சென்னை கிண்டியிலுள்ள கிங் ஆய்வக வளாகத்தில், மத்திய அரசின் 127 கோடி ரூபாய் நிதியில் தேசிய முதியோர் நல மருத்துவமனை கட்டப்பட்டது. தமிழகத்திலேயே முதியோர்களுக்கான பிரத்யேக உயர்தர சிகிச்சை வழங்கும் முதல் மருத்துவமனையாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தச் சூழலில்தான், தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் காணப்பட்டது.

கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியதால், கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்க, முதியோர் நல மருத்துவமனை கொரோனா சிகிச்சை மருத்துவமனையாக மாற்றப்பட்டது. இந்த மருத்துவமனையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியாற்றினார். சென்னையில் மற்ற அரசு மருத்துவமனைகளைவிட இந்த மருத்துவமனையில் பொதுமக்கள் சிகிச்சை பெற ஆர்வம்காட்டினர். பொதுமக்களைத் தாண்டி, அரசியல்வாதிகள், அரசு உயரதிகாரிகள் முதல் வி.ஐ.பி-க்கள் வரை பலரும் இந்த மருத்துவமனையில்தான் கொரோனா சிகிச்சை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மருத்துவமனை மொத்தம் 750 படுக்கை வசதிகொண்டது. கொரோனா பரவல் உச்சத்திலிருந்த சமயத்தில், அந்த எண்ணிக்கையையும் தாண்டி இங்கு பலருக்குச் சிகிச்சை வழங்கப்பட்டுவந்தது. தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று பெருமளவு குறைந்துள்ளது. நேற்றைய (04.04.2022) நிலவரப்படி தமிழகத்தில் 21 பேருக்குத்தான் புதிதாக கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மொத்தமாகவே 263 பேர் மட்டும்தான் கொரோனா தொற்றுக்குச் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.

சென்னையைப் பொறுத்தவரை எட்டுப் பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்தம் 121 பேர் கொரோனா தொற்றுக்குச் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். இந்த நிலையில், கிண்டி கொரோனா மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சைக்கு வரும் நபர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் பணியாற்றிய பல மருத்துவர்களும், செவிலியர்களும் மீண்டும் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கே பணிக்குத் திரும்பியுள்ளனர்.
சில மருத்துவர்களும், செவிலியர்கள் மட்டுமே அங்கு வரும் ஒரு சிலருக்கு கொரோனா சிகிச்சை வழங்கிவருகிறார்கள். சிகிச்சைக்கு யாரும் வராத காரணத்தால், அந்த கொரோனா மருத்துவமனையை, முதியோர் நல மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், ``தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளது. நான்காம் அலையில் கொரோனா பாதிப்பு ஏற்படுமா இல்லையா என்பதை உறுதிப்படக் கூற முடியாது" என்றார்.

மேலும், ``கிண்டி கொரோனா மருத்துவமனை படிப்படியாக, முதியோர் நல மருத்துவமனையாக மாற்றப்படும். அதேசமயத்தில், கொரோனா தொற்று அதிகரித்தால், இந்த மருத்துவமனையில் சிகிச்சை வழங்குவதற்கான கட்டமைப்பு இருப்பது உறுதி செய்யப்படும்" என்று பேசினார். கிண்டி கிங் ஆய்வக வளாகத்தில், கொரோனா மருத்துவமனை மட்டுமின்றி, கொரோனாவுக்குப் பிந்தைய சிகிச்சை அளிக்கும் மையமும், கொரோனா தடுப்பூசி போடும் மையமும் செயல்பட்டுவந்தது குறிப்பிடத்தக்கது.