2001 முதல் 2014 வரை குஜராத் மாநிலத்தின் முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்தார். அவரது ஆட்சிக் காலத்தில், மிகப்பெரிய அளவுக்கு குஜராத் மாநிலம் வளர்ச்சிபெற்றதாகப் பேசப்பட்டது. விவசாயத்தில் முன்னேற்றம், அபரிமிதமான மின் உற்பத்தி, உள்கட்டமைப்பு வசதிகள் அதிகரிப்பு எனப் பல்வேறு துறைகளில் குஜராத் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துவிட்டதாகச் சொல்லப்பட்டது. அந்த வளர்ச்சிக்குக் காரணமான நரேந்திர மோடி, ‘வளர்ச்சியின் நாயகன்’ என்று அழைக்கப்பட்டார்.

அந்தப் புகழ் மற்றும் இமேஜ் காரணமாகத்தான், 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலில் பா.ஜ.க-வின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி முன்னிறுத்தப்பட்டார். மோடி பிரதமரான பிறகு, குஜராத் மாநிலத்தின் முக்கியத்துவம் குறைந்தது. குஜராத் வளர்ச்சி பற்றி பா.ஜ.க-வில்கூட யாரும் பேசுவதில்லை. குஜராத்தில் முதல்வர் நாற்காலியில் ஆனந்திபென் படேல் அமரவைக்கப்பட்டார். இருக்கிற இடம் தெரியாமல் அவர் இருந்தார். அவருக்குப் பிறகு குஜராத் முதல்வராக வந்த விஜய் ரூபானியும்கூட, இந்தியாவில் பரவலாக அறியப்படாதவராகவே இருக்கிறார்.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களுள் ஒன்றாக குஜராத் இருக்கிறது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள குஜராத் மாநிலத்தில், 13,000-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அங்கு, சுமார் 850 பேர் மரணமடைந்துள்ளனர். அகமதாபாத்தில் மட்டுமே 10,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தகைய சூழலில்தான், மாநில அரசை குஜராத் உயர் நீதிமன்றம் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளது. குஜராத் மாநிலத்தின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான அகமதாபாத்தில் அமைந்துள்ள ‘சிவில் ஹாஸ்பிட்டல்’ என்ற அரசு மருத்துவமனை, இந்தியாவின் பெரிய மருத்துவமனைகளுள் ஒன்று. ஏன், ஆசியாவிலேயே மிகப்பெரிய மருத்துவமனைகளுள் ஒன்று என்றும் அதைச் சொல்லலாம். அங்கு, 1,200 படுக்கைகள் கொண்ட கோவிட் 19 சிறப்பு வார்டு உள்ளது. ஆனாலும், அந்த மருத்துவமனை மிகமோசமான அளவுக்கு ‘டஞ்சன்’ ஆக இருப்பதாக குஜராத் உயர் நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது.
அகமதாபாத் சிவில் மருத்துவமனையின் சீர்கேடுகள் குறித்த செய்திகள் தன் கவனத்துக்கு வந்ததைத் தொடர்ந்து, தாமாக முன்வந்து வழக்குப் பதிவுசெய்தது, குஜராத் உயர் நீதிமன்றம். கொரோனாவால் பாதிக்கப்பட்டு அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 350-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். “மருத்துவ நெருக்கடி மிகுந்த தற்போதைய சூழலில், ஏழைகளும் ஆதரவற்றோரும் இந்த அரசு மருத்துவமனையையே சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. அவர்களுக்கு வேறு வழி இல்லை. அப்படிப்பட்ட மருத்துவமனை மிக மோசமான நிலையில் இருக்கிறது என்பதை மிகுந்த வருத்தத்துடன் பதிவுசெய்கிறோம். ஏழை, எளிய மக்களே இங்கு சிகிச்சைக்காக வருகிறார்கள். மனித உயிர்கள் விலைமதிக்க முடியாதது. அந்த உயிர், அரசு மருத்துவமனையில் போவதை அனுமதிக்க முடியாது” என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கோபத்துடன் கூறினர்.

குஜராத் மாநிலத்திலேயே கொரோனா தொடர்பான மரணங்கள் அதிகமாக நிகழ்ந்திருப்பது அகமதாபாத் சிவில் மருத்துவமனையில்தான். இதில் என்ன கொடுமையென்றால், சிகிச்சை அளிக்க ஆரம்பித்து நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட நாள்கள் ஆன நிலையில் இறந்தவர்கள்தான் அதிகம். சிகிச்சையில் இருக்கும் குறைபாடுகளே இந்த மரணங்களுக்கு முழுக் காரணம் என்று நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.
அந்த மருத்துவமனையில், கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் அணுகப்பட்ட விதத்தை உயர் நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது. "குஜராத் மாநில சுகாதாரத்துறை அமைச்சரான நிதின்பாய் ரட்டிலால் படேல், எத்தனை முறை அந்த மருத்துவமனைக்குச் சென்றிருப்பார்... எத்தனை முறை ஆய்வுகள் நடத்தியிருப்பார்? அந்த மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் நோயாளிகள், என்னென்ன பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள் என்பது சுகாதாரத்துறை அமைச்சருக்குத் தெரியுமா?" என்று விசாரணையின்போது நீதிபதிகள் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர்.

அகமதாபாத் தொகுதியின் எம்.எல்.ஏ-வான கியாசுதீன் ஷேக், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் அதிக அளவில் மரணமடைந்திருக்கும் விவகாரத்தில் தலையிட வேண்டுமென்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், “அலட்சியம் மற்றும் முறையற்ற சிகிச்சை காரணமாகவே கொரோனா நோயாளிகள் அதிகமாக மரணமடைகிறார்கள்” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
குஜராத் அரசு மீது உயர் நீதிமன்றம் குட்டுவைத்த பிறகு, இந்த விவகாரத்தைக் கையிலெடுத்துள்ள காங்கிரஸ் கட்சி, பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் தாக்க ஆரம்பித்துள்ளது. “தங்களின் சொந்த மாநிலத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று பிரதமருக்கும் உள்துறை அமைச்சருக்கும் தெரியுமா?” என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரான அபிஷேக் சிங்வி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேற்கு வங்க மாநில அரசுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மேற்கு வங்க கவர்னர் கடிதம் எழுதினார். அதுபோல, குஜராத் மாநில கவர்னர் ஏன் அப்படியொரு கடிதத்தை உள்துறை அமைச்சருக்கு இன்னும் எழுதவில்லை என்று எதிர்க் கட்சிகள் கிண்டலாகக் கேள்வி எழுப்புகின்றன. தங்களுடைய கட்சி ஆட்சி செய்யும் மாநிலத்துக்கே மத்திய ஆட்சியாள்கள் உரிய மருத்துவ வசதிகளைச் செய்துதரவில்லையென்றால், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு எப்படி உதவி செய்வார்கள்? என்று காங்கிரஸ் கட்சி கேள்விகளை எழுப்பிவருகிறது. ஆனால், மோடி, அமித் ஷா உள்ளிட்ட பா.ஜ.க-வினரிடமிருந்து எந்த சத்தமும் இல்லை.