லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

நீங்களும் செய்யலாம்: ஒரே நாளில் ஹேர் ஸ்டைலிங் கற்றுக்கொள்ளலாம்!

ஹேர் ஸ்டைலிங்
பிரீமியம் ஸ்டோரி
News
ஹேர் ஸ்டைலிங்

நிஷா

மேக்கப்புக்கு இணையாகப் பெண்கள் முக்கியத் துவம் கொடுக்கும் இன்னொரு விஷயம் ஹேர் ஸ்டைல். எப்போதும் ஒரே மாதிரியான ஹேர் ஸ்டைலில் இருப்பதை இன்றைய பெண்கள் விரும்புவதில்லை. சாதாரண நாள்களுக்கென சில ஸ்டைல்கள், ஸ்பெஷல் நாள்களுக்கென சில ஸ்டைல்கள், பார்ட்டி, திருமணம் போன்ற விசேஷங்களுக்கு கிராண்டான ஸ்டைல்கள் என தினம் தினம் ஏதோ ஒரு புதுமையை எதிர்பார்க்கிறார்கள். என்னதான் யூடியூபில் பார்த்து முயற்சி செய்தாலும் நேரடியாகக் கற்றுக்கொள்ளும்போதுதான் சில நுணுக்கங்களையும் டெக்னிக்கு களையும் கற்றுக்கொள்ள முடியும். ஹேர் ஸ்டைல் பயிற்சி வகுப்புகள் பெரும்பாலும் அழகுக்கலைப் பயிற்சியோடு சேர்த்தே கற்றுத்தரப் படுகின்றன. தவிர நிறைய நாள்கள் தேவைப்படுகிற பயிற்சியாகவும் இருப்பது நடைமுறைச் சிக்கல். சென்னையைச் சேர்ந்த நிஷாவிடம் இருக்கிறது இதற்கான தீர்வு.

சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலருக்கும் பர்சனல் ஹேர் ஸ்டைலிஸ்ட்டாக இருக்கிறார் சென்னை, ஈசிஆரைச் சேர்ந்த நிஷா. 12 வருடங்களாக இந்தத் துறையில் அசத்திக்கொண்டிருக்கும் நிஷாவின் ஆரம்ப காலம், போராட்டங்கள் நிறைந்தது. அவற்றிலிருந்து மீண்டு சாதித்திருப்பவர், ஹேர் ஸ்டைலிஸ்ட் என்ற அடையாளம் வேண்டுவோருக்குப் பயிற்சிகள் கொடுத்து வழிகாட்டத் தயாராக இருக்கிறார்.

நிஷா
நிஷா

``பத்தாவது வரைக்கும் படிச்சிருக்கேன். ரொம்ப சின்ன வயசிலேயே கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க. வீட்டுல சும்மா இருக்கோமேன்னு டெய்லரிங் பயிற்சிக்கான அரசாங்க அறிவிப்பைப் பார்த்துட்டுப் போனேன். நான் போன நேரம் அந்தப் பயிற்சி முடிஞ்சு அழகுக்கலை பயிற்சி தொடங்கிட்டாங்க. சும்மா திரும்பி வர வேண்டாமேன்னு பியூட்டிஷியன் கோர்ஸ்ல சேர்ந்தேன். அங்கே அடிப்படைப் பயிற்சியைக் கத்துகிட்டு சென்னையில முன்னணி பியூட்டிஷியன்ஸ்கிட்டயும் பயிற்சி எடுத்தேன். ‘சின்ன வயசு... இஸ்லாமியக் குடும்பத்தைச் சேர்ந்தவளா இருக்கே... நீயெல்லாம் வீட்டைவிட்டு வெளியில வரலாமா... உனக்கு எதுக்கு பியூட்டிஷியன் வேலையெல்லாம்’னு சொல்லி நிறைய பேர் என்னை மட்டம் தட்டியிருக்காங்க. எனக்கு இங்கிலீஷ் பேசத் தெரியாது. ஆரம்ப காலத்துல அதனால நிறைய அவமானங்களைச் சந்திச்சிருக்கேன். ஹேர் ஸ்டைலிஸ்ட்டாகணும்னா படிப்போ, ஆங்கில அறிவோ தேவையில்லை... திறமை போதும்னு நிரூபிச்சிட்டேன்.

