங்கள் அடங்கியிருந்தாலும் அவற்றில் சில நம்முடைய குடும்பம், பணிச்சூழல், பழகும் இடம் என அனைத்திலும் உங்களை தனித்தன்மையுடனும், மதிப்புடனும் இருக்க வைக்கும். இது திறன் (Skill), ஆளுமைத்திறன் (Personality), ஆர்வம் (Interest), மதிப்புகள் (Values) என முக்கியமான விஷயங்களை உள்ளடக்கியது.

காயத்ரி பாண்டியராஜ்
காயத்ரி பாண்டியராஜ்

குழு மனப்பான்மை (Team Work)

குழுவின் நோக்கத்தை அடைவதற்காக ஒவ்வொரு குழு உறுப்பினரும் மேற்கொள்ளும் முயற்சிகளின் கூட்டு உழைப்பு குழுப்பணி எனப்படும். குழுப்பணிதான் எந்த அமைப்புக்கும் முதுகெலும்பு.

அப்படியான குழுவில் கருத்துகளைக் கூறவும், நிலைமைகளை அலசவும் திறன் வேண்டும்.

தகவல் பரிமாற்றத் திறன் (Communication Skill)

திறன் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பது தகவல் பரிமாற்றம்தான். இந்தத் திறனை வளர்த்துக்கொள்ளும்போது தனிப்பட்ட முறையிலும், தொழில் வளர்ச்சியிலும் வெற்றிகரமானவராக மாற முடியும். தகவல் பரிமாற்றத் திறனில் பின்வரும் பல துணைத் திறன்களும் அடக்கம்.

நீங்களும் நம்பர்1 ஆகலாம்... உங்கள் வெற்றிக்கு வழிகாட்டும் ‘ஸ்கில் டெவலப்மென்ட்’!
triloks

கேட்டல் (Learning)

நல்ல தகவல் தொடர்பாளராக மாற, நல்ல கவனிப்பாளராக இருப்பது முக்கியம். மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனித்து, முடிந்தால் எழுதி வைப்பதன் மூலம் எதையும் தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

சுருக்கம் (Consiseness)

உங்கள் செய்தியை முடிந்தவரை சில வார்த்தைகளில் தெரிவிக்கவும். சுற்றி வளைத்துப் பேசாமல் நேரடியாக விஷயத்துக்குச் செல்லுங்கள். அதிகமாகப் பேசுவதைத் தவிர்க்கவும். கவனிப்பவர்களைக் குழப்பும்படியான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம்.

நீங்களும் நம்பர்1 ஆகலாம்... உங்கள் வெற்றிக்கு வழிகாட்டும் ‘ஸ்கில் டெவலப்மென்ட்’!
Deepak Sethi

உடல் மொழி (Body Language)

நல்ல உடல் மொழியைப் பயிற்சி செய்வது, கண் தொடர்புகளைப் பயன் படுத்துவது, கை சைகைகளைப் பயன்படுத்துவது மற்றும் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும்போது குரலின் தொனியைப் பார்ப்பது போன்றவை மிக முக்கியம். நட்பான தொனியுடன்கூடிய நிதானமான உடல் நிலைப்பாடு உங்களை அணுக்கமானவர்களாக மாற்ற உதவும். தகவல் தொடர்புகளில் கண் தொடர்பு முக்கியமானது. நீங்கள் உரையாடலில் கவனம் செலுத்துகிறீர்கள் என்பதைக் குறிக்க எதிராளியின் கண்களைப் பாருங்கள். ஆனால், அந்த நபரை முறைப்பது போலப் பார்க்க வேண்டாம்.

நம்பிக்கை (Confidence)

நீங்கள் சொல்வது, மற்றவர்களுடன் தொடர்புகொள்வது என எதிலும் நம்பிக்கையுடன் இருங்கள். நம்பிக்கையுடன் இருப்பது கண் தொடர்பு, நிதானமான உடல் நிலைப்பாட்டைப் பராமரிப்பது மற்றும் சுருக்கமாகப் பேசுவது போன்று எளிதானதுதான். நீங்கள் கூறும் கருத்துகள், கேள்விகள் போல் ஒலிக்காமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். ஆக்ரோஷமாக இருப்பதையும் தவிர்க்கவும்.

திறந்த மனப்பான்மை (Open-Mindedness)

வேறொருவர் சொல்வதை நீங்கள் ஏற்காத சூழ்நிலைகளில், அவர் முதலாளி, சக ஊழியர் அல்லது நண்பர் என யாராக இருந்தாலும், உங்கள் செய்தியை முழுவதுமாகப் பெற முயற்சி செய்வதைவிட அவர்களின் பார்வையில் அணுக வேண்டியது முக்கியம். மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளியுங்கள். உங்களுடன் உடன்படாதவர்களை ஒருபோதும் இழிவுபடுத்தாதீர்கள்.

