
மைதானத்தை ஒட்டியபடியே வீடு. நாம் அருகில் போனதும் கண்களில் வினாக்களோடு அப்பா துமிலியைச் சுற்றி வந்து கட்டிக்கொள்கிறார்கள் அவரின் குழந்தைகள்.
சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்திற்கு எதிரே ஆயிரம் கால்களைத் தன்மேல் படரவிட்டபடி படுத்துக்கிடக்கிறது மைதானம். கிரிக்கெட், கால்பந்து என திசைக்கொன்றாய் விளையாடியபடியிருக்கிறார்கள்.
கூப்பாடுகளுக்கும் மூச்சிரைப்புகளுக்கும் இடையே ஒரு மூலையிலிருந்து கைகாட்டி அழைக்கிறார் நாம் தேடி வந்தவர். துமிலி! அந்த ஏரியா முக்கியஸ்தர்களுக்கு அவர் ஒரு டான்ஸர். இளைஞர்களுக்கு ஜிம்னாஸ்டிக் குரு.
மைதானத்தை ஒட்டியபடியே வீடு. நாம் அருகில் போனதும் கண்களில் வினாக்களோடு அப்பா துமிலியைச் சுற்றி வந்து கட்டிக்கொள்கிறார்கள் அவரின் குழந்தைகள். ‘`அப்படியே நம்மள மாதிரி, ஒரு இடத்துல இருக்கமாட்டாங்க’’ - சிரிக்கிறார் துமிலி.

‘`அப்பா அந்தக்காலத்திலேயே பெரிய ஜிம்னாஸ்ட். இந்தப்பக்கம் அவரத் தெரியாதவங்களே இருக்கமுடியாது. அப்படித்தான் எனக்கும் ஜிம்னாஸ்டிக்ஸ் ஒட்டிக்கிச்சு...’’ மைதானத்தில் ஒரு கண்ணும் நம் மீது ஒரு கண்ணுமாய்ப் பேசத் தொடங்குகிறார்.
அந்தப் பழைய சுவரின் விரிசல்கள் வழியே முளைத்து எழுந்து கிளைகளை விரித்துக் காற்றில் ஆடியபடியிருக்கிறது ஒரு மாமரம்.
``எட்டு வயசுல ஜிம்னாஸ் டிக்ஸ் பண்ண ஆரம்பிச்சேன். அப்படியே கோயில் திருவிழாக்களில் ஆடுறதுன்னு டான்ஸ்லயும் ஆர்வம் வந்தது. இது ரெண்டும் கலந்ததுதான் பி-பாயிங். அதனால அதுல இறங்கிட்டேன். அப்படியே ஊர் ஊரா போய் ஷோ பண்ண ஆரம்பிச்சோம். ஆனா, அந்த வருமானத்தை மட்டுமே நம்பி இருந்துடமுடியாதுன்னு அப்பாகிட்ட இருந்து கத்துக்கிட்டேன். அப்பா மார்க்கெட்ல மீன் வெட்டிக்கிட்டு இருந்தாரு. பேரு, புகழ்னு நிறைய இருந்தாலும் வாழ்க்கை என்னமோ அப்படியேதான் இருந்தது.

23 வயசுல சொந்தமா ஜிம்னாஸ்டிக் டீம் வெச்சிருந்தேன். தமிழ்நாடுன்னு மட்டுமல்லாம பாம்பேல எல்லாம்கூட போய் பேட்டில் பண்ணுவோம். பாலிவுட்ல ஃபேமஸான கொரியோகிராபர் ரெமோகிட்ட பாராட்டு வாங்குனதுக்கு அப்புறம்தான் நாம இதுல ஏதாவது பண்ணிடலாம்னு நம்பிக்கை பொறந்தது. அந்தநேரம்தான் இங்கே ரஞ்சித் அண்ணா கண்ணுல பட்டோம். ‘காலா’ படத்துல வருகிற க்ளைமாக்ஸ் ஸ்டன்ட் நாங்க பண்ணுனதுதான்’’ என நிறுத்துபவர், எதையோ யோசிக்கிறார்.
“வடசென்னைன்னாலே வெட்டு, குத்துன்னு காமிச்ச சினிமாவை, ‘இங்க டான்ஸ் இருக்கு, ஃபுட்பால் இருக்கு, கேரம் இருக்கு, ஒரு நல்ல வாழ்க்கை இருக்குன்னு மாத்திக் காட்டுனது அவர்தான். அவர் திறந்துவிட்ட கதவை நல்லா பயன்படுத்தி எங்ககிட்ட இருக்குற திறமைகளை யெல்லாம் காட்டி டணும்னு தான் இங்க இருக்குற ஒவ்வொருத்தரும் நினைக்கி றோம். அப்படிப் பண்ணுனது தான் ‘ஸ்டவ் மேல கடாய்’ பாட்டு.’’
யூடியூபில் 44 மில்லியன் வியூக்களைக் கடந்த அந்தப் பாட்டு இவரின் நண்பர்களும் இவரும் இணைந்து உருவாக்கியதுதான். அந்தப் பாடலை எழுதிய மெட்ராஸ் மிரனின் குரு இவர்.
‘`கறுப்புக்கலரு, மீன்வாடைன்னு எங்களை நினைக்கிறதுதானே பொதுப் புத்தி. அதை ஒடைக்கணும்னே பிரெஞ்சு டான்ஸர்களை எங்ககூட ஆட வெச்சோம்’’ எனச் சிரிக்கிறார்.