ஹேர் ஸ்டைலிங்
ஹேர் ஸ்டைலிங்

நிறைய நகைகள் போட்டு எனக்குக் கல்யாணம் பண்ணிக்கொடுத்தாங்க. பக்குவமில்லாம எல்லா நகைகளையும் இழந்துட்டேன். வெளியில போகும்போது போட்டுக்கக்கூட என்கிட்ட நகைகள் இல்லாமலிருந்த காலம் அது. யாருமே என்னை மதிக்க மாட்டாங்க. நாளைக்கு நாம வளர்ந்து நாலு பேருக்கு வேலைகொடுக்கிற நிலைமைக்கு வந்தா அவங்களை நல்லவிதமா நடத்தணும்னு அப்பவே முடிவு பண்ணினேன். இன்னிக்கு அப்படித்தான் நடத்தறேன். எனக்கு ரெண்டு மகன்கள். பத்தாவதும் நாலாவதும் படிக்கிறாங்க. கணவருக்கு பிளம்பிங் வேலை. அவருக்குப் பெரிய வருமானம் இல்லை. குழந்தைகளோட படிப்பு, குடும்ப நிர்வாகம் எல்லாத்தையும் என் வருமானத்தில்தான் சமாளிக்க வேண்டிய நிலைமை. எத்தனையோ அவமானங்கள், விமர்சனங்கள் எல்லாத்தையும் தாண்டி வெறித்தனமா இந்தத் துறையில உழைச்சேன். ஹேர் ஸ்டைலிலும் புதுப்புது விஷயங்களைக் கத்துக்கிட்டே இருந்தேன். இந்தத் துறையில் நல்ல பெயரையும், எனக்குன்னு ஓரிடத்தையும் தக்கவெச்சுக்க எனக்கு 12 வருஷங்கள் தேவைப்பட்டன. இன்னிக்கி டி.வி, சினிமா, மாடலிங் துறைகளில் உள்ள பல பிரபலங்களுக்கும் நான் பர்சனல் பியூட்டிஷியனா இருக்கேன்’’ - வேதனைகளைக் கடந்த வெற்றிக்கதை பகிரும் நிஷா, ஹேர் ஸ்டைலிஸ்ட்டாக விரும்பும் பெண்களுக்கு ஆலோசனைகள் சொல்கிறார்...

என்னென்ன தேவை... முதலீடு?

ஹேர் அயர்னிங் மெஷின், கர்ளர்ஸ். கத்தரிக்கோல், ஹேர் அட்டாச்மென்ட்ஸ், ஹேர் பின்ஸ், கொஞ்சம் அலங்காரப் பொருள்கள் உள்ளிட்ட அடிப்படையான பொருள்களுக்கு 3,000 ரூபாய் முதலீடு போதுமானது.

எவ்வளவு வருமானம்?

கிராண்டான ஹேர் ஸ்டைல் என்றால் ஒரு ஸ்டைலுக்கே 2,000 ரூபாய்வரை வாங்கலாம். சிம்பிளான ஸ்டைல் என்றால் 1,000 ரூபாய் வாங்கலாம். கல்யாண வீடுகள் என்றால் மணப்பெண்ணுக்கு மட்டுமன்றி, அவரின் குடும்பத்தாருக்கும் ஹேர் ஸ்டைல் செய்யச் சொல்லிக் கேட்பார்கள். குறைந்தது ஐந்து பேருக்குச் செய்தாலே 10,000 ரூபாய் வருமானம் வரும். ஹேர் ஸ்டைல் செய்யப் பயன்படுத்தும் கருவிகளுக்கு ஒருமுறை செய்கிற முதலீடுதான் என்பதால் 100 சதவிகிதம் லாபம் பார்க்கலாம். தனியே ஹேர் ஸ்டைலிஸ்ட்டாகப் பணிபுரியும் அளவுக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் வரும்வரை புரொஃபஷனல் ஸ்டைலிஸ்ட்டுகளுக்கு அசிஸ்டன்ட்டாகச் செல்லலாம். தொழிலும் கற்றுக்கொள்ள முடியும். ஓரளவு வருமானமும் பார்க்கலாம்.

ஹேர் ஸ்டைலிங்
ஹேர் ஸ்டைலிங்

இந்தத் துறையைப் பொறுத்தவரை நாள்தோறும் உங்களை எப்படி அப்டேட் செய்துகொள்கிறீர்கள் என்பதிலும், தொடர்புகளை வளர்த்துக் கொள்வதிலும்தான் வளர்ச்சி இருக்கிறது. அழகுக்கலை நிபுணர்களுடன் பேசிவைத்துக்கொண்டு, அவர்கள் மேக்கப் செய்யும்போது ஹேர் ஸ்டைல் பொறுப்பை நீங்கள் எடுத்துச் செய்வதாகப் பேசிக் கொள்ளலாம். பிரபலங்களின் தொடர்பு கிடைத்தால் வாய்ப்புகளும் வருமானமும் இன்னும் அதிகரிக்கும்.

எந்தெந்த விஷயங்களில் கவனம் தேவை?

கூந்தலின் தன்மையைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும். எப்படிப்பட்ட முகவாகுக்கு எந்த ஸ்டைல் பொருந்தும் என்று கணிக்கத் தெரிய வேண்டும். தினம் தினம் மாறிக்கொண்டே இருக்கும் டிரெண்டுகளுக்கேற்ப நீங்களும் உங்களை அப்டேட் செய்துகொள்ள வேண்டும்.

பயிற்சி?

ஒரு நாள் பயிற்சியில் பத்து விதமான கிராண்டான ஹேர் ஸ்டைல்ஸ் கற்றுக் கொள்ளலாம். கட்டணம் 1,000 ரூபாய்.