மரியாதை (Respect)

மற்றவர்கள் சொல்வதை மதித்து, அவற்றை அங்கீகரிப்பது தகவல் தொடர்பின் முக்கிய அம்சம். மரியாதையாக இருப்பது, அவர்கள் சொல்வதை கவனிப்பது, நபரின் பெயரைப் பயன்படுத்துவது, கவனம் சிதறாமல் இருப்பது போன்ற எளிமையான விஷயங்களை கவனித்தல் அவசியம். மற்றவர்களை மதிப்பதன் மூலம், மற்ற நபரால் பாராட்டப்படுவீர்கள். இது மிகவும் நேர்மையான மற்றும் பயனுள்ள உரையாடலுக்கு வழிவகுக்கும்.

நீங்களும் நம்பர்1 ஆகலாம்... உங்கள் வெற்றிக்கு வழிகாட்டும் ‘ஸ்கில் டெவலப்மென்ட்’!
Realpictures

சரியான ஊடகத்தைப் பயன்படுத்துதல் (Using the Correct Medium)

சரியான தகவல் தொடர்பு ஊடகத்தைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். எடுத்துக்காட்டாக, சில விஷயங்களைப் பற்றி மின்னஞ்சல் அனுப்புவதைவிட, நேரில் தொடர்புகொள்வது (பணி நீக்கங்கள், சம்பள மாற்றங்கள் போன்றவை) மிகவும் பொருத்தமானது. இப்படி தகவல் தொடர்புத்திறனில் பல நிலைகள் உள்ளன. இவற்றைச் சரியாகப் பயன்படுத்தும்பட்சத்தில் தொடர்புத்திறன் மேம்படுவதால் நாம் சார்ந்திருக்கும் துறைகளில் பல முன்னேற்ற நிலைகளை அடையலாம்.

பிரச்னையைத் தீர்க்கும் திறன் (Problem Solving)

பிரச்னை ஏற்பட்டதும் அதைத் தீர்ப்பது மட்டும் திறன் இல்லை. முதலில் அந்தப் பிரச்னையை வரையறுங்கள். அதில் தீர்க்கப்பட வேண்டிய விஷயங் களைப் பற்றி பல கோணங்களில் விவாதியுங்கள். பின்பு அதற்கான தீர்வை நோக்கி நகருங்கள். தவிர, அந்தப் பிரச்னையின் மூலம் பாடம் கற்றுக் கொள்ளுங்கள்.

பகுப்பாயும் திறன் (Analytics)

பகுப்பாய்வுத் திறன், நம் வளர்ச்சிக்கான விஷயங்களின் தரவைச் சேகரிக்கவும், ஒழுங்கமைக்கவும், காட்சிப்படுத்தவும் மற்றும் ஒருங்கிணைக்கவும் உங்களை அனுமதிக்கும். பிரச்னைகளைப் பார்க்கவும், அவை தொடர்பான முடிவுகளை எடுக்கவும், செயல்திறனை அதிகரிக்கக்கூடிய தீர்வுகளைக் கண்டறியவும் இந்தத் திறன் உங்களைத் தயார்படுத்துகிறது.

ஆளுமை அல்லது தனிப்பட்ட திறன் (Personality)

தனிப்பட்ட நல்ல திறன்களைக் கொண்டவர்கள் மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதையும் ஒத்துழைப்பதையும் எளிதாக உணர்கிறார்கள். அது உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறவும், முன்னேறவும் உதவும். உறவுகளைப் பராமரிப்பதை எளிதாக்கும். இந்தத் திறன் உண்மையைக் கண்டறிவது (Fact), சிந்திப்பது (Ideas), கருத்தை ஆராய்வது (Concepts), அதைப் பணிகளில் பிரதிபலிப்பது, தீர்க்கமான உணர்வுடன் செயல்படுவது, விவரங்களை அளிப்பது, நிறுவனத்தை இயக்குவது என்று பலவற்றின் ஒத்துழைப்பை உள்ளடக்கியது.

நீங்களும் நம்பர்1 ஆகலாம்... உங்கள் வெற்றிக்கு வழிகாட்டும் ‘ஸ்கில் டெவலப்மென்ட்’!
shylendrahoode

மதிப்புகள் (Values)

தலைமைத்துவம்

தலைமைத்துவம் என்பது பலரும் விரும்பும் விஷயம். ஆனால், நம்முடைய படிப்பு மற்றும் நம்முடைய அனுபவங்கள் மட்டுமே நம்மை அந்தத் தலைமைத் துவத்தில் அமர்த்தி விடாது. அதற்கென சில மென்திறன்கள் தேவைப்படும். குறிப்பாக முன்முயற்சி எடுத்தல் (Take the Initiative). எனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை மட்டும்தான் செய்வேன் என்றில்லாமல், அடுத்தடுத்த பதவிகளுக்குச் செல்வதற்கான முன்முயற்சி எடுத்தல் அல்லது நிர்வாகத்தின் நலனுக்காக பல புதிய விஷயங்களை அறிமுகப்படுத்த மெனக்கெடுதல் போன்றவை உங்களுக் கான தனி மதிப்பை ஏற்படுத்தும்.