அதன்பின் ஒரு நீண்ட மெளனம். மைதானத்தை வெறித்தபடி இருக்கிறார்.
‘`இந்த கிரவுண்டு இருக்குல்ல. பாருங்க... ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்னு எல்லாம் இங்க இருக்கும். வெளியே இருந்து பாக்கிறவங்களுக்கு இது ஒரு உற்சாகமான உலகம். ஆனா நிஜத்துல இவ்ளோ கலர்புல்லா இருக்குற கிரவுண்டு கடைசிவரை அதோட இடத்துல அப்படியே தான் இருக்கும். சொல்லப் போனா எங்க வாழ்க்கையும் அப்படித்தான்.
கொஞ்சம் விலகினாலும் அப்படியே திசை மாறிடுற வாய்ப்பு எங்க வாழ்க்கைல ரொம்ப அதிகம். அதனால கிடைச்ச பிடிப்பைப் பிடிச்சு மேல வரணும்னுதான் நினைக்கிறோம். ஆனா, சாதியும் பொருளாதாரச் சூழலும் அதுக்கு எப்பவுமே தடையா இருக்கு. சினிமாக்களில் நிறைய வொர்க் பண்ணுறோம். ஆனா எங்களால ஸ்டன்ட் யூனியன் லேயோ டான்ஸ் யூனியன்லேயோ மெம்பராகவே முடியல. காரணம் மேலே சொன்ன ரெண்டும்தான். நீங்க ஒருநா அப்படியே காலைல மெரினாப்பக்கம் வாங்களேன். ‘மெட்ராஸ்ல இப்படி ஜிம்னாஸ்டிக் பண்ணுறவங்க எல்லாம் இருக்காங்களா’ன்னு வாயடைச்சுப்போய்டுவீங்க. ஒலகத்தரத்துல பண்ணுறவங்க இங்க எக்கச்சக்கம். ஆனா நிரந்தர வருமானமோ அதுக்கான வெளியோ இங்க இல்ல. அதனாலேயே உங்களை வாயடைச்சுப் போக வெச்ச அதே ஜிம்னாஸ்ட்களை நீங்க கொஞ்சநாள் கழிச்சு சிந்தாதிரிப்பேட்டைல ஆட்டோ ஓட்டுறவராவோ பாரீஸ்ல மூட்டை தூக்குற வராவோ பாப்பீங்க’’ எனப் பெருமூச்சு விடுகிறார்.

‘`இதுவரைக்கும் ஐம்பது பேர்கிட்ட ட்ரெயின் பண்ணிருக்கேன். எல்லாரும் அங்கங்க அவங்களுக்கான இடத்தைத் தேடிப் போராடிக்கிட்டே இருக்காங்க. என்னையே பாருங்களேன். சில மாசங்களுக்கு முன்னாடி ஆடுறப்போ கால்முட்டு மேல ஏறிடுச்சு. இதுக்குமேல ஜிம்னாஸ்டிக்கெல்லாம் பண்ணினா காலை மறந்துட வேண்டியதுதான்னு டாக்டர் சொல்லிட்டாரு. மீன் வெட்டுற வாய்ப்பும் இல்ல இப்போ. ஷோவும் பண்ணமுடியாது இந்த டைம்ல. வருமானமே இல்லாம குடும்பத்தை சமாளிக்கிறதே கஷ்டமா இருக்கு. பொறந்ததுல இருந்தே ஒரு கேள்விக்குறியை நிரந்தரமா முதுகுல யாரோ ஒட்டி வெச்சுட்ட மாதிரியே இருக்கு. ‘நான் யாரு? நான் மேல வரவேமுடியலையே ஏன்? இப்படியே பொழப்பு போயிடுமா’ன்னு கேள்விக் குறிக்குள்ளேயே சுத்தி சுத்தி முடிஞ்சுடும் போல வாழ்க்கை’’ என்பவரிடம்,
‘`நீங்க ஏன் ஸ்கூல்/ஸ்டூடியோ மாதிரி வெச்சு கமர்ஷியலா ஜிம்னாஸ்டிக்ஸ் சொல்லித் தரக்கூடாது?’’ எனக் கேட்டால் பதற்றமாய் வருகிறது பதில்.
‘`அதெல்லாம் பண்ணக்கூடாது ப்ரோ! நான் கத்துக்கிறப்போ எனக்குக் காசு வாங்கிட்டு யாரும் சொல்லித்தரல. அதனால நானும் அதெல்லாம் பண்ணமாட்டேன் எப்பவும்.’’
‘போட்டோ எடுக்கணும்’ என துமிலியை அழைத்துச் செல்கிறார் பாலாஜி. சுவரில் அவர் சாய்ந்து நிற்க, பின்னணியில் அந்தப் பழைய சுவரின் விரிசல்கள் வழியே முளைத்து எழுந்து கிளைகளை விரித்துக் காற்றில் ஆடியபடி யிருக்கிறது ஒரு மாமரம்.
இந்த மாமரம் போல மானுடம் வேர்விட்டுக் கிளை பரப்பும்போது, பல நூற்றாண்டுப் பாறைகளாய் இறுகிக்கிடக்கும் சாதியும் வர்க்கமும் உடைந்து நொறுங்கும்.