நுண்சிந்தனைத் திறன்

அடுத்து, நுண்சிந்தனைத் திறனும் (Critical thinking) முக்கியம். தலைமைத்துவ பண்புடையவர் எப்போதும் பிரச்னை வந்தபின் யோசிப்பவராக இல்லாமல் முன்கூட்டியே யோசிப்பவராக இருப்பார். பிரச்னை மட்டுமல்லாமல் புதிய திட்டங்களை வகுக்கும்போதோ அல்லது யாரையாவது வேலையில் அமர்த்தும்போதோ கண்டிப்பாக நேர்மறையாக மட்டும் இல்லாமல் எதிர்மறை யாகவும், அனைத்து வழிகளிலும் சிந்திக்க வேண்டும். எப்போதும் விழிப்புணர் வுடன், ஏதேனும் எதிர்மறையாக நடந்தால் அதை எதிர்கொள்ளும் திட்டங் களுடனும் இருக்க வேண்டும்.

திறம்பட கேட்டல் (Effective Lis tening)

தலைவராக இருப்பவருக்கு மற்றவர் கருத்தைக் கேட்கும் திறன் இல்லா விட்டால், மற்றவர்களிடமிருந்து கருத்துகளைப் பெற முடியாது. குழு உறுப்பினர்கள் அவரின் திட்டங்களை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியாது.

மற்றவர்களை ஊக்கப்படுத்துதல் (Motivate Others)

உங்களை ஊக்கப்படுத்திக்கொள்வது போல, மற்றவர்களை ஊக்கப் படுத்துவதும் அவசியம். உங்களுடன் பணிபுரிபவர்களின் நிலைமை, அவர்களுக்கு பணியிடத்தில் உள்ள பிரச்னை, அவர் இருக்கும் சூழல் அவருக்கு சரியாக இருக்கிறதா என்பதையெல்லாம் கேட்டறிதல், தொய்வடையாமல் பணிபுரிய அவர்களை ஊக்கப்படுத்துதல் போன்றவை மிக முக்கியம்.

நீங்களும் நம்பர்1 ஆகலாம்... உங்கள் வெற்றிக்கு வழிகாட்டும் ‘ஸ்கில் டெவலப்மென்ட்’!
Deepak Sethi

ஒழுக்கம் (Discipline)

இலக்கை நிறைவேற்ற ஒழுக்கம் தேவை. எந்தத் திட்டத்தையும் நீங்கள் திறம்பட செயல்படுத்த விரும்பினால், உங்களுக்கு ஒழுக்கம் தேவை. நல்ல தலைவராக இருக்க, நீங்கள் சுய ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும். மேலும், உங்கள் குழுவில் உள்ள மற்றவர்களும் ஒழுக்கமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தொடர்ந்து கற்றல் (Continue to Learning)

விஷயங்கள் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் சூழலில், தொடர்ந்து கற்றுக் கொள்வதும் உங்களுக்கு நீங்களே சவால் விடுப்பதும் முக்கியம். மற்ற தலைவர்கள் மற்றும் அவர்களின் குணங்கள், பழக்கவழக்கங்கள் மற்றும் அவர்கள் தொடர்பு கொள்ளும் விதம் ஆகியவற்றை கவனியுங்கள். நீங்கள் அடுத்தவரை காப்பியடிக்க வேண்டியதில்லை என்றாலும், அவர்களின் சில பண்புகளை தேவையிருப்பின் உங்கள் பணியில் பின்பற்றுவதில் தவறில்லை.

மோதலை நிர்வகித்தல் (Handle Conflicts)

கடினமானவர்களை எப்படிக் கையாள்வது, மோதல்களைத் தீர்ப்பது எப்படி என்பதை அறிந்திருக்க வேண்டும். ஓர் ஊழியர் தனது திறனுக்கு ஏற்றவாறு வேலை செய்யவில்லை மற்றும் எதிர்மறையான அணுகுமுறையுடன் இருக்கிறார் எனில், அந்த நபருடன் தனிப்பட்ட முறையில் பேசி, சூழ்நிலையை சமரசத்துக் குள் கொண்டு வர வேண்டும். நேர்மையாகவும் இருக்க வேண்டும். இதற்கு மிகுந்த தைரியம் வேண்டும். ஒரு சிக்கலைச் சுட்டிக்காட்டுவது அல்லது ஒருவரை பணிநீக்கம் செய்வது எளிதானது அல்ல. எனவே, நீங்கள் ஒரு முடிவுக்கு வந்து நடவடிக்கை எடுப்பதற்கு முன், பிரச்னை என்ன என்பதையும் தெரிந்து கொள்ளுதல் அவசியம்.

நீங்களும் நம்பர்1 ஆகலாம்... உங்கள் வெற்றிக்கு வழிகாட்டும் ‘ஸ்கில் டெவலப்மென்ட்’!
PeopleImages

மற்றவர்களுக்கு அதிகாரமளித்தல்(Empower Your Team)

குழு உறுப்பினர்களின் மதிப்பை அங்கீகரிக்கவும், அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளவும், மற்ற குழுவிடமிருந்து கற்றுக்கொள்ள ஊக்கப்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட விஷயங்களில் நிபுணத்துவம் பெற்ற ஒருவரிடமிருந்து உங்களுக்குத் தெரியாத விஷயங்களைக் கற்றுக்கொள்ளுங்கள். குழு உறுப்பினர்களிடம் புதிய யோசனை இருந்தால், ஊக்கப்படுத்துங்கள். அவர்களுக்கு நம்பிக்கையை ஊட்டுங்கள்.

வேலை மற்றும் வீட்டுச் சூழல்

வேலை மற்றும் வீடு இவை இரண்டையும் ஒன்றாக நிர்வகிக்க வேண்டியது என்பது அனைவருக்குமே முக்கியமான திறனாகும். ஆனால் பலரும் அப்படி இரண்டையும் சரியாக நிர்வகிப்பதில்லை என்பதே உண்மை. இவை இரண்டை யும் சரியாக நிர்வகிக்கும்பட்சத்தில் உங்களால் எளிதாக வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கிக் கொள்ள முடியும்.

இடைநிறுத்தி இயல்பாயிருங்கள்

தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும் உங்களுடைய தினசரி பணிகளில் இருந்து இரண்டு நாள்களேனும் விடுப்பு எடுங்கள். தற்போது என்னை அழுத்தும் விஷயங்கள் என்ன... எனக்குத் தேவையானது எது... நான் எதை முதன்மைப் படுத்துகிறேன்... நான் என்ன தியாகம் செய்கிறேன்... தொலைப்பது எதை... அது எனது தனிப்பட்ட வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது என்றெல்லாம் கொஞ்சம் சிந்தியுங்கள், தேவைப்படும் இடைவெளியை உங்களுக்கு நீங்களே அனுமதித்துக்கொள்ளுங்கள்.

நீங்களும் நம்பர்1 ஆகலாம்... உங்கள் வெற்றிக்கு வழிகாட்டும் ‘ஸ்கில் டெவலப்மென்ட்’!
mapodile

முன்னுரிமை

முன்னுரிமைகளில் மாற்றங்களை ஏற்படுத்துங்கள். தற்போது நீங்கள் எந்த மாதிரியான விஷயங்களுக்கு எல்லாம் முன்னுரிமை கொடுக்கிறீர்கள் என்று யோசியுங்கள். அது உங்களுக்கு கண்டிப்பாக தேவைதானா என்று யோசித்து தேவையெனில் மாற்றங்களை ஏற்படுத்துங்கள்.

உணர்வுகளுக்கு முன்னுரிமை அளியுங்கள்

பணி நேரத்தில் பணியில் ஈடுபடுங்கள், வீட்டுக்கான நேரத்தில் வீட்டுக்கு மட்டுமே நேரம் ஒதுக்குங்கள். எந்த நேரத்தில் எதற்கெல்லாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று உங்களின் உணர்வுகளின் அடிப்படையில் முடிவெடுங்கள்.

மாற்று வழிகள்

பணி மற்றும் வீட்டுச் சூழலில் உங்களுடைய நேரத்துக்கேற்ப மாற்று வழிகளை யோசித்து வையுங்கள். திடீரென ஏற்படும் சிக்கலான சூழ்நிலைகளைக் கையாள இந்த மாற்று வழிகள் உங்களுக்கு கை கொடுக்கும்.

படைப்பாற்றல் திறன்

நீங்கள் உங்களுடைய தகுதிக்கு ஏற்ப பணியிலோ அல்லது கல்வியிலோ முன்னேற வேண்டுமெனில் உங்களுடைய படைப்பாற்றலை வளர்த்துக் கொள்ளுதல் அவசியம். போட்டி நிறைந்த இடங்களில் உங்களுடைய இருப்பை நிரூபிக்க கண்டிப்பாக உங்களுடைய படைப்பாற்றல் திறனில் கவனமாக இருப்பது அவசியம். உங்களுடைய படைப்பாற்றல் திறனை அதிகரிக்க நிறைய இடங்களுக்குப் பயணப்படுங்கள், புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துப் படியுங்கள், உங்களுடைய விருப்பமான துறையில் தொடர்ந்து கற்றுக்கொள்ளுங்கள், தேவையான நேரங்களில் ஓய்வு எடுங்கள். கற்கும் விஷயங்களில் கேள்வி கேட்கத் தயங்காதீர்கள், குழுவினருடன் நேர்மறையாக இணைந்திருங்கள்.

நீங்களும் நம்பர்1 ஆகலாம்... உங்கள் வெற்றிக்கு வழிகாட்டும் ‘ஸ்கில் டெவலப்மென்ட்’!
LiudmylaSupynska

ஆர்வம்

உங்களுடைய ஆர்வங்களுக்கு மதிப்பளியுங்கள். அது விளையாட்டாகவோ, பயணமாகவோ, உணவாகவோ எதுவாக இருந்தாலும், அவற்றில் உங்கள் திறனை மேம்படுத்துங்கள். உங்களுடைய ஆர்வம்தான் உங்களுக்கான முதலீடாக இருக்கும்.

தன்னம்பிக்கை (Self Confidence)

தன்னம்பிக்கை என்பது நம்மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கை. அந்த தன்னம்பிக்கையே நம்மை முன்னேற்றும். ஆனால், தன்னம்பிக்கை என்பது ‘என்னால் முடியும்’ என்ற வகையில் இருக்க வேண்டுமே தவிர, ‘என்னால் மட்டுமே முடியும்’ என்று இருக்கக் கூடாது. இதனால் உங்களுடைய பணியை, நீங்கள் நினைக்கும் செயலை முடிக்க முடியாமல் போகலாம். பொறுமையும் நிதானமும், தன்னம்பிக்கையில் மிக முக்கியம். அதைத் தாண்டி உங்களுடைய தன்னம்பிக்கையை வளர்க்கும் சில விஷயங்களை மனதில் நிறுத்திக்கொள்ளுதல் அவசியம்.

உங்களுடைய சாதனைகளை நோக்கிய பயணங்களில் கவனம் கொள்ளுங்கள்.

உங்களை நீங்களே ஏற்றுக்கொள்ள பயிற்சி செய்யுங்கள்.

உங்கள் வளர்ச்சிக்கான மாற்றங்களை ஏற்படுத்துங்கள்.

நேர்மறையான மக்கள் மற்றும் சூழ்நிலைகளை நோக்கிப் பயணியுங்கள்.

உங்களுடன் நீங்களே உறுதிமொழி எடுத்து, அதைப் பின்பற்ற முயற்சி செய்யுங்கள்,

உங்களுடைய நற்செயல்களுக்கு நீங்களே உங்களைப் பாராட்டிக் கொள்ளுங்கள், பரிசுகள் கொடுத்துக் கொள்ளுங்கள்.

நீங்களும் நம்பர்1 ஆகலாம்... உங்கள் வெற்றிக்கு வழிகாட்டும் ‘ஸ்கில் டெவலப்மென்ட்’!
PeopleImages

சுய உத்வேகம் (Self Motivation)

மற்றவர்கள் நமக்கு உத்வேகம் கொடுக்க வேண்டும் என்று எண்ணாமல் நமக்கு நாமே உத்வேகம் கொடுத்துக்கொள்வது மிக முக்கியம். உங்களுடைய கனவுகளை, தேவைகளை அடைவதற்கு சுய உத்வேகத்தை வளர்த்துக் கொள்வது மிக அவசியம். உங்கள் இலக்குகளை அடைய, அவற்றுக்கான முயற்சிகளில் ஈடுபட, புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள ஆர்வம் கொள்வதன் மூலம் உத்வேகத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.

சுய மரியாதை

அனைவருக்குமே சுயமரியாதை என்பது அவசியமான ஓர் உணர்வு. திறன் மேம்பாட்டுக்கும் இது மிக முக்கிய திறன். இதன் மூலம் உங்களுடைய சுய ஒழுக்கம் மேம்படும். உங்களை நீங்களே நேசிப்பீர்கள், மற்றவர்களுடன் பேணும் உறவில் நேர்மையாக இருப்பீர்கள், உங்களுடைய திறன்களை வளர்த்துக்கொள்ள ஆர்வமாக இருப்பீர்கள். இதன்மூலம் உங்களுடைய வளர்ச்சியின் வேகம் அதிகரிக்கும்.

சுய ஒழுக்கம்

சுய கட்டுப்பாடு என்பதன் மற்றொரு பெயர்தான் சுய ஒழுக்கம். கட்டுப்பாடு என்பது பெரிதாக இருக்க வேண்டும் என்றில்லை. போதும் என்று தோன்றியபின் சாப்பிடாமல் இருப்பது, தேவையில்லாத நேரங்களில் ஷாப்பிங் செல்வதைத் தவிர்ப்பது, தினம் ஒரு மணி நேரம் மொபைல் பயன்பாட்டை தவிர்ப்பது என எல்லாமே சுய கட்டுப்பாட்டில் வருபவைதான். சுய ஒழுக்கத்தை மேம்படுத்த முதலில் சிறியதாகத் திட்டமிடுங்கள். அதைச் சரியாகச் செயல்படுத்துங்கள். உங்களுடைய இலக்கை நோக்கி ஓடும் பயணத்தில் உள்ள இடையூறுகளை அகற்றுங்கள். தினம் தினம் உங்களுக்கென நேரத்தை ஒதுக்குங்கள்.

நீங்களும் நம்பர்1 ஆகலாம்... உங்கள் வெற்றிக்கு வழிகாட்டும் ‘ஸ்கில் டெவலப்மென்ட்’!
farakos

சுய மேலாண்மை

நம்மால் ஒரு நிர்வாகத்தையோ அல்லது குடும்பத்தையோ நிர்வகிக்கச் சொன்னால் எளிதாகச் செய்வோம். ஆனால், அதையெல்லாம்விட முக்கியமானது நம்மை நாமே மேலாண்மை செய்வது. சுய மேலாண்மையில் பல படிநிலைகள் உள்ளன. முக்கியமான சிலவற்றைப் பார்ப்போம்...

இலக்கு நிர்ணயம்

சின்னச் சின்ன இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். இலக்குகள் நிர்ணயிப்பது என்பது அவற்றை அடைய நீங்கள் செய்யும் முயற்சிகளையும், அவற்றின் மூலம் கிடைக்கும் வளர்ச்சியையும், மகிழ்ச்சியையும் உள்ளடக்கியதே.

இலக்கில் தெளிவு

நீங்கள் இலக்கை நிர்ணயிப்பது முக்கியமில்லை. அந்த இலக்கு எவ்வளவு தெளிவானதாக இருக்கிறது, அதற்காகத் தேர்ந்தெடுத்த வழி எந்த அளவுக்குத் தெளிவானதாக இருக்கிறது என்பதில்தான் நீங்கள் நிர்ணயித்த இலக்கின் வெற்றி இருக்கிறது.

மனநிலையை உறுதி செய்யுங்கள்

இலக்கை நிர்ணயித்தல் மட்டுமல்லாது, அந்த இலக்கை நோக்கிய உங்கள் மனநிலையை உறுதி செய்யுங்கள். இதுதான் நம்முடைய இலக்கு, இதை நோக்கிதான் நாம் பயணிக்க உள்ளோம், இதற்கு நம்முடைய வாழ்வியலில் இந்த மாற்றங்களை எல்லாம் ஏற்படுத்த வேண்டும் என்று உங்களுடைய மனதை தயார்படுத்துங்கள்.

அர்ப்பணிப்பு

அர்ப்பணிப்பு என்பது நீங்கள் நிர்ணயித்துள்ள இலக்கினை நோக்கி நீங்கள் செல்வதற்கு எவ்வளவு உறுதியுடனும், வலிமையுடனும் இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. இலக்குகள் கடினமாக இருக்கும்போது அதிகமான வலிமையும், குறைவாக இருக்கும்போது குறைவான வலிமையும் போதும் என்றில்லாமல் நீங்கள் கொடுக்கும் அர்ப்பணிப்பு உங்களுடைய இலக்குகளை கடினமாகவோ, எளிதாகவோ மாற்றிக் கொடுக்கும்.

நீங்களும் நம்பர்1 ஆகலாம்... உங்கள் வெற்றிக்கு வழிகாட்டும் ‘ஸ்கில் டெவலப்மென்ட்’!
Panuwat Dangsungnoen

நேரத்தை சேமியுங்கள்

நீங்கள் அடையவிருக்கும் இலக்குக்காக உங்களுடைய ஓய்வு நேரத்தையும், கிடைக்கும் இடைவெளியையும் பயனுள்ளதாக மாற்றுங்கள்.

திட்டமிடுதல்

இலக்கை அடைய, திட்டமிடுதல் என்பது அவசியமாகிறது. தினமும் வீட்டில் நாம் என்னவெல்லாம் வேலை செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்வதன் மூலம் நேர விரயம் தவிர்ப்பது, செய்யும் வேலைகளில் சிறப்பாகச் செயல்படுவது என்று பல நன்மைகள் நடக்கும். அதனால் சின்னச் சின்ன விஷயங்களில் ஆரம்பித்து உங்களுடைய இலக்குகளை அடையும் வரை எல்லாவற்றுக்கும் திட்டமிடுங்கள்.

நீங்களும் நம்பர்1 ஆகலாம்... உங்கள் வெற்றிக்கு வழிகாட்டும் ‘ஸ்கில் டெவலப்மென்ட்’!
shylendrahoode

திறன் வளர்ச்சிக்கு அடிப்படையான நேர மேலாண்மை

நேர மேலாண்மை என்ற ஒரு திறன் இருந்தாலே அதன் மூலம் வெற்றியும், சுய ஒழுக்கமும் தானாக வந்துவிடும். நேர மேலாண்மையைக் கடைப்பிடிக்க சில எளிய வழிமுறைகள்...

இருக்குமிடத்தை சுத்தமாக வையுங்கள். அலுவலகத்தில் அல்லது வீட்டில் என நீங்கள் எங்கு வேலை பார்த்தாலும், உங்களுடைய கோப்புகள், லேப்டாப் என அனைத்தையும் எப்போதும் அதற்கான இடத்தில்தான் வைக்க வேண்டும். இதனால் ஏதேனும் பொருளைத் தொலைத்துவிட்டு தேடுவதோ அல்லது மன உளைச்சலுக்கு ஆளாவதோ தவிர்க்கப்படும். வேலை சுலபமாவதுடன் நேரத்தை மிச்சப்படுத்தலாம்.

அதிகமான விடுமுறையை எடுக்காதீர்கள். தேவையான நேரத்தில் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்து முடிக்க முயற்சி எடுங்கள். எந்த வேலையாக இருந்தாலும் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகச் செய்து முடிக்கப் பாருங்கள்.

ஒரு வேலையைச் செய்ய ஒப்புக்கொள்கிறீர்கள் என்றால் அதை அக்கறை யாகச் செய்து முடியுங்கள். உங்களின் மேலதிகாரி அருகில் இருக்கும்போது மட்டும் வேலை செய்வது, இல்லாதபோது அலட்சியமாக இருப்பது என்பதைத் தவிருங்கள்.

எந்த இடத்துக்குச் செல்ல வேண்டும் என்றாலும், முன்னதாகவே கிளம்பி விடுங்கள். தினமும் சீக்கிரமாக எழுந்து கொள்ளப் பழகுங்கள். கடைசி நேரத்தில் எதையும் செய்ய வேண்டாம்.

அனைத்துக்கும் ‘யெஸ்’ சொல்லாதீர்கள். உங்களுக்கு நேரமில்லை

என்றாலோ அல்லது முடியாது என்றாலோ உங்களிடம் கொடுக்கப்படும் அதிக பணிச்சுமைக்கு ‘நோ’ சொல்லிப் பழகுங்கள்

வேலை நேரங்களில் மற்ற கேளிக்கை விஷயங்களில் கவனம் செலுத்தாதீர்கள்.

எந்த வேலையை எப்போது முடிக்க வேண்டும், எதை சற்று நேரமெடுத்துச் செய்யலாம் எனத் திட்டமிட்டு வேலை செய்யப் பழகுங்கள்.

நீங்களும் நம்பர்1 ஆகலாம்... உங்கள் வெற்றிக்கு வழிகாட்டும் ‘ஸ்கில் டெவலப்மென்ட்’!
Deepak Sethi

மன அழுத்த மேலாண்மை (Stress Management)

மன அழுத்தம் இருந்தால் வேலைகளில் சரிவர ஈடுபட முடியாமல், உடல் நிலையில் கவனம் செலுத்த முடியாமல் திணறுவோம். சில உத்திகளைக் கையாள்வதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.

தேவையில்லாத, உங்களுக்கு சம்பந்தமில்லாத எந்த விஷயத்திலும் தலையிடாதீர்கள்.

மன அழுத்தம் அதிகரிக்கும்போதெல்லாம், வழக்கத்தைவிட மெதுவாகப் பேசப் பழகுங்கள். மன அழுத்தம் உள்ளவர்கள் வேகமாகவும் மூச்சுவிடாமலும் பேசுவார்கள். பேச்சைக் குறைப்பதன் மூலம், எந்தச் சூழ்நிலையிலும் கட்டுப்பாட்டுடன் இருப்பீர்கள்.

பயனுள்ள நேர மேலாண்மை உத்தியைத் தொடங்கவும். எந்த விஷயத்தையும் தள்ளிப்போடாமல் உடனடியாகச் செய்யுங்கள்.

உடற்பயிற்சி, யோகா, தியானம் என ஏதேனும் பயிற்சியில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். இதன்மூலம் உங்களுக்கு தூக்கமும் முறைப் படும்.

நேசிப்பவருடன் நேரத்தைச் செலவிடுங்கள். மன அழுத்தத்தில் இருந்து வெளியே வர இயலாதபட்சத்தில் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.

நேர்மறை எண்ணம் (Positive Thoughts)

எதிர்மறை, நேர்மறை எண்ணங்கள் என இரண்டுமே நமக்குத் தேவை என்றாலும், நேர்மறை எண்ணங்கள் கொடுக்கும் உத்வேகம் உங்களை வாழ்க்கையின் அடுத்தடுத்த படிநிலைகளுக்குக் கொண்டு செல்லும். இதற்கு நீங்கள் உங்கள் மன உறுதியை அதிகரிப்பது, சுய கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வது, பதற்றப்படாமல் இருப்பது போன்றவை உதவும்.

நீங்களும் நம்பர்1 ஆகலாம்... உங்கள் வெற்றிக்கு வழிகாட்டும் ‘ஸ்கில் டெவலப்மென்ட்’!
wildpixel

கோபத்தைக் கட்டுப்படுத்துதல் (Anger Management )

கோபத்தைக் கட்டுப்படுத்துவதற்கு முன்பு, நமக்கு எதற்காக கோபம் வருகிறது, நாம் சரியான விஷயங்களுக்குத்தான் கோபப்படுகிறோமா அல்லது கோபம் கொள்ள வேண்டும் என்பதற்காக கோபப்படுகிறோமா என்று ஆராய்தல் அவசியம்.

மனிதர் என்றால் கோபப்படுவது இயல்பானது. ஆனால், அதைச் சரியான முறையில் கட்டுப்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்.

உங்களை கோபப்படுத்திய நபர்/விஷயம் மீது பாய்வதற்கு பதிலாக, கோபத்தை ஏற்படுத்திய பிரச்னைக்கான தீர்வை யோசியுங்கள். சில விஷயங்கள் நம் கட்டுப்பாட்டை மீறியவை என்பதையும் புரிந்துகொள்ளுங்கள். உங்களால் எதை மாற்ற முடியும், முடியாது என்ற நிதர்சனத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். கோபம் எதையும் சரி செய்யாது, சிக்கலை அதிகமாக்கவே செய்யும் என்பதை நினைவில் வையுங்கள்.

உங்களுக்கு கோபம் வருவதற்கான காரணத்தை, சாதாரணமாக நீங்கள் ஓய்வாக இருக்கும் நேரங்களில் யோசித்து அதற்கான தீர்வையும் சிந்தியுங்கள்.

உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவை மனதை ஒருமுகப்படுத்தவும், கோபத்தைக் கட்டுப்படுத்தி உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கவும் உதவும்.மனிதர்களுடன் தொடர்பில் இருங்கள். பயணங்களை மேற்கொள்ளுங்கள்.

அனுதாபம் (Empathy)

அனுதாபம் என்பது நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களின் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளைப் புரிந்துகொள்வது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மட்டு மல்லாமல் அந்தப் பிரச்னையைத் தீர்ப்பவர்களும் தெளிவாக இருக்க முடியும். இந்த அனுதாபம் என்பது உணர்ச்சியினால் மட்டுமல்லாமல், அறிவாற்றலுடன் கூடியதாக இருக்க வேண்டும்.

நீங்களும் நம்பர்1 ஆகலாம்... உங்கள் வெற்றிக்கு வழிகாட்டும் ‘ஸ்கில் டெவலப்மென்ட்’!
gorodenkoff

தீர்வு காண்பது (Decision Making)

முடிவெடுக்கும் திறன் என்பது, நமது நிறுவனத்தை அல்லது நமது எதிர்காலத்தை, குடும்பத்தை மேம்படுத்த உதவும். இதன்மூலம் நம் வளர்ச்சியிலும் நம்மைச் சுற்றி இருப்பவர்களின் வளர்ச்சியிலும் உதவ முடியும். வெறும் உணர்ச்சிப்பெருக்கில் மட்டுமல்லாமல் அறிவாற்றல் சார்ந்து முடிவெடுப்பதும், ஒரு முடிவெடுக்கும்போது அதில் உள்ள நன்மை, தீமை களை ஆராய்ந்து எடுப்பதும், குழுவினருடன் கலந்தாலோசித்து தீர்வு காண்பதும் இதில் முக்கியம். இவை தவிர பொறுப்புடன் இருப்பது

(Adaptability), நெகிழ்வுத்தன்மையுடன் (Flexibility) செயல்படுவது என எல்லாமே உங்களுடைய மென்திறன்களை மென்மேலும் வளர்க்கும். இவற்றை உங்கள் வாழ்வியல் முறையில் கடைப்பிடிக்க ஆரம்பியுங்கள்... வாழ்வில் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி உயருங்கள்.

ஆல் தி பெஸ்ட்!